செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.
மழைநீரைக் கொண்டும், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டும், வறண்ட மற்றும் மிதமான தட்பபெட்ப நிலையில் செய்யப்படுவது, மானாவாரி சாகுபடி. இந்தப் பகுதிகளில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கும் குறைவாகவே இருக்கும்.
மேலும், மானாவாரியில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் வறட்சிக்கும் உள்ளாகும். இந்த நிலையில், வறட்சியை எதிர்கொண்டு அதிக மகசூலைப் பெற்றிட உதவும் உத்திகளைப் பற்றி இங்கே காணலாம்.
கோடையுழவு
கோடை மழையால் கிடைக்கும் ஈரத்தைக் கொண்டு உழவு செய்வதால், மேல் மண் பொலபொலப்புத் தன்மையைப் பெறுகிறது. இதனால், மழைநீரை நிலத்தில் ஈர்த்து வைக்க ஏதுவாகிறது. இந்த நீர், அடுத்துச் செய்யப் போகும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, கோடையுழவு செய்வது அவசியம்.
சரிவுக்குக் குறுக்கே உழுதால், உழவுச் சால்களில் மழைநீர்த் தேங்கி மண்ணில் புகும். மேலும், கோடையுழவு மண்ணரிப்பைத் தடுக்கும், முந்தய பயிர்களின் தூர்கள் அழிய உதவும். களைகளும், பயிரைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படும்.
ஆழ உழுதல்
இரும்புக் கலப்பையால் தொடர்ந்து உழும் போது, சற்றுக் கீழேயுள்ள மண்ணில் கடினப்பகுதி தோன்றும். இதனால், குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் மழைநீர் இறங்க முடியாத நிலை ஏற்படும். இதைத் தடுக்க, உளிக்கலப்பை மூலம் ஒரு மீட்டர் இடைவெளியில் ஆழமாக உழ வேண்டும்.
இப்படிச் செய்தால், நிலத்தின் பொலபொலப்புத் தன்மையின் ஆழம் கூடி, மழைநீர் நிறையளவில் சேமிக்கப்படும். இது, மழையில்லாத காலத்தில் பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
ஆழச்சால் அகலப்பாத்தி
மண்சரிவு குறைவாக இருக்கும் மானாவாரி நிலங்களில், அதாவது, 0.4-0.8 சதத்துக்குள் இருந்தால், இவ்வகைப் பாத்திகளை அமைக்கலாம். 30 செ.மீ. அகலம், 15 செ.மீ ஆழத்தில் வடி வாய்க்காலும், 120 செ.மீ. அகலத்தில் மேட்டுப் பாத்தியும், அடுத்தடுத்து வருமாறு அமைப்பது ஆழச்சால் அகலப்பாத்தி ஆகும்.
கூடுதலாக மழை பெய்யும் காலத்தில், ஆழச்சாலில் சேமிக்கப்படும் மழைநீர், அகலப் பாத்திகளில் உள்ள பயிர்களின் வேர்களுக்கு, ஊடுருவல் முறையில் கிடைத்து, அவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
சமமட்ட வரப்புகள்
சரிவுக்குக் குறுக்கே சமமட்ட வரப்புகளைப் போட வேண்டும். பயிர் செய்யும் நிலத்தின் சரிவு, ஒரு சதத்துக்குள் இருந்தால், சமமட்ட வரப்புகளை, வடிகால் வசதியோடு அமைக்க வேண்டும்.
சமமட்ட வரப்புகள், மழைநீர் வழிந்து ஓடுவதைத் தடுக்கும். இந்த வரப்புகளின் இருபுறமும் வெட்டிவேரை நடவு செய்தால், மண்ணரிப்பும், வரப்புகள் இடிந்து விழுவதும் தடுக்கப்படும். நிலம் மேடு பள்ளமாக இருந்தால், சரிவுகளைச் சரி செய்து வரப்புகளை அமைக்கலாம்.
விதைகளைக் கடினப்படுத்துதல்
விதைகளை விதைப்பதற்கு முன், தகுந்த கரைசலில் ஊற வைத்து, பிறகு அவற்றைச் சாதாரண ஈரப்பத நிலைக்கு உலரச் செய்து விதைப்பதே, விதைகளைக் கடினப்படுத்தி விதைத்தல்.
இதனால் விதைகளின் முளைப்புத் திறன் சிறப்பாக இருக்கும். வீரியமாக, வறட்சியைத் தாங்கி, பயிர்கள் வளர்வதால் கூடுதலான விளைச்சல் கிடைக்கும்.
பருவ மழைக்கு முன் விதைத்தல்
மழை பெய்த பின், மண் சரியான ஈரப்பத்துக்கு வரும் வரையில் காத்திருந்து விதைப்பதால், மண்ணிலுள்ள ஈரம் வீணாகி விடுகிறது. மேலும், பருவமழை தேவையான அளவில் பெய்யாமல் போனால், நல்ல விளைச்சல் கிடைக்காது.
இந்நிலையைத் தடுக்க, மழை பெய்யும் சூழல் தெரிந்ததும் விதைத்து விட்டால், கிடைக்கும் மழைநீர் முழுவதும் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும்.
நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துதல்
விதைப்பதற்கு முன், ஆறிய அரிசிக்கஞ்சி மற்றும் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்த கலவையில் விதைகளைக் கலந்து, பத்து நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
மேலும், தேவையான பாஸ்போ பாக்டீரியாவைத் தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் சீராகத் தூவ வேண்டும். நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு, ரைசோபியத்தைப் பயன்படுத்த வேண்டும்.
விதைக்கும் கருவியைப் பயன்படுத்துதல்
விதைக்கும் கருவியைக் கொண்டு விதைத்தால், விதைகள் தக்க ஆழத்தில் விழுந்து சீராக முளைக்கும். பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும். இதனால், சரியான விளைச்சல் கிடைக்கும். மேலும், மண்ணில் உள்ள சத்துகளும் வளரும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.
பயிர் எண்ணிக்கையைக் குறைத்தல்
பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சி ஏற்பட்டால், நிலத்தில் உள்ள நீரை எடுத்துக் கொள்வது, பயிர்களிடம் போட்டியாக அமையும். இதைத் தவிர்க்க, பயிர்களைக் கலைத்து எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். நாட்டுக் கலப்பையால் பயிர்களுக்கு இடையே உழுது பயிர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
நிலப்போர்வை அமைத்தல்
மண்ணில் உள்ள நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க, பயிர்க் கழிவுகளை நிலத்தில் பரப்பி விடலாம். இதையே நிலப்போர்வை என்கிறோம்.
களைக் கட்டுப்பாடு
மானாவாரி நிலத்தில் நீர்ப் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருக்கும். அதை மேலும் தீவிரமடையச் செய்யும் வகையில், பயிருக்குப் போட்டியாகக் களைகள் முளைக்கும்.
இவற்றில், கோரை, அறுகு, ஆடு தின்னாப்பாலை போன்ற களைகள் பெரும் பிரச்சனையாகவே உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த, தக்க சமயத்தில் களையெடுக்க வேண்டும். சரியான களைக் கொல்லியைத் தெளிக்கலாம், நட்சத்திரச் சக்கர வடிவக் களைக்கருவி, கூரிய பல் களைக் கருவியைப் பயன்படுத்தலாம்.
இதுவரை கூறிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினால் மானாவாரி நிலங்களில் நல்ல விளைச்சலைப் பெறலாம்.
மு.தனநிவேதா, வை.ஹரிஹரசுதன், பூ.மு.சண்முகம், செ.இராதாமணி, வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி – 621 712.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.