இந்தியாவில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களில் 25-30 சதவீதப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றன. உழுதல், உரமிடுதல், மருந்தடித்தல், களையெடுத்தல் என, பயிர்ப் பாதுகாப்புக்கு நாம் எடுக்கும் முயற்சிகளைப் போலவே, சில பூச்சியினங்களும் இயற்கையாகவே பயிர்களுக்கு நன்மைகளைச் செய்கின்றன. அத்தகைய பூச்சியினங்கள் மற்றும் அவற்றால் விளையும் நன்மைகளை அறிந்து கொண்டால், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சிறப்பாகக் கடைப்பிடித்து நல்ல விளைச்சலைப் பெறலாம்.
இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயிர்களில் அதிகளவில் தெளிப்பதால், நன்மை செய்யும் பூச்சிகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. எனவே, இரசாயன முறைக்குப் பதிலாக, இயற்கை வழியிலான உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தி, நிலையான, நீடித்த விவசாயத்தை மேற்கொண்டால், நச்சுத் தன்மையற்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.
இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தால், உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் அவற்றின் தாக்கம் இருக்கும். இந்நிலையில், இவற்றை உண்ணும், நமக்கும் கால்நடைகளுக்கும் உடல் நலச் சிக்கல்கள் ஏற்படும். எனவே, இரசாயனத்துக்கு மாற்றாக, உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தினால், நச்சுத் தாக்கம் என்பதே இருக்காது.
இந்தக் காரணிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையைக் கெடுப்பதில்லை. இவை, சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள், இயற்கை உணவுச் சங்கிலிப் பாதுகாப்பு அமைப்பு, சீராக இருப்பதை உறுதி செய்கின்றன.
விவசாயிகள், பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து பயிர்களைக் காப்பதற்கு இரசாயன மருந்துகளையே நம்பியுள்ளனர். ஆனால், உயிரியல் முறையில் பயிர்களைக் காக்கும் பூச்சிகள், பூசணங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் நூற்புழுக்கள் மண்ணில் வாழ்கின்றன. இவை, இயற்கைச் சமநிலையையும் பாதுகாக்கின்றன.
உயிரியல் முறையில் பூச்சி மேலாண்மை
உயிரியல் பயிர்ப் பாதுகாப்பு என்பது, இரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, மண்ணிலுள்ள உயிரினங்களை வைத்தே, பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், இயற்கை தந்த நன்கொடை தான், பூச்சிகளின் இயற்கை எதிரிகள்.
சிலவகை உயிரினங்கள் மூலம், பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சி வகைகளைக் கட்டுப்படுத்துவது உயிரியல் பூச்சி மேலாண்மை ஆகும். இந்த உயிரியல் காரணிகளை, சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க் கிருமிகள் என, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
உருவில் பெரிய சாறுண்ணிகள் அல்லது இரை விழுங்கிகள், சுறுசுறுப்பாக, வேகமாக நகரும். இவை, தமக்கிருக்கும் பார்வைத் திறன் மூலம், இவற்றை விடச் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும். நாம் அன்றாடம் பார்க்கும் தட்டான், ஊசித்தட்டான் போன்றவை சாறுண்ணி வகையைச் சார்ந்தவை.
குளவி மற்றும் ஈ இனத்தைச் சேர்ந்த பூச்சிகள், மற்ற பூச்சிகளில் வளர்ந்து தமது இனத்தைப் பெருக்கிக் கொள்ளும். இந்த ஒட்டுண்ணிகள் உருவில் சிறியவை. இரையைத் தேடிச் சென்று அவற்றுள் முட்டைகளை இடும். இவை இரையை உடனடியாகக் கொன்று உண்பதில்லை. முட்டைகள் பொரிந்து புழுக்களாக வளர்ந்து ஒட்டுண்ணியாக வெளிவரும் வரை இவற்றின் இரை, உயிருடன் இருக்கும். இந்த ஒட்டுண்ணிகளை, முட்டை ஒட்டுண்ணி, புழு ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணி எனலாம்.
முட்டை ஒட்டுண்ணி, பூச்சியின் முட்டைகளைத் தேடிப் பிடித்து அவற்றின் மீது தன் சிறிய முட்டைகளை இட்டு, பூச்சியின் முட்டைகளை முற்றிலும் அழிக்கும். இதற்கு எடுத்துக்காட்டு, டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி ஆகும். புழு ஒட்டுண்ணி, நேரடியாக எதிரிப் பூச்சிகளின் புழுக்களுக்குள் தன் முட்டைகளை இட்டு வளர்வதால், எதிரிப் புழுக்கள் பாதிக்கப்பட்டு மடிந்து விடும். பிரக்கான், பெதிலிட் போன்றவை புழு ஒட்டுண்ணிகள் ஆகும்.
கூட்டுப்புழு ஒட்டுண்ணி, பூச்சிகளின் கூட்டுப் புழுக்களுக்குள் தன் முட்டைகளை இட்டு, பூச்சிகளைக் கூட்டுப்புழுப் பருவத்திலேயே அழித்து விடும். இதற்கு எடுத்துக்காட்டாக ஈலோபிட் ஒட்டுண்ணியைக் கூறலாம்.
சூடோமோனாஸ் பாக்டீரியா
இது எதிர் உயிர் பாக்டீரியா. நெல் மற்றும் வாழையில் நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் பாக்டீரியா, குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதற்கு உதவும். இது, நெற்பயிரைத் தாக்கும் குலை நோய், இலைப்புள்ளி நோய், இலையுறை அழுகல் நோய், வாழையைத் தாக்கும் வாடல் நோய், பருத்தி, பயறு வகைகளைத் தாக்கும் வேரழுகல், தண்டழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும்.
இதை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்துக் கலந்து, விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்துக் கரைசலாக்கி, நெல் நாற்றுகளின் வேர்களை நனைத்து நட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து வயலில் தூவ வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து, நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
பேசில்லஸ் பாக்டீரியா
இது, எதிர் உயிர் பாக்டீரியா. இது, மண் மற்றும் விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும். தானியப் பயிர்களில் ஏற்படும் இலைக்கருகல் நோய், குலை நோய், இலைப்புள்ளி நோய், இலையுறை அழுகல் நோய், தண்டழுகல் நோய், வேரழுகல் நோய் மற்றும் வாடல் நோயைத் தடுக்கும்.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்துக் கலந்து விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து, ஈரப்பதம் இருக்கும் போது நிலத்தில் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து நல்ல நீரில் கலந்து, 30 நிமிடம் நாற்றுகளின் வேர்களை நனைத்து நட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் எடுத்துக் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
டிரைக்கோடெர்மா விரிடி
இது, நன்மை செய்யும் பூசணம். செடிகளின் வேர்களைச் சுற்றிப் பூசண இழைகளால் பாதுகாப்பு வளையம் அமைத்து, நோய்க்கிருமிகள் தாக்காமல் பயிரைப் பாதுகாக்கும். பருத்தி, கம்பு, பயறு வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மஞ்சள், காய்கறி மற்றும் பழப்பயிர்களைத் தாக்கும் வாடல், தண்டழுகல், வேரழுகல் ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தும்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் எடுத்துக் கலந்து விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். கரணைக் கிழங்குகளை, 500 கிராம் விரிடி கலந்த 200 லிட்டர் நீரில் 5-10 மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும்.
மெட்டாரைசியம் அனிசோபிலே
இது, நன்மை செய்யும் பூசணம். மக்காச்சோளப் படைப்புழு, காண்டாமிருக வண்டு, கூன்வண்டு, அசுவினி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, இலைப்பேன், சிலந்திப்பேன், மலைப்பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்களைத் தாக்கும் வேர் வண்டுப் புழுக்கள் ஆகியவற்றைத் தாக்கி அழிக்கும்.
ஏக்கருக்கு ஒரு கிலோ பூசணம் வீதம் எடுத்து, 100 கிலோ தொழுவுரத்தில் கலந்து வயலில் இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 8 கிராம் வீதம் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். காண்டாமிருக வண்டுகளின் இளம் புழுக்களைக் கட்டுப்படுத்த, 750 மி.லி. நீரில் 250 கிராம் பூசணத்தைக் கலந்து எருக்குழியில் தெளிக்க வேண்டும்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்
இது, நன்மை செய்யும் முட்டை ஒட்டுண்ணி. நெல்லில் இலைச் சுருட்டுப்புழு, கரும்பில் இடைக்கணுப்புழு, கத்திரி, வெண்டை, தக்காளியில் காய்ப்புழு, பருத்தியில் காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். நெல்லில் 37 நாளிலிருந்து 7 நாட்கள் இடைவெளியில் 3 முறை முட்டை ஒட்டுண்ணி அட்டையை, நுாலில் கட்டிவிட வேண்டும். கரும்பில் 120 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை கட்ட வேண்டும்.
கத்தரி, வெண்டை, தக்காளியில் 50 சதவீதப் பூக்கள் பூக்கும் பருவத்தில், 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும். பருத்தியில் 40 நாளிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை கட்ட வேண்டும். இதைக் கட்டும் போது இரசாயன உரத்தைத் தெளிக்கக் கூடாது. முட்டை ஒட்டுண்ணி வெய்யில் படும் போது குளவியாகப் பொரிந்து வெளிவரும். எனவே, இவற்றைக் காலை, மாலை வேளையில் கட்ட வேண்டும்.
இவை தீங்கு செய்யும் எதிரிப் பூச்சிகளின் முட்டையின் மேல் முட்டையிட்டு அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். மழைக்காலத்தில் முட்டை ஒட்டுண்ணியைக் கட்டக் கூடாது. வரப்பிலிருந்து 2 அடி தள்ளி, ஏற்ற இறக்க முறைப்படி 10 இடங்களில் கட்டி விடலாம்.
என்.பி.வி. வைரஸ்
சாகுபடியில் 30-40 சதவீதப் பயிர்கள், புழுக்கள் வகைப் பூச்சிகளால் சேதமாவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலும் எல்லா விவசாயிகளும் இரசாயன மருந்துகளைத் தான் தெளித்து வருகின்றனர். இந்த மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை வழியில், வைரஸ் நோயால் தாக்கப்பட்ட புழுக்களில் இருந்து வைரஸ் காரணிகளைப் பிரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.
இதைப் பயிர்களில் தெளிக்கும் போது, பயிர்களை உண்ணும் புழுக்கள், வைரஸ் நோய்த் தாக்கத்தால் இறந்து விடும். ஏக்கருக்கு 100 மி.லி. என்.பி.வி.வைரஸ் கரைசல் மற்றும் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். அப்போது இந்த வைரஸால் தாக்கப்படும் புழுக்கள் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்து நிறமாறி ஆங்காங்கே தலைகீழாகத் தொங்கும். இந்த வைரஸ் காரணிகள், புழுக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.
இவ்வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை மூலம் ஒன்பது வகையான உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றைக் குறைந்த விலையில் வாங்கி, அனைத்துப் பயிர்களுக்கும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
பாக்டீரிய உயிரி மருந்துகள் கிலோ 180 ரூபாய்க்கும், பூசண உயிரி மருந்துகள் கிலோ 135 ரூபாய்க்கும், என்.பி.வி. வைரஸ் மருந்துகள் லிட்டர் 850 ரூபாய்க்கும், ஒரு சிசி முட்டை ஒட்டுண்ணி அட்டை 40 ரூபாய்க்கும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும். இவற்றை விவசாயிகள் மானியம் மூலம் 50 சதவீத விலையில் பெறலாம்.
இதுகுறித்த கூடுதல் தொழில் நுட்பத் தகவல்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் அல்லது அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
கா.அரிபுத்திரன், வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


