பாக்கு சாகுபடி (Arcea nut cultivation) இந்தியாவில் கர்நாடகம், கேரளம், மராட்டியம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. உலகின் மொத்தப் பாக்கு உற்பத்தியில், இந்தியா, சீனா, வங்காளம், இந்தோனேசியா, மியான்மர் ஆகிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாக்கு (Arcea nut) முக்கிய வணிகப்பயிர் என்பதால், இதைப் பயிரிட்டு அதிகமான வருவாயை ஈட்ட விரும்பும் விவசாயிகள், பாக்கு மர சாகுபடியைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது அவசியமாகும்.
பாக்கு வகைகள் (Varieties of Arieca nut)
பாக்கு சாகுபடிக்காக (Arcea nut cultivation) உயர் விளைச்சலைத் தரும் பல வகைகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தெற்குக் கனரா: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், உருண்டையாகவும், பெரிதாகவும் இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 2 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
மங்களா: இந்த இரகம், மித நெட்டையாக வளரும். இதன் காய், உருண்டையாகவும், சிறிதாகவும் இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 3 கிலோ உலர் பாக்குகள் (Dry Arcea nuts) கிடைக்கும். இந்த இரகம், கேரளம், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
சுமங்களா: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், முட்டையாகவும், மத்திமமாகவும் இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 3.20 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கேரளம், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
ஸ்ரீ மங்களா: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், உருண்டையாகவும், பெரிதாகவும் இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 3.28 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கேரளம், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
மோகித் நகர்: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், உருண்டை மற்றும் முட்டை வடிவத்தில் மத்திமமாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 3.67 கிலோ உலர் (Dry Arcea nuts) பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
எஸ்.ஏ.எஸ்.1: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், முட்டை வடிவத்தில் மத்திமமாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 4.60 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கர்நாடகத்தின் வடக்குக் கனரா மாவட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
தீர்த்தஹள்ளி: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், நீள்வட்ட வடிவில் சிறியதாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 2.60 கிலோ உலர் பாக்குகள் (Dry Arcea nuts) கிடைக்கும். இந்த இரகம், கர்நாடகத்தின் மல்லநாடு பகுதியில் சாகுபடி செய்ய ஏற்றது.
ஸ்ரீ வர்தன்: இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், முட்டை வடிவத்தில் மத்திமமாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 2.60 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், மராட்டியத்தின் ரெய்காட் மற்றும் இரத்தினகிரி பகுதியில் பயிரிட ஏற்றது.
ஹிரஹள்ளி: இந்த இரகம், குட்டையாக வளரும். இதன் காய், முட்டை வடிவத்தில் மத்திமமாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் ஒரு கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கர்நாடகத்தில் பயிரிட ஏற்றது.
சைகான் (வி.டி.எல்.12): இந்த இரகம், நெட்டையாக வளரும். இதன் காய், உருண்டையாகவும், பெரிதாகவும் இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 3.71 கிலோ உலர் பாக்குகள் (Dry Arcea nuts) கிடைக்கும். இந்த இரகம், கேரளம், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.
ஹிரஹள்ளி மோகித் நகர் கலப்பு: இந்த இரகம், குட்டையாக வளரும். இதன் காய், உருண்டை மற்றும் முட்டை வடிவத்தில் மத்திமமாக இருக்கும். ஒரு மரத்தின் மூலம் 2.76 கிலோ உலர் பாக்குகள் கிடைக்கும். இந்த இரகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் சாகுபடி செய்ய ஏற்றது.

நாற்றங்கால் அமைத்தல் (Arcea nut nursery)
தரமான கன்றுகள் கிடைப்பதற்கு நல்ல தாய் மரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் தாய் மரங்கள் பத்து ஆண்டுகளைக் கடந்த வயதிலும், விரைவாக மற்றும் அதிகமாகக் காய்க்கும் தன்மையிலும் இருக்க வேண்டும். இத்தகைய மரங்களில் இருந்து 35 கிராம் எடையுள்ள விதைக் காய்களைத் தெரிவு செய்து, 1.5 மீட்டர் அகலம் மற்றும் தேவைக்கேற்ற நீளத்தில், மண்ணும் மணலும் கலந்து அமைக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கையில், 5 செ.மீ. இடைவெளியில், காய்களின் காம்புகள் மேல்நோக்கி இருக்கும் வகையில் ஊன்றி, தினமும் நீரூற்றி வர வேண்டும்.
இப்படி வளர்க்கும் கன்றுகளை, மூன்று மாதங்கள் கழித்து, இரண்டாம் நாற்றங்காலுக்கு மாற்ற வேண்டும். இந்த நாற்றங்காலில் எக்டருக்கு 6 டன் கணக்கில் தொழுவுரத்தை இட்டு, 30 செ.மீ. இடைவெளியில் கன்றுகளை ஊன்ற வேண்டும். இந்தக் கன்றுகளுக்கு டிசம்பர் முதல் மே வரையான வறட்சிக் காலத்தில், தேவையான நீரையும் நிழலையும் கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் களைகளை நீக்கி மண் அணைத்தல், கன்றுகள் நன்றாக வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இந்த இரண்டாம் நிலை நாற்றங்காலை, 25×15 செ.மீ. அளவில், 150 தடிமனுள்ள நெகிழிப் பைகளிலும் அமைக்கலாம். இதற்கான மண் கலவை, மேல்மண், எரு, மணல் 7:3:2 வீதம் கலந்ததாக இருக்க வேண்டும்.
கன்றுகள் தேர்வும் நடவுக் காலமும்
ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு வயதுள்ள, ஐந்து இலைகள் மற்றும் குறைந்த உயரமுள்ள கன்றுகளை நடவுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் கன்றுகளை, நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தில் மே, ஜூனிலும், நீர்த்தேங்கி நிற்கும் களிமண் நிலத்தில் ஆகஸ்ட், செப்டம்பரிலும் நட வேண்டும்.
இடைவெளியும் நடவும்
பாக்கை மட்டும் தோப்பாகப் பயிரிட 2.7×2.7 மீட்டர் இடைவெளியும், கலப்புப் பயிராகப் பயிரிட 3.3×3.3 மீட்டர் இடைவெளியும் விட்டு, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மேலும், இந்தக் கன்றுகளை, வடக்கு தெற்குத் திசையில் 35 டிகிரி கோணத்தில், வெய்யில் குறைவாகப் படும் வகையில், மேற்கு நோக்கி இருக்குமாறு நட வேண்டும். தென்மேற்கு மற்றும் தெற்குப் பகுதியிலுள்ள கன்றுகளின் தண்டுப்பகுதி வெய்யிலால் வெடிக்காமல் இருக்க, பாக்கு மடல்கள் அல்லது வாழை இலைகளைக் கட்டி விடலாம்.
ஆழமான மண் கண்டம் மற்றும் வடிகால் வசதியுள்ள நிலத்தில், 90 செ.மீ. நீள, அகல, ஆழத்திலும், கடினமான மண் கண்டம் உள்ள நிலத்தில், 60 செ.மீ. நீள, அகல, ஆழத்திலும் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, இந்தக் குழிகளில் 50 செ.மீ. உயரம் வரை, மண், மணல், எருவை நிரப்பி, குழிகளின் நடுவில் கன்றுகளை வைத்து, அவற்றின் கழுத்து வரை மண் மூடியிருக்கும் வகையில் நட வேண்டும்.
மேலும், இந்தக் கன்றுகளுக்கு நிழல் கிடைக்கும் வகையில், வாழை அல்லது விரைவாக வளர்ந்து நிழலைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். சிறிய கன்றுகளுக்குத் தென்னை ஓலைகளை வைத்தும் நிழலை ஏற்படுத்தித் தரலாம்.
உரமிடுதல்
ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் பாஸ்பரஸ், 140 கிராம் பொட்டாசியம் கிடைக்கும் வகையில், 220 கிராம் யூரியா, 200 கிராம் ராக் பாஸ்பேட், 230 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களை இட வேண்டும். இவற்றுடன் 12 கிலோ பச்சிலை அல்லது தொழுவுரத்தையும் இடலாம். இளம் கன்றுகளுக்கு முதலாம் ஆண்டில், கரிம உரத்தில் மூன்றில் ஒரு பங்கும், இரண்டாம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கும், மூன்றாம் ஆண்டில் முழுமையாகவும் கொடுக்க வேண்டும்.
பாசன வசதியற்ற நிலத்தில் பயிரிடும் போது, மூன்றில் ஒரு பங்கு உரத்தை, ஏப்ரல் மே-யிலும், மூன்றில் இரண்டு பங்கு உரத்தை, செப்டம்பர் அக்டோபரிலும் கொடுக்க வேண்டும். இதுவே, பாசனப் பயிராக இடும் போது, ஏப்ரல் மே-யில் இட வேண்டிய உரத்தை, பிப்ரவரி மாதத்திலேயே தரலாம். கன்றுகளைச் சுற்றிக் களையெடுத்த பிறகு, கன்றுகளிலிருந்து 75-100 செ.மீ. சுற்றளவில், 15-20 செ.மீ. ஆழத்தில் மண்ணைக் கிளறி விட்டு உரத்தை இட வேண்டும்.
அங்கக உரச்சுழற்சி
ஒரு எக்டர் பாக்குத் தோப்பிலிருந்து ஆண்டுக்கு 5.5-6 டன் கழிவுகள் கிடைக்கும். இவற்றை நேரடி உரமாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மண்புழு உரமாக மாற்றி இடலாம். ஓலைகள், காய்ந்த மடல்கள், பூங்கொத்துகள் போன்ற கழிவுகளை, 5-10 செ.மீ. துண்டுகளாக நறுக்கி, தொட்டிகளில் இட வேண்டும். கழிவு, கழிவின் எடையில் 10 சதம் எரு என, மாறி மாறி இட வேண்டும். ஈரப்பதம் 30-40 சதம் அவசியம் இருக்க வேண்டும்.
இப்படித் தயாரித்து 2-3 வாரங்கள் கழித்து, ஆயிரம் கிலோ கழிவுக்கு ஒரு கிலோ மண் புழுக்கள் வீதம் விட்டால், அறுபது நாட்களில் இந்தக் கழிவுகள் நன்கு மட்கி, குருணை வடிவத்தில், மணமற்ற நிலையில், ஆற்றல் மிக்க சத்துகள் நிறைந்த மண்புழு உரமாக மாறி விடும். இந்த நேரத்தில் மண் புழுக்களும் இரு மடங்காகப் பெருகி இருக்கும். இந்த உரத்தை மரத்துக்கு எட்டுக் கிலோ வீதம் இட்டால் போதுமானது. மண்புழு உரத் தயாரிப்பில் யூட்ரிலஸ் யூஜினியே மற்றும் எய்சீனியா ஃபோற்றிடா மண் புழுக்களே பயன்படுத்தப்படுகின்றன.

பாசனம்
நவம்பர் டிசம்பரில் வாரம் ஒருமுறையும், பிப்ரவரியில் ஆறு நாட்களுக்கு ஒருமுறையும், மே- மார்ச் காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும். பாத்திப் பாசனத்தில் ஒரு மரத்துக்கு 175 கிட்டர் நீர்த் தேவை. சொட்டுநீர்ப் பாசனத்தில் 15-20 லிட்டர் நீரே போதுமானது. குழாய்ப் பாசனத்தை விட, இந்த முறையில் 44 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசனத்தில் 2-3 சொட்டுக் குழாய்கள், மரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றி, எதிர் எதிராகவோ அல்லது முக்கோண வடிவிலோ இருக்க வேண்டும். மழைக்காலத்தில் 75-100 செ.மீ. ஆழத்தில் வடிகாலை அமைக்க வேண்டும்.
பின்செய் நேர்த்தி
அக்டோபர் நவம்பரில், மண்ணை இலேசாகக் கிளறி விட்டு இளக்கம் தர வேண்டும். மேடு பள்ளமான நிலத்தில் படிவமைவு செய்யப்பட வேண்டும்.
மூடுபயிர்கள் வளர்ப்பு
மைமோசா இன்விசா, ஸ்டைலோ சாந்தஸ் கிரேசிலிஸ், கலப்பக்கோனியம் மியூக்கனாய்ட்ஸ், பியூரேரியா ஜவானிக்கா போன்றவை, பாக்கு சாகுபடிக்கு (Arcea nut cultivation) ஏற்ற மூடுபயிர்கள் (Cover crops) ஆகும். இந்த விதைகள் முறையே 15, 9, 11, 11 கிலோ தேவைப்படும். இவற்றை, மே, ஜூனில் விதைத்து, அக்டோபரில் அறுவடை செய்து, பாக்கு மரங்களுக்கு உரமாக இட வேண்டும்.
கலப்பினப் பயிர்கள் வளர்ப்பு
பாக்கு மரங்கள் விளைச்சலுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆவதாலும், அதிக முதலீடு தேவைப்படுவதாலும், பாக்கு சாகுபடியின் தொடக்க நிலையில் வருவாய் ஈட்டுவதற்கு, கலப்புப் பயிர்கள் மற்றும் ஊடுபயிர்கள் வளர்ப்பு முறைகள் பயன்படுகின்றன. வாழை, குறுமிளகு, கொக்கோ, வெனிலா போன்றவை, கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், எலுமிச்சை, வெற்றிலை போன்றவை, மேற்கு வங்கம், கர்நாடகத்தின் மைதான் பகுதியிலும் பயிரிடப்படுகின்றன.
பாக்குக் கன்றுகளை நடும்போதே, நான்கு கன்றுகளுக்கு நடுவில் ஒரு வாழை வீதம் நட்டு, மூன்று ஆண்டுகள் வரை இதைத் தொடர் பயிராக வளர்க்கலாம். அடுத்து மீண்டும் புதிதாக நடலாம். பாக்குக் கன்றுகளை நட்டு 6-8 ஆண்டுகள் கழித்து, வேர் விட்ட குறுமிளகுத் தண்டுகளை, பாக்கு மரங்களின் வட பகுதியில் 60 செ.மீ. தள்ளி நடலாம். தற்போது கொக்கோ தகுந்த இடைப்பயிராக விளங்குகிறது.
கலப்புப் பயிர்களுக்கான இடைவெளி
மைசூர் பூவன், கற்பூரவல்லி, ரொபஸ்டா ஆகிய வாழை இரகங்களை, 2.7×5.4 மீட்டர் இடைவெளியில் எடுத்த 50 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கன்றுக்கு ஆண்டுக்கு 160:160:320 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
கரிமுண்டா, பன்னியூர்1 ஆகிய குறுமிளகு வகைகளை, 2.7×2.7 மீட்டர் இடைவெளியில் எடுத்த 50 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கன்றுக்கு ஆண்டுக்கு 100:40:140 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
ஒட்டுகள் மற்றும் வீரியக் கலப்பினக் கொக்கோ வகைகளை, 2.7×5.4 மீட்டர் இடைவெளியில் எடுத்த 50 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கன்றுக்கு ஆண்டுக்கு 100:40:140 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
வனிலாவை, 2.7×2.7 மீட்டர் இடைவெளியில் எடுத்த 45 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கன்றுக்கு ஆண்டுக்கு 60:30:100 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
எலுமிச்சைக் கன்றுகளை, 2.7×5.4 மீட்டர் இடைவெளியில் எடுத்த 50 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கன்றுக்கு ஆண்டுக்கு 300:250:500 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
வெற்றிலைக் கொடிகளை, 2.7×2.7 மீட்டர் இடைவெளியில் எடுத்த 50 செ.மீ. கன அளவுள்ள குழிகளில் நட வேண்டும். கொடிக்கு ஆண்டுக்கு 100:40:140 கிராம் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் வீதம் இட வேண்டும்.
ஒரே நேரத்தில் இப்பயிர்கள், விதவிதமாகப் பல்லடுக்குப் பயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன. கர்நாடகம் மற்றும் கேரளத்தில், வாழை, குறுமிளகு, கொக்கோ போன்றவை, ஒன்றாகப் பயிரிடப்படுகின்றன. மேற்கு வங்கத்தில், வாழை, வெற்றிலை, எலுமிச்சியை ஒன்றாகப் பயிர் செய்கிறார்கள்.
மேலும், குறுகிய காலத்தில் பலனைத் தரும் குற்றுப் பயிர்களான, வல்லாரை, திப்பிலி, ஓமம், கற்பூரவள்ளி, கருநொச்சி போன்ற மருந்துச் செடிகள் மற்றும் வெட்டிவேர், இஞ்சிப்புல், பச்சௌளி போன்ற வாசனைப் பயிர்களை, பாக்குத்தோப்பில் பயிர் செய்து வருகிறார்கள்.
பயிர்ப் பாதுகாப்பு: நோய்கள்
கோலெரோகா அல்லது மாகாளி: மழைக்காலத்தில் காய்கள் அதிகமாகக் கொட்டுவதே இதன் முக்கிய அறிகுறியாகும். பூவிதழ்களுக்கு அருகில் நீர்க் கோர்த்த புள்ளிகள் மற்றும் சிராய்ப்புகள் இருக்கும். இவை காய்களைக் கரும்பச்சை நிறமாக மாற்றுவதுடன், காய் உதிர்வையும் ஏற்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு சதவீத போர்டோ கலவையை, குலைகளில், 45 நாட்கள் இடைவெளியில் குறைந்தது இருமுறை தெளிக்க வேண்டும். பருவமழை தொடங்கியதும் முதல் தெளிப்பையும், மழை அதிக நாட்கள் நீடித்தால் மூன்றாம் தெளிப்பையும் செய்ய வேண்டும். இதைத் தவிர நோயுற்ற காய்கள் மற்றும் இதரப் பகுதிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். நெகிழிப் பைகளால் குலைகளை மூடுவதன் மூலம், இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
குருத்து மற்றும் கொண்டை அழுகல்: இந்நோயால் முதலில் குருத்து இலைகள் மஞ்சளாகி அழுகத் தொடங்கும். வளர் நுனியும் அதைச் சுற்றியுள்ள திசுக்களும் அழுகி, ஒருவிதத் ததுர்நாற்றம் அடிக்கும். இந்த அறிகுறி, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், வெளிச்சுற்று ஓலைகளின் இலையடி உறைகளில் தோன்றி, படிப்படியாக வளர்ந்து நுனியை நோக்கிச் செல்லும். நோயின் தாக்கம் கடுமையாக இருந்தால், ஒட்டுமொத்த மரமும் செத்து விடும். இந்த இரண்டு நோய்களும் பருவமழைக் காலத்தில் தொடங்கி, அடுத்து வரும் பனிக்காலம், அதாவது, பிப்ரவரி வரை தொடரும்.
இதைக் கட்டுப்படுத்த, மரங்களில் பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் போர்டோ களிம்பைத் தடவி விட வேண்டும். நோயுற்ற மரங்களைச் சுற்றியுள்ள நோயற்ற மரங்களிலும் ஒரு சதவீத போர்டோ கலவையைத் தெளித்தல் உத்தமம்.
பூங்கொத்து அழிவு மற்றும் இளங்காய்கள் உதிர்வு: பலதரப்பட்ட காரணிகள் மற்றும் கொலிட்டோட்ரைகம் கிளியோஸ் போரியாய்டஸ் என்னும் பூஞ்சையால், பூங்கொத்து அழிவு மற்றும் இளங்காய்கள் உதிர்வு நிகழ்கிறது. மஞ்சரியின் நுனியிலிருந்து தொடங்கும் மஞ்சள் நிறமாதல் மற்றும் உலர்தல் அடிவரை பரவும். இதைத் தொடர்ந்து, பெண் பூக்களும் உதிர்ந்து விடும்.
இதைக் கட்டுப்படுத்த, மஞ்சரியில் உள்ள பெண் பூக்கள் மலரத் தொடங்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. இண்டோபில் எம் 45 அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் டைத்தேன் இசட் 78 பூஞ்சை நாசினி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதை, 25 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குலைகளைச் சேகரித்து எரித்து விடுவதன் மூலம், இந்நோய் பரவாமல் தடுக்கலாம்.
அனாபி அல்லது அடியழுகல்: இந்நோயால் ஓலைகளின் வெளிப்புறம் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாகும். பிறகு, இது சிறிது சிறிதாக உள்ளடுக்குகளுக்கும் பரவும். நோய் முற்றிய நிலையில், குருத்து மற்றும் ஒன்றிரண்டு ஓலைகளைத் தவிர மற்றவை காய்ந்து உதிர்ந்து விடும். வேரின் அடித்தண்டு மற்றும் உள்திசுக்கள் அழுகிப் போவதும் இதன் அறிகுறிகள் ஆகும். இந்நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிதல் சற்றுக் கடினமாகும்.
இதைக் கட்டுப்படுத்த, தோப்பை நன்றாக நிர்வாகம் செய்ய வேண்டும். வடிகால் வசதி சரியாக இருக்க வேண்டும். நோயுற்ற மரத்தின் அடிப்பகுதியில், ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. கேலிக்சின் மருந்து வீதம் கலந்து ஒரு மரத்துக்கு 15-20 லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். மேலும், 15 மி.லி. கேலிக்சின் மருந்தை 125 மி.லி. நீரில் கலந்து வேர் மூலம் ஏற்ற வேண்டும். இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை மரத்துக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இடலாம். நோயுற்ற மரத்தைச் சுற்றிலும் 30 செ.மீ. அகலம், 60 செ.மீ. ஆழத்தில் குழியை வெட்டி, மரத்தைத் தனிமைப்படுத்த வேண்டும். நோயுற்ற மரத்தை வேரோடு அகற்றி அழிப்பதும், தோப்பைச் சுத்தமாகப் பராமரிப்பதும் அவசியம்.
பந்த் நோய்: இந்நோய், உறையற்ற வடிகால்கள் மற்றும் சில செயல் குறைகளாலும் ஏற்படுகிறது. சிறுத்துச் சுருங்கிய கடும்பச்சை ஓலைகள், நீண்டு குறுகிய தண்டு, குறைந்த கணு இடைவெளி, வளர்ச்சிக் குன்றிய, மடிப்புகள் நிறைந்த சொரசொரப்பான, எளிதில் ஒடியக்கூடிய வேர்கள் ஆகியன இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
இதைக் கட்டுப்படுத்த, வடிகால் வசதியைச் சரியாக அமைப்பது, கடினத் தன்மையைப் போக்கும் வகையில் மண்ணை அடிக்கடி கிளறி விடுவது, நுண் சத்துகளைச் சரியான அளவில் தொடர்ந்து கொடுப்பது போன்றவற்றின் மூலம், இந்நோயின் வீரியத்தைக் குறைக்கலாம். மரத்துக்கு 225 கிராம் காப்பர் சல்பேட், சுண்ணாம்பு, 25 கிராம் போராக்ஸ் வீதம் கொடுத்தால், மரங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
காய்கள் வெடித்தல்: கோடை அல்லது வறட்சிக்குப் பிறகு, திடீரெனப் பாசனம் தரும் போது, இந்த வினையியல் சிக்கல் ஏற்படுகிறது. அரை முதல் முக்கால் பாகம் காய்கள் முற்றிய நிலையில், காய்கள் மஞ்சளாவதும், நீளவாக்கில் இருபுறமும் நுனியிலிருந்து வெடித்துக் கொட்டை தெரிவதும் இதன் அறிகுறியாகும். தகுந்த நீர் நிர்வாகமும், 2 கிராம் போராக்சும் இந்நிலையை மாற்ற உதவும்.
இலைப்புள்ளி நோய்: இந்நோய், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், 1-10 வயதுள்ள இளம் மரங்களில் தோன்றுகிறது. ஓலையில் பழுப்பு, அடர் பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் சிறியளவில் வட்டப் புள்ளிகள் தோன்றும். கடும் தாக்குதலால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால், இளங் கன்றுகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட ஓலைகளைச் சேகரித்து அழித்து விட வேண்டும். ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் டைத்தேன் எம் 45 மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சள் இலை நோய்: இது, ஃபைட்டோ பிளாஸ்மா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும் நோயாகும். இது, புரோட்டிஸ்டா மாய்ஸ்டா என்னும் பூச்சி மூலம், பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து மற்ற மரங்களுக்குப் பரவுகிறது. ஓலைகள் மஞ்சள் நிறமாவதே இதன் முக்கிய அறிகுறியாகும்.
இந்த மஞ்சள் நிறமாற்றம் வெளிப்புற ஓலையின் நுனியிலிருந்து ஆரம்பிக்கும். மேலும், நடு அடுக்கு ஓலைகளிலும் காணப்படும். ஓலையின் விளிம்பில் இருந்து படிப்படியாக உள்நோக்கிப் பரவும். ஆனால், மைய நரம்புப் பகுதி பச்சை நிறமாகவே இருக்கும். நோய் முற்றிய நிலையில், எல்லா ஓலைகளிலும் இந்த மஞ்சள் நிறம் பரவுவதால், ஓலைகள் காய்ந்து விடும். நோயுற்ற மரத்தின் பாக்குக் கொட்டைகள் (Arcea nuts) பஞ்சைப் போல மென்மையாகவும், கறுப்பாகவும் மாறிவிடும். தொடக்கக் காலத்தில் கேரளத்தில் பல பாக்குத் தோப்புகள் (Arcea nut gardens) இந்நோயால் அழிந்து விட்டன.
இதைக் கட்டுப்படுத்த, மருந்தடிப்பு மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், பல்வேறு செய்நேர்த்தி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சமச்சீராக உரமிட வேண்டும். சூப்பர் பாஸ்பேட் மற்றும் சுண்ணாம்பை மரத்துக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். ஆண்டுக்கு மரத்துக்கு 12 கிலோ அங்கக உரம் வீதம் இட வேண்டும். வறட்சிக் காலத்தில் தொடர் பாசனமும், வடிகால் வசதியும் ஒருசேர அமைந்தால், நோயுற்ற தோப்பிலிருந்து கூட நல்ல மகசூலை எடுக்க முடியும்.
இந்நோய் அறியப்படாத இடங்களில் மரங்கள் பாதிக்கப்பட்டால், அந்த மரங்களை நீக்கி விடுவதன் மூலம், புது இடங்களுக்கு இந்நோய்ப் பரவாமல் தடுக்கலாம். மற்ற நோய்கள் மற்றும் பூச்சிகள் கட்டுப்பாடும் தகுந்த விதத்தில், தேவையான நேரத்தில் செய்யப்பட வேண்டும்.

பூச்சிகள் நிர்வாகம்
சிவப்பு மற்றும் வெண் சிலந்திகள் (ராவோயில்லா இண்டிகா மற்றும் ஓலிகோ நைக்கஸ் இண்டிகா): இந்தச் சிலந்திகள் கூட்டம் கூட்டமாக ஓலையின் அடிப்புறம் வெண் வலையைக் கட்டி இருந்து கொண்டு, அந்த ஓலையைத் தின்று வளரும். இதனால், ஓலைகள் மஞ்சள் புள்ளிகளுடன் வெண்கல நிறத்தில் காணப்படும். வெய்யில் காலத்தில் தான் இவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. கெல்தேன் மருந்து வீதம் கலந்து, பாதிக்கப்பட்ட ஓலையின் அடிப்புறத்தில் தெளிக்கலாம். மீண்டும் இந்தப் பூச்சிகள் தோன்றினால், 15-20 நாட்கள் கழித்து இந்த மருந்தை மீண்டும் தெளிக்கலாம்.
குருத்து வண்டு (கார்வலோயா அரிக்கே): குருத்துகளில் இப்பூச்சிகள் சுரண்டித் தின்ற இடங்கள், கரும் பழுப்பு நிறத்தில் நீளமான சிராய்ப்புகளாகவும், விரிந்த மடல்களில் திட்டுகளாகவும் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த, மாலை நேரத்தில், பத்து லிட்டர் நீருக்கு 15 மி.லி. டைமெத்தயேட் மருந்து வீதம் கலந்து இதமாகத் தெளிக்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் மைய ஓலையின் இடுக்கில், 2 கிராம் ஃபோரேட் மருந்துக் குருணையுள்ள பாலித்தீன் வில்லைகளை வைக்கலாம். இதன் மணம், குருத்து வண்டுகளைத் தோப்புக்குள் அண்ட விடாமல் செய்யும்.
வேர்ப்புழு (லூக்கோஃபோலிஸ் பர்மெய்ஸ்டரி): இந்தப் புழுக்கள் புதிதாகத் தோன்றும் இளம் வேர்களைத் தின்று வளரும். பாதிக்கப்பட்ட மரங்கள் மஞ்சள் நிற இலைகளுடன், உச்சியில் குறுகிய தண்டுடன், குறைவான காய்களுடன் மிகவும் பலவீனமாக இருக்கும். மழை பெய்து 8-10 நாட்களுக்குள் முழுதாக வளர்ந்த வண்டுகளை, மாலை 6.30-7.30 மணி நேரத்தில் பிடித்துக் கொல்லலாம்.
மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை வீதம், மே மற்றும் செப்டம்பர் அக்டோபரில் 15 கிராம் ஃபோரேட் மருந்தை இடலாம். ஆண்டுக்கு மரத்துக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டால், மண்ணின் கட்டமைப்புச் சீராகி, புதிய வேர்கள் உருவாகும். மேலும், தோப்பில் நல்ல வடிகால் வசதியும் இருக்க வேண்டும்.
இளங்காய்கள் உதிர்தல் (ஹாலியோமார்ஃபா மர்மோரியா): பல்வேறு காரணங்கள் மற்றும் ஹாலியோ மர்மோரியா வண்டாலும் இது ஏற்படும். இளங் காய்கள் விழுந்து விடுவதும், குண்டூசி முனை அளவுள்ள கருந்துளைகள் இருப்பதும் இதன் அறிகுறி ஆகும். இதைக் கட்டுப்படுத்த, பத்து லிட்டர் நீருக்கு 15 மி.லி. டைமெத்தயோட் மருந்து வீதம் கலந்து இளங் குலைகளில் தெளிக்க வேண்டும்.
செதில் பூச்சி (ஐயோனிடியல்லா ஓரியண்டாலிஸ் மற்றும் இஸ்னாப்சிஸ் லாங்கினாஸ்டிரிஸ்): இந்தப் பூச்சிகள், காய்கள், மஞ்சரியின் மையக் காம்புகள், ஓலைகள் மற்றும் மரத்தின் மற்ற திசுக்களின் சாற்றை உறிஞ்சி வாழும். இதனால், காய்கள் மஞ்சள் நிறமாகி உலர்ந்து உதிர்ந்து விடும். வெய்யில் காலத்தில் இந்தப் பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்தச் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இந்தப் பூச்சிகளின் எதிரிகளாக விளங்கும், சிலோகோரஸ் நைக்ரிட்டா மற்றும் சிலோகோரஸ் சர்கும்டேற்றஸ் என்னும் பறவை வண்டுகளை, பாக்குத் தோப்புகளில் விடலாம்.
மஞ்சரிக் கம்பளிப் பூச்சி (திரத்தபா முண்டெல்லா): இந்தப் பூச்சிகள், பூங்கொத்துகள், இளம் மையக் காம்புகள் மற்றும் பெண் பூக்களைத் தாக்கும். தாக்கப்பட்ட பூவடி உறையைத் திறந்து பார்த்து, பெண் பூக்களைப் புழுக்கள் அதிகமாகத் தின்றிருப்பின், முழு மஞ்சரியையும் நீக்கி அழித்து விட வேண்டும். பாதிப்புக் குறைவாக இருப்பின், புழுக்கள் தின்ற பகுதியை மட்டும் கத்தரித்து நீக்கி விட வேண்டும்.
அறுவடையும் பதப்படுத்தலும்
தரமான கொட்டைப் பாக்குகள் கிடைக்க, சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். சீராக முதிர்ந்து முழுக்கப் பழுத்த காய்களே உலர் பாக்குத் தயாரிப்புக்கு உகந்தவை. படோரா, கோகா என்னும் தர நிலைகள் பழுக்காத காய்களால் ஏற்படும். இதனால், விலையும் குறையும். அறுவடை செய்த காய்களைச் சூரிய ஒளியில் திறந்த வெளியில் 45 நாட்கள் காய வைக்க வேண்டும்.
ஓரடுக்கில் சீராகப் பரப்பப்பட்ட காய்களை, வாரம் ஒருமுறை கிளறி விட வேண்டும். இது, பூஞ்சைப் பாதிப்பில்லாத தரமான பாக்குகள் கிடைக்க வழி வகுக்கும். உலர் பாக்கு சாளி என்றும் அழைக்கப்படும்.
இளங் கொட்டைகளைப் பதப்படுத்தல்
முற்றிய காய்களை விட, பதப்படுத்தப்பட்ட இளங் காய்களின் சுவையும் குணமும் நன்றாக இருப்பதால், நல்ல வரவேற்பும் சந்தையில் அதிக விலையும் கிடைக்கும். இந்த முறையில், ஆறு மாத இளங் காய்களின் கனியுறைகளை நீக்கி விட்டு மென்மையான காய்களை நறுக்க வேண்டும். நறுக்கிய துண்டுகளை நீரில் வேக வைத்து உலர வைக்க வேண்டும்.
வேக வைத்த துண்டுகள் பளபளப்பாக இருக்க, காலி என்னும் திரவத்தில் முக்கியெடுக்க வேண்டும். காலி திரவம் என்பது, 3-4 குவியல் பாக்குக் கொட்டைகளை வேக வைத்த பிறகு கிடைக்கும் கருஞ்சிவப்பு முதல் பழுப்பு நிறம் வரையிலான திரவமாகும்.
மகசூல்
சராசரியாக 2.7×2.7 மீட்டர் இடைவெளியில் நடப்பட்ட பாக்குத் தோப்பில், ஏக்கருக்கு 270 மரங்களும், எக்டருக்கு 685 மரங்களும் இருக்கும். இவ்வகையில், எக்டருக்கு 2.5-3 டன் பாக்கு மகசூல் கிடைக்கும்.
சு.எலைன் அப்ஷரா,
சி.கண்ணன், மத்திய பண்ணைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், காசர்கோடு, கேரளம் – 671 124.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

