வயது முதிர்ந்த ரூகோஸ் பெண் ஈக்கள் மஞ்சள் நிற, நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடும். இந்த முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் நகரும் தன்மையுள்ள இளங் குஞ்சுகள், ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு, ஓலைகளின் சாற்றை உறிஞ்சி வளரும்.
முட்டைப் பருவம், குஞ்சுப் பருவம், முதிர் பருவம், கூட்டுப்புழுப் பருவம் என, நான்கு பருவங்களைக் கடந்த பிறகு, ஈக்களாக வெளிவரும். சுமார் 20-30 நாட்களில் முழுமையாக வளர்ந்த ஈக்களாக மாறி, கூட்டம் கூட்டமாக, தென்னை ஓலைகளின் அடியில் காணப்படும். இவை, காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தாக்குதல் அறிகுறிகள்
» இலைகளின் அடிப்பாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டைகள் இருக்கும்.
» குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும், ஓலைகளின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும்.
» இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக்கழிவு, கீழ் அடுக்கில் உள்ள, 10-12 ஓலைகளின் மேற்பரப்பில் பரவும்.
» இதனால், இவற்றின் மேல், கேப்னோடியம் என்னும் கரும்பூசணம் படரும்.
» இந்தப் பூச்சிகளால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுவதில்லை.
» ரூகோஸ் வெள்ளை ஈக்கள், அனைத்துத் தென்னை இரகங்களிலும் இருந்தாலும், சௌகாட் ஆரஞ்சுக் குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, கென்தாளிக் குட்டை, மலேசியன் பச்சைக் குட்டை ஆகிய குட்டை இரகங்களிலும், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இரகங்களிலும் அதிகளவில் இருக்கும்.
மாற்றுப் பயிர்கள்
இந்தப் பூச்சிகள், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி ஆகியவற்றில் மிகக் குறைந்தளவில் காணப்படும்.
வளர் சூழல்
ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை, பருவமழைக் குறைவால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பம், காற்றிலுள்ள குறைவான ஈரப்பதம் ஆகியன, இப்பூச்சிகள் பெருமளவில் பெருகக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலாண்மை
» எண்ணெய் அல்லது கிரீஸ் தடவிய, மூன்றடி நீளம், ஓரடி அகலமுள்ள மஞ்சள் நெகிழித்தாள் ஒட்டுப் பொறிகளை, ஏக்கருக்குப் பத்து வீதம் எடுத்து, ஆறடி உயரத்தில், ஆங்காங்கே தொங்க விட்டு, பூச்சிகளை ஈர்த்து அழிக்கலாம்.
» பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு, நீரைத் தெளிக்கலாம்.
» கிரைசோபைட் இரை விழுங்கிகள், இந்தப் பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை உணவாகக் கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு 1,000 கிரைசோபைட் பூச்சிகள் வீதம் விட வேண்டும்.
» ரூகோஸ் வெள்ளை ஈக்கள் அதிகமாகப் பரவும் போது, காக்சினெல்லிட் பொறி வண்டுகள், என்கார்சியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாகி விடும்.
» ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஓலைகளை, சிறியளவில் வெட்டி, பாதிப்பு அதிகமாக இருக்கும் மரங்களின் மீது வைக்க வேண்டும்.
» ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது 2 மி.லி. அசாடிராக்டின், ஒரு மி.லி. ஒட்டும் திரவம் வீதம் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்க வேண்டும்.
» கரும் பூசணத்தைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் மைதா மாவு வீதம் கலந்த கரைசலை, ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
குறிப்பு
பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாகத் தெளித்தால், நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும். எனவே, அவற்றைத் தவிர்த்து, நன்மை செய்யும் பூச்சிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்த வேண்டும்.

டாக்டர். எஸ். ஸ்ரீவர புத்தி புவனேஸ்வரி,
இணைப் பேராசிரியர் – வேளாண் விரிவாக்கம், அடிப்படை மற்றும் சமூக அறிவியல் துறை, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301. முனைவர் எம்.எஸ்.அனீஷாராணி, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

