My page - topic 1, topic 2, topic 3

மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!

மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!

கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம் சுமார் 4,500 எக்டரில் ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் இங்கே இருந்து வருகிறது. இந்த மக்காச்சோள அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்

வயல் மற்றும் பயிர்க் கண்காணிப்பு

மக்காச்சோளத்தை விதைத்து ஏழு நாட்களுக்குப் பிறகு, எக்டருக்கு 50 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் எடுத்து, கடந்த ஆண்டில் பாதிப்புக்கு உள்ளான இடங்கள் மற்றும் இந்த ஆண்டில் புதிதாக மக்காச்சோளத்தைப் பயிரிடும் இடங்களில் வைத்து, வயல் மற்றும் பயிர்களைத் தொடக்க நிலையிலிருந்து கண்காணிக்க வேண்டும்.

வயல்சூழல் ஆய்வு

மக்காச்சோள வயல்சூழல் ஆய்வை, பயிர் முளைத்ததில் இருந்தே செயல்படுத்த வேண்டும். அதன்படி,

» விதை முளைத்து 3-4 வாரங்கள் வரை, படைப்புழுவின் தாக்குதல் 5 சதம் வரை இருந்தால், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

» மக்காச்சோளம் முளைத்து 5-7 வாரங்கள் வரை, படைப்புழுவின் தாக்குதல் 10 சதமும், பின் வளர்ச்சிப் பருவத்தில் 20 சதமும் இருந்தால், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

» ஆண், பெண் பூக்கள் பூக்கும் தருணத்தில், 10 சதவீத அளவில் தாக்குதல் இருந்தால், பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

விதை  நேர்த்தி

ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு தயோமீத்தாக்சம் 30% FS 10 கிராம் அல்லது பெவேரியா பேசியானா 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உழவியல் முறைகள்  

» மக்காச்சோள விதைப்புக்கு முன், நிலத்தை நன்கு உழுதல் அவசியம். இதன் மூலம், மண்ணில் உள்ள மக்காச்சோளப் படைப்புழுக்களின் கூட்டுப்புழுக்கள், பறவை போன்ற இரை உண்ணிகளுக்கு உணவாகி அழியும்.

» உழவர்கள் அனைவரும் சரியான பருவத்தில் ஒரே சமயத்தில் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டு உழுவது அவசியம்.

» துவரை அல்லது உளுந்து அல்லது பாசிப்பயற்றை ஊடுபயிராக விதைக்க வேண்டும். 2 முதல் 4 வரிசையில் தட்டைப்பயறு, சூரியகாந்தி மற்றும் எள்ளை வரப்புப் பயிராக இட வேண்டும்.

» மக்காச்சோளத்தை விதைத்து முப்பது நாட்கள் வரை, எக்டருக்கு 25 பறவைத் தாங்கிகள் வீதம், அதாவது T வடிவக் குச்சிகளை ஊன்றி வைக்க வேண்டும்.

» மக்காச்சோள நிலத்தைச் சுற்றி, 3-4 வரிசையில், நேப்பியர் புல் போன்ற பொறிப்பயிரை நடவு செய்தால், மக்காச்சோளப் படைப்புழு முதலில் பொறிப்பயிரைத் தாக்கும். இது தெரிந்ததும் 5 சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது அசாடிரக்டின் 1,500 பிபிஎம் வீதம் தெளிக்க வேண்டும்.

» நிலத்தைக் களைகள் இன்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரியான அளவில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். கடினமான கதிர் உறையுள்ள வீரிய இரகங்களைப் பயிரிட்டால், படைப்புழுத் தாக்குதலில் இருந்து மக்காச்சோளக் கதிரைப் பாதுகாக்கலாம்.

» இறவையில் 60×25 செ.மீ. இடைவெளியிலும், மானாவாரியில் 45×20 செ.மீ. இடைவெளியிலும் மக்காச்சோளத்தை விதைக்க வேண்டும். பத்து வரிசைக்கு ஒரு வரிசையை 75 செ.மீ. கலவன் இடைவெளியாக விட வேண்டும்.

கைவினை முறைகள்

» மக்காச்சோளப் படைப்புழுவின் முட்டைக் குவியல் மற்றும் முதல், இரண்டாம் நிலை இளம் புழுக்களை, கையால் சேகரித்து அழிக்க வேண்டும். அல்லது ம.எண்ணெய்யில் இட்டு அழிக்க வேண்டும்.

» தாக்குதல் அறிகுறியுள்ள மக்காச்சோளப் பயிரின் நுனிக்குருத்தில், காய்ந்த வயல் மண்ணைப் போடுவதன் மூலம், படைப்புழுக்களை அழிக்கலாம்.

» எக்டருக்கு 50 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைத்து, நிலத்திலுள்ள அனைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

உயிரியல் கட்டுப்பாடு முறைகள்

இயற்கை எதிரிகளைப் பாதுகாத்தல்: நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்க, பயறுவகைப் பயிர்கள், அலங்காரப் பூக்களைப் பூக்கும் தாவரங்கள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட வேண்டும்.

முட்டை ஒட்டுண்ணிகளை விடுதல்: ஒரு இனக்கவர்ச்சிப் பொறிக்கு 3 பூச்சி வீதம் விழும் போது, டிரைக்கோகிரம்மா பிரிடியோசம் அல்லது டெலினாமஸ் ரிமஸ் என்னும் நன்மை செய்யும் குளவிகளை, எக்டருக்கு 1,25,000 வீதம், ஒரு வார இடைவெளியில் நிலத்தில் விட வேண்டும்.

உயிரியல் பூச்சிக்கொல்லித் தெளிப்பு: மக்காச்சோளப் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில், 5 முதல் 10 சதவீத அளவில் சேதாரம் தென்படும் போது, உயிரியல் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது மிகுந்த பலனைத் தரும்.

விதைத்து 15-25 நாட்களில், மெட்டாரைசியம் அனிசோபிளே என்னும் உயிரியல் பூசணப் பூச்சிக்கொல்லியை, ஒரு லிட்டர் நீருக்கு 8 கிராம் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் நுனிக்குருத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

இரசாயனப் பூச்சிக்கொல்லித் தெளிப்பு: முதல் கட்ட நடவடிக்கை: மக்காச்சோள விதைகள் முளைத்து வளரும் முதல்நிலை வளர்ச்சிப் பருவத்தில், படைப்புழுவின் தாக்குதல் 5 சதவீத அளவில் இருக்கும் போது மற்றும் படைப்புழுவின் புதிய முட்டைக் குவியல் பொரிக்காமல் இருக்க, 5 சதவீத வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. அசாடிரக்டின் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் தயோடிகார்ப் 75 WP மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.4 கிராம் எமாக்டின் பென்சோயேட் வீதம் எடுத்துக் கலந்து நுனிக்குருத்தில் தெளித்தால், படைப்புழுக்கள் கட்டுப்படும்.

இரண்டாம் கட்ட நடவடிக்கை: மக்காச்சோளப் பயிரில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை படைப்புழுக்களின் தாக்குதல் 10-20 சதவீத அளவில் இருப்பின், கீழ்க்கண்ட இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

» பயிர் 15-20 நாட்கள் வயதில் இருக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. அசாடிராக்டின் அல்லது 0.4 கிராம் இமாமெக்டின் பென்சோயிட் 5 எஸ். ஜி. அல்லது 0.5 மி.லி. ஸ்பைனிடொரம் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம், குருத்துப் பகுதியில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

» பயிர் 25-30 நாட்கள் வயதில் இருக்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 8 கிராம் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது 1.5 மி.லி. நாவலூரன் அல்லது 0.4 மி.லி. ப்ளுபெந்தமைடு அல்லது 0.4 மி.லி. குளோரான்டிரிபோல் 18.5 எஸ்சி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம், குருத்துப் பகுதியில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

» தேவைப்பட்டால், 45 நாட்களுக்குப் பிறகு, 25-30 நாட்களில் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே தெளிக்கலாம்.

» விசைத் தெளிப்பான் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் போது, மேற்குறிப்பிட்ட பரிந்துரை அளவில் மூன்று மடங்கு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

» அனைத்துப் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் குருத்தில் படும்படி தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலையில் மட்டுமே மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

விஷ உணவுப்பொறி வைத்தல்: இது, 5 மற்றும் 6-ஆம் நிலையில் உள்ள முதிர்ந்த புழுக்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

» அதன்படி, பத்துக் கிலோ அரிசித்தவிட்டில் 2 கிலோ வெல்லம், 2-3 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை 24 மணி நேரம் ஊற வைத்துப் புளிக்க விட வேண்டும்.

» பிறகு, குருத்தில் இடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், இந்தக் கலவையுடன் 100 கிராம் தயோடிகார்ப் வீதம் நன்கு கலந்து, பயிரின் குருத்தில் இட வேண்டும்.

» எட்டு வாரத்தில் இருந்து பூக்கள் பூக்கும் காலம் முழுவதும், இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது. படைப்புழுக்களைக் கைகளால் மட்டுமே பொறுக்கி அழிக்க வேண்டும்.

மேற்கண்ட பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால், மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழுக்களின் தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.


மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!

டாக்டர். எஸ். ஸ்ரீவர புத்தி புவனேஸ்வரி,

இணைப் பேராசிரியர் – வேளாண் விரிவாக்கம், அடிப்படை மற்றும் சமூக அறிவியல் துறை, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301. முனைவர் எம்.எஸ்.அனீஷாராணி, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி – 635 112.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்: