My page - topic 1, topic 2, topic 3

பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்!

பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்!

ழங்கள், நமது உடல் நலம் காக்கும் முக்கிய உணவுப் பொருள்களாக விளங்கி வருகின்றன. வைட்டமின்கள், தாதுகள், நார்ச்சத்து, இயற்கை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சேர்மங்கள் மற்றும் பல்வேறு உயிர்ச் செயற்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், பழங்கள் மிக விரைவில் தரமிழக்கும் இயல்புள்ளவை என்பதால், அறுவடை செய்த சில நாட்களிலேயே மென்மையடைதல், நிறமாறுதல், நீரிழப்பு, பூஞ்சைத் தாக்குதல், சுவை மாற்றம் போன்ற காரணங்களால், சந்தை மதிப்பை இழக்கின்றன. 

ஓசோன் தொழில் நுட்பம் (Ozone Technology) 

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 30-45 சதவீதம், அறுவடைக்குப் பிந்தைய சேதாரமாக மதிப்பிடப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, உணவுப் பாதுகாப்பும் சவாலுக்கு உள்ளாகிறது. எனவே, வேதிப்பொருள் பயன்பாடின்றி, பழங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்கும் தொழில் நுட்பங்களுக்கான (Ozone Technology) தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது.

அந்தப் பசுமைத் தொழில் நுட்பங்களில் இன்று முன்னிலையில் இருப்பது, ஓசோன் தொழில்நுட்பமாகும். சமீபத்தில் வெளியான விரிவான அறிவியல் மதிப்பாய்வுகள், ஓசோன் தொழில்நுட்பம் (Ozone Techonology), பழங்களின் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதோடு, தரத்தைப் பாதுகாப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உருவெடுத்து வருவதாகக் குறிப்பிடுகின்றன.

ஓசோன் (O₃) என்பது, மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆன இயற்கை வாயு. வளி மண்டலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஓசோன் படலம், சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீமைமிகு புற ஊதாக் கதிர்களைத் தடுத்து உயிர்களைப் பாதுகாக்கிறது. இதே ஓசோனை முறையாகக் கட்டுப்படுத்தி, உணவுத் தொழில் துறையில் பயன்படுத்தும் போது, அது, மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது.

ஓசோனின் சிறப்பு என்னவெனில், தனது வேலையை முடித்த பிறகு, அது, மீண்டும் சாதாரண ஆக்ஸிஜனாக (O₂) மாறி விடுவது தான். இதனால், குளோரின் போன்ற வேதிப்பொருள்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் நச்சு எச்சங்கள் இதில் உருவாவது இல்லை. எனவே, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), உணவுப் பதப்படுத்தலில் பயன்படுத்த ஏதுவான தொழில் நுட்பமாக, ஓசோனை அங்கிகரித்துள்ளது.

ஆரம்பத்தில், ஓசோன் (Ozone Techonology) சக்தி வாய்ந்த கிருமி நாசினி என்னும் கோணத்தில் மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதன் செயல்பாடு, அதைவிட மிகவும் விரிவானது என்பதை நிரூபித்துள்ளன. ஓசோன் (Ozone Techonology) ஆனது, பழங்களின் மேற்பரப்பில் உள்ள போட்ரைட்டிஸ் சினீரியா என்னும் சாம்பல் பூஞ்சை, பெனிசில்லியம் என்னும் நீல, பச்சைப் பூஞ்சை, ஆல்டர்னேரியா என்னும் கரும்புள்ளிப் பூஞ்சை, கொலெட்டோட்ரைக்கம் என்னும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை போன்ற, அழுகலை ஏற்படுத்தும் பூஞ்சைகளையும், பல்வேறு பாக்டீரியாக்களையும் திறம்படக் கட்டுப்படுத்துகிறது.

இதன் மூலம், சேமிப்பின் போது ஏற்படும் அழுகல் குறைந்து, பழங்களின் சந்தைத் தரம் நெடுநாட்கள் பராமரிக்கப்படுகிறது. மேலும், பழத்தின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையும் ஓசோன் தூண்டுகிறது என்பது, சமீபத்திய ஆராய்ச்சிகளின் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

விஞ்ஞானிகள் தற்போது ஓசோனை, பிசியாலஜிக்கல் எலிசிட்டர் என்று கூறுகின்றனர். அதாவது, மிகக் குறைந்தளவில் பயன்படுத்தப்படும் ஓசோன், பழங்களில் இருக்கும் இயற்கைப் பாதுகாப்பு முறைகளைச் செயல்படுத்துகிறது. குறிப்பாக, சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூட்டேஸ் (SOD), கேட்டலேஸ் (CAT), அஸ்கார்பேட் பெராக்சிடேஸ் (APX) போன்ற, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு நொதிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது.

இதனால், சேமிப்பின் போது உருவாகும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் (Oxidative Stress) குறைந்து, செல் சவ்வுகள் சேதமின்றி, நீண்ட காலம் காக்கப்படுகின்றன. மேலும், பாலிபீனால்கள், ஃபிளேவனாய்டுகள் போன்ற, இயற்கை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சேர்மங்களின் அளவும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பழங்களின் சத்து மதிப்பும், தரமும் நீண்ட காலம் காக்கப்படுகின்றன.

பழுத்தலைத் தாமதம் செய்வதிலும் ஓசோன் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, பழங்கள் பழுக்கும் போது அதிகளவில் உற்பத்தியாகும் எத்திலீன் என்னும் தாவர ஹார்மோன் தான், பழுத்தல் வேகமாக நடப்பதற்கும், தரச் சிதைவுக்கும் காரணமாகிறது. இந்நிலையில், சரியான அளவில் பயன்படுத்தப்படும் ஓசோன், எத்திலீனின் செயல்பாட்டை ஓரளவுக்குக் குறைத்து, பழுத்தல் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இதனால், பழங்களின் உறுதித்தன்மை, நிறம், மணம், சுவை ஆகியன, நீண்ட காலம் காக்கப்படுகின்றன. இதுவே, ஓசோன் சிகிச்சை பெற்ற பழங்கள், சாதாரண முறையில் சேமிக்கப்பட்ட பழங்களை விட, அதிக நாட்கள் தரத்துடன் இருப்பதற்கான முக்கியக் காரணமாகும்.

உலகின் பல நாடுகளில் பல்வேறு பழங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இந்தத் தொழில்நுட்பத்தின் (Ozone Techonology) செயல் திறனை உறுதிப்படுத்தி உள்ளன. திராட்சையில் செய்யப்பட்ட ஓசோன் சிகிச்சை, போட்ரைட்டிஸ் பூஞ்சை வளர்ச்சியைக் கணிசமாகக் குறைத்து, சேமிப்புக் காலத்தை நீட்டித்தது. ஸ்ட்ராபெரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், குறைந்த செறிவிலான ஓசோன் சிகிச்சை, பழத்தின் நிறம், உறுதி மற்றும் வைட்டமின் சி-யின் அளவை நீண்ட காலம் பாதுகாத்தது.

ஆப்பிளில், எத்திலீனின் செயல்பாடு குறைவதால், பழுத்தல் தாமதமாகி, அதன் தரம் நீண்ட காலம் நிலைத்தது. மாம்பழம், கிவி, ஆரஞ்சு, செர்ரி போன்ற உயர் மதிப்புள்ள பழங்களிலும் இதைப் போன்ற சாதகமான முடிவுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆய்வுகள் அனைத்தும், ஓசோன் ஒரு கிருமி நாசினி மட்டுமல்ல; அறுவடை செய்யப்பட்ட பழங்களின் உயிரியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, அவற்றின் தரத்தைப் பாதுகாக்கும் கவசமாகவும் விளங்குவதை உறுதி செய்துள்ளன.

இன்று உலகளவில் ஓசோன் தொழில் நுட்பம், இரண்டு முக்கிய வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று, ஓசோன் கலந்த நீர். இதில் பழங்களைச் சில நிமிடங்கள் கழுவுவதன் மூலம், மேற்பரப்பில் இருக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் சில பூச்சிக்கொல்லி எச்சங்கள் அகற்றப்படுகின்றன. மற்றொன்று, ஓசோன் வாயு. இது, குளிர் சாதனக் கிடங்குகள், பழங்களைப் பொதியிடும் மையங்கள் மற்றும் ஏற்றுமதி சேமிப்பு அறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு முறைகளும் வேதிப்பொருள் பயன்பாட்டைக் குறைத்து, பாதுகாப்பான உணவுப் பொருள்களை நுகர்வோருக்கு வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயர்தரப் பழங்களில், ஓசோன் தொழில்நுட்பத்தின் (Ozone Techonology) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


பழங்களைப் பாதுகாக்கும் ஓசோன் தொழில் நுட்பம்!

முனைவர் மு.வெங்கிடசாமி,

உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112. முனைவர் பு.நந்தவர்மன், உணவுப் பதனப் பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தானியங்களைக் காக்கும் ரேடியோ அலைத் தொழில் நுட்பம்!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • வேளாண்மையில் டிரோன் கருவியின் பங்கு!

  • நெல் சாகுபடிக்கான விதைப்பு மற்றும் நடவுக் கருவிகள்!

  • தக்காளி விதைகளைப் பிரிக்கும் கருவி!

  • களைக் கருவிகள்!

  • கரும்பு சாகுபடிக்கு உதவும் கருவிகள்!

  • நிலக்கடலை சாகுபடியில் கருவிகள்!

  • பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!