உணவே உயிர். அந்த உணவின் உயிர்நாடி நான். நான் தான் நெல் பேசுகிறேன். மனிதர்கள் என்னை நெல் என்றும், அரிசி என்றும், சோறு என்றும், பல பெயர்களில் அழைக்கிறார்கள். என் வாழ்வின் பயணத்தையும், அந்தப் பயணப் பாதையையும் குறித்து, உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நான் புல் வகையைச் சேர்ந்த பயிராவேன். மனித குலத்தின் மிகப் பழமையான உணவுப் பயிர்களில் ஒன்றாகவும், உலக மக்களின் முக்கிய உணவாகவும் விளங்கும் பெருமை எனக்குண்டு. குறிப்பாக, இந்தியரின் உணவிலும், தமிழரின் பண்பாட்டிலும், விவசாயிகளின் வாழ்க்கையிலும், பிரிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறேன்.
சிறிய விதையாகத் தொடங்கி, பசுமையான நாற்றாகப் பிறந்து, பயிராக வளர்ந்து, பொன்னிறக் கதிராக விளைந்து, இறுதியில் மனிதனின் உணவாக மாறும் என் வாழ்க்கைப் பயணம், பல்வேறு மாற்றங்களைக் கொண்டது. என் வாழ்வின் பின்னால், விவசாயிகளின் வியர்வையும், இயற்கையின் அருளும், அறிவியலின் வளர்ச்சியும் இருக்கின்றன.
என் பிறப்பும் வளர்ச்சியும்
என் வாழ்க்கை, என்னிடமிருந்தே தொடங்குகிறது. விவசாயிகள் என்னையே விதைகளாக்கி, நாற்றங்காலில் விதைக்கிறார்கள். சில நாட்களில் பச்சை நாற்றுகளாக நான் முளைக்கிறேன். நாற்றுகளாக வளர்ந்ததும், கவனமாகப் பறித்து, நன்கு உழுது சமப்படுத்திய வயலில் நடவு செய்கிறார்கள். சூரிய ஒளி, நீர், மண்வளம், காற்று, உரச்சத்துகள் ஆகியன, எனது வளர்ச்சிக்கு அடிப்படையாகின்றன.
என்னைச் சுற்றி வளரும் களைகள், என் உணவு மற்றும் நீருக்குப் போட்டியிடுகின்றன. எனவே, விவசாயிகள் களைகளை அகற்றி, தேவையான உரமிட்டு, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து என்னைக் காக்கிறார்கள்.
நாட்கள் நகர நகர, நான் வளர்கிறேன். கதிர்களை வெளியிடுகிறேன். அந்தக் கதிர்களில் நெல் மணிகளாக மீண்டும் உருவாகிறேன். நாளடைவில் முற்றி, கதிர்களாக மாறி அறுவடைக்குத் தயாராகிறேன்.
விதையிலிருந்து உணவு வரை
விவசாயிகள் என்னைப் பக்குவமாக அறுவடை செய்து, உலர்த்திச் சுத்தப்படுத்திச் சேமிக்கின்றனர். பிறகு, என் தோலான உமியை நீக்குவதால் அரிசியாக மாறுகிறேன். பிறகு, அரிசியிலிருந்து சோறு, இட்லி, தோசை, பொங்கல், பிரியாணி, அவல், பொரி என, மக்கள் விரும்பும் பல்வேறு உணவுகளாக மாறி, அவர்களின் பசியைப் போக்குகிறேன். இப்படி, பெரும்பாலான மக்களின் அடிப்படை உணவாக விளங்குகிறேன்.
தமிழரின் வாழ்க்கையிலும் எனக்குத் தனிச் சிறப்புண்டு. தமிழரின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல், என்னை மையமாக வைத்துக் கொண்டாடப்படும் பெருவிழா ஆகும். புதிதாக விளைந்த என்னை அரிசியாக்கி, இனிய பொங்கலாக்கி, இயற்கைக்குப் படைத்து நன்றி செலுத்துகின்றனர். பொங்கலோ பொங்கல் என்று, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது, என் பிறவியின் பயனை, பெருமையை உணர்கிறேன்.
என் பாரம்பரிய வாழ்க்கை
முன்பு என்னை வளர்ப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. விவசாயிகள் மாடுகளைப் பயன்படுத்தி வயலை உழுதனர். கைகளால் நாற்றுகளைப் பறித்து நடவு செய்தனர். களைகளைக் கைகளால் அகற்றினர். அறுவடையையும் மக்களே செய்தனர்.
அந்தக் காலத்தில் விவசாயிகளின் உழைப்பும் அதிகம், நேரமும் அதிகம். ஆனால், விவசாயிகளின் அன்பாலும் ஆதரவாலும் நான் வளர்ந்தேன். விவசாயிகளின் ஒவ்வொரு வியர்வைத் துளியில் இருந்தும், ஒவ்வொரு நெல் மணியாக உருவானேன்.
என் நவீன வாழ்க்கை
ஆனால், இன்று காலம் மாறி விட்டது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, என்னை வளர்ப்பதிலும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண்ணில் உள்ள சத்துகளை அறிந்து அதற்கேற்ப உரமிடப்படுகிறது. இதனால், உரச்செலவைச் சிக்கனப்படுத்தி, மண்வளம் காக்கப்படுகிறது.
மேலும், எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானிகள், அதிக மகசூல், குறுகிய கால அறுவடை, நோயெதிர்ப்பு, வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளர்ந்து, இந்தச் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில், என்னை உருவாக்கி வருகிறார்கள்.
இயந்திர நடவு
முன்பு, நாள் கணக்கில் கைகளால் நடவு செய்த என்னை, இன்று இயந்திரம் மூலம் விரைவாக நடவு செய்கிறார்கள். இதனால், நேரம், பணம் மட்டுமல்ல; தொழிலாளர்கள் தேவையும் குறைகிறது.
நேரடி நெல் விதைப்பு
நாற்றுகளாக வளர்த்து நடவு செய்த என்னை, நேரடி நெல் விதைப்பு (Direct Seeded Rice) என்னும் முறையில், என்னை நேரடியாக வயலில் விதைத்து வளர்க்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு, நாற்றங்கால் மற்றும் நடவுச் செலவுகளைக் குறைப்பதுடன், விரைவாக வளர்ந்து அதிகமாக விளைந்து, விவசாயிகள் பொருளாதார ஏற்றம் காண உதவி செய்கிறேன்.
திருந்திய நெல் சாகுபடி
திருந்திய நெல் சாகுபடி (System of Rice Intensification) என்னும் முறையில், இளம் நாற்றுகளாக என்னை வளர்த்து, சீரான இடைவெளியில் நடவு செய்து, களையெடுத்து, பாசனம் செய்து வளர்க்கிறார்கள். இதனால், நான் வலுவான வேர் வளர்ச்சியுடன் சிறந்த பயிராக வளர்ந்து, கூடுதலாக விளைந்து விவசாயிகளுக்குக் கை கொடுக்கிறேன்.
நீர் மேலாண்மை
என்னை எப்போதும் அதிக நீர் விட்டு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை எனக்குத் தரும் நீர், வயலில் வற்றியதும், மீண்டும் பாய்ச்சினால் போதும். இதை விஞ்ஞானிகள், பாய்ச்சலும் காய்ச்சலும் முறை (Alternate Wetting and Drying) என்று கூறுகிறார்கள். இதனால், காலத்துக்கு ஏற்ப, நானும் என் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, குறைந்த நீரிலும் சிறப்பாக விளைந்து, என்னை வளர்க்கும் விவசாயப் பெருமக்களுக்குத் துணையாக இருந்து வருகிறேன்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
என்னை அக்கறையுடன் வளர்க்கும் விவசாயிகள், பூச்சிகள் என்னைத் தாக்காமல் இருக்க, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (Integrated Pest Management) என்னும் முறையில், வயலைத் தொடர்ந்து கண்காணித்து, பொறிகள், உயிரியல் கட்டுப்பாடு போன்ற முறைகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனர். தேவையின் போது மட்டுமே, பொருத்தமான பயிர்ப் பாதுகாப்புப் பொருள்களைப் பயன்படுத்துவது முக்கியம்.
ட்ரோன் மற்றும் துல்லிய வேளாண்மை
இன்றுள்ள தொழில் நுட்பம், என் வயலுக்குள்ளும் வந்து விட்டது. ட்ரோன்கள் மூலம் வயலைக் கண்காணிக்கவும், ஒருசில வேளாண் பணிகளைச் செய்யவும் முடிகிறது. சென்சார்கள் மூலம் மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நிலையைக் கண்காணிக்க முடிகிறது.
செயற்கைக்கோள் தரவுகள், சென்சார்கள், உலகளாவிய நிலை கண்டறியும் அமைப்பு (GPS) மற்றும் தரவுப் பகுப்பாய்வை இணைத்துச் செய்யப்படும் துல்லிய வேளாண்மை (Precision Agriculture), எதிர்காலத்தில் என்னை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது.
உலக அரங்கில் நான்
நான் உணவுப்பொருள் மட்டுமல்ல. இவ்வகையில், உலகளாவிய வணிகப் பொருளாகவும் விளங்குகிறேன். உலகத்தில் என்னை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக ஆசிய நாடுகள் உள்ளன. இந்தியா, சீனா, வங்கதேசம், இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகள், என்னை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சமீபத்திய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் புள்ளிவிவரத் தரவுத்தளம், 2024 வரையிலான பயிர் உற்பத்தி மற்றும் அறுவடைப் பரப்புத் தரவுகளை வழங்குகிறது. இந்திய அரசின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தகவலின்படி, 2024-ஆம் ஆண்டில், உலகளவில் மிகப்பெரிய அளவில் என்னை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருந்தது.
இந்தியாவில் என் பெருமை
என் தாயகங்களில் மிக முக்கியமானது இந்தியா. இந்தியாவில் 2024-25-இல் என் உற்பத்தி 150.18 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டது. உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், என்னை உற்பத்தி செய்வதில், முன்னணியில் உள்ளன.
2024-2025-இல், உத்தர பிரதேசத்தில் 13.82 சதம், தெலங்கானாவில் 11.62 சதம், மேற்கு வங்கத்தில் 10.67 சதம், பஞ்சாப்பில் 9.56 சதம், சத்தீஸ்கரில் 6.90 சதம், ஒடிசாவில் 6.34 சதம், மத்திய பிரதேசத்தில் 6.07 சதம், பீகாரில் 5.53 சதம், ஆந்திர பிரதேசத்தில் 5.43 சதம், தமிழ்நாட்டில் 4.72 சதவீத அளவில், என்னை உற்பத்தி செய்தனர்.
உலக ஏற்றுமதியில் இந்தியா
என் பயணம், வயலைத் தாண்டி கடல்களையும் கடக்கிறது. என்னை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில், இந்தியா 2012 முதல் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகளவில் என்னை ஏற்றுமதி செய்வதில், இந்தியாவின் பங்கு 30-35 சதவீதமாகும்.
2024-25-இல் இந்தியா, 20.19 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் என்னை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 12.46 பில்லியன் அமெரிக்க டாலராகும். சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், யேமன், அமெரிக்கா ஆகியன, எனக்கான முக்கியச் சந்தைகளாகும்.
எனக்குள்ள சிறப்புப் பெயர்கள்
நெல் என்னும் பொதுப்பெயரில் என்னை அழைத்தாலும், நான் வளர்வதில், என் உடல் அமைப்பில், எனது குணங்களில் உள்ள மாற்றங்களால், பல்வேறு சிறப்புப் பெயர்களை, இந்தச் சமூகம் எனக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவில் பிரபலமான என் பெயர்கள்
- பூசா பாஸ்மதி 1121
- பூசா பாஸ்மதி 1509
- பூசா பாஸ்மதி 1718
- பாஸ்மதி 370
- சாம்பா மஹ்சூரி – BPT 5204
- ஸ்வர்ணா
- ஐ.ஆர். 64
- சோனா மசூரி
- பொன்னி
- ஜீரகச் சம்பா
- கோலம்
- காளாநமக்
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகப் பதிவின்படி, பூசா பாஸ்மதி 1121 நெல் என்னும் நான், முக்கிய ஏற்றுமதிப் பொருளாக, அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் வகையில் உள்ளேன். பூசா பாஸ்மதி 1509 நெல் என்னும் நான், குறுகிய காலத்தில் விளைந்து பயனளிக்கும் வகையில் உள்ளேன்.
சாம்பா மசூரி- BPT 5204, ஸ்வர்ணா ஆகிய பெயர்களில் உள்ள நான், சிறப்பு இரகங்கள் என்னும் வரிசையில் இடம் பெற்றுள்ளேன். ஐ.ஆர்.64 நெல் என்னும் நான், பரவலாகப் பயிரிடப்பட்ட முக்கிய இரகமாக இருக்கிறேன்.
பாஸ்மதி 1121 நெல் என்னும் நான், உலகச் சந்தையில் தனிப் புகழுடன் இருக்கிறேன், இதற்குக் காரணம், மெலிந்தும் நீண்டும் இருக்கும் நான், சோறாக மாறும் போது இன்னும் நீளுவேன் என்பது தான்.
பூசா பாஸ்மதி 1121 ஆகிய என்னை அடிப்படையாக வைத்து, வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நோயெதிர்ப்புத் தன்மையுள்ள எனக்கு, பூசா பாஸ்மதி 1885 இரக நெல் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
பாஸ்மதி என்னும் நான், இந்தியாவின் அடையாளம். நீண்டும், மெலிந்தும், தனித்த நறுமணம் மற்றும் சுவையுடன் இருப்பேன். இந்தியாவின் பாஸ்மதி புவிசார் குறியீடு பகுதி, பஞ்சாப், அரியானா, இமாச்சலம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் 30 மாவட்டங்கள், ஜம்மு- காஷ்மீரின் 3 மாவட்டங்களை உள்ளடக்கியது.
2025-26-இல் இந்தியா, பாஸ்மதி அரிசியாகிய என்னை 6.52 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்து, 5.67 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைப் பெற்றுள்ளது.
அறிவியலின் புதிய வளர்ச்சி
என் வளர்ச்சியில் அறிவியல் இன்னுமொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. கால நிலையைத் தாங்கும் திறன், நீர்ச்சேமிப்பு, உற்பத்தித் திறன் போன்ற பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், டி.ஆர்.ஆர்.100, பூசா டி.எஸ்.டி.1 ஆகிய பெயர்களில், மரபணுத் தொகுப்பு முறையில் மேம்படுத்தப்பட்ட நெல் இரகங்களாக என்னை உருவாக்கியுள்ளது.
பூசா டி.எஸ்.டி.1 நெல்லாகிய நான், சாம்பா மஹ்சூரி அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளேன். இதனால் என் எதிர்காலம், அதிக மகசூல் என்பதோடு மட்டும் முடிவதில்லை. குறைவான நீர், குறைவான வளப்பயன்பாடு, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன், தரமான உணவு ஆகியனவும், என் எதிர்காலத்தின் முக்கிய இலக்குகளாக மாறியுள்ளன.
என் எதிர்காலக் கனவு
உலக மக்கள் தொகை கூடக்கூட, உணவுத் தேவையும் கூடும். அதே நேரத்தில், நீர்ப் பற்றாக்குறை, மண்வளக் குறைவு, காலநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சவால்களும் கூடும். எனவே, என்னை வளர்க்கும் விவசாயிகளின் கடமைகளாவன:
- நீரைச் சேமிக்க வேண்டும்.
- மண்ணைப் பாதுகாக்க வேண்டும்.
- சரியான இரகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தேவைக்கேற்ப உரமிட வேண்டும்.
- பூச்சிக்கொல்லிகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
- இயந்திரங்களையும் நவீன உத்திகளையும் பயன்படுத்த வேண்டும்.
- அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டும்.
அப்போது தான் குறைந்த வளத்தில் தரமான உணவை உலகுக்கு வழங்க முடியும். விவசாயிகளே என் உயிராவர். என் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் அவர்கள் தான். மழை வருமா என்று வானத்தைப் பார்த்துக் காத்திருப்பவர்கள் விவசாயிகள். வெய்யிலில் வயலில் உழைப்பவர்கள் அவர்கள். விதைகளை மண்ணிலிட்டு, அவை மணிகள் நிறைந்த கதிர்களாக மாறும் வரை காப்பவர்கள் அவர்கள்.
நான் நெல் சோறாக மக்களின் தட்டுகளுக்குச் செல்வதற்கு முன், பல மாதங்கள் விவசாயிகளுடன் தான் பயணிக்கிறேன். எனவே, என்னை மதிப்பது என்பது, உணவை மதிப்பது மட்டுமல்ல; விவசாயிகளின் உழைப்பையும் மதிப்பதாகும்.
உணவை வீணாக்காதீர்
கைப்பிடி அரிசியின் பின்னால், விவசாயிகளின் உழைப்பு, நீர், மண், விதை, சூரிய ஒளி, மழை, நேரம், பணம் போன்றவை இருக்கின்றன. எனவே, உணவை வீணாக்காமல், தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நெல் மணியாகிய என்னை மதிப்பது, விவசாயிகளின் வியர்வையை மதிப்பதாகும்.
நான் சாதாரணத் தானியம் அல்ல. நான் உணவு, உழவனின் நம்பிக்கை. நான் தமிழர் பண்பாட்டின் அடையாளம், இந்தியாவின் வேளாண்மையின் பெருமை. நான் உலக வர்த்தகத்தின் முக்கியப் பொருள், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் அங்கம். நான் விளைந்தால் மனிதன் பசியாறுவான்; விவசாயிகள் வாழ்ந்தால் நான் தொடர்ந்து விளைவேன்.
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும் என்னும் ஔவையின் வாக்குக்கு ஏற்ப, மக்களின் வாழ்வை உயர்த்துவதே என் இலட்சியம். இதுவே என் வரலாறு, என் நிகழ்காலம், என் எதிர்காலக் கனவு.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


