தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் (Dams) கட்டப்பட்டு உள்ளன. இந்த அணைகளின் முக்கிய நோக்கம், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்து, தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சிக்கும், குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்துவது தான். இத்தகைய அணைகளில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மேட்டூர் அணை (Mettur Dam)
இந்த அணை சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ளது. இந்த அணை, மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 1925-இல் தொடங்கி, 1934-இல் கட்டி முடிக்கப்பட்டு, அன்றைய மெட்ராஸ் ஆளுநர், சர் ஜார்ஜ் பெட்ரிக் ஸ்டேன்லி என்பவரால், 1934 ஆகஸ்ட் 21 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதனால், இந்த அணைக்கு ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்னும் பெயரும் உண்டு. இது, தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
இந்த அணையின் நீளம், 1,700 மீட்டர், அதாவது, 5,300 அடியாகும். இதன் அதிகளவு உயரம் 124 அடியாகும். நீர்ச்சேமிப்பு உயரம் 120 அடியாகும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு, 93.4 டி.எம்.சி., அதாவது, 93,470 மில்லியன் கன அடியாகும்.
இந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணையும், கிருஷ்ணராஜசாகர் அணையும் உள்ளன. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில், சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதியைப் பெறுகின்றன. மேலும், இந்த அணை நீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின், குடிநீர் மற்றும் 240-250 மெகாவாட் நீர்மின் உற்பத்திக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
பவானிசாகர் அணை (Bhavanisagar Dam)
இந்த அணை, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறும், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறும் கலக்கும், ஈரோடு மாட்டம், சத்தியமங்கலம் வட்டம், கொத்தமங்கலம் கிராமத்துக்கு அருகில், கீழ் பவானி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், இது, பவானிசாகர் அணை என்று அழைக்கப்படுகிறது. கீழ் பவானி அணை (Lower Bhavani Dam) என்றும் அழைக்கப்படும் இது ஒரு மண் அணையாகும்.
இந்த அணை, 1948-இல் தொடங்கி, 1955-இல் கட்டி முடிக்கப்பட்டு, அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசரால், 1955 ஆகஸ்ட் 19-இல் திறந்து வைக்கப்பட்டது. இதன் உயரம் 105 அடியாகும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு 32.8 டி.எம்.சி., அதாவது, 33 கோடி கன அடியாகும். இதன் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2.07 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கிறது. மேலும், குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.
அமராவதி (Amaraavathi Dam)
இந்த அணை, திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி அணைக்குத் தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில், காமராசர் ஆட்சிக் காலத்தில், 1957-ஆம் ஆண்டு, அமராவதி ஆற்றின் குறுக்கே, உபாிநீரைப் பாதுகாத்துச் சேமிக்கும் நோக்கில் கட்டப்பட்டது. அமராவதி நீர்த்தேக்கம் 9.31 ச.கி.மீ., அதாவது 3.59 சதுர மைல் பரப்பளவும், 33.53 மீட்டர், அதாவது, 110 அடி ஆழமும் கொண்டது.
தொடக்கத்தில், பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்புக்காகக் கட்டப்பட்ட இந்த அணையில் இப்போது 4 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீா்த்தேக்கத்தில் மக்கா் என்னும் முதலைகள் பெருமளவில் உள்ளன. மீன்பிடிப்புப் பகுதியாகவும் இது திகழ்கிறது.
இங்கே பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால், நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சிகளைப் பார்க்கலாம். வடக்குப் பக்கத்தில் கீழேயுள்ள பகுதிகளையும், தெற்குப் பக்கத்தில் ஆனைமலைக் குன்றுகளையும், மேலே பழனி மலையையும் கண்டு மகிழலாம்.
முல்லை பெரியாறு அணை (Mullai Periyar Dam)
பெரியாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி, மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றுநீரைக் கிழக்கு நோக்கித் திருப்பி, மழை மறைவுப் பகுதியான மதுரை மாவட்டம் பயன்படும் வகையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஈர்ப்பு அணை (Masonry gravity dam) கட்டப்பட்டு உள்ளது.
பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால், முதலில் பெரியாறு அணை என அழைக்கப்பட்ட இந்த அணை, முல்லையாறும் பெரியாறும் சேருமிடத்தில் அமைந்திருப்பதால், இந்த இரண்டு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து, முல்லை பெரியாறு அணை என அழைக்கப்படுகிறது.
இந்த அணை, பிரிட்டிஷ் இராணுவப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick) என்பவரால், சுண்ணாம்பு சுர்க்கிக் கலவை மற்றும் கருங்கற்களால், 1887 முதல் 1895 வரை கட்டப்பட்டு, 1895 அக்டோபர் 10-இல் திறக்கப்பட்டது. இந்த அணையின் உயரம் 155 அடியாகும். இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி., அதாவது, 10,570 மில்லியன் கன அடியாகும்.
இந்த அணை கேரளத்தில் அமைந்திருந்தாலும், 1886-ஆம் ஆண்டு சனவரி 1-ஆம் தேதி, அப்போதைய சென்னை மாகாணம் மற்றும் திருவிதாங்கூர் அரசருக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஒரு ஏக்கர் நிலத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து ரூபாய் வாடகை வீதம், 999 ஆண்டுக் குத்தகை அடிப்படையில், தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
வைகை அணை (Vaigai Dam)
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி, 258 கி.மீ. தென் தமிழகத்தில் ஓடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை, பல்லாயிரம் ஆண்டுகள் செழிக்க வைத்த வைகை ஆற்றுக்குக் குறுக்கே, தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்கு அருகில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 111 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடிக்கு நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு, 6,091 மில்லியன் கன அடியாகும்.
ரூ.2 கோடியே 90 இலட்சம் செலவில் மட்டுமே கட்டப்பட்ட இந்த அணை, 1959-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடலில் நேரடியாகக் கலக்காத ஒரே ஆறு வைகை ஆறு தான். இந்த ஆறு, இராமநாதபுரம் பெரிய கண்மாயில் போய்ச் சேர்ந்து, அதன் பிறகு கடலில் கலக்கிறது.
வைகை அணையின் கீழ்ப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் விசை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், வைகை நீர்மின் திட்டம் இயங்கி வருகிறது. இது மொத்தம் ஆறு மெகாவாட் திறன் கொண்டது. இதில், மூன்று மெகாவாட்டாக இரண்டு அலகுகள் உள்ளன. முதல் அலகு 1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த அணைக்கட்டு நீர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரையும், ஆண்டிப்பட்டி, மதுரை மற்றும் உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதி மக்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது.
பாபநாசம் அணை (Paabanaasam Dam)
இந்த அணை, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. பாபநாசம் அணைக்கு, காரையாறு அணை என்னும் பெயரும் உண்டு. திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அணை, ஆங்கிலேயர் காலத்தில் 1938-இல் தொடங்கி, 1942-இல் கட்டி முடித்து, 1944-இல் திறக்கப்பட்டது.
இந்த அணையின் மொத்த உயரம் 143 அடியாகும். மொத்த நீர்க் கொள்ளளவு 5.5 டி.எம்.சி., அதாவது, 5,500 மில்லியன் கன அடியாகும். இந்த அணையில் இருந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், தாமிரபரணி ஆறு பாய்கிறது.
இதன் மூலம், இவ்விரு மாவட்டங்களில் உள்ள சுமார் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களின் குடிநீர்த் தேவையைச் சரி செய்கிறது.
பாபநாசம் அணையில் 28 மெகாவாட் திறனுள்ள நீர்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் சேர்வலாறு அணைக்கு அருகிலுள்ள பகுதியாகவும், இயற்கை அழகு நிறைந்த இடமாகவும் திகழ்கிறது.
மணிமுத்தாறு அணை (Manimuthaaru Dam)
மணிமுத்தாறு அணை, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், பொதிகை மலை அடிவாரத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 51 கி.மீ தொலைவில், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சிக்கு இடையில் உள்ளது.
மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், 1958-ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது. இந்த அணையின் உயரம் 118 அடி. மொத்த நீர்க் கொள்ளளவு, 5.5 டி.எம்.சி., அதாவது, சுமார் 5,511 மில்லியன் கன அடியாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ. ஆகும்.
அணையில் தேக்கப்படும் நீரின் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில், தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில், சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. அணையை ஒட்டி அழகிய பூங்கா உள்ளது. அணையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில், மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை (Pechipaarai Dam)
இந்த அணை, கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை ஆகும். மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அணையைக் கட்டும் பணி, 1897-இல் தொடங்கி, 1906-இல் முடிவடைந்தது. ஐரோப்பிய பொறியாளர் மிஞ்சின் என்பவரால், அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம், முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட masonry அணையாகும். இதைக் கட்டுவதற்குச் செலவான தொகை ரூ.26.1 இலட்சமாகும்.
இந்த அணையின் உயரம் 48 அடியாகும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு 4,350 மில்லியன் கன அடியகும். இந்த அணை நீர் மூலம், கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை, இராதாபுரம் ஆகிய வட்டங்கள் பலன் பெறுகின்றன. இதனால், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெறுகிறது. இந்த அணை, அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கைச்சூழல் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது.
பெருஞ்சாணி அணை (Perunchani Dam)
இந்த அணை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான பாசன அணையாகும். இது, கன்னியாகுமரியில் இருந்து 85 கி.மீ. தொலைவில், கல்குளம் வட்டம், குலசேகரம் அருகே ஓடும் பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவிலும், குலசேகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கோதையாறு பாசன அமைப்பில் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையைப் போக்கவும், பழையாற்றின் வெள்ளநீரைச் சேமிக்கவும் என, 1952 டிசம்பரில் இந்த அணையைக் கட்டும் பணி தொடங்கி, 1958-இல் நிறைவுற்றது. இந்த அணையின் உயரம் 77 அடியாகும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு 2,890 மில்லியன் கன அடியாகும். இதற்கான கட்டுமானச் செலவு ரூ.50 இலட்சமாகும்.
இது ஒரு நேர்கோட்டுப் புவியீர்ப்பு அமைப்பில் கட்டப்பட்ட (Straight gravity masonry dam) அணையாகும். இந்த அணையின் உயரம் 77 அடியாகும். இதன் மொத்த நீர்க் கொள்ளளவு 2,890 மில்லியன் கன அடியாகும். இந்த அணை மூலம், சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
இந்த அணை, மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால், முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இந்த அணை, அப்போதய முதலமைச்சா் காமராசர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி அணை (Krishnagiri Dam)
இந்த அணை, கே.ஆர்.பி. அணை (KRP Dam – Krishnagiri Reservoir Project) என்றும் அழைக்கப்படுகிறது. இது, தமிழ்நாட்டின் முக்கிய நீர் நிலைகளில் ஒன்றாகும். இந்த அணை, கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், துடுஹனஹள்ளி கிராமத்துக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணி 1955-ஆம் ஆண்டு தொடங்கியது. 1957-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, அன்றைய முதலமைச்சர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் உயரம் 52 அடி, நீளம் 990.59 மீட்டர். மொத்த நீர்க் கொள்ளளவு 1,666 மில்லியன் கன அடியாகும்.
கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் முக்கியப் பாசன ஆதாரமாக, இந்த அணை விளங்குகிறது. அணையின் இருபுறமும் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அழகான பூங்கா மற்றும் மான் பண்ணை அமைந்துள்ளது. இது, குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்வதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
சாத்தனூர் அணை (Sathanur Dam)
இந்த அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கியமான நீர்மின் உற்பத்தி நிலையமாகவும், பாசன அணையாகவும் விளங்கி வருகிறது. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், சென்னகேசவ மலைகளுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
இந்த அணை, 1958-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராசரால் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 119 அடியாகும். மொத்த நீர்க் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியாகும். இது, மேட்டூர், பவானிசாகர் அணைகளுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அணையாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியையும், குடிநீரையும் வழங்குகிறது. அணையின் அருகில் அழகான பூங்கா, மீன் காட்சியகம், ஆசியாவின் மிகப்பெரிய முதலைப் பண்ணை ஆகியன, சுற்றுலாத் தலங்களாக அமைந்து உள்ளன.
சோலையாறு அணை (Sholayar Dam)
சோலையாறு அணை, கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி ஆற்றின் குறுக்கே மலக்கபாரை என்னும் இடத்தில் கட்டப்பட்ட கற்காரை அணையாகும். இந்த அணை, முக்கியச் சோலையாறு அணை, துணைச் சோலையாறு அணை, சோலையார் சேணம் அணை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சோலையாறு அணை, சாலக்குடியில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. சோலையாறு அணைக்கு மேலேயுள்ள அணை, தமிழகத்துக்குச் சொந்தமான மேல் சோலையாறு அணையாகும்.
இந்த அணை, கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாழிடமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இது, ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இது, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்கீழ் வரும் முக்கிய நீர்த்தேக்கம் ஆகும்.
இந்த அணையின் உயரம் 160 அடி. இதன் மொத்த நீர்க்கொள்ளளவு 5,046 மில்லியன் கன அடியாகும். இதன் மிகுதி நீர், பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த அணையைப் பார்க்கச் சிறப்பு அனுமதி தேவை.
வால்பாறையானது பொள்ளாச்சியில் இருந்து 64 கி.மீ. தொலைவிலும், கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகில், சாலக்குடி இரயில் நிலையம் அமைந்துள்ளது.
பரம்பிக்குளம் அணை (Parambikulam Dam)
தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் கூட்டுத் திட்டமாக, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல துணைத் திட்டங்களையும் உள்ளடக்கி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் 1958-இல் தொடங்கப்பட்டது. மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும், பெரியாறு, சாலக்குடி, பாரதபுழா ஆகிய ஆறுகளின் துணை ஆறுகளைப் பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக, இத்திட்டம் உருவாக்கப் பட்டது
இந்த அணை, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், பரம்பிக்குளம் வனவிலங்கு காப்பகத்தில் அமைந்துள்ள முக்கியத் தடுப்பணை (Embankment dam) ஆகும். காமராசர் ஆட்சிக் காலத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் (Parambikulam – Aliyar Project) ஒரு பகுதியாக, பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே மண் மற்றும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அணையாகும். பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள், இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதிகளாகும்.
இந்த அணை கேரள மாநிலத்துக்குச் சொந்தமானது என்றாலும், இதன் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை கவனித்து வருகிறது. இந்த அணையின் உயரம் 72 அடியாகும். மொத்த நீர்க் கொள்ளளவு 13.45 டி.எம்.சி. ஆகும்.
இந்த அணை நீர், சுரங்கப்பாதை மூலம், சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அணையைச் சுற்றிலும் பசுங்காடுகளும், பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளன. இவற்றைச் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடவும், படகு சவாரி செய்யவும் அனுமதி உண்டு.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தால், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் ஆகியன பயனடைகின்றன.
ஆழியாறு அணை (Aliyar Dam)
இந்த அணை, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில் வால்பாறை செல்லும் பாதையில் அமைந்துள்ள முக்கிய நீர்த்தேக்கமாகும். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
1959-1969 காலத்தில் ஆழியாற்றின் குறுக்கே, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் (PAP) கீழ் கட்டப்பட்டது. அணையின் மொத்த உயரம் 265 அடியாகும். நீர்த் தேக்கப்படும் உயரம் 120 அடியாகும். நீரின் மொத்தக் கொள்ளளவு 3,864 மில்லியன் கன அடியாகும்.
அணையின் அடிவாரத்தில் அழகான பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், மீன் காட்சியகம் (Aquarium), சிறிய தீம் பார்க் ஆகியன, தமிழ்நாடு மீன்வளத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் மகிழும் வகையில், படகு சவாரி வசதி உள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் வேளாண்மைக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவதுடன், 2002-ஆம் ஆண்டு முதல் நீர்மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. குரங்கு அருவியும் (Monkey Falls) வால்பாறை மலைப் பாதையும், இதற்கு அருகில் அமைந்துள்ள புகழ் பெற்ற இடங்களாகும்.
திருமூர்த்தி அணை (Thirumoorthi Dam)
இந்த அணை, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே, திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. ஆனைமலைத் தொடரின் வடக்குச் சரிவுகளில் உற்பத்தியாகும் பாலாற்றின் குறுக்கே, இந்த அணை கட்டப்பட்டு, 1967-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
அணையின் உயரம் 60 அடியாகும். அணையின் மொத்த நீர்க் கொள்ளளவு 1,744 மில்லியன் கன அடியாகும். இது, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் (PAP) முக்கியப் பகுதியாகும். இந்தத் திட்டத்தின் மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 இலட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
மேலும், திருமூர்த்தி அணை நீர், பூலாங்கிணர், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் கணக்கம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களின், குடிநீர்த் தேவையையும் சரி செய்கிறது.
மேலும், இவ்வணைக்கு வரும் நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வகையில், நீர் மின் நிலையம், ரூ.9.9 கோடி செலவில், 2000-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு மின் விநியோகம் தொடங்கப்பட்டது.
இதன் அருகில் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியும், புகழ் பெற்ற ஸ்ரீ அமலிங்கேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. இங்கே சுற்றுலாப் பயணிகள் மகிழும் வகையில், படகு சவாரி (Boating) வசதியும் உள்ளது.
பழனி-கோவை நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் அருகில் அமராவதி அணையும், முதலைப் பண்ணையும் இருப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும்.
தொகுப்பு: மு.உமாபதி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


