தோட்டக்கலைப் பயிர்களை, கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண் வகைகளிலும் பயிரிடலாம். உரிய பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடுவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டலாம். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதியில், மா, திராட்சை, நெல்லி, ஆரஞ்சு, சப்போட்டா, காப்பி, வெற்றிலை, ஏலக்காய், பாக்கு, முந்திரி, கேரட், தக்காளி, பூக்கோசு, மரவள்ளி, கொடி வகைகள், கீரை வகைகள், மிளகாய், ரோஜா, மல்லிகை, மஞ்சள், செடி முருங்கை முதலியவற்றை சாகுபடி செய்யலாம்.
மணல் நிறைந்த மண்ணில் மல்லிகை நன்கு வளரும். மேலும், மணல் மற்றும் வண்டல் மண்ணில் மஞ்சள் நன்றாக வளரும். கரிசல் மண்ணில், மர வகைகள், பீட்ருட், அகத்தி, வாழை முதலியவற்றைப் பயிர் செய்யலாம்.
ஒவ்வொரு விவசாயியும் தனது பயிர்த் திட்டத்தில், ஒருபயிர் சாகுபடியைத் தவிர்த்து, பல பயிர்கள் சாகுபடி முறையைக் கையாள வேண்டும். சிக்கனமாக நீரைப் பயன்படுத்தும் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மண்வளம், நீர்வளம் அறிந்து பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு முக்கியப் பயிர் சாகுபடிக்குப் பிறகு, பயறு வகைகளைக் கட்டாயம் பயிரிட வேண்டும். இந்தப் பயிர்கள் மண்வளத்தைக் காத்திட உதவும். மேலும், தழைகளைத் தரும் தாவரங்கள் வளர்ப்பு, மண்புழு உரமிடல், சரிவுக்குக் குறுக்கே உழவு செய்து நீரைத் தவழச் செய்தல், பத்து ஏக்கருக்கு ஒரு பண்ணைக் குட்டையை அமைக்க, கூடித் திட்டமிடல் முதலியன, இலாபமிகு வேளாண்மைக்கு மிகவும் அவசியமாகும்.
அரசு மானியத்தை எதிர்பார்த்து, கருவிகளை வாங்குவதைத் தள்ளிப் போடாமல், கால்நடைகளை வளர்ப்புக்கு உதவும் தட்டை வெட்டும் கருவி, பால் கறக்கும் கருவி, களை நீக்கும் கருவி, தெளிப்பான்கள், தூவுவான்கள் மற்றும் நில சீர்திருத்தக் கருவிகளை, வங்கிக்கடன் மூலம் வாங்கலாம்.
விவசாயத்தில் பண்ணைக் கருவிகளைப் பயன்படுத்தினால் தான், ஆள்கூலிப் பிரச்சினை, கால விரயம், மண்ணில் ஈர விரயம், உர விரயம், விதை விரயம் போன்றவற்றைத் தீர்க்க முடியும். வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள சிக்கனப் பாசன முறையும், நிலப்போர்வையும் நன்மை செய்யும் உத்திகளாகும். நீராதாரம் குறைந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் கையாளப்படும், பாலித்தீன் நிலப்போர்வை உத்தி, தற்போது நம் நாட்டிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

