தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற மாற்றுப் பயிர்களாகச் சிறுதானியப் பயிர்கள் விளங்குகின்றன. குறைந்த நீரிலும், வறட்சியான நிலையிலும் வளர்வதால், இந்தப் பயிர்கள், மானாவாரி சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை ஆகும்.
கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு ஆகியன, தமிழகத்தில் பயிரிடப்படும் சத்துமிகு சிறுதானியப் பயிர்களாகும். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்து விடும்.
நிலம் தயாரிப்பு
சிறுதானிய சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள நிலமே ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக மாற்ற வேண்டும். கடைசி உழவுக்கு முன், நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது மற்ற இயற்கை உரங்களை அடியுரமாக இட வேண்டும். மானாவாரி நிலங்களில் மழைநீரைச் சேமிக்கும் வகையில் வரப்புகளை அமைப்பதுடன், மண்ணில் ஈரப்பதத்தைக் காப்பதற்கும் முன்னுரிமை தர வேண்டும்.
தரமான விதைகள்
அதிக மகசூலைத் தரக்கூடிய, நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைத் தாங்கக்கூடிய, தரமான விதைகளை, விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும். விதைகள், சுத்தமாக, நல்ல முளைப்புத் திறன் மிக்கதாக, அந்தப் பகுதி மற்றும் பருவத்தில் பயிரிட ஏற்ற இரகமாக இருக்க வேண்டும். சான்று விதைகளை விதைப்பது சிறந்தது.
சாகுபடிக்கு ஏற்ற சிறுதானிய இரகங்கள்
கம்பு: கோ.7, கோ.(கு)9, கோ.(கு)10, எக்ஸ்.7, ஐ.சி.எம்.வி.221, டி.என்.ஏ.யூ. வீரிய ஒட்டுக்கம்பு கோ.9 ஆகிய இரகங்கள்.
சோளம்: கோ.(எஸ்)28, கோ.(எஸ்)30, கோ.(எஸ்)32, கே.11, கே.12, சி.எஸ்.வி.20 ஆகிய இரகங்கள்.
கேழ்வரகு: கோ.13, கோ.(ரா)14, கோ.15, பையூர் (ரா)2, ஜி.பி.யூ.67, ஜி.பி.யூ.28, எம்.எல்.365, கே.எம்.ஆர்.301 ஆகிய இரகங்கள்.
வரகு: கோ.3, ஏ.பி.கே.1, வம்பன்1, டி.என்.ஏ.யூ.86 ஆகிய இரகங்கள்.
சாமை: கோ.4, பையூர்2, ஏ.டி.எல்.1 ஆகிய இரகங்கள்.
தினை: கோ.6, கோ.(தே)7, ஏ.டி.எல்.1 ஆகிய இரகங்கள்.
குதிரைவாலி: கோ.1, கே.1, கே;2, கோ.(குவி)2, எம்.டி.யூ.1 ஆகிய இரகங்கள்.
பனிவரகு: கோ.(பவி)5 இரகம்.
விதை நேர்த்தி
விதைப்பதற்கு முன், விதைகளை நேர்த்தி செய்வது, விதை முளைப்பை அதிகரிக்கவும், ஆரம்பநிலை நோய்த் தாக்குதலைக் குறைக்கவும் உதவும். இதனால், நாற்றுகளின் சீரான வளர்ச்சி மற்றும் பயிர் எண்ணிக்கையை நல்ல நிலையில் பராமரிக்க முடியும். இந்த விதை நேர்த்திக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை, உரிய முறையில் பயன்படுத்தலாம்.
விதைகளைக் கடினப்படுத்துதல்
மானாவாரி மற்றும் வறட்சிப் பகுதிகளில் பயிரிட உள்ள பயிர்களின் விதைகளைக் கடினப்படுத்தல் என்பது, பயனுள்ள தொழில் நுட்பமாகும். இதில், குறிப்பிட்ட முறையில் நீர் அல்லது சத்துக் கரைசலில் விதைகளை இட்டு நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால், வேகமாகவும், சீராகவும் விதைகள் முளைப்பதுடன், முளைத்த பயிர்கள் குறைந்த ஈரப்பதத்திலும், வறட்சியைத் தாங்கி நிலைத்து நிற்கும்.
விதைகளைக் கடினப்படுத்தும் முறைகள்
கம்பு விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் குளோரைடு (KCl) கரைசலில், 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
சோள விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் (KH₂PO₄) கரைசலில், 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
கேழ்வரகு விதைகளை, 0.5 சதவீத கால்சியம் குளோரைடு (CaCl₂) கரைசலில், 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
வரகு விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் (KH₂PO₄) கரைசலில், 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தினை விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் (KH₂PO₄) கரைசலில், 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
சாமை விதைகளை, 2 சதவீத பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் (KH₂PO₄) கரைசலில், 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
குறிப்பு: 2 சதவீதக் கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் வேதிப்பொருள் வீதம் கலப்பதாகும். 0.5 சதவீதக் கரைசல் என்பது, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வேதிப்பொருள் வீதம் கலப்பதாகும்.
ஊற வைத்த விதைகளை வடித்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஒவ்வொரு பயிர் விதைகளையும் ஊற வைக்கும் நீரின் அளவு, ஊற வைக்கும் நேரம், கரைசல் ஆகியன மாறுபடுவதால், வேளாண்மைத் துறை அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் பரிந்துரைகளைப் பின்பற்றுவது சிறந்தது.
இயந்திர விதைப்பு
கையால் மட்டுமின்றி, இயந்திரங்கள் மூலமும் விதைக்கலாம். இயந்திர விதைப்பில், சீரான இடைவெளியில் விதைகள் விழுவதால், தேவையான பயிர் எண்ணிக்கை இலக்கை அடையலாம். களை மேலாண்மையை எளிதாகச் செய்யலாம். வேலையாட்கள் தேவையைக் குறைக்கலாம். போதியளவு விதைகளை மட்டுமே விதைப்பதால், தேவையின்றி விதைகள் வீணாவதையும் தவிர்க்கலாம்.
போதியளவில் விதைப் பயன்பாடு
நவீனச் சிறுதானிய சாகுபடியில், போதியளவில் மட்டுமே விதைகளைப் பயன்படுத்தி, சரியான இடைவெளியில் பயிர்களைப் பராமரிக்க முடியும். தரமான நாற்றுகள் தேர்வு, களைக் கட்டுப்பாடு, இயற்கை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு, நீர்ச்சிக்கனம் இதில் முக்கியமானவை. இவ்வகையில், நல்ல பயிர் வளர்ச்சியையும், அதிக மகசூலையும் பெற முடியும்.
ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை
சிறுதானியப் பயிர்களுக்குத் தேவையான சத்துகளை, சரியான அளவில் இட வேண்டும். தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரங்கள் மற்றும் இரசாயன உரங்களை இடலாம். ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மூலம், மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர் வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல்
மற்ற தானியப் பயிர்களைக் காட்டிலும், சிறுதானியப் பயிர்களுக்கு, குறைந்தளவு நீரே தேவைப்படுகிறது. நீர் வசதியுள்ள பகுதிகளில் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் பாசனம் செய்யலாம். மானாவாரிப் பகுதிகளில், மழைநீர்ச் சேமிப்பு, மண் ஈரம் காத்தல், மூடாக்கு இடுதல், சரியான விதைப்புக் காலம் ஆகியவற்றில், கவனம் செலுத்த வேண்டும்.
களை மேலாண்மை
களைகள்; நீர், சத்து மற்றும் சூரிய ஒளியை, பயிர்களுடன் போட்டியிட்டுப் பெறுகின்றன. எனவே, சரியான நேரத்தில் களையெடுக்க வேண்டும். கைகள் மூலமும், களைக் கருவிகள் மூலமும் களைகளை அகற்றலாம். தேவைப்படின் களைக்கொல்லி மூலமும் களைகளை அழிக்கலாம்.
ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய்க் கட்டுப்பாடு
இதில், நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைத் தேர்வு செய்தல், தரமான விதைகளை விதைத்தல், வயலைச் சுத்தமாக வைத்திருத்தல், பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றுதல் ஆகியன முக்கியமானவை. உயிரியல் முறைகளில் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவசியக் காலத்தில் மட்டும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஊடுபயிரில் கூடுதல் கவனம்
சிறுதானியப் பயிர்களுடன், பயறு வகைகளை ஊடுபயிராக இடுவதன் மூலம், நிலத்தின் பயனைக் கூடுதலாகப் பெறலாம். இதனால், விவசாயிகளின் வருமானம் கூடும்; ஒரே பயிர் தோல்வியால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல் குறையும். இவ்வகையில், சோளத்தில் துவரை, கம்பில் துவரை, சிறுதானியப் பயிர்களில் உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக இடலாம்.
கைகொடுக்கும் இயந்திரங்கள்
சிறுதானிய சாகுபடியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். விதைப்பு, களையெடுப்பு, அறுவடை, கதிரடித்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல் ஆகிய பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுகின்றன. இதன் மூலம், உற்பத்திச் செலவையும், தொழிலாளர்கள் தேவையையும் குறைக்கலாம்.
சரியான நேரத்தில் அறுவடை
பயிர் முழுமையாக முதிர்ந்ததும் சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். தாமதமாக அறுவடை செய்தால், தானியங்கள் உதிர்வதுடன், பறவைகள் மற்றும் பூச்சிகளால், சேதமும், தரக்குறைவும் மற்றும் மகசூல் குறைவும் ஏற்படலாம்.
அறுவடைக்குப் பிந்தைய பணிகள்
அறுவடை செய்த தானியங்களைச் சுத்தம் செய்தல், உலர்த்துதல், தரம் பிரித்தல், சேமித்தல், அரைத்தல், பதப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். சரியான ஈரப்பதத்தில் தானியங்களைச் சேமித்தால், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்குதலைக் குறைக்கலாம்.
கூடுதல் வருவாய்க்கு உதவும் மதிப்புக்கூட்டுதல்
சிறுதானியங்களை நேரடியாக விற்பனை செய்வதைக் காட்டிலும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், கூடுதல் வருமானத்தைப் பெறலாம். சிறுதானிய மாவு, இட்லி மாவு, தோசை மாவு, பிஸ்கட், ரொட்டி, நூடுல்ஸ், பாஸ்தா, லட்டு, அடை, சத்துமாவு, அவல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்க முடியும்.
விவசாயிகளுக்கு ஏற்ற பயிர்
குறைந்த நீர், குறுகிய சாகுபடிக் காலம், வறட்சியைத் தாங்கும் திறன், குறைவான இடுபொருள்கள் தேவை, நல்ல சந்தை வாய்ப்பு ஆகியன, சிறுதானிய சாகுபடியின் முக்கிய நன்மைகளாக உள்ளன. தமிழகத்தில் குறைவாக மழை பெய்யும் பகுதிகளில், இவை, விவசாயிகளுக்குப் பாதுகாப்பான பயிர்களாக விளங்குகின்றன.
எனவே, இதுவரை கூறியுள்ள நவீன உத்திகளைப் பயன்படுத்தி, சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால், உற்பத்தியைப் பெருக்கி, தங்களின் வருவாயை உயர்த்தலாம்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

