My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்! milk cow https://pachaiboomi.net/589707-2/

றவை மாடுகளில் மலட்டுத் தன்மையை உண்டாக்குவதில், சூலக நீர்க்கட்டி (Cystic Ovary) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூலகத்தில் உள்ள நுண் குமிழ்கள் 2.5 செ.மீ.க்கு அதிகமாகவும், பத்து நாட்களுக்கு மேலும் நிலையாக இருந்தாலே, அதனைச் சூலக நீர்க்கட்டி என்று கூறுகிறோம். இந்தச் சூலக நீர்க்கட்டி, கறவை மாடுகளின் ஒரு சூலகத்திலோ அல்லது இரண்டு சூலகங்களிலோ காணப்படும்.

சினைப்பருவச் சுழற்சியின் போது உருவாகும் நுண் குமிழ்கள் வெடித்து 8-12 மணி நேரம் கழித்து, சினை முட்டையை வெளிப்படுத்துவது, இயல்பான நிகழ்வாகும். ஆனால், நுண் குமிழ்கள் வெடித்துச் சினை முட்டையை வெளியிடுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டு, நிலையான நுண் குமிழ்களாக நின்று விடும்போது, இவ்வகை நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

பொதுவாக, கறவை மாடுகளில் சினைப்பருவச் சுழற்சி, 1821 நாட்களுக்கு ஒருமுறை வெளிப்படும். ஆனால், சூலகத்தில் நீர்க்கட்டிகள் உள்ள மாடுகளில், வெகு விரைவாகவே சினைப்பருவ அறிகுறிகள் வெளியாகி விடும்.

நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • எல்.எச்.(LH) என்னும் கனநீரே, சூலகத்தில் உள்ள நுண் குமிழ்கள் வெடித்து, சினைமுட்டை வெளியாவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • எனவே, எல்.எச். கனநீரானது, முன்பக்க பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து போதிய அளவில் வெளிப்படாமல் இருத்தல்.
  • அடுத்து, எல்.எச். கனநீரே சுரக்காமல் இருந்து விடுதல்.

சூலகத்தில் நீர்க்கட்டி ஏற்பட ஏதுவான காரணங்கள்

  • குர்ன்சி (Guernsey) மற்றும் ஹோல்ஸ்டீன் பிரீசியன் (Holstein Friesian) இன மாடுகளில் சூலக நீர்க்கட்டிகள் உருவாதல், மரபு சார்ந்த நிகழ்வாக உள்ளது.
  • மரபுவழி மூலம் ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குச் செல்லுதல்.
  • இறைச்சி மாடுகளை விட, கறவை மாடுகளில் தான் சூலக நீர்க்கட்டிகள் உருவாதல் அதிகமாக உள்ளது.
  • அதிகமாகக் கறக்கும் மாடுகளே, இந்தக் கட்டிகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.
  • இத்தகைய மாடுகளில் அதிகளவில் இருக்கும் புரோலாக்டின் என்னும் கனநீர், நுண் குமிழ்கள் வெடிக்கத் தேவையான, எல்.எச். கனநீர் வெளியாவதைத் தடுத்து விடுவதால், சூலகக் கட்டிகள் உருவாகின்றன.
  • புரதச்சத்து மிகுந்த தீவனத்தை அதிகமாக உண்ணும் மாடுகளில் சூலக நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
  • கிராமப்புறங்களில் உள்ள மாடுகளை விட, நகர்ப்புற மாடுகளில் இந்த நீர்க்கட்டிகள் அதிகமாக உருவாகின்றன.
  • காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் இலைகளை உண்ணும் மாடுகளில் அதிகமாக உள்ளன.
  • வெளியில் விடாமல் கட்டுத்தறியிலேயே வைத்திருக்கும் மாடுகளில், இந்த நீர்க்கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அறிகுறிகள்

  • ஒழுங்கற்ற முறையில், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களுக்குச் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
  • மற்ற மாடுகள் மீது தாவும். ஆனால், தன்மீது மற்ற மாடுகளைத் தாவ விடாது.
  • மேய்ச்சல் நிலத்தில் மற்ற மாடுகளை மேய விடாமல், தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.
  • பாலுணர்வு மிகுதியில் மற்ற மாடுகளைத் தேடிச் செல்லும். பொலிக்காளையைப் போல மற்ற மாடுகள் மீது தாவும்.
  • சூலகக் கட்டியுள்ள மாடுகளில் ஈஸ்ட்ரோஜன் என்னும் கனநீர் அதிகமாக இருப்பதால், இடுப்புப்பகுதி தசைநார்கள் தளர்ந்தும், வாலின் மேற்பகுதி சற்றே உயர்ந்தும் இருக்கும்.
  • வெகுநாட்களாகச் சூலகக் கட்டியுள்ள மாடுகள், பெண்மைத் தன்மையை இழந்தும், அதிகத் தசையுடன் காளை மாடுகளைப் போலவும் இருக்கும். குறிப்பாக, கழுத்துப் பகுதி தசை (Crusty neck) அதிகமாக இருக்கும்.
  • இத்தகைய மாடுகளின் சிறுநீரில், 17-ஆல்பா கீட்டோ ஸ்டீராய்டு என்னும் கனநீர் இருக்கும்.
  • சூலகக் கட்டியுள்ள ஒருசில மாடுகள், சினைப்பருவச் சுழற்சியை வெளிப்படுத்துவதே இல்லை.

நோயைக் கண்டறிதல்

  • ஆசனவாய்ச் சோதனை மூலம் சூலகத்தைச் சோதித்து அறியலாம். குழப்பம் ஏதும் இருப்பின், 10 நாட்கள் கழித்து மீண்டும் சூலகத்தைச் சோதித்துப் பார்க்கலாம்.
  • நுண்குமிழ் திரவத்தில் உள்ள கனநீரின் அளவை வைத்தும், இரத்தக் கனநீரின் அளவை வைத்தும் அறியலாம்.
  • நுண்ணொலி வரைபடக் கருவி (Ultrasonography) மூலம் அறியலாம்.
  • மாடுகள் வெளிப்படுத்தும் அறிகுறிகள் மூலமும் கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்

நுண் குமிழ்களை உடைத்து விடுதல்: ஆசனவாய்ப் பரிசோதனை மூலம், சூலகத்தில் உள்ள நிலையான நுண் குமிழ்களை உடைத்து விடுவது என்பது சரியான தீர்வாகாது. ஏனெனில், இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு, சூலகமானது மேற்புறம் ஒட்டிவிட வாய்ப்புள்ளதால், நிரந்தர மலட்டுத்தன்மை உண்டாகி விடும். எனவே, நுண் குமிழ்களை உடைத்து விடும் முறையைக் கையாளக் கூடாது.

கனநீர் சிகிச்சை முறைகள்: 3000 IU. LH கனநீரை ஊசி மூலம் செலுத்துதல். 20 மைக்ரோ கிராம் GnRH கனநீரை ஊசி மூலம் செலுத்துதல். லூட்டியல் நீர்க்கட்டியை நீக்க, 25 மி.கி. இயற்கை புரோஸ்டாகிளான்டின் (Lutalyse) அல்லது 500-750 மைக்ரோ கிராம் செயற்கை புரோஸ்டாகிளான்டின் கனநீரை ஊசி மூலம் செலுத்துதல்.

வேதிப்பொருள்களைப் பயன்படுத்துதல்: தினமும் 10 கிராம் பொட்டாசியம் அயோடைடு வீதம் எடுத்து, தொடர்ச்சியாகப் பத்து நாட்களுக்கு வாய்வழியே கொடுத்தால், சூலகக் கட்டிகளைக் குணமாக்கலாம். போவிடோன் அயோடின் அல்லது லூகால் அயோடின் போன்ற, அயோடின் நிறைந்த நீர்மங்களை, கருப்பையில் செலுத்துவதன் மூலமும் நீர்க்கட்டிகளைச் சரிசெய்ய முடியும்.

குளூட்டியல் வழியாகச் சூலகக் கட்டிகளை ஊசி மூலம் உறிஞ்சுதல்: மாட்டை ஒரே இடத்தில் நிறுத்தி, லிக்னோகைன் என்னும் மருந்தை, வால் பகுதியில் செலுத்திக் கட்டுப்படுத்த வேண்டும்.

நடு குளூட்டியல் பகுதியில் உள்ள முடிகளை எடுத்து விட்டு, அப்பகுதியை ஆன்ட்டி செப்டிக் மருந்தால் சுத்தம் செய்ய வேண்டும். முதல் ஆப்பரேட்டர் தனது இடது கையை ஆசன வாய்க்குள் செலுத்தி, நீர்க்கட்டி உள்ள சூலகத்தை, நடு குளூட்டியல் பகுதி வரை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், முதல் ஆப்பரேட்டர் தனது வலது கையால், 20-G அளவுள்ள முதுகெலும்பு ஊசியை நடு குளூட்டியல் பகுதி வழியாக, இடுப்புக்குழி வரை கொண்டு சென்று, இடது கையில் உள்ள சூலகக் கட்டியைத் துளைக்க வேண்டும்.

சூலகத்தைத் துளைத்ததன் மூலம், நீரைப் போன்ற திரவம், மஞ்சள் நிறத்தில் வெளிவரும். இந்தத் திரவத்தை ஊசி மூலம் இரண்டாவது ஆப்பரேட்டர் உறிஞ்சலாம்.

இதைத் தொடர்ந்து, சூலகக் கட்டிகளின் அளவு குறைந்து விடுவதை, சுருங்கி விடுவதை, ஆசனவாய் மூலமும், நுண்ணொலி வரைபடக் கருவி மூலமும் அறியலாம். பிறகு, கனநீர் சிகிச்சை முறைகளைப் (COSYNCH) பயன்படுத்த வேண்டும்.

சூலகத்தில் கட்டிகள் வராமல் தடுத்தல்

தடுப்பு முறையானது, பண்ணையளவில் மட்டுமே சாத்தியமாகும். மற்ற பண்ணைகளில் இருந்து கன்றுகளை வாங்கும் போது, அவற்றின் தாய் மாடுகள், சூலகக் கட்டிகளால் பாதிக்கப்பட்டவையா இல்லையா என்பதை, பதிவேடுகள் மூலம் கண்டறிய வேண்டும்.

சூலகக் கட்டிகளால் பாதிக்கப்பட்ட பசுக்களுக்குப் பிறந்த கன்றுகளை வாங்கக் கூடாது. ஏனெனில், சூலக நீர்க்கட்டி, மரபு வழியாக, ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குச் செல்லும் குணமிக்கது. எனவே, சூலக நீர்க்கட்டியால் பாதிக்கப்படாத பசுக்களின் கன்றுகளை வாங்கி வளர்த்தால், பண்ணையில், சூலக நீர்க்கட்டிகள் இல்லாத மாடுகளாக உருவாக்கலாம்.


கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்! A.THANGAMANI.NN https://pachaiboomi.net/589707-2/

முனைவர் அ.தங்கமணி,

முனைவர் பி.விக்னேஷ்வரன், முனைவர் அ.சபரிநாதன், முனைவர் வை.பிரபாகரன், முனைவர் அ.இளங்கோ, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம் – 636 112, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!