My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! POULTRY FARM HP https://pachaiboomi.net/790606-2/

இந்திய வேளாண்மையில், கால்நடை வளர்ப்புத்துறை (Animal Husbandry Sector), அதிக வளர்ச்சியுள்ள முக்கியத் துணைத் துறையாக விளங்கி வருகிறது. பால், இறைச்சி, முட்டை மற்றும் பிற கால்நடைப் பொருள்களின் உற்பத்தி மிகுந்து வருவதால், கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியில், சத்துகள் பாதுகாப்பில், வேலை வாய்ப்பில், இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, கால்நடை வளர்ப்புத் துறையில், கோழி வளர்ப்புத் தொழில் (Poultry Sector) மிக வேகமாக வளர்ந்து வரும் துணைத் தொழிலாகத் திகழ்கிறது. குறைந்த முதலீடு, குறுகிய உற்பத்திச் சுழற்சி, விரைவான முதலீடு மீட்பு, அதிகச் சந்தை வசதி, ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் ஆகிய காரணங்களால், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளிடம், கோழி வளர்ப்பு, இலாபமிகு தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா இன்று உலகின் முன்னணி முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டில் இறைச்சிக்கோழி (Broiler) மற்றும் முட்டைக்கோழி (Layer) வளர்ப்பு, ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்து வருகிறது. நவீனத் தொழில் நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட இனங்கள், சமச்சீர் தீவனங்கள், திறமையான நோய் மேலாண்மை, அறிவியல் சார்ந்த பண்ணை நிர்வாக முறைகள் ஆகியன, இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இருப்பினும், கோழி வளர்ப்பில் வெற்றியை நிர்ணயிப்பது உயர்தரக் கோழியினங்கள் அல்லது தரமான தீவனம் மட்டுமல்ல. சரியான இடத்தில், அறிவியல் முறையில் கோழிக் கொட்டகை அமைதல், சிறந்த காற்றோட்டம், போதிய வடிகால் வசதி, உயிர்ப் பாதுகாப்பு (Biosecurity) ஆகியனவும், பண்ணையின் உற்பத்தித் திறன் மற்றும் இலாபத்தை முடிவு செய்வதில், முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தவறான இடத்தில் அமைக்கப்படும் பண்ணைகளில் வெப்ப அழுத்தம், ஈரப்பதம், நோய்ப் பரவல், அதிக இறப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, கோழிப் பண்ணையைத் தொடங்குவதற்கு முன், அறிவியல் அடிப்படையில் இடத்தைத் தேர்வு செய்து, பண்ணையின் ஒட்டுமொத்த அமைப்பைத் திட்டமிட்டு, இறைச்சிக்கோழி மற்றும் முட்டைக்கோழிக் கொட்டகைகளை, உரிய அளவுகள் மற்றும் பரிந்துரைப்படி அமைப்பது மிகவும் அவசியமாகும்.

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வு

கோழிப் பண்ணையின் வெற்றி என்பது, சரியான இனங்கள், தரமான தீவனம் மற்றும் சிறந்த மேலாண்மையுடன், பண்ணை அமையும் இடத்தையும் சார்ந்தே உள்ளது. பொருத்தமற்ற இடத்தில் பண்ணையை அமைத்தால், மழைநீர்த் தேக்கம், நோய்ப்பரவல், வெப்பழுத்தம், கூடுதல் பராமரிப்புச் செலவு மற்றும் குறைந்த உற்பத்திப் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, பண்ணையை அமைப்பதற்கு முன், பின்வரும் கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிலத்தின் தன்மை (Topography)

பண்ணை அமைவிடம், சமத்தளமாக அல்லது மிதமான சரிவுடன் இருக்க வேண்டும். மழைநீர் எளிதாக வெளியேறும் வகையில், வடிகால் வசதியிருப்பது சிறந்தது. பள்ளமான இடம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களைத் தவிர்க்க வேண்டும். சமப்படுத்தும் செலவில்லாத இடத்தைத் தேர்வு செய்வது, பொருளாதார நோக்கில் பயனுள்ளதாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

 வடிகால் வசதி (Drainage)

பண்ணையில் நீர்த் தேங்குவது, நோய்க்கிருமிகள், ஈக்கள் மற்றும் கொசுக்கள் மிகுவதற்கு முக்கியக் காரணமாகும். எனவே, பண்ணையைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேறும் வடிகால்களை அமைக்க வேண்டும். பண்ணை வளாகம் எப்போதும் உலர்ந்தும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

குடிநீர் வசதி (Water Supply)

கோழிகளுக்குச் சுத்தமான குடிநீர் அவசியம். பண்ணை அமைவிடத்தில் ஆண்டு முழுவதும் போதியளவில் நீர் இருக்க வேண்டும். ஆழ்குழாய்க் கிணறு, குழாய் நீர் அல்லது பாதுகாப்பான பிற நீர் ஆதாரங்கள் இருக்கலாம். நீரின் தரத்தைக் காலந்தோறும் பரிசோதிக்க வேண்டும். உப்பு மிகுந்த அல்லது மாசடைந்த நீர், உற்பத்தித் திறனைப் பாதிக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மின்சார வசதி (Electricity)

கோழி வளர்ப்பில், விளக்குகள், தானியங்கிக் குடிநீர் அமைப்புகள், தீவன விநியோக அமைப்புகள், காற்றோட்ட விசிறிகள், குஞ்சுகளுக்கு வெப்பமூட்டும் கருவிகள் ஆகிய அனைத்துக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, தடையில்லா மின்சாரம் கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். மின்தடை ஏற்படும் சூழலில், மாற்று மின்சார வசதியாக, ஜெனரேட்டர் அல்லது சூரிய மின்சார அமைப்பை ஏற்படுத்துவது நல்லது.

சாலை மற்றும் போக்குவரத்து வசதி (Road Access)

பண்ணைக்கு ஆண்டு முழுவதும் வாகனங்கள் எளிதில் வந்து செல்வதற்கான சாலை இருக்க வேண்டும். தீவன லாரிகள், ஒருநாள் குஞ்சுகளைக் கொண்டு வரும் வாகனங்கள், மருந்து விநியோக வாகனங்கள், உயிருடன் கோழிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் போன்றவை, எத்தகைய கால நிலையிலும் தடையின்றி இயங்க ஏற்றதாகச் சாலை வசதி இருக்க வேண்டும்.

காற்றின் திசை மற்றும் சுற்றுப்புறச்சூழல்

காற்றோட்டம் இயல்பாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் காற்றோட்டத்தின் கீழ்த்திசையில் (Downwind) பண்ணை அமைவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், துர்நாற்றம் மற்றும் தூசி சார்ந்த பிரச்சினைகள் குறையும். தொழிற் சாலைகள், குப்பைக் கிடங்குகள், கழிவுநீர்த்  தேங்கும் இடங்கள் மற்றும் மாசுபடுத்தும் தொழிற் சாலைகளில் இருந்து விலகி, பண்ணையை அமைக்க வேண்டும்.

உயிர்ப் பாதுகாப்பு (Biosecurity)

பண்ணையை, மற்ற கோழிப்பண்ணைகளில் இருந்து போதிய இடைவெளியில் அமைக்க வேண்டும். பண்ணை முழுவதையும் வேலியிட்டுப் பாதுகாக்க வேண்டும். ஒரு நுழைவாயிலை மட்டும் அமைத்து, அங்கே காலணிக் கிருமிநாசினித் தொட்டி (Foot Bath) மற்றும் வாகனச் சக்கரக் கிருமிநாசினித் தெளிப்பு வசதியை ஏற்படுத்துவது நல்லது. பார்வையாளர்கள் மற்றும் தேவையற்ற வாகனங்களைப் பண்ணைக்குள் அனுமதிக்கக் கூடாது.

எதிர்கால விரிவாக்கம் (Future Expansion)

தற்போதைய தேவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்காலத்தில் கூடுதல் கோழிக் கொட்டகைகள், தீவனக்கிடங்கு, கழிவுப்பொருள்கள் சேமிப்பு மையம், உரமாக்கும் (Composting) வசதி மற்றும் பிற கட்டடங்களை அமைக்கத் தேவையான நிலப்பரப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால், பண்ணையை விரிவாக்கும் போது, கூடுதல் செலவுகளைத் தவிர்க்கலாம்.

 

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! POULTRY 3 https://pachaiboomi.net/790606-2/

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வில் கவனிக்க வேண்டியவை

  • நிலம்: உயரமான, சமத்தளமான அல்லது மிதமான சரிவுடையது.
  • வடிகால்: மழைநீர்த் தேங்காத நல்ல வடிகால் வசதி.
  • குடிநீர்: ஆண்டு முழுவதும் சுத்தமான குடிநீர்.
  • மின்சாரம்: தடையில்லா மின்சாரம் மற்றும் மாற்று மின்சார வசதி.
  • சாலை: அனைத்துப் பருவங்களிலும் வாகனங்கள் செல்லக்கூடிய சாலை.
  • சுற்றுப்புறம்: தொழிற் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து போதிய இடைவெளி.
  • உயிர்ப் பாதுகாப்பு: வேலி, ஒற்றை நுழைவாயில், காலணிக் கிருமிநாசினித் தொட்டி, வாகனச் சக்கரக் கிருமிநாசினித் தெளிப்பு வசதி.
  • விரிவாக்கம்: எதிர்கால வளர்ச்சிக்குப் போதுமான நிலப்பரப்பு.

பண்ணை அமைவுக்குத் தேவையான நிலப்பரப்பு

கோழிப் பண்ணைக்குத் தேவையான நிலப்பரப்பு என்பது, வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கை, வளர்ப்பு முறை (தரை முறை அல்லது கூண்டு முறை), எதிர்கால விரிவாக்கத் திட்டம் மற்றும் துணைக் கட்டடங்களின் தேவையைப் பொறுத்து மாறுபடும். கோழி வீடுகளுக்கு மட்டும் இடமிருந்தால் போதாது. தீவனக் கிடங்கு, மருந்து அறை, அலுவலகம், குடிநீர் வசதி, உள் சாலைகள், கழிவுப்பொருள் மேலாண்மை மற்றும் எதிர்கால விரிவாக்க நோக்கில், நிலத்தை ஒதுக்க வேண்டும்.

கோழிப் பண்ணைக்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு

  • 1,000 இறைச்சிக் கோழிகளுக்கு: 0.25-0.30 ஏக்கர்.
  • 2,000 இறைச்சிக் கோழிகளுக்கு: 0.50 ஏக்கர்.
  • 5,000 இறைச்சிக் கோழிகளுக்கு: 1 ஏக்கர்.
  • 10,000 இறைச்சிக் கோழிகளுக்கு: 1.5-2 ஏக்கர்.
  • 20,000 இறைச்சிக் கோழிகளுக்கு: 3-4 ஏக்கர்.
  • 5,000 முட்டைக் கோழிகளுக்கு: 1.5-2 ஏக்கர்.
  • 10,000 முட்டைக் கோழிகளுக்கு: 3-4 ஏக்கர்.

கோழிப் பண்ணையின் மொத்த அமைப்புத் திட்டம் (Farm Layout)

கோழிப் பண்ணையின் மொத்த அமைப்புத் திட்டம் என்பது, பண்ணையின் அனைத்துக் கட்டடங்கள், சாலைகள், குடிநீர் வசதி, கழிவுப்பொருள் மேலாண்மை, உயிர்ப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால விரிவாக்கத்தை ஒருங்கிணைத்துத் திட்டமிடும் முறையாகும். அறிவியல் முறையில் அமைந்த பண்ணையில், உற்பத்தித் திறன் உயர்வதோடு, நோய்ப்பரவல் குறையும், பராமரிப்புச் செலவு குறையும், தொழிலாளர் திறன் மேம்படும்.

சிறந்த பண்ணை அமைப்பின் நோக்கங்கள்

கோழிகளுக்கு நலமான மற்றும் வசதியான சூழலை உருவாக்குதல். உயிர்ப் பாதுகாப்பு (Biosecurity) நடைமுறைகளை எளிதாகச் செயல்படுத்துதல். தீவனம், குடிநீர் மற்றும் மின்சார வசதியைச் சீராக வழங்குதல். தொழிலாளர்கள் மற்றும் வாகன இயக்கத்தை எளிமையாக்குதல். ஒரு கோழி வீட்டிலிருந்து மற்றொரு கோழி வீட்டுக்கு நோய்கள் பரவுவதைத் தடுத்தல். எதிர்காலத்தில் பண்ணையை விரிவாக்கம் செய்தல்.

கோழிக் கொட்டகையின் திசை அமைப்பு

இயற்கைக் காற்றோட்டம் கொண்ட (Naturally Ventilated) கோழி வீடுகளை, கிழக்கு-மேற்குத் திசையில் அமைப்பதே சிறந்தது. இதனால், பகல் நேர சூரிய வெப்பம் சுவர்களில் நேரடியாகப் படுவது குறைவதால், வெப்ப அழுத்தத்தில் இருந்து (Heat Stress) கோழிகளைக் காக்கலாம். பண்ணையை அமைக்கும் போது, அப்பகுதியில் நிலவும் முக்கியக் காற்றின் திசையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால், பண்ணைக்குள் காற்றோட்டம் சீராக இருப்பதுடன், ஈரப்பதமும், அம்மோனியா வாயுவும் விரைவாக வெளியேறும்.

கோழிக் கொட்டகைகளுக்கான இடைவெளி

ஒவ்வொரு கோழி வீட்டுக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்க வேண்டும். பொதுவாக, இரண்டு கொட்டகைகளுக்கு இடையிலான தூரம், அந்தக் கட்டட அகலத்தில், 1.5-2 மடங்கு இருக்க வேண்டும். போதிய இடைவெளி இருந்தால்,

  • காற்றோட்டம் மேம்படும்.
  • நோய்கள் பரவும் வாய்ப்புக் குறையும்.
  • வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் எளிதில் இயங்க முடியும்.
  • சுத்தம் செய்தல் மற்றும் கிருமிநாசினித் தெளிப்பு எளிதாகும்.

பண்ணையில் இருக்க வேண்டிய கட்டடங்கள்

நவீனக் கோழிப் பண்ணையில் பின்வரும் வசதிகள் இருக்க வேண்டும்.

  • கோழிக் கொட்டகைகள்,
  • தீவனக் கிடங்கு,
  • மருந்து மற்றும் உபகரண அறை,
  • அலுவலகம்,
  • பணியாளர்கள் உடை மாற்றும் அறை,
  • குடிநீர்ச் சேமிப்புத் தொட்டி,
  • மின்சார ஜெனரேட்டர் அறை,
  • இறந்த கோழிகளை உரமாக்கும் பிரிவு அல்லது பாதுகாப்பாக அகற்றும் வசதி,
  • கோழியெரு சேமிப்பு பகுதி,
  • வாகனங்கள் நிறுத்துமிடம்.

இந்தக் கட்டடங்கள் அனைத்தும், சுத்தமான பகுதிக்கும் (Clean Zone), கழிவுப் பகுதிக்கும் (Dirty Zone) இடையே, சரியான பிரிவுடன் அமைக்கப்பட வேண்டும்.

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! POULTRY 5 https://pachaiboomi.net/790606-2/

உயிர்ப் பாதுகாப்பு மண்டலங்கள் (Biosecurity Zones)

நவீனக் கோழி வளர்ப்பில் உயிர்ப் பாதுகாப்பு என்பது, நோய்களைத் தடுக்கும் முதல் பாதுகாப்பு அரணாகும். நோய்க் கிருமிகள் பண்ணைக்குள் நுழைவதையும், ஒரு கொட்டகையில் இருந்து மற்றொரு கொட்டகைக்குப் பரவுவதையும் தடுப்பதற்கு, பண்ணை வளாகத்தை, செயல்பாட்டு அடிப்படையில், மூன்று மண்டலங்களாகப் பிரித்து நிர்வகிக்க வேண்டும். இந்த முறை, பண்ணைச் சுகாதார மேலாண்மை மேம்படவும், பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் இயக்கம் சீராக இருக்கவும் உதவும்.

சுத்தமான பகுதி (Clean Zone)

இது, பண்ணையின் முக்கிய உற்பத்திப் பகுதியாகும். இங்கே, கோழிகள் வளர்ப்புக் கொட்டகைகளும், அவற்றுடன் தொடர்புள்ள வசதிகளும் இருக்க வேண்டும். இதில் இருக்க வேண்டியவை:

  • இறைச்சிக்கோழி மற்றும் முட்டைக்கோழிக் கொட்டகைகள்,
  • தீவனக் கிடங்கு,
  • மருந்து மற்றும் தடுப்பூசிகள் சேமிப்பு அறை,
  • குடிநீர்ச் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகள்.

இப்பகுதியில், அங்கிகரிக்கப்பட்ட பணியாளர்களை மட்டுமே விட வேண்டும். நுழைவதற்கு முன் கைகளைச் சுத்தம் செய்தல், பண்ணைக்கான உடை மற்றும் காலணிகளை அணிதல், காலணிகளைக் கிருமிநாசினியில் சுத்தம் செய்தல் ஆகிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிப்புற உபகரணங்கள் மற்றும் வாகனங்களை, இந்தப் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி (Controlled Zone)

சுத்தமான பகுதிக்கும், வெளிப்புறச் சூழலுக்கும் இடைப்பட்ட பாதுகாப்பு மண்டலமாக இது செயல்படுகிறது. பண்ணை நிர்வாகம், பார்வையாளர்கள் மற்றும் வாகனங்கள் நுழைவு இப்பகுதியின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதியில் இருக்க வேண்டியவை:

  • அலுவலகம்,
  • பார்வையாளர் பதிவு மையம்,
  • உடை மாற்றும் அறை,
  • காலணிக் கிருமிநாசினித் தொட்டி,
  • வாகனக் கிருமிநாசினித் தெளிப்பு வசதி,
  • கைகளைச் சுத்தம் செய்யும் வசதி,

பார்வையாளர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள், சேவைப் பணியாளர்கள் ஆகியோர், முதலில் இந்தப் பகுதியில் பதிவு செய்து, உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றிய பிறகே, சுத்தமான பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கழிவுப்பகுதி (Dirty Zone)

இது, கழிவுப் பொருள்கள், கோழியெரு மற்றும் இறந்த கோழிகளைப் பாதுகாப்பாகக் கையாளும் பகுதியாகும். உற்பத்திப் பகுதிக்குள் நோய்க்கிருமிகள் பரவாமல் இருக்க, இந்தப் பகுதி, சுத்தமான பகுதியிலிருந்து போதிய தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். இப்பகுதியில் அமைய வேண்டியவை:

  • இறந்த கோழிகளைச் சேகரித்து அகற்றும் இடம்,
  • உரமாக்கும் மையம்,
  • கோழியெரு சேமிப்புப் பகுதி,
  • கழிவுப் பொருள்கள் சேமிப்பு மற்றும் அகற்றும் பகுதி.

இந்தப் பகுதியை, வீசும் காற்றின் திசைக்கு (Downwind) ஏற்ப அமைக்க வேண்டும். இதனால், துர்நாற்றம், தூசி மற்றும் நோய்க் கிருமிகள் கோழிக் கொட்டகையை நோக்கிப் பரவுதல் குறையும். மேலும், கழிவை எடுத்துச் செல்லும் வாகனங்கள், சுத்தமான பகுதிக்குள் நுழையாத வகையில், தனிச்சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

உள் சாலைகள் (Internal Roads)

பண்ணையின் தினசரி செயல்பாடுகள் சீராக நடைபெற உள் சாலைகள் (Internal Roads) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆண்டு முழுவதும், குறிப்பாக, மழைக்காலத்தில் கனரக வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் உள் சாலைகள் இருக்க வேண்டும். மேலும், நீர்த் தேங்காத அளவில், போதுமான சரிவு மற்றும் வடிகால் வசதியுடன் உள் சாலைகள் இருக்க வேண்டும். பண்ணையின் உள் சாலைகளில் இயங்க வேண்டிய வாகனங்கள்:

  • தீவன லாரிகள்,
  • ஒருநாள் வயதுள்ள குஞ்சுகளைக் கொண்டு வரும் வாகனங்கள்,
  • முட்டைச் சேகரிப்பு மற்றும் போக்குவரத்து வாகனங்கள்,
  • உயிருடன் கோழிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள்,
  • மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொண்டு வரும் வாகனங்கள்.

சுத்தமான பகுதிக்கும், கழிவுப் பகுதிக்கும் செல்லும் சாலைகள் என, உள் சாலைகள் தனித்தனியாக இருக்க வேண்டும். இதனால், நோய்க்கிருமிகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவும் வாய்ப்புக் குறையும். இறந்த கோழிகள் மற்றும் கழிவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், கோழிக் கொட்டகையின் சுத்தமான பகுதியைக் கடந்து செல்லாத வகையில், போக்குவரத்தைத் திட்டமிட வேண்டும்.

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! POULTRY 1 https://pachaiboomi.net/790606-2/

வேலி மற்றும் நுழைவாயில் (Perimeter Fence and Entry Gate)

பண்ணையின் வெளிப்புறப் பாதுகாப்பு என்பது, உயிர்ப் பாதுகாப்பு மேலாண்மையின் அடிப்படைக் கூறாகும். எனவே, பண்ணை முழுவதும் உறுதியான வேலியை அமைக்க வேண்டும்.

பொதுவாக, 1.8-2.0 மீட்டர் உயரமுள்ள சங்கிலிக் கம்பி (Chain-link Fence) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு வேலியை அமைக்க வேண்டும். பண்ணைக்கு ஒரே ஒரு முக்கிய வாயில் மட்டுமே இருக்க வேண்டும். இதன் மூலம், மனிதர்கள், வாகனங்கள் மற்றும் பொருள்கள் நுழைவை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். நுழைவாயிலில் இருக்க வேண்டியவை:

  • பாதுகாப்புக் காவலர் அல்லது கண்காணிப்பு வசதி,
  • பார்வையாளர் பதிவுப் புத்தகம்,
  • காலணிக் கிருமிநாசினித் தொட்டி,
  • வாகனச் சக்கரங்களுக்குக் கிருமிநாசினித் தெளிப்பு அல்லது சக்கரக் கிருமிநாசினிக் குளம் (Wheel Dip),
  • கைகளைச் சுத்தம் செய்யும் வசதி.

அவசியமற்ற நபர்கள், வாகனங்கள் மற்றும் செல்லப் பிராணிகள், பண்ணைக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். உயிர்ப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத யாரையும் சுத்தமான பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்த உயிர்ப் பாதுகாப்பு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், நோய்த்தொற்று ஆபத்துக் குறைந்து, பண்ணையின் உற்பத்தித் திறனும், பொருளாதார இலாபமும் மேம்படும்.

கோழிப் பண்ணையின் முக்கியக் கட்டமைப்புகள்

  • கோழிக்கொட்டகை: கோழிகளை வளர்ப்பதற்கு.
  • தீவனக்கிடங்கு: தீவனத்தைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கு.
  • மருந்து அறை: தடுப்பூசி மற்றும் மருந்துகளைச் சேமிப்பதற்கு.
  • குடிநீர்த் தொட்டி: தொடர்ந்து குடிநீரை வழங்குவதற்கு.
  • உரமாக்கும் மையம்: இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கு..
  • அலுவலகம்: பண்ணையை நிர்வாகம் செய்வதற்கு.
  • உடை மாற்றும் அறை: உயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு.
  • வாகனக் கிருமிநாசினிப் பகுதி: நோய்க்கிருமிகள் நுழைவதைத் தடுப்பதற்கு.

கொட்டகையைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பகுதி (Buffer Zone)

கோழிக் கொட்டகையைச் சுற்றி, 3-5 மீட்டர் அகலமுள்ள, சுத்தமான பாதுகாப்புப் பகுதியைப் பராமரிக்க வேண்டும். இதில், புல், புதர்கள், களைகள் மற்றும் தேவையற்ற தாவரங்கள் இருக்கக் கூடாது. தரை எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்தும் இருக்க வேண்டும். இந்தப் பகுதியை, கான்கிரீட், ஜல்லி அல்லது நல்ல மண் பரப்பாக வைத்திருந்தால், எலி, பாம்பு மற்றும் களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

வனப்பறவைகள் மற்றும் பிற விலங்குகள், கொட்டகையை அணுகும் வாய்ப்புக் குறையும். கொட்டகையைச் சுற்றியுள்ள பகுதியை எளிதில் கண்காணிக்க முடியும். மழைநீர்த் தேங்குதல் மற்றும் களைகள் வளர்தல் குறையும். சுத்தம் செய்தல் மற்றும் கிருமிநாசினித் தெளிப்பு எளிதாகும். உயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சிறப்பாகப் பின்பற்றலாம்.

நிழல் மரங்களை வளர்ப்பதன் நன்மைகள்

  • கோழிக் கொட்டகையைச் சுற்றிச் சரியான இடைவெளியில் நிழல் மரங்களை வளர்த்தால், கோடைக்காலத்தில் கொட்டகையைச் சுற்றியுள்ள வெப்பநிலை குறையும்.
  • திறந்த நிலப்பரப்பிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர் வீச்சின் (Radiant Heat) தாக்கம் குறையும். காற்றில் பறக்கும் தூசியின் அளவு குறையும்.
  • வெப்பக்காலம் மற்றும் வறட்சிக் காலத்தில், பலத்த காற்றின் வேகத்தைக் குறைக்கும் இயற்கைத் தடுப்புச் சுவராக (Wind break) இந்த மரங்கள் விளங்கும்.
  • இயல்பான காற்றோட்டம் பாதிக்காத வகையில், கொட்டகையைச் சுற்றியுள்ள நுண் சுற்றுச்சூழல் (Micro climate) மேம்படும்.

மரங்கள் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

  • கொட்டகைக்குள் இயல்பான காற்றோட்டம் தடைபடாத வகையில் மரங்களை நட வேண்டும்.
  • மரக்கிளைகள், கொட்டகையின் கூரைக்கு மேல் பரவக்கூடாது.
  • வனப்பறவைகள் மரங்களில் தங்கி, கொட்டகைக்குள் வரக்கூடிய சூழல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கொட்டகையைச் சுற்றி அதிகளவில் இலைகள், கிளைகள் மற்றும் பிற தாவரக் கழிவுகள் சேராமல் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

பிற பண்ணைகளிலிருந்து பாதுகாப்பு இடைவெளி

உயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்த, புதிய கோழிப் பண்ணைகளை, ஏற்கெனவே செயல்பட்டு வரும் கோழிப் பண்ணைகளிலிருந்து போதுமான தூரத்தில் அமைக்க வேண்டும். வணிக நோக்கில் அமைக்கப்படும் கோழிப் பண்ணைகளுக்கு இடையே குறைந்தது 500 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பது சிறந்தது. குஞ்சுப் பொரிப்பகங்களிடையே (Hatchery) 1-2 கி.மீ. தூரம் இருக்க வேண்டும்.

முக்கிய உயிர்ப் பாதுகாப்புப் பரிந்துரைகள்

  • பண்ணை முழுவதும் வேலியமைத்தல்.
  • ஒற்றை நுழைவாயில்.
  • காலணிக் கிருமிநாசினி வசதி.
  • பார்வையாளர்கள் பதிவு.
  • இடம் பெயரும் பறவைகள் மற்றும் பிற விலங்குகளைத் தடுத்தல்.
  • All-In All-Out முறை.
  • ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில், முழுமையாகச் சுத்தம் செய்தல் மற்றும் கிருமிநாசினித் தெளிப்பு.
  • கொட்டகையைக் காலியாக வைத்திருக்கும் இடைவெளிக் காலம் (Down Time) : 10-14 நாட்கள்.
  • பண்ணைப் பதிவேடுகளைப் பராமரித்தல்.
  • குடிநீரின் தரத்தைப் பரிசோதித்தல்.

கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்! A.ASHOK https://pachaiboomi.net/790606-2/

முனைவர் ஆ.அசோக்,

பேராசிரியர் மற்றும் தலைவர், கோழியின அறிவியல் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்!