வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில், வெள்ளாடுகள் சிறந்து விளங்குகின்றன.
இந்த ஆடுகள், எல்லா வகையான புல் பூண்டுகளை, இலை தழைகளை, மூலிகை கலந்த செடி கொடிகளை, மற்ற கால்நடைகள் உண்ணாத பொருள்களையும் கூட உண்டு உயிர் வாழக் கூடியவை.
இருந்தாலும், இவற்றுக்குச் சரியான முறையில் தீவனமிட்டு வளர்த்தால், நல்ல வருவாயை ஈட்ட முடியும். இவ்வகையில், பிறந்த குட்டி முதல் விற்பனைக்குச் செல்வது வரையான ஆடுகளுக்கு, தீவனம் அளிக்கும் முறைகளை இங்கே பார்க்கலாம்.
இனப்பெருக்கப் பெட்டை ஆடுகளுக்கான தீவனப் பராமரிப்பு
- நல்ல மேய்ச்சல் இருப்பின், அடர் தீவனச் சேர்க்கைக்கு அவசியமில்லை.
- மேய்ச்சல் நன்றாக அமையாத போது, ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 150-350 கிராம் அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
- பருவமடைந்த ஆடுகளின் தீவனத்தில் சேர்க்கப்படும் அடர் தீவனக் கலவையில், 12 சதவீத அளவில் செரிமானக் கச்சாப் புரதம் இருக்க வேண்டும்.
முதல் நான்கு மாதச் சினைக்காலத் தீவனப் பராமரிப்பு
- சினையாக இருக்கும் பெட்டை ஆடுகளுக்கு, 4-5 மணி நேரம், தரமான மேய்ச்சல் அவசியமாகும்.
- இந்தக் காலத்தில், ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 5 கிலோ பசுந்தீவனம் வீதம் கொடுக்க வேண்டும்.
இறுதி மாதச் சினையின் போதான தீவனப் பராமரிப்பு
- இந்தக் காலத்தில், கரு வளர்ச்சியானது 60-80 சதவீதமாக இருக்கும். எனவே, இப்போது தீவனத்தில் எரிசக்திப் பற்றாக்குறை இருந்தால், ஆடுகள் சினைப்பருவ நச்சேற்றத்தால் பாதிக்கப்படும்.
- அதனால், மேய்ச்சலுடன் ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 250-350 கிராம் வீதம், அடர் தீவனத்தை அளிக்க வேண்டும்.
- மேலும், ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 7 கிலோ வீதம் பசுந்தீவனத்தையும் தர வேண்டும்.
ஈனும் காலத்திலான தீவனப் பராமரிப்பு
- குட்டிகளை ஈனும் காலம் நெருங்கும் போது, சினை ஆடுகளின் தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, தரமான உலர் தீவனத்தைப் போதியளவில் கொடுக்க வேண்டும்.
- குட்டிகளை ஈனும் நாளில், தீவனத்தைக் குறைத்து, குளிர்ச்சியான நீரை அதிகமாகத் தர வேண்டும்.
- குட்டிகளை ஈன்றதும் பெட்டை ஆடுகளுக்கு மிதமான வெந்நீரை அளிக்க வேண்டும்.
- குட்டிகளை ஈன்ற பிறகு, பெட்டை ஆடுகளின் தீவன அளவைப் படிப்படியாகக் கூட்டி, அதை, ஒரு நாளைக்கு 6-7 முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
- குட்டிகளை ஈன்ற சில நாட்களில், எளிதில் செரிக்கும் தீவன மூலப்பொருள்களைத் தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
- கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச்சோளத்தை 1:1 வீதம் சேர்க்கலாம்.
பால் கொடுக்கும் ஆடுகளின் தீவனப் பராமரிப்பு
- ஒரு நாளைக்கு, 6-8 மணி நேர மேய்ச்சலுடன், ஓர் ஆட்டுக்கு 10 கிலோ பசுந்தீவனம் வீதம் தர வேண்டும்.
- ஒரு நாளைக்கு, 6-8 மணி நேர மேய்ச்சலுடன், ஓர் ஆட்டுக்கு 400 கிராம் அடர் தீவனம் வீதம் தர வேண்டும்.
- ஒரு நாளைக்கு, 6-8 மணி நேர மேய்ச்சலுடன், ஓர் ஆட்டுக்கு 800 கிராம் தரமான பயறுவகை உலர் தீவனம் வீதம் தர வேண்டும்.
சினையுறாத பெட்டை ஆடுகளுக்கான தீவனப் பராமரிப்பு
- மேய்ச்சல் நன்றாக இருப்பின், அடர்தீவனச் சேர்க்கைக்கு அவசியமில்லை.
- நல்ல மேய்ச்சல் இல்லாத நிலையில், ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 150-200 கிராம் அடர் தீவனம் வீதம் அளிக்க வேண்டும்.
இனப்பெருக்கக் கிடாக்களுக்கான தீவனப் பராமரிப்பு
- கிடாக்களை, பெட்டை ஆடுகளுடன் சேர்த்தே மேய்ப்பது தான் பொதுவான வழக்கம்.
- அப்படிச் செய்வதன் மூலம், பெட்டைகளுக்குக் கிடைக்கும் அதேயளவு தீவனமும், சத்துகளும் தான் கிடாக்களுக்கும் கிடைக்கும்.
- கிடாக்களுக்கெனத் தனியாகத் தீவனம் அளிக்க வேண்டுமாயின், 3 பாகம் ஓட்ஸ் அல்லது பார்லி, ஒரு பாகம் மக்காச்சோளம் மற்றும் ஒரு பாகம் கோதுமை அடங்கிய அடர் தீவனக் கலவையை, ஒரு நாளைக்கு ஒரு கிடாவுக்கு, 300-500 கிராம் வீதம் அளிக்க வேண்டும்.
பால் குடிக்கும் குட்டிகளுக்கான தீவனப் பராமரிப்பு
- குட்டிகள் பிறந்ததும் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். முதல் 3-4 நாட்களுக்கு, குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க, அவற்றைத் தாயிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும். முதல் 3 நாட்களுக்குத் தினமும் 300 மி.லி. சீம்பாலை 3 முறை கொடுக்க வேண்டும்.
- அடுத்து, 4-14 நாட்களுக்கு, தினமும் 350 மி.லி. பால் அல்லது பசும்பாலை 3 முறை கொடுக்க வேண்டும்.
- அடுத்து, 15-30 நாட்களுக்கு, தினமும் 350 மி.லி. பால் அல்லது பசும்பாலை 3 முறை கொடுக்க வேண்டும். மேலும், சிறிதளவு அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
- அடுத்து, 31-60 நாட்களுக்கு, தினமும் 400 மி.லி. பால் அல்லது பசும்பாலை 2 முறை கொடுக்க வேண்டும். மேலும், 100-150 கிராம் அடர் தீவனம் மற்றும் போதியளவில் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
- அடுத்து, 61-90 நாட்களுக்கு, தினமும் 200 மி.லி. பால் அல்லது பசும்பாலை 2 முறை கொடுக்க வேண்டும். மேலும், 200-250 கிராம் அடர் தீவனம் மற்றும் போதியளவில் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
இளங்குட்டிகளுக்கான கலப்புத் தீவனக்கலவை
- மக்காச்சோளம்: 40 சதம்,
- கடலைப் புண்ணாக்கு: 30 சதம்,
- கோதுமைத் தவிடு: 10 சதம்,
- எண்ணெய் நீக்கப்பட்ட அரிசித் தவிடு: 13 சதம்,
- கரும்புச் சக்கரைப்பாகு: 5 சதம்,
- தாதுப்புக் கலவை: 2 சதம்,
- உப்பு: 1 சதம்.
இவற்றுடன் உயிர்ச் சத்துகள் ஏ, பி2, டி3 மற்றும் நுண்ணுயிர்க் கொல்லியைச் சேர்த்து, சத்தேற்றம் செய்ய வேண்டும்.
மூன்று முதல் 12 மாதம் வரையிலான தீவனப் பராமரிப்பு
- ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.
- ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு, 100-200 கிராம் வீதம் அடர் தீவனத்தை அளிக்க வேண்டும். இதில், 16-18 சதவீதம் புரதம் இருக்க வேண்டும்.
- இரவு நேரத்தில் உலர் தீவனத்தை அளிக்க வேண்டும்.
தொகுப்பு: மு.உமாபதி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


