தென்னை சாகுபடியில் மகசூலைப் பெருக்க, உர மேலாண்மை மிகவும் முக்கியம். மண்ணின் தன்மை, மரத்தின் வயது, பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உரமிடுவதன் மூலம், மரத்தின் வளர்ச்சியையும், காய்ப்புத் திறனையும் மேம்படுத்தலாம்.
தென்னை மரத்துக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன, சரியான அளவில் கிடைக்க வேண்டும். மேலும், தொழுவுரம், கம்போஸ்ட் போன்ற இயற்கை உரங்களையும் இட்டால், தென்னை சாகுபடி சிறப்பாக இருக்கும்.
ஆண்டுக்கு எவ்வளவு உரம்?
நன்கு வளர்ந்து காய்ப்பில் உள்ள தென்னை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு, 50 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 1.1 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 2 கிலோ பொட்டாசை இட வேண்டும். இருப்பினும், மண்ணாய்வு முடிவுகளின் அடிப்படையில் உரங்களை இடுவதே சிறந்தது.
உரத்தை எப்படி இட வேண்டும்?
தென்னை மரத்துக்கு அருகிலேயே உரத்தைக் குவித்து வைத்து விடக்கூடாது. மரத்தைச் சுற்றி 1.5-2 மீட்டர் தள்ளி, வட்டப் பாத்தியை அமைத்து, உரத்தைச் சீராகப் பரப்பி, மேல் மண்ணால் மூடி, பாசனம் செய்ய வேண்டும். இதன் மூலம் உரச்சத்துகள் வேர்களுக்கு எளிதில் கிடைக்கும். வறண்ட நிலையில் உரமிடுவதால் பயனில்லை. எனவே, மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்கும் போது மட்டுமே உரமிட வேண்டும். மேலும், உரமிட்டதும் பாசனம் செய்ய வேண்டும்.
பிரித்து இட வேண்டும்
ஓர் ஆண்டுக்குத் தேவையான உரத்தை ஒரே தடவையில் இடாமல், பருவநிலை மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப, பல தவணைகளாகப் பிரித்து இடுவது பயனுள்ளதாக இருக்கும். மழை தொடங்கும் காலத்திலும், அதன் பிறகு பாசன வசதிக்கு ஏற்ப மற்றொரு தவணையிலும் உரமிடலாம். சொட்டுநீர்ப் பாசனம் உள்ள தோப்புகளில், நீர்வழி உரமாக இட முடியும்.
தொழுவுரத்தின் அவசியம்
வளர்ந்த மரத்துக்கு ஆண்டுக்கு, 50 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை இட வேண்டும். இது, மண்ணின் இயல்பை மேம்படுத்தி, மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும். தென்னை ஓலை மற்றும் மட்டைகளை, மரங்களைச் சுற்றி மூடாக்காக இடுவதன் மூலம், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம்.
வயதுக்கேற்ற உர மேலாண்மை
தென்னை சாகுபடியில் மரத்தின் வயதுக்கு ஏற்ப உரங்களை இடுவது அவசியமாகும். மண்வளம், பாசன வசதி மற்றும் மரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, உர மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு வயது தென்னைக்கு, ஆண்டுக்கு, 10 கிலோ தொழுவுரம், அல்லது கம்போஸ்ட், 308 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 480 கிராம் பொட்டாஷ் தேவை. நடவு செய்ததும் இரசாயன உரங்கள் முழுவதையும் இடாமல், நாற்றின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப உரமிடுவது அவசியம்.
இரண்டு வயது தென்னைக்கு ஆண்டுக்கு, 20 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 616 கிராம் யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 960 கிராம் பொட்டாஷ் தேவை. இந்தப் பருவத்தில் மரத்தின் வேர் மற்றும் இலை வளர்ச்சி அதிகரிப்பதால், முதல் ஆண்டை விட, சத்துகளின் தேவை கூடுகிறது.
மூன்று வயது தென்னைக்கு ஆண்டுக்கு, 30 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 924 கிராம் யூரியா, 1.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1.440 கிலோ பொட்டாஷ் தேவை. இந்தப் பருவத்தில் மரம் வேகமாக வளர்ந்து காய்ப்புக்குத் தயாராகி வருவதால், முறையான உர மேலாண்மை மிகவும் முக்கியமாகும்.
நான்கு வயது தென்னைக்கு ஆண்டுக்கு, 40 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 1.230 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1.920 கிலோ பொட்டாஷ் தேவை. இப்போது மரத்தின் வளர்ச்சி மற்றும் காய்ப்புத் திறன் அதிகரிக்கத் தொடங்குவதால், போதியளவில் சத்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தென்னைக்கு ஆண்டுக்கு, 50 கிலோ தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 1.300 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 2 கிலோ பொட்டாஷ் தேவை. இந்த அளவுகள் பொதுவான பரிந்துரையாகும். மண்வளம் மற்றும் மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப, உர அளவில் மாற்றம் செய்யலாம்.
தென்னை நுண்ணூட்டக் கலவை
தென்னை மரத்தின் வளர்ச்சி, காய்ப்பு மற்றும் தரமான காய்கள் கிடைக்க, துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, போரான், செம்பு, மக்னீசியம் போன்ற நுண் சத்துகள் அவசியம். தென்னை இரகங்கள் மற்றும் ஒட்டு இரகங்களில் நுண்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, த.வே.ப.க. நுண்சத்துக் கலவையை, மரத்துக்கு, ஆண்டுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இதை நேரடியாக இடாமல், 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து, ஈரப்பதத்தில் 30 நாட்கள் வைத்திருந்து எடுத்து மரத்தைச் சுற்றி இடலாம்.
பல்வகை இயற்கை உரங்கள்
விவசாயிகள் மண்வளத்தைப் பாதுகாக்க, ஒருவகை இயற்கை உரத்தை மட்டுமே இடாமல், பல்வகை இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். தொழுவுரத்தை மட்டுமின்றி, மண்புழு உரம், தென்னைக் கழிவுகளில் தயாரிக்கப்படும் கம்போஸ்ட் மற்றும் பசுந்தாள் உரங்களையும் பயன்படுத்தினால் மண்வளம் மேம்படும்.
எனவே, சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை வளர்த்து, உரிய பருவத்தில் மண்ணில் மடக்கி உழுவதன் மூலம், மண்ணுக்கு இயற்கையான அங்ககச் சத்துகளைக் கிடைக்கச் செய்யலாம்.
உயிர் உரங்கள்
பயிர்களின் வேர் வளர்ச்சிக்கும், மண்ணிலுள்ள சத்துகளைப் பயிர்கள் சிறப்பாக எடுத்துக் கொள்வதற்கும், உயிர் உரங்கள் உதவுகின்றன. எனவே, ஒரு மரத்துக்கு 50 கிராம் அசோஸ்பைரில்லம், 50 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 100 கிராம் அசோபாஸ் மற்றும் 50 கிராம் வி.ஏ.எம். வீதம் எடுத்து, தொழுவுரத்தில் கலந்து இடலாம்.
இந்த உயிர் உரக்கலவையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இட வேண்டும். உயிர் உரங்களை, இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் கலந்து பயன்படுத்தக் கூடாது.
மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மேலும், போதியளவு பாசனம், மூடாக்கு இடுதல் மூலம், தென்னை மரங்களை நன்கு வளர்த்து, மகசூலையும் மேம்படுத்த முடியும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


