வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள், விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இவற்றைச் சமாளிக்க, விவசாயிகள் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை நாடுவதால், மண்வளம் கெடுவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைகிறது.
இந்நிலையில், பயிர்களைப் பாதுகாக்கும் இயற்கைக் காவலர்களாக இருந்து, பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் சில உயிரினங்கள், விவசாய நிலங்களிலேயே வாழ்ந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து, செலவைக் குறைத்து, நஞ்சில்லா உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.
நன்மை செய்யும் பூச்சிகள்
வயல் வெளிகளில் தீமை செய்யும் பூச்சிகளை உண்ணுவதன் மூலமும், அவற்றின் முட்டைகளை அழிப்பதன் மூலமும், சில பூச்சிகள் பயிர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன.
பொறிவண்டுகள்: இவை, பயிர்களின் சாற்றை உறிஞ்சும் அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகளை விரும்பி உண்ணும். ஒரு பொறிவண்டு தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்.
தட்டான்கள் மற்றும் ஊசித்தட்டான்கள்: நெல் வயல்களில் பறந்து திரியும் இந்தப் பூச்சிகள், பயிர்களைத் தாக்கும் தத்துப் பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகளைப் பிடித்து உண்டு அழிக்கும்.
கண்ணாடி இறக்கைப் பூச்சிகள்: இவற்றின் இளம் புழுக்கள், அசுவினிச் சிங்கங்கள் எனப்படுகின்றன. இவை, வெள்ளை ஈக்கள், அசுவினிகள் மற்றும் இலைப்பேன்களை அழித்துப் பயிர்களைக் காக்கும்.
டிரைக்கோகிரம்மா குளவிகள்: இவை, கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய ஒட்டுண்ணிக் குளவிகள் ஆகும். இவை, கரும்பு, பருத்தி மற்றும் நெற்பயிரைத் தாக்கும் புழுக்களின் முட்டைகளுக்குள் தங்களின் முட்டைகளை இட்டு, தீமை செய்யும் புழுக்கள் உருவாவதைத் தடுக்கும்.
கும்பிடு பூச்சிகள்: இவை, வயலில் மறைந்திருந்து, வெட்டுக்கிளிகள், வண்டுகள் மற்றும் கம்பளிப் புழுக்களைப் பிடித்து உண்ணும்.
சிலந்திகள் மற்றும் பறவைகள்
பூச்சிகளைத் தாண்டி, மற்ற சில உயிரினங்களும் பயிர்ப் பாதுகாப்பில், முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சிலந்திகள்: வயல் வெளிகளில் வலையைப் பின்னி வாழும் சிலந்திகள், பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும், சிறிய பூச்சிகள் மற்றும் ஈக்களைப் பிடித்து அழிக்கும்.
பறவைகள்: கரிச்சான் குருவி, மைனா, கொக்கு, ஆந்தைகள் போன்றவை, வயலில் உள்ள புழுக்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் எலிகளைப் பிடித்து உண்ணும். வயல்களில் பறவை இருக்கைகளை அமைப்பதன் மூலம், இவற்றை வயலுக்குள் ஈர்க்கலாம்.
நுண்ணுயிரிகள்
மண்ணின் காவலர்களாக விளங்கும் கண்ணுக்குத் தெரியாத நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், வேரழுகல் மற்றும் பூஞ்சை நோய்களில் இருந்து பயிர்களைக் காக்கும்.
டிரைக்கோடெர்மா விரிடி: இது, மண்ணில் வாழும் நன்மை செய்யும் பூஞ்சை இனமாகும். இது, பயிர்களின் வேர்களைத் தாக்கும் பூஞ்சைகளை அழித்து, வாடல் நோயைக் கட்டுப்படுத்தும்.
சூடோமோனாஸ்: இது, பயிர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு, பாக்டீரிய நோய்கள் மற்றும் பூஞ்சை நோய்கள் பரவாமல் தடுக்கும்.
இயற்கைக் காவலர்களைப் பாதுகாக்கும் வழிகள்
இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்தல்: செயற்கைப் பூச்சிக்கொல்லிகள், தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்து விடும். எனவே, வேப்ப எண்ணெய், பஞ்சகவ்யா போன்ற இயற்கைப் பூச்சி விரட்டி மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
வரப்புப் பயிர்களை வளர்த்தல்: வயல் வரப்புகளில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை வளர்ப்பதன் மூலம், நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கும்.
இயற்கையோடு இணைந்த இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதன் மூலம், பூச்சிக்கொல்லி செலவுகளைக் கணிசமாகக் குறைத்து, நஞ்சற்ற விளைச்சலையும், வளமான மண்ணையும், அடுத்த தலைமுறைக்கு வழங்க முடியும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



