My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

காவிரி ஆறு!

காவிரி ஆறு!

காவிரி ஆறு (Cauveri River), தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும். புனித நதியாகப் போற்றப்படும் காவிரி ஆறு, தென்னகக் கங்கை (The Ganga of the South) என்றும் அழைக்கப்படுகிறது. காவிரி உற்பத்தியாகும் குடகு மலையை, பொன்படு நெடுவரை என்றும், காவிரி ஆற்றைப் பொன்னி என்றும், தமிழ் இலக்கியம் அழைக்கிறது.

இந்த ஆறு, தான் பாயும் பகுதிகளில் எல்லாம், காடுகளை, பசுஞ் சோலைகளை உருவாக்கி, விரிவாக்கி இருப்பதால், காவிரி எனப்படுவதாக, இதற்குப் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

காவிரி ஆறு பிறப்பிடம்

காவிரி, கிழக்கு நோக்கிப் பாயும் ஆறாகும். கோதாவரி, கிருஷ்ணாவுக்கு அடுத்து, தென்னிந்தியாவின் மூன்றாவது நதியாக, காவிரி ஆறு விளங்குகிறது. இந்த ஆறு, கர்நாடக மாநிலம், குடகு மாவட்ட, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், 4,400 அடி உயரத்தில் பிரம்மகிரிக் குன்றுகளில் அமைந்துள்ள, தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தி ஆகிறது.

அங்கிருந்து, குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ் நகர் ஆகிய கர்நாடக மாவட்டங்கள் வழியாக 320 கி.மீ. தூரம்; தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய தமிழக மாவட்டங்கள் வழியாக 416 கி.மி. தூரம்; இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே 64 கி.மீ. தூரம் என, 800 கி.மீ. தூரம் பயணிக்கிறது.

கர்நாடகத்தில் காவிரியின் பயணம்

காவிரி ஆறானது, குடகு மாவட்டப் பிரம்மகிரி மலைப்பகுதியில், தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. ஆரங்கி ஆறானது, குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து, மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராஜ சாகர் அணையை அடைகிறது. ஹேமாவதி, இலட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும், கிருட்டிணராஜ சாகர் அணையில் காவிரியுடன் இணைகின்றன.

இந்த அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீருடன், கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் இணைகின்றன. பிறகு, சிவசமுத்திரம் தீவில் ககனசுக்கி (Gaganachukki) அருவியாகவும், பாறசுக்கி (Bharachukki) அருவியாகவும், காவிரி நீர் பிரிந்து விழுகிறது. அடுத்து, சிம்சா, ஆர்க்காவதி ஆறுகளை இணைத்துக் கொள்ளும் காவிரி, ஆழமான மற்றும் குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை வந்தடைகிறது.

பழங்கதை ஒன்றில், ஓர் ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால், இதை, ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பதாக ஒரு கூற்று உண்டு. கன்னட மொழியில் இதற்கு மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்.

தமிழகத்தில் காவிரியின் பயணம்

மிகவும் குறுகிய, ஆனால் மிகவும் ஆழமான ஆடு தாண்டும் பகுதியிலிருந்து பிலிகுண்டுலு வழியாகத் தமிழகம் வரும் காவிரி, ஒகேனக்கல்லில் நீர் வீழ்ச்சியாகி, அங்கிருந்து மேட்டூர் அணையை அடைகிறது. இங்கிருந்து தான் காவிரியின் தமிழகப் பாசனப் பயணம் தொடங்குகிறது. இங்கிருந்து வெளிவரும் காவிரி நீருடன் பவானி என்னுமிடத்தில், பவானி ஆற்றுநீர்க் கலக்கிறது.

ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரி நீருடன், கொடுமுடிக்கு அருலிலுள்ள நொய்யல் என்னுமிடத்தில், நொய்யல் ஆற்றுநீர்க் கலக்கிறது. அமராவதி ஆறானது, கரூர் அருகிலுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகலமாக இருப்பதால், அகண்ட காவிரி எனப்படுகிறது.

முசிறி, குளித்தலை நகரங்களைக் கடந்து செல்லும் காவிரி, முக்கொம்பு என்னும் மேலணையை அடைகிறது. இங்கே காவிரி ஆறு, கொள்ளிடம் என்னும் கிளையை விரித்து, வெள்ளக் காலத்தில் பெருகி வரும் காவிரி நீரின் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் வழியாகக் கல்லணையை அடைகிறது.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களில் கிளைகளாகப் பிரிந்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவின் பாசன நீராகப் பயன்படும் காவிரி நீர், இறுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் என்னும் இடத்தில் உள்ள இரண்டு முகத்துவாரங்கள் வழியாக, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

பயன்பாடு

காவிரி நீரானது, பாசனத்துக்காக, மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக, நீர் மின்சார உற்பத்திக்காகப் பயன்படுகிறது. காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகள், குடிநீர் நிலையங்கள், தடுப்பணைகள், நீர்மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடப்பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையமே, ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் ஆகும்.

நீர்ப்பங்கீடு

காவிரி வடிநிலப் பகுதியில், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால், காவிரி ஆறானது, கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் நேரடியாகப் பாய்கிறது. காவிரியின் துணை ஆறாகிய கபினி, கேரளத்தில் உற்பத்தி ஆவதாலும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அமராவதி மற்றும் பவானி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கேரளத்தில் இருப்பதாலும், கேரளத்துக்கும் நீர்ப்பங்கீடு அளிக்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையிலான காவிரிநீர்ப் பங்கீட்டுச் சிக்கலை விசாரித்து வந்த நடுவர் மன்றம், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டுமென, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

நடுவர் மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் அடங்கிய உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் மாற்றம் செய்து, அதாவது, 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து, 192 டி.எம்.சி.க்குப் பதிலாக, 177.25 டி.எம்.சி. நீரை, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டுமென, 16.02.2018 அன்று உத்தரவிட்டது.

மேலும், அந்தத் தீர்ப்பில், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி.எம்.சி. நீரோடு, இந்த 14.75 டி.எம்.சி. நீரைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், இந்தத் தீர்ப்பு, உத்தரவிட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இறுதியாக, மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக, காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றிச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான காவிரி நதிநீர்ப் பங்கீட்டை நிர்வகிக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தவும் என, 01.06.2018 அன்று, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority) அமைக்கப்பட்டது.

இது, மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்படியான மற்றும் நீதித்துறை (quasi-judicial) சார்ந்த அமைப்பாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. இதில், தலைவர் ஒருவரும், செயலாளர் ஒருவரும், எட்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முறையாகச் செயல்படுத்துதல், கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர் இருப்பைக் கண்காணித்தல், தேவைக்கேற்ப காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) பரிந்துரைகளைப் பெற்று, நீரைத் திறக்க உத்தரவிடுதல் ஆகியன, இதன் முக்கியப் பணிகளாகும்.

ஆனால், இந்த ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்று, கர்நாடக அரசு ஒழுங்காகச் செயல்படுத்துவது இல்லை என்பதும், இந்த உத்தரவுகளைக் கர்நாடக அரசு செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

காவிரியின் துணை ஆறுகள்

கபினி, ஹேமாவதி, ஆரங்கி, இலட்சுமண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகியன, கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும். பவானி, அமராவதி, நொய்யல், திருமணி முத்தாறு ஆகியன, தமிழ்நாட்டில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.

கபினி

காவிரியாற்றின் மிகப்பெரிய கிளை நதிகளில் ஒன்றான கபினியை, கபிலா என்றும் அழைப்பர். பனமரம் ஆறு, மனந்தவாடி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தின் மூலம், கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கபினி உருவாகிறது. இது, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, கர்நாடகத்தின் திருமாக்கூடலு நரசிப்புராவில், காவிரியுடன் கலக்கிறது. இதன் மூலம், கபினி என்னும் மிகப்பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.

பவானி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீலகிரிக் குன்றுகளில் உற்பத்தியாகும் பவானி, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்குத் தேசியப் பூங்காவில் பாய்ந்து, மீண்டும் தமிழ்நாட்டை நோக்கிப் பாய்கிறது. பவானிசாகர் அணை, ஈரோடு மாவட்டத்தில், பவானி ஆற்றில் அமைந்துள்ளது.

கல்லணை

கிராண்ட் அணைக்கட் (Grand Anicut) எனப்படும் கல்லணை, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், தோகூரில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 1,080 அடி நீளம், 66 அடி அகலம், 18 அடி உயரமுள்ள இந்த அணை, திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

கரிகால் சோழனால், கி.பி.2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை, இன்றுவரை பயன்பாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான பாசன அணைகளில் ஒன்றாகும். இது, காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் வகையில், உபரி நீரை கொள்ளிடம் நோக்கித் திருப்பி விட்டு, டெல்டா பகுதிகளுக்குப் பாசன வசதியை வழங்குகிறது.  கல்லையும் களிமண்ணையும் மட்டுமே வைத்துக் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகட்கு மேல்,  காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது பெரு வியப்பாகும்.

காவிரி ஆற்றில் அமைந்துள்ள அணைகள்

  • கிருஷ்ணராஜசாகர் அணை,
  • கல்லணை,
  • மேட்டூர் அணை,
  • மேலணை,
  • ஹேமாவதி அணை,
  • ஹாரங்கி அணை,
  • கபினி அணை,
  • அமராவதி அணை,
  • பனாசுரா அணை.

காவிரியாற்றில் உள்ள நீர்வீழ்ச்சிகள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் 1902-இல், நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இது, ஆசிய அளவில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் நிலையமாகும்.

காவிரியாற்றுத் தீவுகள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள திருவரங்கப்பட்டினம், சிவசமுத்திரம், தமிழகத்தில் உள்ள திருவரங்கம் ஆகிய தீவுகள், காவிரியாறால் உருவானவை. இவற்றில், திருவரங்கப்பட்டினம் மிகவும் பெரியது. இது, திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இந்த மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில்கள் உள்ளன. திருவரங்கப்பட்டின அரங்கனை ஆதிரங்கன் என்றும், சிவசமுத்திர அரங்கனை மத்தியரங்கன் என்றும், திருவரங்க அரங்கனை அந்தரங்கன் என்றும், மக்கள் அழைக்கிறார்கள்.

காவிரி ஆற்றங்கரை நகரங்கள்

  • திருவரங்கப்பட்டினம்,
  • ஈரோடு,
  • திருச்சிராப்பள்ளி,
  • கும்பகோணம்,
  • திருவாரூர்.

காவிரி சார்ந்த விழாக்கள்

புஷ்கர விழா

புஷ்கரம் என்றால், புனித நீராடுதல் என்று பொருள். இவ்விழா, கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, தப்தி, துங்கபத்ரா, சிந்து, பிரம்மபுத்ரா ஆகிய, இந்தியாவின் 12 புனித நதிகளைப் போற்றி வழிபடும் திருவிழா. அப்போது, இந்த நதிகளில் புனித நீராடுதல், முன்னோர்க்குத் திதி கொடுத்தல், தானம் வழங்குதல், தியானம் போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும்.

குரு பகவான் ஒரு இராசியில் நுழையும் முதல் 12 நாட்கள், ஆதி புஷ்கரம் என்றும், அந்த இராசியிலிருந்து வெளியேறும் கடைசி 12 நாட்கள், அந்திய புஷ்கரம் என்றும் கொண்டாடப்படும்.

இவ்வகையில், குரு பகவான், துலாம் இராசிக்கு இடம் பெயரும் போது, அதாவது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, காவிரி புஷ்கர விழா நடைபெறும். இதை, ஒக்கேனக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிப்பாளையம், கொடுமுடி, நெரூர், நாமக்கல் வேலூர், திருச்சி, திருவரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் ஆகிய இடங்களில் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

மகா புஷ்கர விழா

இது, இந்தியாவில் உள்ள 12 புனித நதிகளுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கர விழாக்களின் தொடர்ச்சியாக, 12-வது சுழற்சி வரும் போது, அதாவது, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மிகச் சிறப்பான விழாவாகும். காவிரி மகா புஷ்கர விழா, வியாழ பகவான், துலாம் இராசிக்கு இடம் பெயர்ந்ததில் இருந்து 12 நாட்கள் கொண்டாடப்படும்.

இந்த விழாவின் போது, புனித நீராடுதல், முன்னோர்க்குத் திதி கொடுத்தல், தானம் செய்தல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தமிழ்நாட்டில், 2018 அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி மகா புஷ்கர விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆடிப்பெருக்கு

ஆண்டுதோறும் ஆடி மாதம், 18-ஆம் நாளில், காவிரி ஆற்றங்கரையில், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், குடும்பத்தினருடன் பூசைகள் செய்து காவிரித்தாயை வணங்குவர்.

அப்போது, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு, வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர் மற்றும் சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் இட்டு, காவிரித் தாய்க்குப் படைத்து வணங்குவர்.


-மு.உமாபதி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள்!

  • தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள்!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!