வளமார்ந்த விவசாயத்தின் அடித்தளமே மண்ணின் உயிரோட்டம் தான். நம் கண்களுக்குப் புலப்படாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மண்ணுக்குள் இடைவிடாது இயங்கி, இயற்கையின் மிகப்பெரிய உயிரியல் தொழிற்சாலையைப் போலச் செயல்பட்டு வருகின்றன.
மடிந்த தாவரக் கழிவுகளைச் சிதைத்து உரமாக மாற்றுவது, பயிர்களுக்குத் தேவையான சத்துகளை வழங்குவது, நோய்களில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பது, தாவர வளர்ச்சியைத் தூண்டுவது என, பல்வேறு பணிகளை இந்த நுண்ணுயிர்கள் செய்து வருகின்றன.
கண்ணுக்குத் தெரியா அணுவுயிரெல்லாம் மண்ணுக்குள் செய்யும் மாயங்கள் கோடி! என்னும் வரிகள், மண்ணுக்குள் நடக்கும் நுண்ணுயிர்களின் எண்ணற்ற செயல்களை அழகாக வெளிப்படுத்துகின்றன.
மழைநீரை உயிர் வளமாக மாற்றும் நுண்ணுயிர்கள்
விண்ணின் மழையை அமுதாய் மாற்றி மண்ணின் மடிக்குத் தருதே ஓடி! மழைநீர் என்பது, பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. ஆனால், நீர் மட்டும் போதாது. தாவரங்களின் வளர்ச்சிக்கு, மண்ணிலுள்ள பல்வேறு சத்துகளும் வேண்டும்.
மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள்; கரிமப் பொருள்களைச் சிதைப்பதன் மூலமும், தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், சத்துகளை மாற்றுவதன் மூலமும், மண்வளத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மேலும், கரிமப் பொருள்கள் சிதைவதால் உருவாகும் ஹியூமஸ், மண்ணின் நீர்பிடிப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது. இதனால், மழைநீர் மண்ணுக்குள் தங்கி, பயிர்களின் வேர்களுக்கு ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.
கழிவுகளை உரமாக மாற்றும் மாயப்படை
மட்கச் செய்யும் மாயப் படையாய் மடிந்த குப்பையை உரமாய் மாற்றிடும்! இயற்கையில் எதுவும் வீணாகாது. உதிர்ந்த இலைகள், பயிர் எச்சங்கள், தாவரக் கழிவுகள் போன்ற கரிமப் பொருள்களைச் சிதைத்து, மீண்டும் மண்ணுக்குத் தேவையான சத்துகளாக மாற்றும் வேலையை நுண்ணுயிர்கள் செய்கின்றன.
பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஆக்டினோமைசீட்ஸ் போன்ற நுண்ணுயிர்கள், பல்வேறு நொதிகளைச் சுரந்து கரிமப் பொருள்களைச் சிதைக்கின்றன. இதன் மூலம், கரிமச்சத்து, தழைச்சத்து போன்ற அத்தியாவசியச் சத்துகள் மீண்டும் மண்ணில் சேருகின்றன. எனவே நுண்ணுயிர்களை, இயற்கையின் மறுசுழற்சித் தொழிலாளர்கள் என்று கூறலாம்.
உயிர் உரங்களாகச் செயல்படும் நுண்ணுயிர்கள்
விளைச்சலைக் கூட்டும் உயிர் உரமாகி வேர்களின் வழியே உயிர்நீர் ஊட்டிடும்! நன்மை செய்யும் சில நுண்ணுயிர்கள் உயிர் உரங்களாகச் செயல்படுகின்றன. அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள், தாவரங்களுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதற்கு உதவுகின்றன.
அதைப்போல், மைக்கோரைசா போன்ற நன்மை செய்யும் பூஞ்சைகள், தாவர வேர்களுடன் இணைந்து செயல்பட்டு, வேர்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள நீர் மற்றும் சத்துகளைப் பயிர்கள் பெறுவதற்கு உதவுகின்றன. இதனால், தாவரங்களின் சத்துகளை உறிஞ்சும் திறன் மேம்படுகிறது.
பயிர்களின் இயற்கைக் காவலாளிகள்
பயிர்ப்பிணித் தீர்க்கும் காவலாளியாய்ப் பூச்சிகள் விரட்டி அரணாய் நின்றிடும்! நுண்ணுயிர்களின் மற்றொரு முக்கியப் பணி, நோய்களில் இருந்து பயிர்களைக் காப்பதாகும். டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளோரசன்ஸ், பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன.
இவை, தாவர நோய்க்கிருமிகள் சிலவற்றின் வளர்ச்சியைத் தடுக்கவும், தீங்கு செய்யும் சிலவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இவ்வகை நுண்ணுயிர் சார்ந்த அணுகுமுறைகள், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
தாவர வளர்ச்சியைத் தூண்டும் உயிரியல் ஊக்கிகள்
வளர்ச்சியைத் தூண்டும் ஊக்கியாய் மாறி வளமார் சோலையாய் பூமியை மாற்றிடும்! நன்மை செய்யும் சில நுண்ணுயிர்கள், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை உருவாக்குகின்றன. அவற்றில், சைட்டோகைனின்கள், ஆக்சின்கள், கிப்பரெலின்கள் போன்ற, தாவர வளர்ச்சித் தொடர்பான ஹார்மோன்களும் அடங்கும்.
மேலும், வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், தாவரங்கள், மண்ணிலுள்ள நீர் மற்றும் சத்துகளைச் சிறப்பாகப் பெறுவதற்கு இந்த நுண்ணுயிர்கள் உதவுகின்றன. இதனால், பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும், மண்-தாவர உறவும் மேம்படுகின்றன.
இயற்கை அன்னையின் அரிய கொடை
ஆயிரம் இரசாயன உரங்கள் தோற்றிட இயற்கை அன்னை தந்ததோர் கொடை!” இந்த வரிகள் மூலம், நுண்ணுயிர்களின் முக்கியத்தை அறியலாம். ஆயினும், நுண்ணுயிர்கள் மற்றும் இரசாயன உரங்கள், ஒன்றுக்கொன்று நேரடி மாற்று என்னும் எளிமையான பார்வையை விட, மண்வள மேலாண்மையில் நுண்ணுயிர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வதே முக்கியம்.
கரிமப் பொருள்களின் சுழற்சி, சத்துகள் கிடைப்புத் தன்மை, உயிரியல் கட்டுப்பாடு போன்ற இயற்கையின் செயல்பாடுகளில், நுண்ணுயிர்கள் பங்கெடுக்கின்றன. இதனால், மண்ணின் உயிரியல் செயல்பாட்டைப் பாதுகாப்பது, நிலையான வேளாண்மைக்கு முக்கியமாகிறது.
பூமியின் ஜீவநாடி
பூமிப்பந்தின் ஜீவ நாடியாய் இயங்கும் இந்த அணுவுயிர்கள் படை! நுண்ணுயிர்கள், மண்ணில் நடைபெறும் கரிமச்சுழற்சி, தழைச்சத்துச் சுழற்சி உள்ளிட்ட உயிர் வேதியியல் சுழற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என, பல்வேறு உயிரினங்களின் வாழ்வோடு, மண்ணின் உயிரியல் செயல்பாடுகள் நெருக்கமாக இணைந்துள்ளன.
எனவே, மண்ணை வெறும் கனிமப் பொருள்களின் தொகுப்பாகப் பார்க்காமல், எண்ணற்ற உயிரினங்கள் இணைந்து செயல்படும், உயிருள்ள அமைப்பாகப் பார்ப்பது அவசியம்.
மண்ணின் அணுவுயிர் மாயங்கள் என்னும் சொற்றொடர், கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் இயங்கும் நுண்ணுயிர்களின் உலகத்தை, கவித்துவத்துடனும் அறிவியல் கருத்துகளுடனும் எடுத்துரைக்கிறது.
மடிந்த தாவரக் கழிவுகளைச் சிதைத்து மீண்டும் தாவரச் சத்துகளை மண்ணுக்குக் கொண்டு வருதல், உயிர் உரங்களாகச் செயல்படுதல், பயிர்களைப் பாதுகாக்க உதவுதல், தாவர வளர்ச்சியை ஊக்குவித்தல் என, பல்வேறு பணிகளில் நுண்ணுயிர்கள் பங்களிக்கின்றன. ஆகவே, மண்ணைக் காப்போம்; நுண்ணுயிர்களை வளர்ப்போம்; நஞ்சில்லா எதிர்காலத்தைப் படைப்போம்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

