காலநிலை மாற்றம் காரணமாக, கோடைக்கால வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான வெப்பநிலை, 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் பதிவாகும் நிலையில், முயல் வளர்ப்பில் வெப்ப அழுத்தம், மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.
மற்ற கால்நடைகளைப் போல முயல்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், உடலில் உருவாகும் கூடுதலான வெப்பத்தை வெளியேற்றும் திறன் மிகவும் குறைவு. அவை, காதுகளில் அமைந்துள்ள இரத்த நாளங்கள் வழியாக மட்டுமே உடல் வெப்பத்தை வெளியேற்றுகின்றன.
சுற்றுப்புற வெப்பநிலை 30 டிகிரி செல்சியசைத் தாண்டும் போது, இந்த இயல்பான குளிரூட்டு முறை போதியதாக இல்லாததால், உடல் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, அதிக ஈரப்பதம் நிலவும் காலத்தில், இந்தப் பாதிப்பு மேலும் கூடுகிறது. முயல்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் வெப்பநிலை 15-25 டிகிரி செல்சியஸ் ஆகும். ஈரப்பதம் 55-65 சதமாகும்.
வெப்ப அழுத்தம் ஏற்பட்ட முயல்களில் முதலில் தீவனம் எடுக்கும் அளவு குறையும். உடலில் உருவாகும் வெப்பத்தைக் குறைப்பதற்காக, வளர்சிதை மாற்றம் குறைவதால், முயல்கள் குறைவாகவே உண்ணும். அதே நேரத்தில் நீர் அருந்தும் அளவு கூடும். மூச்சு விடும் வேகம் அதிகரித்து, காதுகள் சிவந்து சூடாகக் காணப்படும்.
சோர்வு, அசைவின்மை, உடல் எடை கூடுவதில் மந்தநிலை மற்றும் கடுமையான சூழலில் வாயைத் திறந்து மூச்சு விடுதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். தினசரி உடல் எடை 20-25 சதவீதம் குறையும். மேலும், தீவன மாற்றுத்திறன் பாதிக்கப்படும். உரிய பராமரிப்பு இல்லா விட்டால், உடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து, திடீர் உயிரிழப்பும் ஏற்படக்கூடும்.
வெப்ப அழுத்தம், முயல்களின் வளர்ச்சித் திறனை நேரடியாகப் பாதிக்கிறது. தீவனம் உண்ணல் குறைவதால், தினசரி உடல் எடை அதிகரிப்பும் குறைகிறது. தீவன மாற்றுத் திறன் பாதிக்கப்படுவதால், உற்பத்திச் செலவு கூடுகிறது. உடல் பராமரிப்புக்கே அதிக ஆற்றல் செலவாவதால், தசை வளர்ச்சிக் குறைகிறது. எனவே, சந்தை எடையை அடைய அதிக நாட்கள் தேவைப்படுகின்றன.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், கோடைக் காலத்தில் பிறந்த முயல்களின் வளர்ச்சி வீதம், குளிர்காலத்தை விட, குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருந்ததாகவும், அதிக வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தம், வளர்ச்சியை எதிர்மறையாகப் பாதிப்பதாகவும் தெரிவிக்கின்றன.
வெப்ப அழுத்தத்தின் மிகப்பெரிய பாதிப்பு இனப்பெருக்கத்தில் காணப்படுகிறது. ஆண் முயல்களில், விந்தணு உற்பத்தி, விந்தணு இயக்கம், கருவுறும் திறன் ஆகியன குறைகின்றன. பெண் முயல்களில் சினைப்பருவ அறிகுறிகள் குறைதல், கருவுறும் விகிதம் குறைதல், கருச்சிதைவு அதிகரித்தல், குட்டிகளின் பிறப்பு எடை குறைதல், பாலூட்டும் திறன் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, குட்டிகளின் வளர்ச்சியும், பண்ணையின் மொத்த உற்பத்தித் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுகின்றன.
பிறந்த முயல் குட்டிகள் வெப்ப அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் திறன் முழுமை பெறாததால், உயிரிழப்பு அதிகரிக்கிறது. தாய் முயல்களில் பால் உற்பத்திக் குறைவதால், குட்டிகளின் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால், குட்டிகளின் இறப்பு விகிதம் கூடுவதோடு, எதிர்கால உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
வெப்ப அழுத்தத்தால், முயல்களின் உடலியக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கார்டிசால் மன அழுத்த ஹார்மோனின் செயல் அதிகரித்து, தைராய்டு ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் மிகுவதால், உடல் செல்கள் சேதம் அடைகின்றன.
நோயெதிர்ப்புத் திறன் குறைவதால், காக்சிடியோசிஸ், மேஞ்ச் போன்ற நோய்கள் ஏற்படும் சூழல் உருவாகிறது. மேலும், தீவனத்தில் உள்ள சத்துகளை உடலால் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போவதால், உற்பத்தித் திறன் குறைகிறது.
வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதில் முயல் கொட்டில் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கொட்டிலின் நீளவாட்டம், கிழக்கு மேற்காக இருப்பதன் மூலம், கொட்டிலில் சூரிய ஒளி நேரடியாகப் படுவதைக் குறைக்கலாம். கூரையை 10-12 அடி உயரத்தில் அமைத்து, போதிய காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும்.
கூரையின் மேற்பகுதியில் வெண்ணிறப் பிரதிபலிப்புப் பூச்சு அல்லது வெப்பத் தடுப்புப் பொருளைப் பயன்படுத்தி, வெப்பத்தைக் குறைக்க வேண்டும். வயர் மெஷ் கூண்டுகள், நிழல் வலை, மரநிழல், மிஸ்டிங் மற்றும் ஃபாக்கர் அமைப்புகள் மூலம், கொட்டிலின் வெப்ப நிலையைக் கணிசமாகக் குறைக்கலாம். முடிந்தால், எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் காற்றோட்ட விசிறிகளையும் பயன்படுத்தலாம்.
கோடைக்காலத்தில் முயல்களுக்கு எப்போதும் சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர்க் கிடைக்க வேண்டும். வெப்பக் காலத்தில் முயல்கள், சாதாரண நாட்களை விட 2-3 மடங்கு கூடுதலாக நீரை அருந்தும். எனவே, தினமும் குடிநீரைப் பலமுறை மாற்ற வேண்டும்.
நிப்பிள் டிரிங்கர் அமைப்பானது, குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், எப்போதும் சுத்தமான குடிநீர்க் கிடைக்கவும் உதவும். கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி, எலக்ட்ரோலைட் கரைசலை வழங்கினால், உடலில் நீர் மற்றும் தாதுப்புகள் சமநிலையில் இருக்கும்.
தீவன மேலாண்மையும் வெப்ப அழுத்தத்தைச் சமாளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் தீவனம் வழங்குவது சிறந்தது. அதிக வெப்பம் நிலவும் மதிய நேரத்தில் தீவனம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். தரமான பெலெட் தீவனம், பசுந்தீவனம் மற்றும் சமநிலையான புரதம், ஆற்றல் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை வழங்க வேண்டும்.
வைட்டமின் சி, வைட்டமின் ஈ, செலினியம் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சத்துகள், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸைக் குறைத்து, நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும். மினரல் மிக்ஸ் மற்றும் எலக்ட்ரோலைட்டைச் சேர்ப்பது, வெப்ப அழுத்தப் பாதிப்பைக் குறைக்க உதவும்.
மேலும், பண்ணையில் அதிக அடர்த்தியில் முயல்களை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கருவுற்ற மற்றும் பாலூட்டும் முயல்களுக்குத் தனித்தனியாக, குளிர்ச்சியான கூண்டுகள் இருக்க வேண்டும். மதிய நேரத்தில் முயல்களைக் கையாளுதல், தடுப்பூசி செலுத்துதல், போக்குவரத்து போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். தினமும் கூண்டுகளைச் சுத்தம் செய்து, அம்மோனியா வாயு தேங்காமல் பராமரிப்பது, நோய்ப் பரவலைத் தடுக்க உதவும்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிகுந்து வரும் தற்போதைய சூழலில், வெப்ப அழுத்த மேலாண்மை, முயல் வளர்ப்பில் தவிர்க்க முடியாத தொழில் நுட்பமாக மாறியுள்ளது. சரியான கொட்டில், போதிய காற்றோட்டம், மரநிழல், குளிர்ந்த குடிநீர், சீரான தீவனம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் மற்றும் எலக்ட்ரோலைட் பயன்பாடு, சுகாதார மேலாண்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினால், வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைப் பெருமளவில் குறைக்கலாம்.
அறிவியல் சார்ந்த இந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடையிலும் முயல் வளர்ப்பை, இலாபகரமான, நிலையான மற்றும் வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும்.

முனைவர் மு.வெங்கிடசாமி,
உதவிப் பேராசிரியர், மருத்துவர் சு.கதிரவன், கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

