My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பருவமழைக் காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு!

பருவமழைக் காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு!

இந்தியா போன்ற, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க, பருவமழை மிகவும் முக்கியமாகும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென்மேற்குப் பருவமழைக் காலமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை, வடகிழக்குப் பருவமழைக் காலமாகவும் விளங்கி வருகின்றன.

இந்தக் காலங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால், விலங்குகளின் மூச்சுக்காற்று, உடல் வெப்பம் மற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுப்புறத்தின் நுண்ணிய காலநிலை மேலும் மோசமடைகிறது. இது, கால்நடைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி, பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. இந்நிலையில், கால்நடைகள் நலமாக இருக்கவும், அவற்றில் உயிரிழப்பைத் தவிர்க்கவும் எடுக்க வேண்டிய, குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகள் குறித்துப் பார்க்கலாம்.

அடிப்படைப் பராமரிப்பு உத்திகள்

  • சேறு மற்றும் வெள்ளத்திலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • மழையால் ஏற்படும் நோய்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தக் காலத்தில் கால்நடைகளுக்குக் குடற்புழு நீக்கமும் செய்யப்பட வேண்டும்.
  • மழைக்காலம் தொடங்குவதற்கு முன், குறிப்பிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கால்நடைகளுக்குப் போட்டுவிட வேண்டும்.
  • பரவலாக நோய்க் காணப்படும் பகுதிகளில், மழைக்காலம் வருமுன், மாடுகளுக்கு இரத்தக்கசிவு செப்டிசீமியா (HS) தடுப்பூசி மற்றும் கருங்கால் நோய்த் (BQ) தடுப்பூசியைப் போட்டு விட வேண்டும்.
  • செம்மறியாடு மற்றும் வெள்ளாடு போன்ற அசை போடும் சிறு கால்நடைகளுக்கு, PPR தடுப்பூசி HS தடுப்பூசியை, மழைக்காலத்துக்கு முன் போட வேண்டும்.
  • மழைக்காலத்தில் சுத்தம் சுகாதாரம் மிகவும் முக்கியம். கொசுக்கள் பெருகுவதற்கு ஏதுவாகத் தேங்கிக் கிடக்கும் நீரை அகற்றி, கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் பெருகும் ஈக்களைக் கட்டுப்படுத்த, அவ்வப்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
  • கன்று பிறந்த, வெள்ளாட்டுக்குட்டி, செம்மறிக்குட்டி பிறந்த, முதல் இரண்டு மணி நேரத்துக்குள் சீம்பாலைக் கொடுக்க வேண்டும்.
  • கன்றை ஈன்று 7-8 நாட்களுக்குப் பிறகு, கறவை மாடுகளுக்குப் பால் காய்ச்சல் (Milk Fever) வரலாம். இதைத் தடுக்க, சினைக்காலத்தில் மாடுகளுக்குப் போதுமான சூரிய ஒளியைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • சினைக்காலத்தின் கடைசி மாதத்தில், வைட்டமின் E மற்றும் செலீனிய ஊசிகளைப் போடுவது, ஈற்றுக் காலத்தில், நஞ்சுக்கொடி வெளியேறாமை போன்ற சிக்கலைத் தடுக்க உதவும்.
  • மாற்றாக, நாள்தோறும் 5-10 கிராம் சுண்ணாம்பு அல்லது 70-100 மி.லி. கால்சியம்- பாஸ்பரஸ் கலவையை வழங்கலாம்.
  • பாசனம் செய்த பசுந்தீவன வயல்களில் கால்நடைகளை மேயவிடக் கூடாது. ஏனெனில், நீண்ட கோடைக்குப் பிறகு பருவமழை தொடங்கும் போது தீவனம் வேகமாக வளர்வதால், அதில் நச்சுத்தன்மை கொண்ட சயனைடு இருக்கக்கூடும்.
  • குறிப்பாகச் சோளப்பயிரில் (ஜோவர்) இவ்வபாயம் அதிகம். எனவே, இத்தகைய தீவனப் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்யவோ, கால்நடைகளுக்குத் தரவோ கூடாது.
  • இந்தக் காலத்தில் பல்லாண்டுப் புல்வகைத் தீவனங்களை நடவு செய்தால், 40-50 நாட்களில் அறுவடை செய்யலாம். சமநிலையான கால்நடைத் தீவனம் கிடைக்க, மக்காச்சோளம், சோளம், கம்பு ஆகியவற்றுடன், கொத்தவரை மற்றும் தட்டைப் பயறையும் விதைக்க வேண்டும்.
  • உரோமத்தை வெட்டி 21 நாட்களுக்குப் பிறகு, செம்மறி ஆடுகளின் உடலை, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
  • செறிவூட்டிய தீவனத்தை, ஈரப்பதம் புகாத கிடங்குகளில் சேமிக்க வேண்டும். இதனால், அஃப்ளாடாக்சின் போன்ற நச்சால் ஏற்படும் மாசைத் தவிர்க்கலாம்.
  • கொட்டிலில் காற்றோட்டத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு, காற்று வெளியேற்றி மற்றும் காற்றுத் தள்ளி விசிறிகளைப் பயன்படுத்தலாம்.

 பிற முக்கிய நடவடிக்கைகள்

Advertisement: (+91) 90430 82900

உட்கட்டமைப்பு மேம்பாடு: கனமழைக்குப் பிறகு, பண்ணையின் உட்கட்டமைப்புகள் சேதமாகலாம்; புதிய வசதிகளும் தேவைப்படலாம். எனவே, பண்ணையைச் சுற்றி வேலியமைக்க வேண்டும். உடல் நலம் மற்றும் இனப்பெருக்கச் சிக்கலின்றி, பண்ணை சிறந்து விளங்குவதற்கு, மாடுகளையும் பிற கால்நடைகளையும், தேவையின்றி ஒன்றாகக் கலக்க விடக்கூடாது.

உறுதியான சுவர் மற்றும் பாலிவயர் வேலி வசதி இருந்தால், அவற்றைத் தற்காலிகத் தீர்வாகப் பயன்படுத்தலாம். சிறிய இடத்தில், அதிகமான விலங்குகளை நெடுநேரம் அடைத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கொட்டிலில் ஒரு மாட்டுக்கு 30 சதுரடி இடம் தேவை. மாடு-கன்று இணைக்கு 150 சதுரடி இடம் தேவை.

பசுந்தீவனம் வழங்குதல்: கால்நடைகளுக்கு இளம் பசும்புல்லை மட்டும் கொடுத்தால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமடையலாம். இதைத் தவிர்க்க, பசுந்தீவனத்துடன் உலர் வைக்கோலைக் கலந்து கொடுக்க வேண்டும். பிறகு, இளம் பசுந்தீவனத்தைப் படிப்படியாகக் கூட்ட வேண்டும்.

திடீரென இளம் பசுந்தீவனத்தை அதிகமாகத் தரக்கூடாது. ஏனெனில், மழை, நீண்ட காலமாக வறண்டிருந்த புல்வெளிகளை மீண்டும் வளரச் செய்வதோடு, நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் மற்றும் நோய்ப் பரப்பிகளையும் செயல்படச் செய்யும். மழையால் உருவாகும் ஈரப்பதமும் வெப்பமும், அவை பெருகுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும்.

பாக்டீரியாக்கள் மற்றும் குடற்புழுக்கள் கட்டுப்பாடு: நிலத்தில் தேங்கும் ஈரப்பதம், நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் பெருகிட வழி வகுக்கும். மழைக்காலத்தில் குடற்புழுக்கள் பொதுவான பிரச்சினையாகும். எனவே, விவசாயிகள் பலவகையான குடற்புழு நீக்க மருந்துகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

குடற் புழுக்களுக்குத் தக்க சிகிச்சையளிக்கா விட்டால், கால்நடைகளின் ஒட்டுமொத்தச் செயல் திறனும் பாதிக்கப்படும். மழைக்காலத் தொடக்கத்திலும், குடற்புழுக்கள் அதிகமாகப் பெருகுவதால், அந்தப் பருவம் முழுவதும், தேவைக்கேற்ப, குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும்.

உண்ணி மற்றும் ஈக்களைக் கட்டுப்படுத்துதல்: சில ஈக்கள் உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடியவை. எடுத்துக்காட்டாக, செட்சே ஈக்கள் மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு அவற்றின் கடியால் மாடுகளுக்கு மிகுந்த வலியும் ஏற்படும். மேலும், இந்த ஈக்கள், நாகானா என்னும் நோயையும் பரப்பும். ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கா விட்டால், இந்த நோயால் மரணமும் ஏற்படலாம்.

எனவே, கால்நடைகள் மீது, ஒழுங்கான இடைவெளிகளில், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து, ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கொட்டிலுக்கு அருகிலுள்ள புதர்களையும் அகற்ற வேண்டும்.

மடிப் பராமரிப்பு: மழைக்காலத்தில் மடி நோய் அதிகமாக ஏற்படலாம். மடி ஒவ்வாமை (Mastitis) ஏற்பட்டால், மடி வீங்கி, பால் உற்பத்திக் குறையவோ நிற்கவோ செய்யலாம். இந்த நோய்க்கு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, பொருத்தமான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். பண்ணையைச் சுத்தம் செய்யவும், கிருமிநாசினியைத் தெளிக்கவும் தேவையான பொருள்களை, எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இறந்த கால்நடைகளை அகற்றுதல்: கனமழையால் கால்நடைகள் உயிரிழந்தால், இறந்த உடல்களை 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். புதைப்பது பொதுவான நடைமுறை ஆகும். புதைப்பது என்றால், முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உரமாக்குதல் (Composting) என்பது, கரிமக் கழிவுகள் இயற்கையாகச் சிதைவதைப் பயன்படுத்தி, அவற்றைச் சேர்ப்பதன் மூலம் வெப்பத்தை உருவாக்கி, விரைவாகச் சிதைப்பதாகும்.

இந்தியாவில், பண்ணையிலேயே தயாரிக்கப்படும் உரம், வழக்கமான விவசாய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதே பண்ணையில் பயன்படுத்தப்படும் சூழலில், உரமாக்கலுக்கு எனத் தனி அனுமதி தேவையில்லை. எரியூட்டுதல் மற்றொரு அகற்றும் முறையாகும். ஆனால், இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.

தொழுவ வாசலில் கிருமிநாசினிப் பாதக்குளியல் வசதியை அமைத்தல் (Footbath): ஈரமாகவும் சேறாகவும் உள்ள தொழுவத்தில் கறவை மாடுகளுக்கு மடிநோய் வரும் சூழல் அதிகமாகும். குளிர்ந்த சூழல், நிமோனியா ஏற்படவும் வழி வகுக்கும். கன்றுகள் நிமோனியாவால் அதிகளவில் பாதிக்கப்படும். எனவே, மழை மற்றும் புயலில், கால்நடைகள் பாதிக்காத வகையில் பாதுகாக்க வேண்டும்.

சரியான வடிகால் வசதியில்லா விட்டால், பண்ணையில் உள்ள தீவனங்கள் ஈரமாகும். ஈரமான வைக்கோலில் பூஞ்சை வளர்வது பொதுவானது. இது, தீவனத்தின் சத்து மதிப்பையும், மாடுகள் விரும்பி உண்பதையும் குறைக்கும். மேலும், அழுகிய அல்லது பூஞ்சைப் பிடித்த தீவனத்தை ஒருபோதும் வழங்கக்கூடாது. ஏனெனில், அது, உயிருக்கு ஆபத்தான நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.

மழைக்காலம் முழுவதும் உள்ளூர்க் கால்நடை மருத்துவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். மேலும், வெளியே இருந்து பண்ணைக்குள் நுழைவோர் மூலம் நோய்க் கிருமிகள் பரவாத வகையில், தொழுவ வாசலில் கிருமிநாசினி பாதக்குளியல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

மழை என்பது, இயற்கையின் இயல்பான நிகழ்வாகும். இதுவே, நாம் பயன்படுத்தும் நீருக்கான மூல ஆதாரம் ஆகும். இந்தக் காலத்தில் நமக்குத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதைப் போல, நம்மைச் சார்ந்திருக்கும் கால்நடைகளுக்கு வேண்டிய நீர், தீவனம் மற்றும் உடல் நலம் சார்ந்த மருத்துவ வசதியையும், ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், கனமழை போன்ற இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கலாம்.


பருவமழைக் காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு! DR.S.PRAVEEN https://pachaiboomi.net/685996906-2/

முனைவர் செ.பிரவின்,

உதவிப் பேராசிரியர், கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் – 625 205.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • ஆண்டுக்கு ஒரு கன்றை அடைவது எப்படி?

  • பிறந்த கன்றுகளுக்குச் சீம்பாலின் அவசியம்!

  • வெள்ளாடுகளின் வயதுக்கு ஏற்ற தீவன முறைகள்!

  • செம்மறி ஆடுகளின் வயதுக்கு ஏற்ற தீவன முறைகள்!

  • வெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி!

  • வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும்!

  • இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்!

  • இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

  • தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்!