My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பிறந்த கன்றுகளுக்குச் சீம்பாலின் அவசியம்!

சீம்பால்

சீம்பால் என்பது, கன்று பிறந்ததும் தாயின் மடியில் சுரக்கும், முதல் பாலிலிருந்து 7 நாட்கள் வரை சுரக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பாலாகும். புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு இது மிகமிக முக்கியமான ஊட்டச்சத்து ஆதாரமாகும். சீம்பாலில் உள்ள கலவையை, சாதாரணப் பாலுடன் ஒப்பிடும் போது, சீம்பாலில் சுமார் நூறு மடங்கு எதிர்ப்புருக்கள் கூடுதலாக இருக்கும்.

செயலற்ற நோய் எதிர்ப்பூட்டலைப் (Passive immunization) போலச் செயல்படும் இந்தச் சீம்பாலில், இம்யூனோ குளோபுலின்கள் அடங்கிய புரதம், வைட்டமின்கள் மற்றும் நோயெதிர்ப்புக் காரணிகள் உள்ளன. இந்த நுண்ணுயிர் எதிர்ப்புக் கூறுகள், கன்றுகளின் தொடக்க வாழ்க்கைக் காலத்தில், அவற்றைத் தொற்று நோய்கள் மற்றும் ஏனைய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

அசைபோடும் விலங்குகளின் சீம்பாலில் உள்ள அடிப்படைக் கூறுகளை, ஊட்டச்சத்து, நோயெதிர்ப்பு, வளர்ச்சி என்று, மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உயர் தரமான சீம்பால், நோயெதிர்ப்புத் திறனை வலுப்படுத்தி, சிறந்த உடல் நலம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்து, கன்றுகளின் வாழ்நாட்கள் கூடுவதை உறுதி செய்யும்.

மாறாக, சீம்பால் வழங்குவதைத் தாமதப்படுத்தினால் நோயெதிர்ப்புப் பொருள்களின் பரிமாற்றம் குறைந்து, அவசியமான சத்துகள் கிடைக்காமல் போய் விடும். இதனால், நோய் மற்றும் இறப்புக்கான சூழல் ஏற்படும். எனவே, சரியான நேரத்தில் சீம்பாலை வழங்குவது, கன்றுகளின் நலனுக்கும், நீண்டகால உற்பத்தித் திறனுக்கும், மிகவும் அவசியம்.

Advertisement: (+91) 90430 82900

கன்றுகளுக்குச் சீம்பாலின் முக்கியத்துவம்

நோயெதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சி

நஞ்சுக்கொடி வழியாக இம்யூனோ குளோபுலின்கள் கன்றுகளுக்குச் செல்ல முடியாததால், முழு நோயெதிர்ப்பற்ற நிலையில் கன்றுகள் பிறக்கும். இந்தக் கன்றுகளுக்கு அவசியமான எதிர்ப்புருக்களை வழங்கும் சீம்பால், அந்தக் கன்றுகளின் நோயெதிர்ப்பு அமைப்பு முமுமையடையும் வரை, அவற்றை நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

சத்துகளின் நன்மைகள்

சீம்பாலில், ஆற்றல், புரதம், A, D, E, K வைட்டமின்கள் ஆகியன நிறைந்துள்ளன. இவை, கன்றுகளின் வளர்ச்சிக்கும் உடல் மேம்பாட்டுக்கும் அவசியம். சாதாரணப் பாலைக் காட்டிலும் சீம்பாலில், 50 சதத்துக்கும் மேல் கொழுப்பும், சுமார் ஐந்து மடங்கு புரதமும் உள்ளன. இவை, கன்றுகளின் ஒட்டு மொத்த உடல் நலத்துக்கு உதவும்.

இரைப்பை மற்றும் குடல் நலன்

சீம்பால், கன்றுகளின் இரைப்பையும், குடல் பாதையும், செம்மையடைய உதவும். இதனால், சத்துகள் உறிஞ்சப்படும் திறன் மேம்பட்டு, குடலில் பயனுள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்கும் ஏதுவாகும்.

உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தல்

சீம்பாலில் உள்ள கொழுப்பு, புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு ஆற்றலையும் வெப்பத்தையும் வழங்கி, உடல் வெப்பநிலை சீராக உதவும்.

சீம்பாலிலுள்ள சத்துகள்

புரதம்: சாதாரணப் பாலில் சுமார் 3.5 சதம் புரதம் மட்டுமே இருக்கும். ஆனால், சீம்பாலில் 14-16 சதம் புரதம் இருக்கும். இதில், இம்யூனோ குளோபுலின்கள் என்னும் எதிர்ப்புருக்கள், இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணிகளான IGF-1, IGF-2 ஆகியனவும் அடங்கும். இவை வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு அமைப்பின் மேம்பாட்டுக்கும் உதவும்.

கொழுப்பு: பசுவின் சீம்பாலில், சாதாரணப் பாலில் இருப்பதை விடக் கொழுப்பு அதிகமாக இருக்கும். இந்தக் கொழுப்பு, புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு ஆற்றலை வழங்க உதவும்

கார்போஹைட்ரேட்டுகள்: சாதாரணப் பாலை விட, சீம்பாலில் லாக்டோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன. ஏனெனில், சீம்பாலின் முதன்மைப் பணி, சத்துகளை வழங்குவதை விட, நோயெதிர்ப்பைத் தருவதாகும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுகள்: சீம்பாலில் வைட்டமின்கள் A, D, E, K மற்றும் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுகள் உள்ளன. இவை, கன்றுகளின் நோயெதிர்ப்பு மற்றும் உடல் நலத்துக்கு ஆதரவாக இருக்கும்.

சீம்பாலின் செயல்பாடுகள்

எதிர்ப்புருக்கள்

சீம்பாலில் இம்யூனோ குளோபுலின்கள் என்னும் எதிர்ப்புருக்கள் அதிகமாக உள்ளன. இவை, கன்றுகளின் நோயெதிர்ப்பு அமைப்பு முதிர்ச்சியடையும் வரை,  அவற்றை நோய்களில் இருந்து காப்பதற்கு உதவுகின்றன.

வளர்ச்சிக் காரணிகள்

பசுவின் சீம்பாலில் உள்ள வளர்ச்சிக் காரணிகள், உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சியைத் தூண்ட உதவுகின்றன. எனவே, சீம்பாலில் உள்ள சில வளர்ச்சிக் கூறுகள், கன்றுகள் நன்றாக இருப்பதற்கும், அவற்றின் உடல் வளர்ச்சிக்கும் உதவும்.

சீம்பால் சுரக்கும் காலம்

சீம்பால், கன்று பிறந்ததில் இருந்து சில நாட்கள் மட்டுமே சுரக்கும். பிறகு அது, இடைநிலைப் பாலாகவும், இறுதியில் முதிர்ந்த பாலாகவும் மாறும்.

சீம்பாலை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்

  • நேரம்: பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள், கன்றுகளுக்குச் சீம்பாலை வழங்க வேண்டும். அடுத்தடுத்து, பிறந்த 12 மற்றும் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.
  • அளவு: முதன் முதலில், கன்றின் உடல் எடையில், 10-12 சதவீதம் அளவில் சீம்பாலை வழங்க வேண்டும்.
  • தரம்: தரமான சீம்பாலின் பிரிக்ஸ் அளவீடு 22 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், ஒரு லிட்டரில் 100-200 கிராம் இம்யூனோ குளோபுலின்கள் இருக்க வேண்டும்.

செயற்கைச் சீம்பால் தயாரிப்பு

தாய்ப்பசுவில் போதியளவில் சீம்பால் சுரக்க முடியாத நிலையில் அல்லது தாய்ப்பசு இறந்து விடும் நிலையில், செயற்கைச் சீம்பால் என்பது, கன்றுகளின் சீம்பாலுக்கான முக்கிய மாற்று வழியாகும். இயற்கைச் சீம்பாலின் சத்து மற்றும் நோயெதிர்ப்புப் பண்புகளை ஒத்த வகையில், பல பொருள்களைச் சேர்த்து இதைத் தயாரிக்கலாம்.

அடிப்படைப் பொருள்கள்

  • பசும்பால்: புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் போன்ற அவசியமான சத்துகளை வழங்கும்.
  • முட்டை: புரதத்தையும், எதிர்ப்புப் பொருள்களையும் வழங்கும்.
  • ஆமணக்கு எண்ணெய்: மலமிளக்கியாகச் செயல்படும்.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுகள்: சத்து மதிப்பைக் கூட்டும்.
  • இம்யூனோ குளோபுலின்கள்: செயலற்ற நோயெதிர்ப்பை வழங்கும்.

தயாரிப்பு முறை

சுத்தமான அரை லிட்டர் பாலில், ஒரு பச்சை முட்டை மற்றும் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய்யைச் சேர்த்தால், செயற்கைச் சீம்பால் கலவை தயாராகி விடும். இந்தக் கலவை, இயற்கைச் சீம்பாலை ஒத்திருக்க, பசும்பால் மற்றும் துணைப் பொருள்களுடன், இம்யூனோ குளோபுலின்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்களைச் சேர்க்கலாம். இயற்கைச் சீம்பால் கிடைக்காத சூழலில், இந்தச் செயற்கைச் சீம்பால், கன்றுகளைப் பராமரிக்க உதவும்.

இது, இயற்கைச் சீம்பாலின் அனைத்துப் பயன்களையும் முழுமையாகத் தரா விட்டாலும், அவசியமான சத்துகளையும், ஓரளவு நோயெதிர்ப்புப் பாதுகாப்பையும் வழங்கி, பிறந்த கன்றுகளின் உடல் நலம் மற்றும் உயிர் வாழ்வுக்கு உதவும்.

மேலும், நோயெதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வேண்டிய எதிர்ப்புருக்கள் மற்றும் சத்துகளையும் இது வழங்கும். சீம்பாலின் தரம், அளவு, வழங்கும் நேரம், சுத்தம் ஆகியவற்றை முறையாக நிர்வகிப்பது, கன்றுகள் இதன் முழுப் பயனையும் பெறுவதற்கு அவசியமாகும்.

பயனுள்ள சீம்பால் மேலாண்மையைப் பின்பற்றுவதன் மூலம், கன்றுகளின் உடல் நலத்தை மேம்படுத்தி, இறப்பு விகிதத்தைக் குறைத்து, நீண்டகால உற்பத்தித் திறனை உயர்த்த முடியும்.


பிறந்த கன்றுகளுக்குச் சீம்பாலின் அவசியம்! DR.S.PRAVEEN https://pachaiboomi.net/importance-of-colostrum-for-newborn-calves/

முனைவர் செ.பிரவின்,

உதவிப் பேராசிரியர், முனைவர் இரா.சங்கமேஸ்வரன், கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் – 625 205.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • பருவமழைக் காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு!

  • ஆண்டுக்கு ஒரு கன்றை அடைவது எப்படி?

  • வெள்ளாடுகளின் வயதுக்கு ஏற்ற தீவன முறைகள்!

  • செம்மறி ஆடுகளின் வயதுக்கு ஏற்ற தீவன முறைகள்!

  • வெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி!

  • வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும்!

  • இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்!

  • இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

  • தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்!