My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சமச்சீர் உரமே மண்வளம் காத்து மகசூல் பெருக்கும்!

சமச்சீர் உரமே மண்வளம் காத்து மகசூல் பெருக்கும்!

விவசாயிகள், பயிர்களின் தேவைக்கு ஏற்பவும், மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், உரங்களைப் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மேல் உரங்களை இடுவது, இயல்பான மண்வளப் பாதிப்பையும், பயிர்களில் சத்து எதிர்ப்புத் தன்மையையும் ஏற்படுத்தும்.

விவசாயத்தில் அதிக மகசூலைப் பெறுவதற்கு, இரசாயன உரங்களை இடுவது, தவிர்க்க முடியாததாக உள்ளது. அதனால், அதிகளவில் உரங்களை இட்டால், மகசூல் கூடுதலாகக் கிடைக்கும் என்னும் எண்ணம் தவறானது. பயிர்களுக்குத் தேவையான சத்துகளை, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான முறையில் வழங்குவதே அதிக மகசூலுக்கும், மண்வளப் பாதுகாப்புக்கும் அடிப்படை. இதுவே சமச்சீர் உரப்பயன்பாடு.

உரங்களை அதிகமாக இடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து இரசாயன உரங்களை இடுவதால், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.

மண்ணின் அமிலத் தன்மை அதிகரித்தல்

யூரியா, அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்களைத் தொடர்ந்து அதிகளவில் இட்டால், சில மண் வகைகளில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதனால், மண்ணின் பி.எச். குறைந்து, பயிர்களுக்குத் தேவையான சத்துகளின் கிடைப்புத் தன்மை பாதிக்கப்படும்.

Advertisement: (+91) 90430 82900

மண்ணின் உப்புத்தன்மை அதிகரித்தல்

தேவைக்கு மேல் உரமிடுவதால், மண்ணில் கரையக்கூடிய உப்புகளின் அளவு கூடும். இதனால், விதை முளைப்புத்திறன் குறைதல், வேர்கள் நீரை உறிஞ்சுவதில் சிரமம் ஏற்படுதல், இலைகளின் நுனிகள் கருகுதல், பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்கள் பாதித்தல்

மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் மண்புழுக்கள், மண்வளத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூடுதலாக இரசாயன உரங்களை இடுவதால் ஏற்படும், உப்புத்தன்மை, அமிலத்தன்மை மாற்றங்கள், இவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.

மண்ணின் இயற்கை வளம் குறைதல்

இரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து இடுவதாலும்; தொழுவுரம், மண்புழு உரம், கம்போஸ்ட் மற்றும் பசுந்தாள் உரங்களை இடாமல் இருப்பதாலும்; மண்ணின் அங்ககப் பொருள்களின் அளவு குறையும். இதனால், மண்ணின் கட்டமைப்பு, நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

நிலத்தடி நீர் மாசுபடுதல்

பயிர்களின் தேவையை விட அதிகமாக இடப்படும் தழைச்சத்து உரங்களில் உள்ள நைட்ரேட்; மழைநீர் மற்றும் பாசனநீர் மூலம் நிலத்தடி நீரில் கலக்கலாம். இதனால், குடிநீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம்.

சத்து எதிர்ப்புத் தன்மை

மண்ணில் குறிப்பிட்ட ஒரு சத்து அளவுக்கு மேல் இருக்கும் போது, அது மற்றொரு சத்தைப் பயிர்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும் அல்லது குறைக்கும். இதுவே, சத்து எதிர்ப்புத் தன்மையாகும். உதாரணமாக, மண்ணில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும் போது, துத்தநாகம் பயிர்களுக்குக் கிடைப்பது பாதிக்கப்படும்.

அதேபோல், பொட்டாசியம் அதிகமாக இருக்கும் போது மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்தைப் பயிர்கள் உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படும். மண்ணில் அம்மோனியம் அதிகமாக இருந்தால், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைப் பயிர்கள் எடுத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், மண்ணில் சத்துகள் இருந்தாலும், அவை, போதியளவில் பயிர்களுக்குக் கிடைக்காமல் போகும்.

இதன் விளைவாக இலைகள் மஞ்சள் நிறமாதல், இலை நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறம் தோன்றுதல், செடிகளின் வளர்ச்சிக் குன்றுதல், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மேலும், தக்க நடவடிக்கை எடுக்காத போது, விளைபொருள்களின் தரமும் மகசூலும் குறையும்.

சமச்சீர் உரப் பயன்பாட்டு உத்திகள்

மண் பரிசோதனை

சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளின் அடிப்படையில் உரமிட வேண்டும். மண்ணின் பி.எச்., மின்கடத்துத் திறன், அங்ககக் கரிம மற்றும் சத்துகளின் அளவை அறிந்து கொள்வது அவசியம்.

சமச்சீர் சத்து மேலாண்மை

பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை, பரிந்துரை அளவில் மற்றும் விகிதத்தில் இட வேண்டும். கால்சியம், மெக்னீசியம், கந்தகம் போன்ற, இரண்டாம் நிலைச் சத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுண்ணூட்ட மேலாண்மை

இரும்பு, துத்தநாகம், போரான், மாங்கனீசு, தாமிரம், மாலிப்டினம் போன்ற நுண் சத்துகளை, மண் மற்றும் பயிரின் தேவைக்கு ஏற்ப இட வேண்டும்.

இயற்கை உரங்கள் பயன்பாடு

தொழுவுரம், மண்புழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரத்தை இடுவதன் மூலம், மண்ணின் அங்ககப் பொருள்களின் அளவைக் கூட்டலாம். இதனால், மண்ணின் கட்டமைப்பும் நீர்ப்பிடிப்புத் திறனும் மேம்படும்.

உயிர் உரங்கள் பயன்பாடு

அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா மற்றும் பொட்டாஷ் நுண்ணுயிர் உரத்தை, பயிருக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இவை, பயிர்களுக்குச் சத்துகள் கிடைப்பதை மேம்படுத்த உதவும்.

உரங்களைப் பிரித்திடுதல்: பயிரின் வயது மற்றும் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, உரங்களை, அடியுரம் மற்றும் மேலுரமாகப் பிரித்து இட வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் உரத்தைத் தரும் போது, பயிரின் தேவைக்கு ஏற்ப, உர அளவைக் கணக்கிட்டுத் தர வேண்டும்.

மண்வளக் கண்காணிப்பு: மண்ணின் அமிலத்தன்மை, உப்புத்தன்மை மற்றும் சத்து நிலையை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். பயிர்களில் சத்துக்குறை அறிகுறிகள் தென்பட்டால், மண் அல்லது இலைப் பரிசோதனை செய்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த சத்து மேலாண்மையே சிறந்த தீர்வு

இயற்கை உரங்கள், இரசாயன உரங்கள் மற்றும் உயிர் உரங்களைச் சேர்த்து இடுவதே, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை ஆகும். இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம், மண்ணின் இயல்பான வளத்தைக் காப்பதுடன், பயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் சீராக வழங்க முடியும். மேலும், தேவையற்ற உரச்செலவைக் குறைத்து, சத்துப் பயன்பாட்டுத் திறனைக் கூட்டலாம்.

விவசாயிகளுக்கான ஆலோசனைகள்

மண்ணில் சத்துக்குறை தெரிந்ததும், இரசாயன உரங்களைக் கூடுதலாக இடக்கூடாது. சில நேரங்களில் மண்ணில் சத்து இருந்தாலும், மற்றொரு சத்து அதிகமாக இருப்பதால், பயிர்களால் அதை உறிஞ்ச முடியாமல் போகலாம். எனவே, சத்துக் குறைக்கான காரணத்தைக் கண்டறிந்து, மண் பரிசோதனை மற்றும் வேளாண்மைத் துறையின் பரிந்துரைப்படி உரமிடுவது அவசியம்.

மண் என்பது, விவசாயிகளின் வாழ்வாதாரச் சொத்து. மண்வளத்தைக் காப்பதே எதிர்கால விவசாயத்தின் பாதுகாப்பாகும். அதிகமாக உரமிடுவது, அதிக மகசூலுக்கான வழியல்ல. சரியான உரம், சரியான அளவு, சரியான நேரம் மற்றும் சரியான முறையைக் கடைப்பிடிப்பதே, நிலையான மகசூலுக்கு அடிப்படை ஆகும். எனவே, சமச்சீர் உரப்பயன்பாட்டைக் கடைப்பிடிப்போம்! மண்வளத்தைப் பாதுகாப்போம்!


சமச்சீர் உரமே மண்வளம் காத்து மகசூல் பெருக்கும்! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/balanced-fertilizer-application-for-soil-health-and-higher-yield/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • திரவநிலை உயிர் உரங்களும் அவற்றின் பயன்களும்!

  • பயிர்களைப் பாதுகாக்கும் இயற்கைக் காவலர்கள்!

  • மண்வளம் காக்கும் ஆறு வழிமுறைகள்!

  • மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும்!

  • பயறு வகைகளில் மகசூலைப் பெருக்கும் பயறு ஒண்டர், டிஏபி கரைசல் தெளிப்பு!

  • நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்!

  • தென்னையில் ஊடுபயிர்கள்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!