My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கங்கை ஆறு!

கங்கை ஆறு

இந்தியாவின் முக்கியமான நதிகள், இமயமலை நதிகள், தீபகற்ப நதிகள் என, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வகையில், கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து, யமுனை ஆகியன, இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளாகும். இந்தியாவின் தேசிய நதியாகவும், இந்து மக்களின் புனித நதியாகவும் போற்றப்படும் கங்கை ஆறு, இந்தியா மற்றும் வங்க நாட்டின் வழியாக ஓடுகின்ற ஆறாகும்.   

கங்கை ஆறு பிறப்பிடம்

இமயமலை, உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் மலையில் உள்ள கங்கோத்ரி பனிப் பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி என்னும் இடத்தில் உருவாகும் பாகீரதி ஆறு தான் (Bhagirathi River), புனிதமான கங்கை ஆற்றின் தாய் ஆறாகும். இந்த ஆறு, தேவபிரயாகை என்னுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து, கங்கை ஆறாக மாறுகிறது.

பண்டைய இந்துப் புராணங்களில், பகீரதன் என்னும் அரசன் தவம் செய்து, வானுலகில் இருந்து கங்கையை, பூமிக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, இந்து மக்கள் கங்கை ஆற்றை, கங்கா தேவியாகப் போற்றி வணங்கி வருகின்றனர்.

இந்த கங்கை ஆறு, உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, ஹூக்ளி, பத்மா என இரண்டு ஆறுகளாகப் பிரிந்து, மேற்கு வங்கம், வங்கதேசம் வழியாகப் பாய்ந்து, வளமான கழிமுகத்தை உருவாக்கி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு வங்கத்தில், பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.

Advertisement: (+91) 90430 82900

மொத்தம் 2,525 கி.மீ. ஓடும் கங்கை ஆற்றங்கரையில், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. அதனால், இலட்சக்கணக்கான இந்தியர்கள், தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்துள்ளனர். மேலும், பல்லாயிரம் உயிர்கள், இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றன.

இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் உயிரோட்டம் மிக்கவை என்று, இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கங்கை ஆறு, 2007-ஆம் ஆண்டில், உலகின் மிகவும் மாசுபட்ட நதிகளில், ஐந்தாம் இடத்தில் இருந்தது.  

இந்த மாசு, மக்களை மட்டுமின்றி, 140-க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நில நீர்வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்தி வருகிறது. வாரணாசி அருகில் கங்கை நீரில் கலக்கும் மனிதக்கழிவு மாசின் அளவானது, இந்திய அரசின் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட நூறு மடங்கு அதிகமாகும்.

கங்கையின் பயணப் பாதை

கங்கை ஆற்றின் பயணம், உத்தரகாண்ட் மாநிலத்தின், கங்கோத்ரி பாகீரதி ஆறு, தேவப்பிரயாகை என்னுமிடத்தில் அலக்நந்தா நதியுடன் இணைவதில் இருந்து தொடங்குகிறது.

குறுகிய இமயமலைப் பள்ளத்தாக்கு வழியாக, 250 கி.மீ. ஓடி வரும் கங்கை, ரிஷிகேஷில் உள்ள மலையிலிருந்து வெளிவருகிறது. பிறகு, புனிதப் பயணத் தலமான அரித்துவார் சமவெளிக்குள் முதன் முதலாகக் கங்கை நுழைகிறது. இங்குள்ள அணையில் தேக்கப்படும் கங்கை நீரானது, உத்தர பிரதேசத்தின் டூப் பகுதிக்குப் பாசன நீராகப் பயன்படுகிறது.

அதைத் தொடர்ந்து, 800 கி.மீ. தூரம் ஓடும் கங்கை, கன்னோசி, ஃபருகஹாபாத், கான்பூர் ஆகிய நகரங்களைக் கடந்து செல்கிறது.  வழியில் இராம் கங்கா ஆற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஓடுகிறது. இந்த இராம் கங்கா ஆற்று நீர், வினாடிக்கு 18,000 கன அடி வீதம் கங்கையில் கலக்கிறது.

இந்து மதத்தில் புனித சங்கமமாகப் போற்றப்படும் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கையுடன் யமுனை ஆறு இணைகிறது. இந்த சங்கமத்தில் யமுனை ஆறானது, கங்கையை விடக் கூடுதலாக, அதாவது, ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5 சதவீத நீர்ப் பங்களிப்பை அளிக்கிறது.

இப்போது, கெய்மீர் மலைத்தொடரில் இருந்து வடக்கே பாயும் தமசா ஆறானது, கிழக்கே ஓடும் கங்கையுடன் இணைகிறது. இந்த ஆற்றிலிருந்து, வினாடிக்கு 6,700 கன அடி நீர் வீதம் கங்கையில் கலக்கிறது.

தமசாவுக்குப் பிறகு கோமதி ஆறு கங்கையுடன் இணைகிறது. இந்த ஆற்று நீர் வினாடிக்கு 8,300 கன அடி வீதம் கங்கையில் கலக்கிறது. இதைத் தொடர்ந்து, நேபாளத்தின் இமயமலையில் இருந்து தெற்கே பாயும் காக்ரா ஆறு (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது.

காக்ரா ஆறு ஆண்டு முழுவதும் வினாடிக்கு 1,06,000 கன அடி நீரோட்டமுள்ள கங்கையின் மிகப்பெரிய கிளை ஆறாகும். காக்ராவுடன் சங்கமிக்கும் கங்கை, தெற்கில் சோன் ஆற்றுடன் இணைகிறது. இது, வினாடிக்கு 35,000 கன அடி நீரை வழங்குகிறது.

நேபாளிலிருந்து வடகிழக்கில் பாயும் கண்டகி ஆறும், கோசி ஆறும் முறையே, வினாடிக்கு 58,400 கன அடி நீரையும், 76,500 கன அடி நீரையும் அளிக்கின்றன. காக்ரா ஆறு மற்றும் யமுனைக்கு அடுத்து, கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாகத் திகழ்வது, கோசி ஆறாகும்.

கங்கை ஆறு, அலகாபாத் மற்றும் மால்காவுக்கு இடையே பாய்ந்து, மேற்கு வங்கத்தை நோக்கிப் போகும் போது, கங்கை சுனார், மிர்சாபூர், வாரணாசி, காசிபூர், பாட்னா, ஹாஜீபூர், சப்ரா, பாகல்பூர், பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ், சைட்புர் ஆகிய நகரங்களைக் கடந்து செல்கிறது.

பாகல்பூரில், கங்கை ஆறானது, தெற்கு தென்கிழக்குத் திசையை நோக்கித் திரும்பி, பாகூரில் ஓடுகிறது. இதன் பிறகு, கங்கை ஆற்றின் ஓட்டத்தில், முதன் முதலில் கிளை ஆறாக, ஹூக்ளி ஆறு பிரிகிறது. வங்காள நாட்டின் எல்லைக்கு அருகில், கங்கையின் குறுக்கே, ஃபராக்கா அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்க்கால்கள் வழியாக, ஹூக்ளி ஆறு இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஹூக்ளி ஆறானது, பாகீரதி ஆறு, ஜலாங்கி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தில் உருவானது. மேலும், ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. சுமார் 541 கி.மீ. நீளமுள்ள தாமோதர் ஆறு, 25,820 ச.கி.மீ. பரப்புள்ள வடிகாலைக் கொண்டது.

ஹூக்ளி ஆறு, சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. மால்டா மற்றும் வங்காள விரிகுடாவுக்கு இடையே, ஹூக்ளி ஆறானது, முர்ஷிதாபாத், கொல்கத்தா, ஹௌரா போன்ற நகரங்களைக் கடந்து செல்கிறது.

வங்க நாட்டில் நுழைந்த பிறகு, கங்கையின் முக்கியக் கிளை ஆறு, பத்மா ஆறு எனக் கூறப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மா ஆறுடன் இணைகிறது. மேலும், பத்மா ஆறு, பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆறுடன் சேர்ந்து, மேகானா என்னும் பெயருடன், வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் பாயும் வண்டல் நிறைந்த கங்கை வடிநிலம், உலகின் மிகப்பெரிய வடிநிலமாகும். இது, 59,000 ச.கி.மீ. பரப்பைக் கொண்டதாகும்.

கங்கை ஆற்றின் துணை ஆறுகள்

  • யமுனை ஆறு,
  • கோசி ஆறு,
  • கோமதி ஆறு,
  • காக்ரா ஆறு,
  • கண்டகி ஆறு

கங்கை ஆரத்தி

வாரணாசி கங்கைக் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு, ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை, கங்கா ஆரத்தி என்று கூறுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காசி என்னும் வாரணாசியில் பாயும் கங்கை ஆறுக்கு, தச அஸ்வமேதப் படித்துறையில் (Dashashwamedh Ghat) நாள்தோறும் மாலையில், அரை மணி நேரம் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தக் கங்கை ஆரத்தியைக் காண, பக்தர்கள், கங்கைக் கரையில் கூடுகின்றனர்.

இந்த ஆரத்தியில், 20-25 வயதுள்ள ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து ஈடுபடுகிறார்கள். முதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி, ஆரத்தியைத் தொடங்கும் இவர்கள், அதைத் தொடர்ந்து ஒரே மாதிரியாகச் சங்குகளை ஊதுகிறார்கள். அடுத்து, சாம்பிராணி ஆரத்தியைக் காட்டுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள். கற்பூரத்தைக் கொளுத்தும் தூவக்கால், ஐந்து தலை நாகத்தைக் கொண்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகிறார்கள். அதையடுத்து மயிலிறகை ஆட்டி, கங்கையைப் போற்றுகிறார்கள். அடுத்து, கங்கையை நோக்கி வெண் சாமரம் வீசி, ஆரத்தி நடைபெறுகிறது. நிறைவாக, தனித்தனிக் கற்பூரமாக அடுக்குத் தட்டில் வைத்து ஆரத்தி செய்கிறார்கள்.

கங்கை ஆற்றின் திசையை நோக்கித் தொடங்கும் இந்த ஆரத்தி வழிபாட்டை, வலப்புறம் திரும்பி நான்கு திசைகளிலும் செய்து விட்டு, இறுதியாக ஆரம்பித்த திசையை நோக்கித் திரும்புகிறார்கள்.

காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இந்த ஆரத்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண விரும்பும் பக்தர்கள், கட்டணம் செலுத்தி, படகுகளில் அமர்ந்து பார்க்கிறார்கள்.


மு.உமாபதி

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • பிரம்மபுத்திரா ஆறு!

  • விந்தைமிகு வண்டுகள் உலகம்!

  • நீரின் அருமை!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

  • வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

  • மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

  • வீராணம் ஏரி பிறந்த கதை!

  • அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!