My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பிரம்மபுத்திரா ஆறு!

பிரம்மபுத்திரா ஆறு!

இந்தியாவின் முக்கியமான நதிகள், இமயமலை நதிகள், தீபகற்ப நதிகள் என, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வகையில், பிரம்மபுத்திரா (Brahmaputra), இமயமலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியாகும். இது, ஆசிய கண்டத்தின் முக்கியமான நதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஆற்றின் பிறப்பிடம்

திபெத்தில் உள்ள கைலாய மலைத்தொடருக்கு அருகிலுள்ள மானசரோவர் ஏரிப்பகுதியில் உள்ள செமாயுங்டுங் (Chemayungdung) பனிப்பாறையில் பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகிறது. இதன் மொத்த நீளம் 2,800 கி.மீ. ஆகும். இதன் நீளம் 3,848 கி.மீ. என்று, சீன அறிவியல் கழகத்தின் செயற்கைக்கோள் நிழற் படத்தையும், ஆற்றைத் தொடர்ந்த தன் பயணத்தையும் ஆதாரமாக வைத்து, லியு சோசுஅங் என்னும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

பயணப் பாதை

Advertisement: (+91) 90430 82900

திபெத்தில், யாருங் சாங்போ (Yarlung Tsangpo) என்னும் பெயருடன் புறப்பட்டு,   யர்லுங் இட்சாங்போ என்னும் செங்குத்துப் பள்ளத்தாக்கு உட்பட பல்வேறு பள்ளத்தாக்குகள் வழியே கிழக்கு நோக்கி 1,100 கி.மீக்கு மேல் பயணிக்கிறது.

பே என்னும் இடத்தைக் கடந்ததும், வடக்கு வடகிழக்கில் ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கிப் பயணிக்கும் இந்த ஆறானது, நாம்சா-படுவா மலைக்கு அருகில், தெற்கு தென்மேற்கில் வளைந்து அருணாச்சல பிரதேசத்தில், சியாங் என்னும் பெயரில் நுழைந்து, சமவெளிப் பகுதியை அடைகிறது. இந்தச் சமவெளியில் இந்த ஆறு, திகாங் என்று அழைக்கப்படுகிறது.

சமவெளியில் சுமார் 35 கி.மீ. தூரம் பாய்ந்த பிறகு, இதனுடன் டிபாங் ஆறு சேருகிறது. பிறகு, அசாமில் நுழைவதற்கு முன், லோகித் ஆறு சேருகிறது. இதற்குப் பிறகே இந்த ஆறு, பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.

போடோ பழங்குடிகள் இதைத் தங்கள் மொழியில் பர்லங்-பதூர் என்று கூறுகின்றனர். அசாமில் இந்த ஆறு சில இடங்களில் 8 கி.மீ.க்கும் மேற்பட்ட அகலத்தில் பயணிக்கிறது. அசாமில் இந்த ஆற்றில் எப்போதும் நீர் வற்றாமல் ஓடுகிறது.

இமயமலையில் தோன்றும் பல ஆறுகள் அசாமில் இந்த ஆறுடன் இணைகின்றன. இவற்றில், தான்சிறி, கோப்பிலி, டிகோகு, புரி-திகிங், சியாங், சுபான்சிறி, பர்ந்தி பரலி, மனசு, சங்கோசு ஆகியன குறிப்பிடத்தக்கவை.

டிபுர்கார், லக்சிமிபுர் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆறு இரு கிளைகளாகப் பிரிகிறது. வடக்குக் கிளை கெர்குட்டியா சூடி என்றும், தெற்குக் கிளை பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. சுபான்சிறி வடக்குக் கிளை கெர்குட்டியா சூடியுடன் இணைகிறது. கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணம் செய்த பிறகு, அவை மீண்டும் இணைவதால், ஒரே ஆறாகச் செல்கிறது. அந்த இடைவெளி தான், மஜுலி தீவு எனப்படுகிறது. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில், தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது.

வங்காள தேசத்தில் பிரம்மபுத்திரா என்னும் பெயருடன் நுழையும் இந்த ஆற்றில், இதன் நீளமான துணை ஆறான தீசுட்டா கலந்த பிறகு இரண்டாகப் பிரிகிறது. மேற்கிலுள்ள பெரிய கிளையும், அதிக நீர்ச் செல்வதுமான கிளைக்கு ஜமுனா என்று பெயர், கீழ்ப்புறமுள்ள சிறிய கிளைக்கு, கீழ் பிரம்மபுத்திரா அல்லது பழைய பிரம்மபுத்திரா என்று பெயர்.

சிறிய கிளையான இது, முற்காலத்தில் பெரிய கிளையாக இருந்தது. 240 கி.மீ. ஓடும் ஜமுனா ஆறு, வங்கத்தில் பத்மா எனப்படும் கங்கையுடன் இணைந்து, பத்மா என்னும் பெயரிலேயே ஓடுகிறது. பழைய பிரம்மபுத்திரா, டாக்காவுக்கு அருகில் மேக்னா ஆறுடன் இணைகிறது. மேலும், பத்மா ஆறும் சான்டபூர் என்னுமிடத்துக்கு அருகில் மேக்னாவுடன் இணைகிறது.

இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும்  பிரம்மபுத்திராவின் மொத்த நீளம் 2,800 கி.மீ. ஆகும். இந்த ஆறு, திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது, கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து, மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 6,61,334 சதுர கி.மீ. ஆகும். பல தற்காலிக மணல் மேடுகளைக் கொண்டுள்ள இந்த ஆறு, தன் போக்கை மாற்றிக்கொள்ளும் ஆற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

நீர் வெளியேற்றம்

கங்கை(பத்மா)- பிரம்மபுத்திரா மூலம், வினாடிக்கு 30,770 கன மீட்டர் நீர், அதாவது, 7,00,000 கன அடி நீர் கடலுக்குச் செல்கிறது. இது, உலகளவில் மூன்றாவது அதிக நீர் வெளியேற்றம் ஆகும். இதில், பிரம்மபுத்திராவின் பங்கு 19,800 கன மீட்டர் ஆகும். பிரம்மபுத்திரா- கங்கை மூலம் ஆண்டுதோறும் 1.84 பில்லியன் டன் வண்டல் கொண்டு வரப்படுகிறது.

முன்பு பிரம்மபுத்திராவின் கீழ்ப்பகுதி, சமல்பூர், மைமென்சிங் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்தது. 1762 ஏப்ரலில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால், தீசுட்டா ஆறு, பகதூரா பாயிண்ட் என்னும் இடத்திலிருந்து தெற்கு நோக்கி ஜமுனாவாக, பெருமளவு நீருடன் பாயத் தொடங்கியது. இதற்குக் காரணம், நிலநடுக்கத்தால் வடக்கே சமல்பூரில் இருந்து தெற்கே நாராயண கன்ச் வரையான, மாதவ்பூர் மேட்டு நிலம், பல அடிகள் உயர்ந்தது தான்.

கட்டப்பட்டுள்ள பாலங்கள்

  • அசாமிலுள்ள 2,284 மீட்டர் நீளமுள்ள நரநாராயண் சேது பாலம் (Naranarayan Setu) இரட்டை அடுக்குப் பாலமாகும். கீழ்த்தளத்தில் தண்டவாளமும், மேல் தளத்தில் சாலையும் உள்ள இந்தப் பாலம், 1998-இல், அன்றைய இந்திய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், மே 2017-இல் திறந்து வைக்கப்பட்ட, 9.15 கி.மீ. நீளம், 12.9 மீட்டர் அகலமுள்ள தோலா-சாதியா என்னும் பூபென் ஹசாரிகா சேது பாலம், அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கிறது. இது, இந்தியாவின் நீளமான பாலமாகும்.
  • அசாமில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 4,940 மீட்டர் நீளம், 125 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட போகிபீல் பாலம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், 25.12.2018-இல் திறந்து வைக்கப்பட்டது.

பிற பெயர்கள்

  • திபெத்தில், யாருங் சாங்போ (Yarlung Tsangpo).
  • அருணாச்சலப் பிரதேசத்தில், சியாங்க் (Siang) அல்லது திகாங் (Dihang).
  • அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா (Brahmaputra).
  • வங்காள தேசத்தில், ஜமுனா (Jamuna).

மஜிலி தீவு

அசாம் மாநிலத்தின் ஒருசில இடங்களில் பிரம்மபுத்திரா ஆறானது, பத்து கி.மீ. அகலத்தில் பரந்து விரிந்து செல்கிறது. திப்ரூகட் அருகே இந்த ஆறு இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த கிளைகள் இரண்டும் நூறு கிலோ மீட்டருக்கு மேல் ஓடி ஒன்றாக இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு, மஜிலித்தீவு எனப்படுகிறது. இந்தத் தீவு, உலகில் ஆறுகளால் உருவாக்கப்பட்ட தீவுகளில், இரண்டாவது பெரிய தீவாகும்.


தொகுப்பு: மு.உமாபதி.

Advertisement: (+91) 90430 82900

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • கங்கை ஆறு!

  • விந்தைமிகு வண்டுகள் உலகம்!

  • நீரின் அருமை!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • இட்டேரி என்னும் காட்டுப் பாதை!

  • வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள்!

  • மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

  • வீராணம் ஏரி பிறந்த கதை!

  • அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!