My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விந்தைமிகு வண்டுகள் உலகம்!

விந்தைமிகு வண்டுகள் உலகம்!

நம் காலடியில் ஊர்ந்து செல்லும் வண்டு, இயற்கையின் எத்தனை இரகசியங்களைச் சுமந்து கொண்டு செல்கிறது தெரியுமா? வண்டுகளைப் பார்த்தால், பல நேரங்களில் அவற்றை விரட்டி விடுகிறோம். ஆனால், அவற்றின் உலகத்தைச் சற்று நெருக்கமாகப் பார்த்தால், அவற்றின் நிறங்கள், வலிமை, தற்காப்பு, தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, பல்வேறு வியப்புகள் அவற்றிடம் நிறைந்திருப்பதை அறிய முடியும்.

பூமியில் தோன்றிய பழமையான உயிரினங்களில் வண்டுகளும் அடங்கும். உலகிலுள்ள பூச்சியினங்களில் சுமார் 40 சதவீதம் வண்டுகள் ஆகும். இதுவரை பல இலட்சம் வண்டினங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இன்னும் அறியப்படாத இனங்களும் இருக்கலாம்.

கறுப்பு முதல் தங்கம் வரை

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இயற்கையின் வண்ணத் தூரிகையில் உருவான வண்டுகள், ஒரே நிறத்தில் இருப்பதில்லை. சில அடர் நிறங்களில் இருக்கின்றன; சில, பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு என, கண்கவர் நிறங்களில் இருக்கின்றன. இந்த நிறங்கள் வெறும் அழகுக்கானவை மட்டுமல்ல. சில நேரங்களில், தங்களின் எதிரிகளிடம் இருந்து வண்டுகள் தப்பிக்கவும், சுற்றுச்சூழலுடன் ஒன்றிப் போகவும் உதவுகின்றன.

கவசமணிந்த சிறு வீரர்கள்

ஒரு வண்டை உற்றுப் பார்த்தால், அது இயற்கை வடிவமைத்த சிறு கவச வீரனைப் போலத் தெரியும். வண்டுகளுக்கு ஆறு கால்களும், இரண்டு ஜோடி இறக்கைகளும் உள்ளன. முன்புற இறக்கைகள் கடினமான உறையாக மாறி, உடலையும் பின்புற இறக்கைகளையும் காக்கின்றன. பின்புறமுள்ள மெல்லிய இறக்கைகள் பறப்பதற்குப்  பயன்படுகின்றன.

சிறியது முதல் பெரியது வரையான ஆச்சரியங்கள்

வண்டுகளின் உலகில் அவற்றின் உருவ அளவில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. தென் அமெரிக்காவின் அமேசான் காட்டில் வாழும் டைட்டன் (Titan beetle) வண்டு 16.7 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. அதைப்போல, ஹெர்குலிஸ் வண்டு (Hercules beetle), அதன் கொம்புகளுடன் சேர்த்து 17 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியதாக உள்ளது.

அதே நேரம், இந்த உலகின் மிகச்சிறிய வண்டினமாக விளங்கும் Scydosella musawasensis வண்டு, 0.32 மி.மீ. நீளம் மட்டுமே இருக்கும். மனிதனின் கண்களுக்கே அரிதாகத் தெரியும் இந்தச் சிறிய அளவிலிருந்து, கைகளுக்கு அடங்காத பெரியளவு வண்டுகள் வரையான இவற்றின் உலகம், பல விந்தைகளை உள்ளடக்கி உள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வலிமைக்கு அடையாளமாக விளங்கும் ஹெர்குலிஸ் வண்டு

சில வண்டுகளை அவற்றின் உடல் எடையுடன் ஒப்பிடும் போது, கற்பனைக்கு எட்டாத வலிமையைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஹெர்குலிஸ் வண்டு (Hercules beetle), அதன் உடல் எடையைப் போல, சுமார் 850 மடங்குள்ள எடையைத் தூக்கும் அசாத்திய வலிமை மிக்கது. உடல் சிறியது, வலிமை மலையைப் போன்றது என்னும் மொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த வண்டின் உடலில் இருக்கும் இத்தகைய வலிமை, இயற்கையின் வியக்கத்தக்க பொறியியல் திறனை (Natural Engineering) நமக்கு உணர்த்துகிறது.  

இயற்கையின் தூய்மைப் பணியாளராக விளங்கும் சாண வண்டு

விலங்குகளின் கழிவுகளைத் தமது முக்கிய உணவாகக் கொண்டு வாழும் சாண வண்டுகள் (Dung Beetles), நமது சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் கழிவாகப் பார்க்கும் பொருள், தமக்கு உணவாகவும், மண்ணுக்கு உரமாகவும் விளங்கும் வகையில், சாணத்தை உருண்டைகளாக உருட்டி மண்ணில் புதைத்து வைக்கும் சாண வண்டுகள், இயல்பான கழிவு மறுசுழற்சிக்கு (Natural Recycling) வழிவகுத்து, மண்வளமும் விவசாயமும் சிறக்க உதவுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இவற்றின் அசாத்திய திறமைகள் இரண்டு. ஒன்று, சாண உருண்டைகளை மற்ற வண்டுகள் அபகரிக்க இயலாத வகையில் நேர்க்கோட்டில் உருட்டிச் செல்வது. அடுத்தது, ஒளியில்லாத இரவு நேரத்தில், பால்வெளி அண்டத்தின் (Milky Way Galaxy) மெல்லிய ஒளிப்பட்டையின் உதவியில் திசை மாறாமல் பயணிப்பது. விலங்குகள் உலகில், விண்மீன் திரள்களின் ஒளியைப் பயன்படுத்தி வழியை அறியும் ஒரே உயிரினம் இதுதான்.

வண்டுகளின் உலகத்தில் பலசாலியாக விளங்குபவை சாண வண்டுகள் தான். சாண வண்டினத்தில் ஒரு பிரிவான Onthophagus taurus என்னும் வண்டு, தனது உடல் எடையைப் போல, 1,141 மடங்குள்ள எடையை இழுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது. இது, ஒரு மனிதன் ஆறு இரட்டை அடுக்குப் பேருந்துகளை (Double-decker buses) இழுப்பதற்குச் சமமானது.

பயிர்களின் காவலனாகச் செயல்படும் பொறி வண்டுகள்

வண்டுகள் எல்லாமே பயிர்களுக்குத் தீமை செய்பவை அல்ல என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, lady bug என அழைக்கப்படும் பொறி வண்டுகள் தான். இவை, விவசாயத்தில் பேரிழப்பை ஏற்படுத்தும் அசுவினி மற்றும் மாவுப்பூச்சிகள் மற்றும் பயிர்களைத் தாக்கும் சிறிய தீங்குயிரிகளைத் தேடித்தேடிப் பிடித்து, தமது உணவாகக் கொள்கின்றன.

இதனால், இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடின்றி, இயற்கை முறையில் பயிர்களைப் பாதுகாக்கும், மிகச் சிறந்த விவசாயிகளின் நண்பர்களாக, இந்தப் பொறி வண்டுகள் விளங்குகின்றன.

ஜொலிக்கும் இறக்கைகளைக் கொண்ட பொன்வண்டு

பொன்வண்டு, மெட்டாலிக் போன்ற பளபளப்புடன், தங்கம், பச்சை, நீலம் மற்றும் செம்பு நிறத்தில் ஜொலிக்கும் இறக்கைகளைக் கொண்ட நீளமான வண்டாகும். இதன் வியத்தகு நிறம் உண்மையான நிறமிகளால் (pigments) ஆனதல்ல. மாறாக, அதன் ஓட்டின் நுண்ணிய அடுக்குகள் ஒளியைப் பிரதிபலிப்பதால் உருவாவது ஆகும். இந்த நிறம், பறவைகளிடம் இருந்து இந்த வண்டுகள் தப்பித்து, இலைகளில் மறைந்து வாழ உதவுகிறது.

இந்த இறக்கைகள், வண்டுகள் இறந்த பிறகும் பல ஆண்டுகளுக்குப் பளபளப்பை இழக்காமல் இருப்பதால், பழங்காலத்தில் இருந்தே, தாய்லாந்து, ஜப்பான், இந்தியா போன்ற அரச குடும்பத்தினரின் ஆடைகளில் எம்பிராய்டரி செய்யவும், ஓவியங்கள் செய்யவும், நகைகளைத் தயாரிக்கவும் பயன்பட்டுள்ளன.

மேலும், காடுகளில் தீப்பிடிக்கும் போது ஏற்படும் அகச்சிவப்புக் கதிர்களைப் போல, பல கி.மீ. தொலைவிலிருந்தே கண்டறியும் சிவப்பு சென்சார்கள் உடலில் இருப்பதால், கருகிய மரங்களில் முட்டைகளை இடுவதற்கு, துணிச்சலாகப் பறந்து போகும் தனித்த உணர் திறனை இந்த வண்டுகள் கொண்டுள்ளன.

இவற்றின் புழுக்கள், காய்ந்த மற்றும் மட்கிய மரங்களை அரித்து உண்பதால், காடுகளில் உள்ள இயற்கைக் கழிவுகள் எளிதாக மட்கி, மண்ணுக்கு உரமாகப் பெரிதும் உதவுகின்றன.

இரவில் ஒளிரும் மின்மினி வண்டுகள்

இரவு நேரத்து இருளில் அழகாக மின்னும் ஒளிப்புள்ளிகளைப் பார்த்திருப்போம். அவை நம் அனைவரையும் கவர்ந்த மின்மினிப் பூச்சிகளாகும். இவற்றை நாம் சாதாரணப் பூச்சிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவையும் வண்டுகளில் ஒருவகையே. இவை, Lampyridae என்னும் வண்டுகள் குடும்பத்தைச் சேர்ந்தவை.

மின்மினிப் பூச்சிகளின் உடலின் அடிப்பகுதியில் உள்ள லூசிஃபெரின் (Luciferin) என்னும் வேதிப்பொருள் ஆக்சிஜனுடன் வினை புரியும் போது ஏற்படும் உயிரொளிர்தல்  (Bioluminescence) என்னும் வேதியியல் செயல் மூலமே, இந்தக் குளிர்ந்த ஒளி இயல்பாக உருவாகிறது. இந்த அற்புதமான ஒளிவட்டம், மின்மினிகள் தங்களுக்குள் தகவலைப் பரிமாறிக் கொள்ளவும், இனப்பெருக்க நோக்கில் தங்களின் துணைகளை ஈர்க்கவும் பயன்படுகிறது.

எதிரிகளை விரட்டும் தற்காப்பு உத்திகள்

வண்டுகளின் இயல்பான தற்காப்பு முறைகள், அருமையான தொழில் நுட்பக் கலைநயம் மிக்கவை. இவற்றில் முதன்மையானது, பாம்பார்டியர் (Bombardier Beetle) என்னும் வெடிகுண்டு வண்டின் தற்காப்பு உத்தியாகும். இது, தன்னைத் தாக்க வரும் எதிரிகள் மீது, தன் உடலிலுள்ள வேதிப்பொருள்களை ஒன்று சேர்த்து, சுமார் 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொதிக்கும் இரசாயனத் திரவமாக, ஒரு வெடிச் சத்தத்துடன் பீய்ச்சியடித்துத் தற்காத்துக் கொள்கிறது.

சில வண்டுகள் எதிரிகளைக் கண்டதும் அவற்றிடம் இருந்து தப்பிக்க, இறந்து விட்டதைப் போலச் சாமர்த்தியமாக நடித்து ஏமாற்றுகின்றன. இன்னும் சில வண்டுகள், காய்ந்த இலை அல்லது மரப்பட்டையைப் போல உடலமைப்பை உருமாற்றி, எதிரிகளின் கண்களில் இருந்து தங்களை மறைத்துக் கொள்கின்றன.

பேசாமல் பேசும் வண்டுகளின் தொடர்பு மொழிகள்

மனிதர்களைப் போல, வண்டுகள் மொழியைப் பயன்படுத்துவது இல்லை. ஆனாலும், அவை தங்களுக்குள் தகவல்களைப் பரப்பிக் கொள்வதில் மிகுந்த திறமைசாலிகளாக விளங்குகின்றன. மின்மினி வண்டுகளைப் போன்ற சில வண்டுகள், இருளில் ஒளிச் சைகைகள் மூலம், தங்களின் துணைகளை அழைக்கின்றன.

இன்னும் சில வண்டுகள், ஆபத்துகளை எச்சரிக்கவும், உணவிருக்கும் இடங்களை உணர்த்தவும், பெரோமோன்கள் (Pheromones) என்னும், தனி வாசமுள்ள வேதிப் பொருள்களைக் காற்றில் பரவச் செய்கின்றன.

வேறு சில வண்டுகள், தங்களின் உடல்களை இணைத்துக் கொண்டு வேகமாகத் தேய்த்து, ஒலி அல்லது நுட்பமான அதிர்வுகளை உருவாக்குவதன் மூலம், பேசாமல் பேசி, தங்களின் தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன.

வண்டுகளின் வாழ்க்கைச் சுழற்சி

வண்டுகளின் வாழ்க்கை முறை, இயற்கையின் விசித்திரமான உருமாற்ற விந்தைகளில் ஒன்றாகும். இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி என்பது, முட்டை(Egg)→ லார்வா (Larva) என்னும் புழு நிலை → கூட்டுப்புழு (Pupa)→ முதிர்ந்த வண்டு (Adult Beetle) ஆகிய நான்கு நிலைகளைக் கொண்டு, முழுமையான உருமாற்றம் (Complete Metamorphosis) நிகழ்கிறது.

முதலில் முட்டையில் இருந்து வெளிவரும் லார்வாக்கள், தங்களுக்குக் கிடைக்கும் உணவை இடைவிடாது அதிகளவில் உட்கொண்டு வேகமாக வளர்கின்றன. பிறகு, அவை அசையாமல் இருக்கும் கூட்டுப்புழு நிலையை அடையும் போது, அவற்றின் உடலின் உள்ளும் புறமும் வியத்தகு மாற்றங்கள் நிகழ்கின்றன. இறுதியாக, அனைத்து நிலைகளையும் கடந்து, அனைத்து உறுப்புகளும் வளர்ந்த முழுமையான, அழகான வண்டுகளாக, கூடுகளில் இருந்து வெளியே வருகின்றன.

மக்களுக்கு வண்டுகள் கற்பிக்கும் பயோமிமிக்ரி தொழில் நுட்பம்

விஞ்ஞானிகள் வண்டுகளின் தனித்துவமான உடலமைப்பையும் அவற்றின் செயல்களையும் ஆழமாக ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். இயற்கையை உற்று நோக்கி, மனிதனுக்கு வேண்டியதை உருவாக்கும் இந்த அறிவியல் கலைக்கு, பயோமிமிக்ரி (Biomimicry) என்று பெயர்.

எடுத்துக்காட்டாக, வறண்ட நமீப் பாலைவனத்தில் வாழும் விசித்திர வண்டினம், காற்றில் இருக்கும் சிறிதளவு ஈரப்பதத்தைக் கூடத் தன் உடலில் சேகரித்துக் குடிநீராக மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளதை ஆராய்ந்து, நீரெடுக்கும் கருவிகளை வடிவமைத்து உள்ளனர்.

மேலும், வண்டுகளின் மிக வலிமையான ஓட்டுக் கட்டமைப்பும் மின்மினிப் பூச்சிகளின் ஆற்றல் குறைந்த எல்.இ.டி. போன்ற இயற்கை ஒளியமைப்பும், விஞ்ஞானிகளுக்கு, அதிநவீனக் கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தை அளித்து வருகின்றன.

காட்டு வளத்தின் அடையாளம் சில்வண்டுகள்

தமிழில் சில்வண்டு அல்லது சிதடிப் பூச்சியென்றும், ஆங்கிலத்தில் சிகாடா (Cicada) அல்லது கிரிக்கெட்(Cricket) என்றும் அழைக்கப்படும் இந்த வண்டுகள், இயற்கையின் இரசிக்கத்தக்க பூச்சியினம் ஆகும். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகளில், மரப்பட்டைகளின் நிறத்தில் அவற்றில் ஒட்டி வாழும் இந்தச் சில்வண்டுகள், காட்டு வளத்தைக் குறிக்கும் முக்கியக் குறிகாட்டியாக விளங்குகின்றன.

ஆண் வண்டுகள் தங்களின் பெண் வண்டுகளைக் கவர்வதற்காக, சிறகுகளை அல்லது வயிற்றுப் பகுதியை ஒன்றுடன் ஒன்று வேகமாகத் தேய்த்து, ஒருவித ரீங்கார ஒலியை எழுப்புகின்றன. குறிப்பாக, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இந்த வண்டுகள் தொடர்ச்சியாக எழுப்பும் ரீங்கார ஒலி, இன்னும் சில நாட்களில் கோடைமழை வரப்போவதை முன்கூட்டியே அறிவிக்கும், இயற்கையின் அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த வண்டுகள் எழுப்பும் ஒலியின் வேகத்தை வைத்து, அந்த இடத்தின் வெப்ப நிலையைக் கணக்கிட முடியும். சுற்றுப்புற வெப்பம் கூடுதலாக இருக்கும் போது, இந்த வண்டுகள் எழுப்பும் ரீங்கார ஒலியின் வேகமும் கணிசமாகக் கூடும் என்பது, இயற்கையின் மற்றொரு வியக்கத்தக்க உண்மையாகும்.

இயற்கையின் விஞ்ஞானிகளான வண்டுகள்

நமது அன்றாட வாழ்க்கையில் காணும் சிறிய வண்டுகளை நாம் அலட்சியமாகக் கடந்து செல்லலாம். ஆனால், அந்தச் சிறிய உயிரினங்களின் பின்னால் பல்வேறு விந்தைகள் ஒளிந்துள்ளன. அவை, விலங்குகளின் கழிவை மறுசுழற்சி செய்து மண்ணை வளமாக்குகின்றன. அல்லும் பகலும் இயற்கையின் தூய்மைப் பணியாளர்களாக உழைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றன.

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழித்து, விவசாயத்துக்குப் பெருந்துணையாக உள்ளன. எதிரிகளைத் தங்களின் விசித்திரத் தற்காப்பு உத்திகளால் ஏமாற்றுவது, இருளில் அழகாக ஒளிர்வது, பேசாமல் பேசித் தகவலைப் பரிமாறிக் கொள்வது என, பல்வேறு விந்தைகளைக் கொண்டுள்ளன.

தங்களின் பயோமிமிக்ரி மூலம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தை விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. எனவே, வண்டுகள் என்பவை வெறும் பூச்சியினங்கள் அல்ல. அவை, இயற்கையின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள். இயற்கை ஒரு புத்தகம். வண்டுகள் அதிலிருக்கும் அருமையான அறிவியல் பாடங்கள்.


விந்தைமிகு வண்டுகள் உலகம்! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/45796507-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நம்பிக்கையும் அறிவியலும் சந்திக்கும் ஆடிப்பட்டம்!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • நீரின் அருமை!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?