அசோலா (Azolla) என்பது, வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நன்னீர்ச் சூழல்களில் உலகம் முழுவதும் காணப்படுகிறது. இது, நீரின் மேற்பரப்பில் மிதக்கும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலாவானது, Anabaena azollae எனப்படும் நீலப்பச்சைப் பாசியுடன் (BGA) இணைந்து வாழக்கூடியது. இந்தப் பாசி, வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்திப் பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது. இந்த இரு உயிரினங்களும் ஒளிச்சேர்க்கை செய்யக் கூடியவை.
அசோலா, ஒளிச்சேர்க்கை மூலம் உருவான உணவுப் பொருளை, நீலப்பச்சைப் பாசிக்கு வழங்குகிறது. அதே நேரத்தில், சயனோபாக்டீரியம் அந்தக் கூட்டுறவுக்குத் தேவையான நைட்ரஜனை வழங்குகிறது. அதிக உற்பத்தித் திறனும், நைட்ரஜனை நிலை நிறுத்தும் திறனும் கொண்ட இந்த உறவு முக்கியமானது. இந்த நைட்ரஜன் நிலை நிறுத்தம், எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்தை இடுவதற்கு இணையானது.
அசோலா மைக்ரோஃபில்லா (Azolla microphylla), அசோலா பின்னாட்டா (A. pinnata) ஆகியன, பொதுவாக வளர்க்கப்படும் இனங்கள். வெள்ளநீர் நிறைந்த நெல் வயல்கள், சிறிய குளங்கள் மற்றும் பிற நீர் நிலைகளின் மேற்பரப்பில் அசோலா இயற்கையாக வளர்கிறது. இது, நெற்பயிருக்குச் சிறந்த உயிரி நைட்ரஜன் உரமாகப் பயன்படுகிறது.
காலநிலையைப் பொறுத்து 5-10 நாட்களில் இதன் உற்பத்தி இரட்டிப்பாகலாம். உயிர் உரமாக மட்டுமின்றி, உயிரியல் களைக்கொல்லி, கால்நடைத் தீவனம் மற்றும் நீர்ச் சுத்திகரிப்புப் பொருளாகவும் அசோலா பயன்படுகிறது. இதன் உற்பத்தித் திறன் அதிகமாக இருப்பதால், இதைக் குறைந்த செலவில் வளர்க்கலாம். இயற்கை நீர் நிலைகளிலும் அசோலாவை உற்பத்தி செய்யலாம்.
அசோலாவின் சத்து மதிப்பு
அசோலாவில், புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் A, B12 மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, செம்பு, மக்னீசியம் போன்ற தாதுகள் நிறைந்துள்ளன. உலர் எடை அடிப்படையில் 25-35 சதம் புரதம், 10-15 சதம் தாதுகள் மற்றும் 7-10 சதம் அமினோ அமிலங்கள், உயிரியக்கப் பொருள்கள், உயிரி பாலிமர்களின் கலவை ஆகியன உள்ளன. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளன.
சதைப்பற்றுள்ள அசோலாவில் நார்ச்சத்துக் குறைவாக உள்ளது. கச்சா நார்ச்சத்து 9.07-22.25 சதம் உள்ளது. மொத்தச் சாம்பல் சத்து 10.15-36.10 சதம், நைட்ரஜன் இல்லாத சாறு (NFE) 30.08-52.46 சதம் என மாறுபடுகிறது. வெப்பநிலை, ஒளியின் தீவிரம், மண்ணின் சத்துகள் போன்ற சூழல் காரணிகளுக்கு அசோலா விகாரங்கள் காட்டும் வேறுபட்ட பதில்கள், அதன் வளர்ச்சி வடிவத்தையும், வேதியியல் அமைப்பையும் பாதிக்கின்றன.
அசோலா வளர்ப்புக்கான பொருள்கள்
அசோலாவை, 6×4 அடி அளவிலான தொட்டியில் வளர்க்கத் தேவையானவை: 150 GSM தடிமனுள்ள சில்பாலின் தாள் அல்லது வேறு பாலித்தீன் தாள், சலித்த வளமான மண், மண்புழு உரம், கோழியெரு, மாட்டுச்சாணம், பாறை பாஸ்பேட், அசோலா விதை அல்லது கல்ச்சர் மற்றும் நுண் சத்துகள்.
வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலைகள்
அசோலா அலகைக் கவனமாகப் பராமரித்து வர வேண்டும். நீர் ஆவியாவதைக் குறைக்கவும், அசோலா நன்றாக வளரவும், வளர்ப்பிடம், பகுதி நிழலில் இருக்க வேண்டும். அசோலா நன்கு வளர்ந்து பெருகுவதற்கு நீர் அவசியமாகும். அசோலா, நீரிலிருந்து சத்துகளை உறிஞ்சுவதால், நீர் மட்டத்தைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
பொதுவாக, தினசரி வெப்பநிலை 15-30 டிகிரி செல்சியசாக இருக்கும் போது, அசோலா வேகமாகப் பெருகும். 30-33 டிகிரி செல்சியசுக்கு மேல் அல்லது 10 டிகிரி செல்சியசுக்குக் கீழே இருக்கும் போது, வளர்ச்சி மிகவும் மந்தமாகும். அசோலாவில் ஒளிச்சேர்க்கை நன்றாக நடைபெற, திறந்த அல்லது பரவலான ஒளி தேவை.
பகுதி நிழலில் அசோலா நன்றாக வளரும். இயல்பான வளர்ச்சிக்குச் சூரிய ஒளி தேவை. குளிர்காலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்குக் கீழே குறையும் போது, பாதுகாப்பு அளிக்க வேண்டும். போதுமான நீர்மட்டம் அவசியம். அசோலாவுக்கு ஏற்ற ஈரப்பதம் 85-90 சதமாகும்.
அசோலாவுக்கு ஏற்ற பி.எச். 5-7 ஆகும். அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை, அசோலாவின் வளர்ச்சியைப் பாதிக்கும். எல்லாத் தனிமங்களும் தேவையெனினும், பாஸ்பரஸ், வளர்ச்சியை அதிகமாகக் கட்டுப்படுத்தும் சத்தாகும். எனவே, நீரில் சுமார் 20 பிபிஎம் பாஸ்பரஸ் இருக்கலாம். சத்துக்குறை, அதிக ஒளி, கடுங்கோடை அல்லது குளிர்காலம் போன்ற சூழ்நிலைகளில், அசோலா, சிவப்பு அல்லது பழுப்புக் கலந்த சிவப்பு நிறமாக மாறலாம்.
தொட்டியின் அளவும் கட்டுமானமும்
தொட்டியின் அளவானது, கால்நடைகளின் எண்ணிக்கை, தேவையான கூடுதல் தீவன அளவு மற்றும் வளங்களின் கிடைப்பைப் பொறுத்தது. சிறு விவசாயிகள் 6×4 அடி பரப்பில் அசோலாவை வளர்த்தால், தினமும் சுமார் ஒரு கிலோ தீவனம் கூடுதலாகக் கிடைக்கும்.
அசோலா வளர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த இடத்தைச் சுத்தம் செய்து சமப்படுத்த வேண்டும். நீரானது சமமாக நிற்கும் வகையில், 2×1.5×0.4 மீட்டர் அளவிலான குழியைத் தோண்டிச் சமப்படுத்த வேண்டும். அதன் அடிப்பகுதியிலும் பக்கங்களிலும் சில்பாலின் அல்லது வேறு பாலித்தீன் தாளை விரிக்க வேண்டும்.
சில்பாலின், சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களை எதிர்க்கக் கூடியது. இருபுறங்களில் இருந்தும் பராமரிப்புப் பணிகளைச் செய்ய ஏதுவாக, படுக்கையின் அகலம் 1.5 மீட்டர் அளவில் இருக்க வேண்டும். செங்கற்கள் அல்லது தோண்டிய மண்ணால் பக்கச் சுவரை அமைக்கலாம்.
அசோலா சாகுபடி தொழில் நுட்பம்
நீடித்துப் பயன்படும் பிளாஸ்டிக் தாளைத் தொட்டியில் விரித்த பிறகு, பக்கச் சுவரின் மேல் செங்கற்களை வைத்து, தாளின் எல்லாப் பக்கங்களையும் உறுதியாகப் பொருத்த வேண்டும். ஒரு சதுர மீட்டர் பரப்பில், 10 செ.மீ. உயரத்துக்கு, 10-15 கிலோ சலித்த மற்றும் வளமான மண்ணைச் சமமாகப் பரப்ப வேண்டும்.
- இதைச் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மட்கிய 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை, 10 லிட்டர் நீரில் கலந்து படுக்கையில் ஊற்ற வேண்டும். பிறகு, 20-25 செ.மீ. உயரம் வரும் வரை நீரைச் சேர்க்க வேண்டும்.
- குழியில் உள்ள நீரில்5-1 கிலோ புதிய, தூய அசோலா கல்ச்சரைச் சேர்க்க வேண்டும். அது வேகமாகப் பெருகி 10-15 நாட்களில் குழியின் மேற்பரப்பில் பச்சைப் படலத்தை உருவாக்கும். அதன் பிறகு, தினமும் 500-600 கிராம் அசோலாவை அறுவடை செய்யலாம்.
- நெரிசலைத் தவிர்த்து, தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்ய, 4-5 நாட்களுக்கு ஒருமுறை, கூடுதலாக உள்ள அசோலாவை அகற்ற வேண்டும். அசோலா வேகமாகப் பெருகுவதற்கு, 5 நாட்களுக்கு ஒருமுறை, 20 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1 கிலோ மாட்டுச்சாணம் வீதம் சேர்க்க வேண்டும்.
- மக்னீசியம், இரும்பு, செம்பு மற்றும் கந்தகத்தை வழங்கும் கலவையைத் தயாரிக்க, 10 கிலோ பாறை பாஸ்பேட், 1.5 கிலோ மக்னீசியம் உப்பு, 500 கிராம் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையை, 40 கிராம் வீதம் மாதந்தோறும் சேர்த்தால், அசோலாவின் தாதுச்சத்து அதிகமாகும். இது, அசோலாவின் நுண்சத்துத் தேவை மற்றும் அசோலாவை உண்ணும் கால்நடைகளின் தேவையைச் சரி செய்ய உதவும்.
முக்கியக் குறிப்புகள்
- அசோலா விரைவாகப் பெருக, மாட்டுச்சாணக் குழம்பு, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பிற பேரூட்ட, நுண்ணூட்டங்களை அவ்வப்போது சேர்க்க வேண்டும்.
- வெப்பநிலையை, 28 டிகிரி செல்சியசுக்குக் கீழே பராமரிக்க வேண்டும். வெப்பநிலை உயர்ந்தால், நிழலை ஏற்படுத்தி, ஒளியின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும்.
- பி.எச்-ஐத் தவறாமல் பரிசோதித்து5-7.5 வரம்பில் பராமரிக்க வேண்டும்.
- நைட்ரஜன் அதிகமாகச் சேர்வதைத் தவிர்க்கவும், நுண்சத்துக் குறையைத் தடுக்கவும், 30 நாட்களுக்கு ஒருமுறை, படுக்கையில் இருந்து சுமார் 5 கிலோ மண்ணை எடுத்து விட்டு, புதிய மண்ணைச் சேர்க்க வேண்டும்.
- பத்து நாட்களுக்கு ஒருமுறை, படுக்கையில் இருந்து 25-30 சதவீத நீரை அகற்றி விட்டு, புதிய நீரை நிரப்ப வேண்டும்.
- ஆறு மாதங்களுக்கு ஒருமுறை படுக்கையைச் சுத்தம் செய்து, மண்ணையும் நீரையும் மாற்றி, புதிய அசோலா கல்ச்சரைச் சேர்க்க வேண்டும்.
- பூச்சி அல்லது நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், புதிய அசோலா படுக்கையைத் தயாரிக்க வேண்டும்.
- அசோலாவைத் தூய நீரில் கழுவி, அதிலுள்ள மாட்டுச்சாணம் மற்றும் பிற நாற்றங்களை நீக்கி விட்டுப் பயன்படுத்த வேண்டும்.
கால்நடைத் தீவனத்தில் அசோலாவின் பயன்பாடு
இந்தியா, உலகளவிலான பால் உற்பத்தி மற்றும் மாட்டினக் கால்நடை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தாலும், சராசரி உற்பத்தியை மேலும் உயர்த்த வேண்டியுள்ளது. தரமான பசுந்தீவனம் மற்றும் தீவனம் போதியளவில் கிடைக்காததால் ஏற்படும் சத்துநிலைக் குறைவும், இதற்குக் காரணமாக இருக்கலாம்.
கூடுதலான சத்து மதிப்பால், பசுமைத் தங்கச் சுரங்கம் என்றும், வேகமான வளர்ச்சியால், சூப்பர் தாவரம் என்றும், அசோலா அழைக்கப்படுகிறது. கறவை மாடுகள், கோழிகள், பன்றிகள், மீன்கள் போன்றவற்றின், சத்து நிறைந்த, குறைந்த செலவிலான இயற்கைத் தீவன மாற்றாக அசோலா விளங்குகிறது.
குறிப்பாக, கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் மாசடைந்த நீரிலுள்ள தாதுகளைச் செறிவூட்டுவதாலும், கால்நடைத் தீவன வளமாக விளங்குவதாலும், சமீப ஆண்டுகளில் அசோலா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டு மாடுகளுக்குத் தேவையான அசோலா கிடைப்பதற்கு, சுமார் 8 சதுர மீட்டர் பரப்புள்ள இரண்டு அசோலா படுக்கைகள் தேவைப்படும்.
கால்நடைகளுக்கு முதன் முதலில் அசோலாவை அறிமுகம் செய்யும் போது, அசோலாவையும் கலப்புத் தீவனத்தையும் சம அளவில் கலந்து கொடுக்க வேண்டும். இப்படி, தினமும் 1.5-2 கிலோ அசோலாவை, கலப்புத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுத்த போது, பால் உற்பத்தி, சுமார் 15 சதம் கூடியதாகக் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அசோலாவைக் கொடுத்தால், பால் மற்றும் இறைச்சியின் தரம் மட்டுமின்றி, கால்நடைகளின் வளர்ச்சியும் உடல் நலமும் மேம்படும். செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி ஆகியவற்றுக்கு மாற்றுத் தீவனமாகக் கொடுக்கலாம். உலர்ந்த அசோலா மாவை, குட்டி ஆடுகளுக்கான தீவனக் கலவையில் 20 சதம் வரை சேர்த்துக் கொடுக்கலாம்.
புரதம் மிகுதியாகவும், லிக்னின் குறைவாகவும் இருப்பதால், அசோலா எளிதில் செரித்து விடும். கறிக்கோழிகளின் எடை மற்றும் முட்டைக் கோழிகளில் முட்டை உற்பத்தி உயர, அசோலா உதவும்.
அசோலா சாகுபடியின் நன்மைகள்
- கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், எளிதாகவும், அதிக மகசூல் கிடைக்கும் வகையிலும் வளர்க்கலாம்.
- வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜனை நிலை நிறுத்தி, கார்போஹைட்ரேட்டு மற்றும் அம்மோனியா உருவாக உதவுகிறது.
- சிதைவுக்குப் பிறகு, மண்ணின் கார்பன் மற்றும் நைட்ரஜன் விகிதத்தைப் பராமரித்து வளத்தைக் கூட்ட உதவுகிறது.
- ஒளிச்சேர்க்கையால் வெளியிடப்படும் ஆக்சிஜன், பயிர்களின் வேரமைப்பும் மண்ணிலுள்ள பிற நுண்ணுயிரிகளும் சுவாசிக்க உதவுகிறது.
- துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு ஆகியவற்றைக் கரைத்து, நெற்பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.
- தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் மற்றும் வைட்டமின்களை வெளியிட்டு, நெற்பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அசோலா, கறவை மாடுகள், கோழிகள், பன்றிகள், மீன்கள் போன்றவற்றின், சத்து நிறைந்த, குறைந்த செலவிலான இயற்கைத் தீவனமாக விளங்குகிறது. நெற்பயிர், காய்கறிப் பயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு உயிர் உரமாகவும், சூழல் பாதுகாப்புக்கும், பொருளாதார ஏற்றம் பெறவும், அசோலா பயன்படுகிறது.

முனைவர் செ.பிரவின்,
முனைவர் த.ஆனந்தி, கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் – 625 205.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


