இந்திய விவசாயப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி, கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 53 வகையான பசுக்கள் உள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், ஆலம்பாடி, உம்பளாச்சேரி என 4 வகையான பசுக்கள் இருக்கின்றன.
கிர், சாகிவால், சிவப்புச் சிந்தி, தார்பார்க்கர் போன்றவை கறவைப் பசுக்கள் ஆகும். பெரும்பாலான பசுவினங்கள், உழவு போன்ற விவசாய வேலைகளில் ஈடுபடுத்தப் படுவதால், அவற்றின் பால் உற்பத்தி, ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் அளவில் தான் இருக்கும்.
எனவே, பால் உற்பத்தியைப் பெருக்க, வெளிநாடுகளைச் சேர்ந்த, ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரிசியன் போன்ற பசுக்களை வாங்கி வளர்த்து வருகிறோம். இந்தப் பசுக்கள் மூலம், அதிகளவில் பால் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுகிறது.
அதே நேரம், எதிர் வினையாகப் பசுக்களின் இனப்பெருக்கத் திறன் குறைகிறது. அதனால், கன்றுகள் பிறப்பு வீதமும் குறைகிறது. எனவே, பால் உற்பத்தித் திறனுள்ள பசுக்களில், பால் உற்பத்திப் பாதிக்காமல், ஆண்டுக்கு ஒரு கன்றை அடைவது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
கிடேரிக் கன்றுகள் தேர்வு
கிடேரிக் கன்றுகள் தான் எதிர்கால மந்தையின் வருமானக் காரணிகள். அதாவது, நாளைய கறவைப் பசுக்கள். அதனால், சிறந்த கிடேரிக் கன்றுகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, பண்ணைப் பொருளாதாரம் மேம்படும். சந்ததி சோதனை (progeny testing) மற்றும் வம்சாவளி சோதனை (Pedigree selection) மூலம், நல்ல இனப்பெருக்கத் திறன், உற்பத்தித் திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறனுள்ள கன்றுகளை வாங்க வேண்டும்.
கிடேரிக் கன்றுகள் நலமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். நீளமான உடல், நல்ல எலும்பு அமைப்பு மற்றும் வலிமையான கால்களுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி அட்டவணைப்படி, சரியான முறையில் தடுப்பூசிகள் போடப்பட்ட கன்றுகளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிடேரிக் கன்றும் 200-250 கிலோ எடையில், அதாவது, அதன் தாயின் உடல் எடையில் 65-70 சதவீதம் இருக்க வேண்டும். மேலும், நல்ல கருமுட்டை வளர்ச்சி, கருப்பை வளர்ச்சி இருப்பதையும்; கருப்பையில் அடைப்பு, கருமுட்டைக் கட்டி போன்றவை இல்லை என்பதையும்; நுண்ணொலி அலை வரைபடச் சோதனை (ultrasound) மூலம், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் காரணிகள்
மரபியல் காரணிகள் (Genetic factors): இனப்பெருக்கத் திறன், மரபு ரீதியாக மாறுபடும். எனவே, நல்ல இனத்தேர்வு முக்கியம்.
சத்துக் காரணிகள் (Nutritional factors): ஆற்றல், புரதம் நிறைந்த சீரான உணவு இல்லாமை, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் மற்றும் ஏ, ஈ, வைட்டமின்கள் குறைபாடு மற்றும் உடல்நிலை மதிப்பு, குறைவாக அல்லது அதிகமாக இருத்தல்.
உடல்நிலை மற்றும் நோய்கள் (Health & diseases): பொதுவான உடல் நலக் குறைவுகளான காய்ச்சல், மடிவீக்கம் மற்றும் கருப்பை ஒவ்வாமை (metritis), கருப்பை உட்புறச் சவ்வு ஒவ்வாமை (endometritis) போன்ற கருப்பை நோய்கள் மற்றும் பாலின நோய்கள் (Brucellosis).
மேலாண்மைக் காரணிகள் (Management factors): சரியான இனச்சேர்க்கைப் பருவத்தைக் (estrus) கண்டறிதல் இல்லாமை, தவறான நேரத்தில் இனச்சேர்க்கை செய்தல் மற்றும் கொட்டகை வசதியும், பராமரிப்பும் இல்லாமை.
சுற்றுச்சூழல் காரணிகள் (Environmental factors): அதிக வெப்பம், கூடுதலான ஈரப்பதம், குறைவான காற்றோட்டம்.
ஹார்மோன் காரணிகள் (Hormonal factors): ஹார்மோன் சமநிலை இல்லாமை, கருமுட்டை வெளியாவதில் ஏற்படும் சிக்கல்கள்.
வயது மற்றும் உடல் நிலை (Age & physiological status): இனப்பெருக்கத்தில், மிகவும் இளவயதுக் கிடேரிகளையும், வயதான பசுக்களையும் ஈடுபடுத்துதல் மற்றும் ஈற்றுக்குப் பிறகான பராமரிப்பில் கவனமின்மை.
இனப்பெருக்க மேலாண்மை
மந்தையின் சிறந்த பொது மேலாண்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, உணவளிப்பு, மன அழுத்தக் கட்டுப்பாடு, நோய்த்தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இளம் கால்நடைகளின் சரியான வளர்ச்சியும், பெரிய கால்நடைகளின் நலமும், உறுதி செய்யப்பட வேண்டும்.
சினைப்பருவத் தேதி, இனச்சேர்க்கைத் தேதி மற்றும் பிரசவத் தேதியைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுகளை வைத்து, சினைப்பருவம் வரும் தேதிகளைக் கணிக்கலாம்.
சினைப் பருவத்தைக் கண்டறியும் முறைகளை மேம்படுத்த வேண்டும். பசுக்களை அடிக்கடி, அதாவது, தினமும் ஒருமுறையாவது சினைப்பருவ அறிகுறிகளைச் சரி பார்க்க வேண்டும். அவற்றைத் திறந்தவெளிக் கொட்டகையில் வைத்தால், சினைப்பருவ அறிகுறிகளைத் தெளிவாக அறிய முடியும்.
செயற்கை இனப்பெருக்க முறைகள் அதிகரிப்பால், சினைப்பருவ அறிகுறிகளில் மாற்றங்கள் இருக்கலாம். பெரிய மந்தைகளில், சினைப்பருவத்தை அறியப் பயன்படும் காளைகள் (teaser) மூலம், சினைப்பருவத்தைச் சரியாகக் கண்டறியலாம். ஆண் தூண்டுதலை (male stimulus) வழங்குவது, சினைப்பருவ அறிகுறிகளைத் தெளிவாகக் காட்ட உதவும்.
மனிதர்களின் கண்டறிதலை மட்டும் சார்ந்து இருக்காமல், நவீன முறைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஹார்மோனைக் கண்டறியும் கருவி (hormone detection kits), செயல் மதிப்பீடு (activity scoring), கண்காணிப்புக் காமிரா, பயிற்சி பெற்ற நாய்கள், பீடா மீட்டர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பசுவின் இனப்பெருக்க வரலாற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். முன்பு ஏற்பட்ட கருச்சிதைவு (abortion), அடித்தள்ளுதல் (prolapse), நஞ்சுக்கொடி தங்குதல் (fetal membrane retention) போன்றவை இருந்தால், அவற்றை நீக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
செயற்கை முறைக் கருவூட்டலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், தவறான முறைகளால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இனப்பெருக்க உறுப்பின் செயல் நிலையை மதிப்பீடு செய்வது முக்கியம். அனுபவமுள்ள நிபுணர்களால் மட்டுமே, செயற்கை முறைக் கருவூட்டல் செய்யப்பட வேண்டும்.
செலுத்தப்படும் விந்தானது, தரமும், போதிய அளவும் கொண்டதாக இருக்க வேண்டும். இயற்கை இனச்சேர்க்கையில் விந்தின் தரத்தை, காலந்தோறும் சோதிக்க வேண்டும்.
இயற்கையான செயல் முறைகளிலிருந்து அதிகமாக விலகுவதைத் தவிர்க்க வேண்டும். இயன்றவரை இயற்கைச் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், களத்தில் செயற்கை முறைக் கருவூட்டலின் வெற்றி வீதம் குறையலாம்.
இனச்சேர்க்கைக்குப் பிறகு, சரியான நேரத்தில் சினைப் பரிசோதனை செய்ய வேண்டும். இது, சினையற்ற பசுக்களை விரைவாகக் கண்டறிந்து, மறுபடியும் இனச்சேர்க்கைச் செய்வதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்கு உதவும்.
நுண்ணொலி அலை வரைபடச் சோதனை மூலம், 20-40 நாட்களில் சினைப் பரிசோதனை செய்யலாம். ஆனால், பொதுவாக 45-60 நாட்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. மலட்டுத் தன்மையைப் போக்க, உடனடி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தேவையானால், நிபுணரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
மூன்று முறை இனச்சேர்க்கை செய்த பிறகும் கருவுறாத பசுக்கள் மற்றும் கிடேரிகளில், எதிர்பார்க்கும் காலத்தில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டாதவற்றைக் கவனிக்க வேண்டும். மேலும், இயல்பற்ற சுரப்புகளைக் (abnormal discharges) கொண்ட பசுக்களையும் பரிசோதித்து, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.
சினைக்காலம், பிரசவக்காலம் மற்றும் பிரசவத்துக்குப் பிந்தைய காலத்தில், பசுக்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். இது, கர்ப்ப இழப்பைத் தவிர்க்க உதவும். அதே சமயம், இயற்கையான செயல்களில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கன்றின் கால்கள் வெளியில் வந்ததும் இழுத்து வெளியேற்றுவது, நஞ்சுக்கொடியை முன்கூட்டியே அகற்றுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்வது, தாய் மற்றும் புதிதாகப் பிறந்த கன்றின் நலனுக்குத் தீமை செய்வதாகும்.
சுகாதாரத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பிரசவத்தின் போது சுத்தமான சூழலை உறுதி செய்ய வேண்டும். சினைப் பசுக்களைத் தனியிடத்தில், அல்லது பிரசவ அறை இருப்பின் அங்கே கட்டி வைக்க வேண்டும். பிரசவம் முடிந்ததும் அந்த இடத்தை, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
நோய்த்தடுப்புத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் நோய்களைச் சோதித்து, தடுப்பூசியைப் போட வேண்டும். தரமான பண்ணையில் இருந்து புதிதாகப் பசுக்களை வாங்கினாலும், அவற்றைச் சோதித்த பிறகே பண்ணையில் சேர்க்க வேண்டும். கன்று வீச்சு நோயைத் (Brucellosis) தடுக்க, பிறந்த மூன்று மாதங்களில், கிடேரிக் கன்றுகளுக்குத் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
சரியான சத்துகளை வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர்க் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது, வளர்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும். சரியான கொட்டகை, சமூகக் காரணிகள் மற்றும் மேலாண்மை முறைகள், பசுக்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, இனப்பெருக்கச் சதவீதத்தை மேம்படுத்த உதவும்.
கன்றுகள் பிறந்து 15 நாட்களுக்குள் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறையென 3 மாதங்கள் வரையும், அடுத்து, மாதம் ஒருமுறையென 6 மாதங்கள் வரையும், அதன் பிறகு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எனவும், குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்
பசுக்கள் 21 நாட்கள் இடைவெளியில் சினைப்பருவத்துக்கு வரும். சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டும் போது தான், பசுக்களின் கருப்பை வாய் திறந்திருக்கும். அப்போது செலுத்தப்படும் விந்து முன்னோக்கி நீந்திச் சென்று, கருமுட்டை இருக்கும் இடத்தை அடையும்.
- அமைதியின்மை மற்றும் சுறுசுறுப்பு.
- ஒரு பசு இன்னொரு பசுவின் அறையை நுகர்தல் (flehmens reflex).
- இடையிடையே கத்துதல் அல்லது ஒலி எழுப்புதல்.
- ஆண் காளைகளைத் தேடுதல்.
- அடிக்கடி சிறியளவில் சிறுநீர்க் கழித்தல்.
- முதுகை வளைத்து நிற்றல்.
- பெண்ணுறுப்பில் கசிவு மற்றும் வீக்கம் இருத்தல்.
- இன்னொரு பசு அல்லது காளை மீது தாவுதல்.
- இன்னொரு பசு, தன் மீது ஏறும் போது அமைதியாக நிற்றல்.
மேலேயுள்ள சினைப்பருவ அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், 12 மணி நேரத்தில் செயற்கை முறைக் கருவூட்டலைச் செய்ய வேண்டும். அதாவது, இதைக் காலை மாலை விதி என்பார்கள். மாடுகள் காலையில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டினால், மாலையிலும், மாலையில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டினால், அடுத்த நாள் காலையிலும், செயற்கை முறைக் கருவூட்டலைச் செய்ய வேண்டும்.
மீண்டும் 12 மணி நேரம் கழித்து, இன்னொரு செயற்கை முறைக் கருவூட்டலைச் செய்தால், சினைப்பிடிப்புத் தன்மை கூடும். கன்றை ஈன்ற பசு, 85 நாட்களுக்குள் மறுபடியும் சினைப்பிடிக்க வேண்டும். அப்போது தான், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை எட்ட முடியும்.
கன்றை ஈன்றதிலிருந்து 45-60 நாட்களில், முதல் சினைப்பருவ அறிகுறி தென்பட வேண்டும். கன்றை ஈன்றதிலிருந்து 85 நாட்களில் மறுபடியும் சினைப்பிடிக்க வேண்டும். பசுவின் கர்ப்பக்காலம் 270-280 நாட்கள் ஆகும்.
சினைப் பரிசோதனை
கருவூட்டல் செய்து 21 நாட்களுக்குப் பிறகு மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டவில்லை என்றால், 45 நாட்களில் நுண்ணொலி அலை வரைபடச் சோதனை மூலமும், 3 மாதங்களில் கைகள் மூலமும் சினைப் பரிசோதனையைச் செய்யலாம். ஏனெனில், ஒருசில பசுக்கள் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டாமலும், 3 மாதங்களில் சினைப் பரிசோதனை செய்யும் போது சினையற்றும் இருக்கும். இந்தச் சினையற்ற நிலை, சினைப் பருவமின்மை (anestrus) என்னும் கனநீர்ச் சுரப்புக் குறையால் ஏற்படுவதாகும்.
எனவே, இத்தகைய மாடுகளுக்குக் கனநீர் சிகிச்சையை அளித்து, சினைப்பிடிக்க வைக்க வேண்டும். மூன்று மாதங்களில் சினைப் பரிசோதனை செய்யாமலும், சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டாமல் இருப்பதால், மாடு சினையாகி விட்டது என்றும், நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால், 7-8 மாதங்கள் கழித்து மாடு சினையாக இருப்பதைப் போலத் தெரியவில்லையே என்று சோதித்துப் பார்த்தால், மாடு உண்மையாகவே சினையாக இருக்காது. இதனால், 5 மாதங்கள் வீணாவதுடன், ஆண்டுக்கு ஒரு கன்று இலக்கும், எட்டாக் கனியாகி விடும்.
கனநீர் சிகிச்சை
பாலின நீரை வெளிப்படுத்தும் இயக்கு நீர் (GnRH), கருமுட்டைச் சுரப்பைத் தூண்டும் இயக்கு நீர் (FSH), கருமுட்டையை முதிர்ச்சியாக்கும் இயக்கு நீர் (LH), ஈஸ்ட்ரோஜன், பிரான்டாகிளான்டின் (Prostaglandins), ப்ரோஜெஸ்டிரான் போன்ற கன நீர்களைப் பயன்படுத்தி, மாடுகளைச் சினைப் பருவத்துக்குக் கொண்டு வரலாம். இளம் வளர்கரு இறப்பு வீதத்தைக் குறைக்க, சினை ஊசியைச் செலுத்தி ஏழாவது நாளில், பாலின நீரை வெளிப்படுத்தும் இயக்கு நீர் ஊசியைச் செலுத்தலாம்.
யோனிக்குழாயில் ப்ரோஜெஸ்டிரான் பஞ்சை 7-10 நாட்கள் வைத்து, அந்தப் பஞ்சை எடுப்பதற்கு முதல் நாளில், பிரான்டாகிளான்டின் ஊசியைச் செலுத்த வேண்டும். அந்தப் பஞ்சை எடுத்த 48 மணி நேரம் கழித்து, சினை ஊசி மற்றும் பாலின நீரை வெளிப்படுத்தும் இயக்கு நீர் ஊசியைச் செலுத்தலாம். பிறகு, அடுத்த நாளும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யலாம்.
தொடக்க நாளிலும் ஏழாவது நாளிலும், பாலின நீரை வெளிப்படுத்தும் இயக்கு நீர் ஊசியையும், ஐந்தாவது நாள் பிரான்டாகிளான்டின் ஊசியையும் செலுத்தி, ஏழாவது நாளில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யலாம். பிறகு, அடுத்த நாளும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யலாம்.
மேற்கூறிய மேலாண்மை முறைகளான கன்றுகள் தேர்வு, தடுப்பூசி, குடற்புழு நீக்கம், தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு, கனநீர் சிகிச்சை ஆகியவற்றைப் பின்பற்றினால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை எட்டலாம்.

முனைவர் செ.பிரவின்,
உதவிப் பேராசிரியர், கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் – 625 205.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



