My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

ஊரக மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகச் செம்மறி ஆடுகள் விளங்கி வருகின்றன. பொதுவாகச் செம்மறியாடு என்று கூறினாலும், உலகளவில் இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. இவ்வகையில், இந்தியாவில் உள்ள முக்கியச் செம்மறி ஆட்டினங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கோயம்புத்தூர் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரவியுள்ளது.
  • இது, கம்பளி உற்பத்திக்காக வளர்க்கப்படும் ஓர் இனமாகும்.
  • வெள்ளை நிறத்திலுள்ள இந்த ஆடுகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில், கறுப்பு அல்லது நீலநிறப் பட்டைகள் காணப்படும்.
  • வயது வந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடை 25 கிலோ இருக்கும்.
  • வயது வந்த பெட்டை ஆட்டின் சராசரி உடல் எடை 20 கிலோ இருக்கும்.

 நீலகிரி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், நீலகிரிச் செம்மறியாடு, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படும் இனமாகும்.
  • இந்த ஆடுகள் கம்பளி உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன.
  • இந்த ஆடுகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். சில ஆடுகளின் உடலிலும் முகத்திலும், நீலநிறப் புள்ளிகள் காணப்படும்.
  • காதுகள் அகலமாகவும், தட்டையாகவும், தொங்கியும் இருக்கும். ஆண் ஆடுகளுக்கு, கொம்பு மொட்டுகளும் தழும்புகளும் இருக்கும். பெட்டை ஆடுகளுக்குக் கொம்புகள் இருக்காது.
  • வால் நடுத்தரமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். உரோமம் மென்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
  • வயது வந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடையும், பெட்டையாட்டின் சராசரி உடல் எடையும் 31 கிலோ இருக்கும்.
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

 மேச்சேரி ஆடுகள்

  • மேச்சேரிச் செம்மறி ஆடுகள், தமிழ்நாட்டின், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்திடன் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன.
  • இந்த ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
  • வயது வந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடை 36 கிலோ இருக்கும்.
  • வயது வந்த பெட்டை ஆட்டின் உடல் எடை 22 கிலோ இருக்கும்.

 கீழக்கரிசல் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.
  • இது இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனமாகும்.
  • இந்த ஆடுகள் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • தலை, வயிறு மற்றும் கால்களில் கருநிறப் பட்டைகள் இருக்கும்.
  • வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
  • முதிர்ந்த ஆண் ஆடுகள், வலுவான மற்றும் சுருண்ட கொம்புகளுடன் இருக்கும்.
  • பெரும்பாலான ஆடுகளின் தொண்டைக்குக் கீழே சதைப்பிண்டம் காணப்படும்.
  • வளர்ந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடை 29 கிலோ இருக்கும்.
  • வயது வந்த பெட்டை ஆட்டின் சராசரி உடல் எடை 22 கிலோ இருக்கும்.

 வெம்பூர் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், தமிழ்நாட்டின், வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன.
  • இது, இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனமாகும்.
  • இந்த ஆடுகள் உயரமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த ஆடுகளின் உடலில் சிவப்புப் புள்ளிகளும் காணப்படும். இவற்றின் காதுகள் வெளிநோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும்.
  • முதிர்ந்த ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் இருக்கும். பெட்டை ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • வளர்ந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடை 35 கிலோ இருக்கும்.
  • வளர்ந்த பெட்டை ஆட்டின் சராசரி உடல் எடை 28 கிலோ இருக்கும்.

 இராமநாதபுரம் வெள்ளை ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், தமிழகத்தின், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.
  • இது, இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஓர் இனமாகும்.
  • இந்த ஆடுகள் வெள்ளை நிறத்தில் நடுத்தரமாக இருக்கும். சில ஆடுகளின் உடல் முழுதும் கருநிற அடையாளங்கள் இருக்கும்.
  • முதிர்ந்த ஆண் ஆடுகளுக்கு வளைந்த கொம்புகள் இருக்கும். ஆனால், பெட்டை ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • இந்த ஆடுகளின் காதுகள் நடுத்தரமாக இருக்கும். வால் குட்டையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
  • கால்கள் சிறியளவில் மெல்லியதாக இருக்கும்.
  • ஓராண்டில் இந்த ஆடுகளின் சராசரி உடல் எடை 16.30 கிலோ இருக்கும்.

 கச்சைக்கட்டி ஆடுகள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

  • இந்த ஆடுகள், மதுரை மாவட்டம், வாடிப்பட்டிப் பகுதியில் உள்ள கச்சைக்கட்டிப் பகுதி மக்களால் பரவலாக வளர்க்கப்படுகின்றன.
  • இவை, நடுத்தர அளவில், திடமான உடலமைப்புடன், கறுப்பு நிறத்தில் இருக்கும்.
  • இந்த ஆடுகள் அடர்த்தியான உரோமத்துடன் இருக்கும். இவை, இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. ஆண் செம்மறியாடுகள், சண்டையிடுவதில் பெயர் பெற்றவை.

 திருச்சிக் கறுப்பு ஆடுகள்

  • இந்த ஆடுகள், தமிழ்நாட்டின், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளன.
  • இந்த ஆடுகள், கம்பளி உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் உரோமம் மிகவும் சொரசொரப்பாக இருக்கும்.
  • இந்த ஆடுகளின் உடல், சிறியதாகவும் கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
  • இவற்றின் காதுகள், குட்டையாகவும், கீழ்நோக்கியும் முன்னோக்கியும் அமைந்திருக்கும். வால், குட்டையாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
  • வயது வந்த ஆண் ஆட்டின் சராசரி உடல் எடை 26 கிலோ இருக்கும். பெட்டையாட்டின் சராசரி எடை 19 கிலோ இருக்கும்.

சென்னைச் சிவப்பு ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், தமிழ்நாட்டின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட செம்மறி இனமாகும்.
  • இந்த ஆடுகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும். சில ஆடுகளின் நெற்றி, தொடையின் உட்புறம் மற்றும் அடிவயிற்றில் வெள்ளை நிற அடையாளங்கள் காணப்படும்.
  • காதுகள் நடுத்தர நீளத்தில், தொங்கிக் கொண்டிருக்கும். உடல் முழுவதும் குட்டை முடிகளால் மூடப்பட்டிருக்கும்.
  • இவற்றின் வால், குட்டையாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
  • ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் இருக்கும். பெட்டை ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • இந்த ஆடுகள் திடமாகவும், வறட்சியைத் தாங்கியும் வளரும்.
  • ஓராண்டில் இந்த ஆடுகளின் சராசரி உடல் எடை 49 கிலோ இருக்கும்.

 தக்காணி ஆடுகள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

  • தக்காணிச் செம்மறி இனம் என்பது, இராஜஸ்தானின் கம்பளி ஆடுகளும், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டின் உரோமம் நிறைந்த ஆடுகளும் கலந்த இனமாகும்.
  • இந்த ஆடுகள், மும்பை – தக்காணப் பகுதியிலும், கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் உள்ளன.
  • இந்த ஆடுகளின் உடல், சிறியதாகவும், திடமாகவும், மோசமான மேய்ச்சல் நிலச் சூழல்களைச் சமாளிக்க வல்லதாகவும் இருக்கும்.
  • இந்த ஆடுகள், பல நிறங்களில் இருக்கும். குறிப்பாக, கறுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் அதிகமாக இருக்கும்.
  • ஒரு செம்மறி ஆட்டின் மூலம், ஆண்டுக்கு 4.54 கிலோ உரோமம் கிடைக்கும். இந்த உரோமம், தரம் குறைந்தும், மெல்லிய இழைகளின் கலவையாகவும் இருக்கும்.  
  • இந்த உரோமம் பெரும்பாலும் கரடுமுரடான போர்வைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.
  • இந்த ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன.

 நெல்லூர் ஆடுகள்

  • இந்த ஆடுகள், ஆந்திரப் பிரதேசத்தின், நெல்லூர், பிரகாசம், ஒங்கோல் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளன.
  • உயரமான இந்த ஆடுகளின் மார்பு, பிடரி, பிட்டம் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அதிகமாக உரோமம் இருப்பதில்லை.
  • கிடாய் ஆடுகளில் கொம்புகள் இருக்கும். பெட்டை ஆடுகளில் கொம்புகள் இருப்பதில்லை.
  • கிடாய் ஆடுகளின் சராசரி உடல் எடை 36 கிலோ இருக்கும். பெட்டை ஆடுகளின் சராசரி உடல் எடை 28 கிலோ இருக்கும்.
  • நெல்லூர் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளைப் போலிருக்கும். இந்த இனம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான இனமாகும்.
  • பெரும்பாலான ஆடுகள், வெளிர் பழுப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

 பந்தியா ஆடுகள்

  • இந்த ஆடுகள், கர்நாடகத்தின், மாண்டியா மாவட்டத்தில் பரவியுள்ளன.
  • இந்த ஆடுகள், வெள்ளை நிறத்தில் இருக்கும். இவற்றின் முகம் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பழுப்பு நிறம் கழுத்து வரை பரவியிருக்கும்.
  • கிடாய் ஆடுகளின் சராசரி உடல் எடை 35 கிலோ இருக்கும். பெட்டை ஆடுகளின் சராசரி உடல் எடை 23 கிலோ இருக்கும்.
  • இந்த இனம், இந்திய இனங்களிலேயே மிகச் சிறந்த ஆட்டிறைச்சி உடல் வாகைக் கொண்டது.

 மார்வாரி ஆடுகள்

  • இந்த ஆடுகள், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. பாலி மற்றும் பார்மர் மாவட்டத்திலும், இந்த ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
  • இந்தச் செம்மறி ஆடுகள் திடமானவை. இவற்றின் உரோமம், கலப்பு உரோம அமைப்புள்ள, கரடுமுரடான தரை விரிப்புகள் உற்பத்திக்கு உதவுகிறது.
  • இந்த ஆடுகள், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தொலைதூர மாவட்டங்களுக்கும், சில சமயங்களில் மராட்டிய மாநிலத்தின் வடக்குப் பகுதிகளுக்கும், வளர்ப்புக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.
  • ஒரு ஆட்டிலிருந்து ஆண்டுக்கு 0.90-1.81 கிலோ உரோமம் கிடைக்கும்.

 கத்தி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், உருவில் சிறியதாக இருக்கும். இவை, ஜம்முவின் கிஷ்வார், பதர்வா பகுதிகளில் காணப்படுகின்றன.
  • குளிர் காலத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் முகாமிடும் ஆடுகள், கோடையில் பீர்பஞ்சால் மலைகளின் உயரமான பகுதிகளில், குறிப்பாக, படார் மலைத்தொடரில் மேய்கின்றன.
  • ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் உண்டு, பெண் ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • இவற்றின் முகம், பழுப்பு நிற முடிகளுடன் காணப்படும்.
  • இவற்றின் உரோமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஒரு ஆட்ட்டின் மூலம், ஆண்டுக்கு 1.13 கிலோ உரோமம் கிடைக்கும். ஆண்டுக்கு மூன்று முறை உரோமம் வெட்டப்படும்.
  • இந்த உரோமம், உயர் தரமான குலுச் சால்வைகள் மற்றும் போர்வைகள் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.

 பாலங்கீர் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களான, பாலங்கீர், சம்பல்பூர் மற்றும் சுந்தர்கரைத் தாயகமாகக் கொண்டவை.
  • இவற்றின் உருவம் நடுத்தரமாக இருக்கும். வெள்ளை, வெளிர் பழுப்பு அல்லது கலப்பு நிறங்களில் காணப்படும். சில ஆடுகள் கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
  • இவற்றின் காதுகள் சிறியதாகவும் குட்டையாகவும் இருக்கும். வாலின் நீளம் நடுத்தரமாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
  • இவற்றின் உரோமம் மிகவும் சொரசொரப்பாக இருக்கும். கால்களிலும் வயிற்றிலும் உரோமம் இருக்காது. ஆண் ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் இருக்கும்.

 பெல்லாரி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம் கர்நாடகத்தின், பெல்லாரி, தாவணகெரே மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள ஹாவேரி, சித்ரதுர்கா மாவட்டங்களைப் பூர்விகமாகக் கொண்டது.
  • இந்த ஆடுகளுக்கு, கர்நாடகப் பகுதியிலும், தமிழ்நாட்டின் தெலங்கானா எல்லைப் பகுதிகளிலும் அதிகத் தேவையுள்ளது.
  • இந்த இனம், இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. நடுத்தரமாகவும், வலிமையாகவும் இருக்கும்.
  • இந்த ஆடுகளின் உடல் நிறம், வெள்ளை, கறுப்பு மற்றும் வெள்ளையின் பல்வேறு கலவைகளில் காணப்படும்.
  • இந்த ஆடுகளின் காதுகள், நடுத்தர நீளத்தில், தட்டையாக இருக்கும். சுமார் 30 சதவீத ஆண் ஆடுகளில் மட்டுமே கொம்புகள் இருக்கும்.

 பாகர்வால் ஆடுகள்

  • நாடோடிப் பழங்குடி மக்களால் வளர்க்கப்படும், பாகர்வால் செம்மறி ஆடுகள், மேய்ச்சல் மற்றும் சூழல் அடிப்படையில் இடம் பெயரக் கூடியவை,
  • இவற்றுக்கு எனத் தனிப்பட்ட வாழ்விடம் எதுவும் இல்லை. குளிர் காலத்தில் ஜம்முவின் பீர்பஞ்சால் மலைத்தொடரில் இருக்கும். கோடையில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு இடம் பெயரும்.
  • இந்த ஆடுகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். வேறு நிற ஆடுகளும் அரிதாக இருக்கும்.
  • நடுத்தர அளவுள்ள இந்த ஆடுகளின் மூக்கு, ரோமானிய மூக்கைப் போலிருக்கும்.
  • ஆண் ஆடுகளுக்குக் கொம்புகள் உண்டு. பெட்டை ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • காதுகள் நீளமாகத் தொங்கும். வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். உரோமம் சொரசொரப்பாகவும், விரிந்தும் இருக்கும்.

குரேஸ் ஆடுகள்

  • இந்த ஆட்டினம், ஜம்மு காஷ்மீரில் உள்ள செம்மறி ஆட்டு இனங்களிலேயே மிகவும் பெரியது. காதுகள் நீளமாகவும், மெல்லியதாகவும், கூர்மையாகவும் இருக்கும்.
  • இந்த ஆடுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இருப்பினும் சில ஆடுகள் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில், பழுப்பு அல்லது கரும் புள்ளிகளுடன் இருக்கும்.
  • இவற்றின் வால், மெல்லியதாகவும் குட்டையாகவும் இருக்கும். உரோமம், சொரசொரப்பாக இருக்கும்.

ஹாசன் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், பெயருக்கு ஏற்றாற் போல், கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டாது.
  • இந்த ஆடுகள், சிறிய மற்றும் நடுத்தர அளவில் இருக்கும். இவற்றின் உடல் வெள்ளையாகவும், வெளிர் பழுப்பு அல்லது கரும் புள்ளிகளுடன் காணப்படும்.
  • இவற்றின் காதுகள், நடுத்தர நீளத்தில் தொங்கும்.
  • இந்த இனத்தின் 39 சதவீத ஆண் ஆடுகள் கொம்புகளுடன் இருக்கும். பெட்டை ஆடுகளில் கொம்புகள் இருப்பதில்லை.
  • உரோமம் வெள்ளையாகவும், மிகவும் சொரசொரப்பாகவும், விரிந்தும் இருக்கும். கால்களிலும் வயிற்றிலும் உரோமம் இருக்காது.

 ஜெய்சல் மேரி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், இராஜஸ்தானின் ஜெய்சல் மேரி மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆடுகள், இராஜஸ்தானின், ஜெய்சல்மேர், பார்மர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளன.
  • இந்த இனத்தின் ஆண் ஆடுகள் 15-18 மாதங்களிலும், பெண் ஆடுகள் 12-15 மாதங்களிலும் இனப்பெருக்கத் தகுதியை அடையும்.
  • குட்டி ஈனுதல் 55-60 சதவீதமாக இருக்கும். ஒரு ஈற்றில் ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.
  • இந்த ஆடுகள் பார்வைக்கு ஓரளவு சதுரமாகவும், உயரமாகவும் இருக்கும்.
  • முகம் கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த நிறம், கழுத்து வரை பரவியிருக்கும். மூக்கு, ரோமன் மூக்கைப் போலிருக்கும். காதுகள், நீண்டு தொங்கும். கொம்புகள் இருப்பதில்லை.
  • வால் நடுத்தர நீளம் முதல் அதிக நீளம் வரை இருக்கும். இதன் உரோமம், வெள்ளை நிறத்தில், நடுத்தரத் தரத்தில், அடர்த்தியின்றி இருக்கும்.

 கேந்திரபடா ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், ஒடிசாவின் கேந்திரபாரா, கட்டாக், ஜகத்சிங்பூர், பத்ரக், ஜாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக உள்ளன.
  • இந்த ஆட்டினம், இரட்டையர் மற்றும் மும்மூர்த்திகள் போன்ற பன்முறைப் பிறப்புகளுக்குக் காரணமான FecB சடுதிமாற்ற மரபணுவைக் கொண்ட, இந்தியாவில் இரண்டாவது மற்றும் உலகில் ஆறாவது இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தச் செம்மறி ஆடுகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும். சில ஆண் ஆடுகளுக்குப் பொத்தான் போன்ற கொம்புகள் உண்டு.
  • முகம், வயிறு மற்றும் கால்களில் முடிகள் இருக்காது. உடலின் மற்ற பகுதிகள் பளபளப்பற்ற முடிகளால் மூடப்பட்டிருக்கும்.
  • இவற்றுக்குக் கிடைமட்டமான காதுகளும், குட்டையான, நேரான மற்றும் தொங்கும் வாலும் உண்டு.

 மக்ரா ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், பிகானேரி சோக்லா அல்லது சக்ரி என்றும் அழைக்கப்படும். முன்பு, பிகானேரி என அறியப்பட்டது.
  • இந்த ஆட்டினம், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர், நாகௌர், ஜெய்சல்மேர், சுரு ஆகிய மாவட்டங்களில் பரவலாக உள்ளன.
  • இருப்பினும், இதன் தூய இனம், பிகானேர் மாவட்டத்தின், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்த ஆடுகள், நடுத்தரமாகவும் மற்றும் பெரியதாகவும் இருக்கும். இவற்றின் முகம், கண்களைச் சுற்றி வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் வெள்ளையாக இருக்கும்.
  • இந்த ஆடுகள், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காதுகள் சிறியது முதல் நடுத்தரமானது வரையிலும், குழல் வடிவிலும் இருக்கும்.
  • இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை. வால் நடுத்தரமான நீளத்தில் மெல்லியதாக இருக்கும்.
  • இவற்றின் உரோமம், நடுத்தரத் தரத்தில், மிகவும் வெள்ளையாக, பளபளப்பாக, அதிக அடர்த்தி இல்லாமல் இருக்கும்.

 மல்புரா ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், இராஜஸ்தானில் வாழும் எட்டுச் செம்மறி ஆட்டினங்களில் முக்கிய இனமாகும்.
  • இந்த இனத்தின் வளர்ந்த ஆண் ஆடுகள், சராசரியாக 40 கிலோ எடையும், பெண் ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டிருக்கும்.
  • இந்த ஆடுகளின் பிறப்பு எடை 77-3.50 கிலோவும், 6 மாத எடை 16.4-18.94 கிலோவும் இருக்கும்.
  • இந்த ஆடுகள், நீண்ட கால்களுடன், ஓரளவு நல்ல உடலமைப்பில் இருக்கும்.
  • இந்த ஆடுகளின் முகத்தில் இருக்கும் வெளிர் பழுப்பு நிறம், கழுத்து வரை பரவியிருக்கும்.
  • காதுகள் குட்டையாக குழல் வடிவில் இருக்கும். அவற்றின் மேல் பக்கத்தில் சிறிய குருத்தெலும்பைப் போன்ற இணைப்பு இருக்கும்.
  • இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை. வால் நடுத்தர நீளம் முதல் மெல்லிய நீளம் வரை இருக்கும்.
  • இவற்றின் வெண்ணிற உரோமம், மிகவும் சொரசொரப்பாக, அடர்த்தியாக இருக்கும். வயிறு மற்றும் கால்களில் உரோமம் இருக்காது.

மார்வாரி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், தென்மேற்கு இராஜஸ்தானின், மார்வார் பகுதியில் தோன்றியது. அதனால், அப்பகுதியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆடுகள் நடுத்தரமாக இருக்கும். முகம், வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தோல், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை. காதுகள் பெரியதாகவும், இலையைப் போன்றும் தொங்கிக் கொண்டிருக்கும். வால், குட்டையாக அல்லது நடுத்தரமாக, மெல்லியதாக இருக்கும்.
  • உரோமம், சொரசொரப்பாக, அடர்த்தியாக, நீண்ட இழைகளுடன் இருக்கும். நெற்றி, வயிறு மற்றும் கால்கள் உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்.

 பாஞ்சாலி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், குஜராத்தின் பாஞ்சால் பகுதியில், பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.
  • இந்த ஆடுகள், நீண்ட கால்களுடன் பெரியதாக இருக்கும். சிறப்பாக இடம் பெயரும் திறன் மிக்கவை.
  • இவற்றின் உடல் வெள்ளையாக இருக்கும். தலை அல்லது முகப்பகுதி, கறுப்பு, கரும் பழுப்பு, பழுப்பு, வெளிர் பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும்.
  • காதுகள் நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். வால் நீளமாக இருக்கும். மடி நன்கு வளர்ந்திருக்கும். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 4 முதல் 1.2 லிட்டர் வரை இருக்கும்.
  • மூன்று நான்கு மாதத்தில் இந்த ஆடுகள், 18-20 கிலோ உடல் எடையை அடையும். வளர்ந்த ஆண் ஆடுகளின் எடை 53 முதல் 82 கிலோ வரையிலும், பெண் ஆடுகளின் எடை 32 முதல் 73 கிலோ வரையிலும் இருக்கும்.
  • இந்த ஆடுகளின் உரோமம், சொரசொரப்பாக இருக்கும். ஓர் ஆட்டின் மூலம், ஓராண்டில் ஒரு கிலோ உரோமம் கிடைக்கும்.

பூஞ்சி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பூஞ்ச், இராஜௌரி ஆகிய மாவட்டங்களைப் பூர்விகமாகக் கொண்டது.
  • நன்கு வளர்ந்த ஆண் ஆட்டின் எடை 35-40 கிலோவும், பெண் ஆட்டின் எடை 25-30 கிலோவும் இருக்கும்.
  • இந்த ஆடுகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • மேலும், பழுப்பு முதல் வெளிர் கறுப்பு வரை மாறுபடும் புள்ளிகளுள்ள ஆடுகளும் உண்டு.
  • இவற்றின் காதுகள், நடுத்தர நீளத்தில் இருக்கும். வால் குட்டையாக, மெல்லியதாக இருக்கும்.
  • இந்த ஆடுகளின் கால்கள் குட்டையாக இருப்பதால், இவை குள்ளமான உடலமைப்பில் இருக்கும்.

 பூகல் ஆடுகள்

  • பூகல் செம்மறி ஆட்டினத்தின் பெயர், இந்த இனத்தின் தாயகமான பிகானேர் மாவட்டத்தின் பூகல் தாலுகாவில் உருவானது.
  • பெண் ஆடுகள் 15 மாதங்களிலும், ஆண் ஆடுகள் 18 மாதங்களிலும் இனப்பெருக்கத் தகுதியை அடையும். பொதுவாக ஓர் ஆடு ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.
  • இந்த ஆடுகள், ஓரளவு நல்ல உடலமைப்புடன் இருக்கும். முகம், கறுப்பாக இருக்கும். கீழ்த்தாடை, வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • காதுகள் குட்டையாக குழல் வடிவில் இருக்கும். இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை.
  • வால் குட்டையாக அல்லது நடுத்தர அளவில், மெல்லியதாக இருக்கும்.
  • இவற்றின் உரோமம், வெள்ளை நிறத்தில், நடுத்தரக் கம்பளத் தரத்தில் இருக்கும்.

 ஷாஹாபாடி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், பீகாரின், போஜ்பூர், ரோத்தாஸ் பக்ஸார் ஆகிய மாவட்டங்கள், பாட்னா மற்றும் கயா மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டது.
  • ஷாஹாபாடி (Shahabadi) ஆடுகள், நடுத்தரமாக, நீண்ட கால்களுடன், பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் கரும் புள்ளிகளும் காணப்படும்.
  • காதுகள் நடுத்தர அளவில் தொங்கிக் கொண்டிருக்கும். வால், மிகவும் நீளமாக, மெல்லியதாக இருக்கும்.
  • உரோமம் மிகவும் சொரசொரப்பாக, அடர்த்தியாக, விரிந்து காணப்படும். கால்களிலும் வயிற்றிலும் உரோமம் இருக்காது.

 சோனாடி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆட்டினம், இராஜஸ்தானின் முக்கியமான ஆட்டினமாகும்.
  • இந்த ஆடுகள், வாழும் பகுதியின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொள்வதால், பல நூற்றாண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இவை, நல்ல திடமான உடலமைப்புடன், மால்புராவை விட, சற்றே சிறியதாக, நீண்ட கால்களுடன் காணப்படும்.
  • இந்த ஆடுகளின் முகத்திலுள்ள வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிறம், கழுத்தின் நடுப்பகுதி வரை பரவியிருக்கும்.
  • காதுகள் பெரியதாக, தட்டையாக, தொங்கிக் கொண்டிருக்கும். வால், மெல்லியதாக, நடுத்தர நீளத்தில் இருக்கும்.
  • இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் கிடையாது. மடி, ஓரளவு வளர்ந்திருக்கும். உரோமம் வெள்ளையாக, சொரசொரப்பாக இருக்கும். வயிறு மற்றும் கால்களில் உரோமம் இருக்காது.

 திபெத்திய ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள் நடுத்தரமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். மூக்கு, கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில், ரோமன் மூக்கைப் போலிருக்கும்.
  • உடலில் பழுப்பு மற்றும் வெண் புள்ளிகளும் இருக்கும்.
  • இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் உண்டு. காதுகள் சிறியதாக, அகலமாக, தொங்கிக் கொண்டிருக்கும்.
  • உரோமம், மென்மையாக, அடர்த்தியாக இருக்கும். வயிறு, முகம் மற்றும் கால்களில் உரோமம் இருக்காது.

 போன்பாலா ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், முற்றிலும் வெள்ளை அல்லது முற்றிலும் கறுப்பு அல்லது கறுப்பு-வெள்ளை ஆகிய நிறங்களில் இருக்கும்.
  • இந்த ஆடுகள், நெடிய கால்களுடன் உயரமாக, நல்ல உடல் அமைப்பில் இருக்கும்.
  • காதுகள் சிறியதாகவும் குழல் வடிவிலும் இருக்கும். வால் மெல்லியதாகவும் குட்டையாகவும் இருக்கும். உரோமம் சொரசொரப்பாக இருக்கும். வயிறு மற்றும் கால்களில் உரோமம் இருக்காது.

 செவ்வாடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு, பழுப்புக் கலந்த மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
  • இந்த ஆடுகளின் கொம்புகள், கிடை மட்டமாகவும், வெளிப்புறம், பின்புறம் வளைந்தும், தடித்த வரிகளுடனும், வெளிர் பழுப்பு நிறத்தில், மழுங்கிய கூம்பு வடிவ நுனியைப் போலிருக்கும்.

சோக்லா ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், சிறியதாகவும், நடுத்தரமாகவும் இருக்கும். முகம், உரோமமின்றி, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த நிறம் கழுத்தின் நடுப்பகுதி வரை பரவியிருக்கும்.
  • இந்த ஆடுகளின் தலை, நேராக இருக்கும். காதுகள் சிறியதாக, நடுத்தர நீளத்தில் இருக்கும். மேலும், குழல் வடிவில் மெல்லியதாக இருக்கும்.
  • இவற்றின் வால், மெல்லியதாக, நடுத்தர நீளத்தில் இருக்கும். உரோமம், வெள்ளையாக, அடர்த்தியாக இருக்கும். வயிறு மற்றும் கால்களின் பெரும்பகுதி உட்பட முழு உடலும் உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்.

 சோட் நாக்புரி ஆடுகள்

  • இந்த ஆடுகள், சிறியதாக, எடை குறைவாக, வெளிர் சாம்பல் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • காதுகள் சிறியதாகவும், தலைக்கு இணையாகவும் இருக்கும். வால் மெல்லியதாகவும் குட்டையாகவும் இருக்கும்.
  • உரோமம் சொரசொரப்பாக, விரிந்து காணப்படும். இந்த உரோமம் வெட்டப்படுவது இல்லை.

 கரோல் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகளின் தலை சிறியதாகவும், காதுகள் நடுத்தரமாகவும் இருக்கும். வால், குட்டையாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இப்படி, இந்த ஆடுகளின் உடல் கச்சிதமாக இருக்கும்.
  • இந்த ஆடுகள், சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • மடி ஓரளவு வளர்ந்திருக்கும். தாய் ஆடுகளிடமிருந்து கிடைக்கும் பாலைக் கொண்டே இரட்டைக் குட்டிகளை எளிதில் பராமரிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈனும்.
  • இந்த ஆடுகளின் உரோமம், சொரசொரப்பாக, அடர்த்தியாக இருக்கும்.

 காஜாலி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இருக்கும்.
  • கறுப்பு நிற ஆடுகள், முழுக்க முழுக்க, கறுப்பு அல்லது கரும்பழுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • வெண்ணிற ஆடுகள், முழுக்க முழுக்க, வெள்ளை நிறத்தில் இருக்கும். கண்களைச் சுற்றியும், முகத்திலும், காதுகளிலும், கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் வட்டத் திட்டுகள் இருக்கும்.
  • இந்த ஆடுகள், ரோமன் மூக்கு, நீளமாகத் தொங்கும் காதுகள், தரையைத் தொடும் நீளமான வாலுடன் (சுமார் 55 செ.மீ.) இருக்கும்.

 கர்னா ஆடுகள்

  • இந்த ஆடுகள், உருண்டையான மற்றும் கச்சிதமான உடலமைப்பில், நடுத்தரமாக இருக்கும்.
  • ஆண் ஆடுகளுக்கு, கூர்மையான நுனியுடன் கூடிய பெரிய, வளைந்த கொம்புகளும், எடுப்பான மூக்குக் கோடும் உண்டு.
  • இவற்றின் உரோமம், கிரீம் வெள்ளை நிறத்தில் இருக்கும். காதுகள் நடுத்தரமாக இருக்கும். வால் மெல்லியதாகவும், நேராகவும், நடுத்தரமாகவும் இருக்கும்.

படன்வாடி ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், நடுத்தரமாக, பெரியளவில் இருக்கும். இவற்றின் கால்கள் நீளமாக இருக்கும்.
  • இந்த ஆடுகளின் முகம், பழுப்பு மற்றும் வெளிர் பழுப்புப் புள்ளிகளுடன் காணப்படும். காதுகள் நடுத்தரமாகவும் மற்றும் பெரியதாகவும், குழல் வடிவத்தில், மயிர்க் கற்றையுடன் இருக்கும்.
  • வால் மெல்லியதாக, குட்டையாக இருக்கும். இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருப்பதில்லை. இவற்றின் வெள்ளை உரோமம், நடுத்தரத் தரை விரிப்புத் தரம் கொண்டது.

 இராம்பூர் புஷைர் ஆடுகள்

  • இந்தச் செம்மறி ஆடுகள், நடுத்தரமாக இருக்கும்.
  • இவற்றின் உரோமம், பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அத்துடன், பழுப்பு, கறுப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறங்களும் கலந்திருக்கும்.
  • உரோமம் நடுத்தரத் தரத்தில் அடர்த்தியாக இருக்கும். கால்கள், வயிறு மற்றும் முகத்தில் உரோமம் இருக்காது.
  • காதுகள் நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். முகம் குவிந்து, ரோமானிய மூக்கைப் போலக் காணப்படும்.

குறிப்பு: இவற்றைத் தவிர, டோர்செட், சஃபோல்க், மெரினோ, இராம்பூய்ட், செவியோட், சவுத் டவுன் ஆகிய கவர்ச்சிமிகு செம்மறி ஆட்டினங்களும் உள்ளன.


தொகுப்பு: மு.உமாபதி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்: