மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு உயிரியல் செயற்பாட்டுச் சேர்மங்களின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மீன்களின் தோல், செதில்கள், சளிப்படலம், இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படும் புரதங்கள், பெப்டைடுகள், கொலாஜன், கரோட்டினாய்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை, மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தச் சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, திசு மறுசீரமைப்புப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம். எனவே, மீன்களில் காணப்படும் உயிரியல் மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மதிப்பீடு செய்து, புதிய மருந்துகளை உருவாக்குவது, நவீன மருந்தியல் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
உயிரியல் சேர்மங்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்
புதிய மருந்து உருவாக்கத்தின் முதல் படியாக, மருத்துவப் பயனுக்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட மீனினங்களும் அவற்றின் திசுக்களும் தேர்வு செய்யப்படுகின்றன. மீனின் சளிப்படலத்தில் உள்ள சில பெப்டைடுகள், நுண்ணுயிர் எதிர்ப்பு ஆய்வுகளிலும்; மீன் செதில்களில் இருந்து பெறப்படும் கொலாஜன், திசு மறுசீரமைப்பு மற்றும் காயம் ஆற்றுதல் தொடர்பான ஆய்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பல்வேறு உடல்நல ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்வு செய்யப்பட்ட மீன் மாதிரிகளில் இருந்து, தேவையான உயிரியல் சேர்மங்களைப் பொருத்தமான முறைகளில் பிரித்தெடுத்து, குரோமட்டோகிராபி போன்ற தொழில் நுட்பங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன. மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற பகுப்பாய்வு முறைகள் மூலம், அவற்றின் வேதியியல் அமைப்பு, தூய்மை, அடையாளம் ஆகியன உறுதி செய்யப்படுகின்றன. இந்தச் செயல்முறை; ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் சேர்மத்தின் தரத்தை உறுதி செய்யவும், அதன் உயிரியல் செயல்பாட்டைத் துல்லியமாக மதிப்பிடவும் உதவுகிறது.
உயிரியல் செயல் திறன் மற்றும் நச்சுத்தன்மை மதிப்பீடு
சுத்திகரிக்கப்பட்ட சேர்மங்களின் நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு அல்லது புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாடுகள் ஆய்வகத்தில் மதிப்பிடப்படுகின்றன. அவற்றின் செயல் திறன், செயல்படும் செறிவு மற்றும் சாதாரண உயிரணுக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், சேர்மங்கள் செயல்படும் விதம் குறித்தும், குறிப்பிட்ட உயிரியல் இலக்குகளுடன் தொடர்பு கொள்ளும் முறை குறித்தும் ஆய்வு செய்யப்படுகின்றன.
வரிக்குதிரை மீன் (Danio rerio) போன்ற மாதிரி உயிரினங்கள், சில மருந்து சேர்மங்களின் உயிரியல் விளைவுகளையும், ஆரம்ப நிலை நச்சுத் தன்மையையும் ஆய்வு செய்ய உதவுகின்றன. இவற்றின் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம், மருந்து வேட்புச் சேர்மங்களின் ஆரம்ப நிலைப் பாதுகாப்புக் குறித்த தகவல்களைப் பெற முடியும்.
இதனைத் தொடர்ந்து, முன்மருத்துவ ஆய்வுகளில் மருந்தின் நச்சுத்தன்மை, பாதுகாப்பு, உடலில் உறிஞ்சப்படும் விதம், உறுப்புகளுக்குப் பரவும் தன்மை, வளர்சிதை மாற்றம் மற்றும் வெளியேற்றம் ஆகியன மதிப்பிடப்படுகின்றன. சேர்மங்களின் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் சாத்தியமான மாசுபாடுகளும் கவனிக்கப்பட வேண்டும். மாதிரி உயிரினங்கள் அல்லது ஆய்வகங்களில் கிடைக்கும் முடிவுகள் மட்டுமே, மனிதர்களுக்கான பாதுகாப்பையும், செயல் திறனையும் உறுதிப்படுத்தாது.
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருந்து அனுமதி
முன்மருத்துவ ஆய்வுகளில் போதுமான பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆதாரங்கள் கிடைத்த பிறகு, உரிய அனுமதியுடன் மனிதர்களில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் மருந்தின் ஆரம்ப நிலைப் பாதுகாப்பும் சகிப்புத் தன்மையும் மதிப்பிடப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில், நோயாளிகளிடம் அதன் ஆரம்ப நிலைச் செயல் திறனும், பொருத்தமான அளவும் ஆய்வு செய்யப்படுகின்றன. மூன்றாம் கட்டத்தில் அதிகளவிலான நோயாளிகளிடம், மருந்தின் செயல் திறனும் பாதுகாப்பும் விரிவாக மதிப்பிடப்படுகின்றன.
மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள், உரிய ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தியாவில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation), புதிய மருந்துகளின் அனுமதியை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையான மதிப்பீடுகளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தால், மருந்து தரநிலைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படுகிறது. மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும், அதன் பக்கவிளைவுகளும், பாதுகாப்பும், தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
எதிர்கால வாய்ப்புகள்
செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில் நுட்பம் மற்றும் மேம்பட்ட மூலக்கூறு பகுப்பாய்வு முறைகள், மீன் சார்ந்த உயிரியல் சேர்மங்களைக் கண்டறிந்து, அவற்றின் செயல் திறனை மேம்படுத்த உதவுகின்றன. குறிப்பாக, இயற்கையில் காணப்படும் பெப்டைடுகள் மற்றும் புரதங்களை ஆராய்வதன் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பிற சிகிச்சை சார்ந்த சேர்மங்களைக் கண்டறியும் வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும், சேர்மங்களின் தூய்மை, நிலைத்தன்மை, உற்பத்திச் செலவு, பாதுகாப்பு ஆகியன, முக்கியச் சவால்களாக உள்ளன. மேலும், மீன் வளங்களைப் பாதுகாத்து, நிலையான முறையில், உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களில் இருந்து பெறப்படும் உயிரியல் சேர்மங்கள், புதிய மருந்துகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. சேர்மங்களைத் தேர்ந்தெடுத்தல், பிரித்தெடுத்தல், உயிரியல் செயல் திறன், நச்சுத்தன்மை மதிப்பீடு, மருத்துவப் பரிசோதனைகள், ஒழுங்குமுறை அனுமதி ஆகியன, இந்தச் செயல் முறையின் முக்கியக் கட்டங்களாகும்.
தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம், மீன் சார்ந்த சேர்மங்கள், எதிர்கால மருந்தியல் மற்றும் மருத்துவத் துறையில், புதிய சிகிச்சை முறைகளை உருவாக்குவதில் பங்களிக்கக் கூடும்.

முனைவர் ல.அக்க்ஷயா,
உதவிப் பேராசிரியர், மீன் மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறை, மீன்வள முதுநிலைப் படிப்புகள் நிறுவனம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், ஓ.எம்.ஆர்.வளாகம், சென்னை – 603103.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


