மீன் வளர்ப்பில் நல்ல வளர்ச்சி, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் குறைவான இறப்புக்கு, தரமான தீவனமும், நல்ல நீர்த்தர நிர்வாகமும் அவசியம். ஆனால், அதிக வெப்பம், நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிக மீனிருப்பு, மீன்களைக் கையாளுதல், நீரின் உப்புத் தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றால், மீன்களில் அழுத்தம் (Stress) ஏற்படலாம்.
இதனால், மீன்களின் இயல்பான உடலியல் செயல்கள் பாதிக்கப்படுவதுடன், வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றல், தற்காப்புச் செயல்களுக்குத் திருப்பப்படலாம். நீண்டகால அழுத்தம், நோயெதிர்ப்புத் திறனையும் பாதிக்கக்கூடும்.
இந்த அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான முதல் நடவடிக்கை, நல்ல பண்ணை மேலாண்மை தான். ஆயினும், மீன்களின் அழுத்த எதிர்ப்புத் திறனைக் கூட்டுவதற்காக, தீவனத்தில் சில நியூட்ரா சூட்டிக்கல்ஸ் என்னும் செயல்பாட்டுச் சத்துச்சேர்க்கைப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவை, நோயைக் குணமாக்கும் மருந்துகள் அல்ல. மீன்களின் உடலியக்கம், நோயெதிர்ப்புத் திறன் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புச் செயல்களுக்கு ஆதரவான சத்துப் பொருள்கள் ஆகும்.
எல்-டிரிப்டோபான்
எல்-டிரிப்டோபான் என்பது, முக்கியமான அமினோ அமிலமாகும். இது, செரோட்டோனின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறது. ரோகு (Labeo rohita) மீன்களில் நடைபெற்ற ஆய்வுகளில், வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை சார்ந்த அழுத்தச் சூழலில், எல்-டிரிப்டோபான் கலந்த தீவனத்தை இட்டபோது, வளர்ச்சி மற்றும் சில நோயெதிர்ப்புச் செயல்கள் மேம்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதிக நெரிசலால் ஏற்படும் அழுத்த நிலையிலும் இது, சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின்கள் சி, ஈ
வைட்டமின்கள் சி-யும் ஈ-யும் முக்கியமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்கள் ஆகும். அழுத்தம் ஏற்படும் போது, மீன்களின் உடலில் உருவாகும் தடையற்ற மூலக்கூறுகளால், செல்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். வைட்டமின் சி, இத்தகைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், அழுத்தச் சூழலில் உடலின் இயல்பான செயல்களை ஆதரிக்கிறது. மீன்களால் வைட்டமின் சி-ஐ போதியளவில் உருவாக்க முடியாது என்பதால், தீவனத்தின் மூலம் வழங்க வேண்டும்.
வைட்டமின் ஈ, ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் செல்சார் பாதிப்பிலிருந்து, மீன்களைப் பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக, நைட்ரைட் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை சார்ந்த பாதிப்புகளைக் குறைப்பதில், வைட்டமின் ஈ பங்காற்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் பி6
வைட்டமின் பி6 அல்லது பைரிடாக்சின், மீன்களின் அழுத்த மேலாண்மையில் முக்கியச் சத்தாகும். இது, செரோட்டோனின், காபா போன்ற நரம்பியல் செயல்களுடன் தொடர்புள்ள சேர்மங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கிறது. அதிக வெப்பம் காரணமான அழுத்தத்தின் போது, ரோகு மீன்களுக்கு பைரிடாக்சினை வழங்கியதில், வளர்ச்சி மற்றும் சில நோயெதிர்ப்புச் சார்ந்த அளவுருக்களில் மேம்பாடு காணப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பீட்டைன், லெசித்தின் மற்றும் கனிமங்கள்
பீட்டைன், லெசித்தின் போன்ற சத்துச் சேர்மங்களும், அழுத்த மேலாண்மைக்காக ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. ரோகு மீன்களில் அதிக வெப்பநிலை மற்றும் சில இரசாயனப் பொருள்களால் ஏற்பட்ட பாதிப்பின் போது, இவற்றைத் தீவனத்தில் சேர்த்ததில், வளர்ச்சியும், உடல்நலக் குறியீடுகளில் மேம்பாடும் இருந்ததாகக் கூறப்பட்டு உள்ளது.
துத்தநாகம், செலினியம் போன்ற கனிமங்களும், மீன்களின் அழுத்த எதிர்ப்புத் திறனில் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக செலினியம், ஆக்சிஜனேற்றப் பாதிப்பைக் குறைப்பதிலும், நோயெதிர்ப்புச் செயலை ஆதரிப்பதிலும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நியூக்ளியோடைடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்கள்
நியூக்ளியோடைடுகள் மற்றும் பிற ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்களும், மீன்களின் அழுத்தச் சகிப்புத் தன்மையை ஆதரிக்கும் தீவனச் சேர்க்கைகளாகக் கருதப்படுகின்றன. நியூக்ளியோடைடுகள் வழங்கப்பட்ட மீன்களில், கார்டிசாலின் அளவு குறைந்தது எனவும், நோயெதிர்ப்புத் திறன் கூடியதும் எனவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பொருள்கள், அழுத்த நேரத்தில் உருவாகும் தடையற்ற மூலக்கூறுகளைச் செயலிழக்கச் செய்து, செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
பண்ணையாளர்கள் கவனிக்க வேண்டியவை
அழுத்தம் ஏற்பட்டதும் ஏதாவது தீவனச் சேர்க்கைப் பொருளைப் பயன்படுத்துவதை விட, அழுத்தத்துக்கான காரணத்தைக் கண்டறிவதே முக்கியம். நீரில் ஆக்சிஜன் குறைந்தால், காற்றோட்டத்தைக் கூட்ட வேண்டும். நெரிசலாக இருந்தால், மீன் இருப்பு அடர்த்தியைச் சரி செய்ய வேண்டும். வெப்பநிலை பிரச்சினை இருந்தால், அதைக் கண்காணித்துச் சரி செய்ய வேண்டும். மேலும், தேவைக்கேற்ப, பொருத்தமான நியூட்ரா சூட்டிக்கல்களை, தீவனத்தின் மூலம் வழங்க வேண்டும்.
சந்தையில் வைட்டமின்கள் சி, ஈ, பி6, அமினோ அமிலங்கள், பீட்டைன், லெசித்தின், துத்தநாகம், செலினியம், நியூக்ளியோடைடுகள் போன்ற தீவனச் சேர்க்கைப் பொருள்கள் கிடைக்கலாம். ஆனால், இவற்றை எல்லா மீனினங்களுக்கும் ஒரே அளவில் பயன்படுத்த முடியாது. நியூட்ரா சூட்டிக்கல்களின் விளைவு, மீனினம், அழுத்தத்துக்கான காரணம் மற்றும் அழுத்தம் நீடிக்கும் காலத்தைப் பொறுத்து மாறுபடலாம்
எனவே, நல்ல நீர்த்தர மேலாண்மை, தரமான சமச்சீர் தீவனம், தேவைக்கேற்ப சரியான சத்துகள் சேர்க்கை ஆகிய மூன்றும் இணைந்த அணுகுமுறையே, மீன்களின் நலத்தைப் பாதுகாக்க உதவும். நியூட்ரா சூட்டிக்கல்கள் நோய்க்கான நேரடி சிகிச்சை மருந்துகள் அல்ல என்பதையும், பண்ணையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டால், காரணத்தைக் கண்டறிந்து, உரிய மீன்வள நிபுணரின் ஆலோசனையுடன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, சத்துவழி அழுத்த மேலாண்மை, எதிர்கால மீன் வளர்ப்பில் பயனுள்ள துணை அணுகுமுறையாக இருக்கும்.

முனைவர் மு.வெங்கிடசாமி,
உதவிப் பேராசிரியர், மருத்துவர் எஸ்.கே.ஹரீஸ் அரவிந்த், உதவிப் பேராசிரியர், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

