My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உவர்நீர் மீன் வளர்ப்பில் நோய்த்தடுப்பு முறைகள்!

Fish Farming

நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியைப் பெருக்கக் கூடிய, தீவிர மீன் வளர்ப்பு (Fish Farming) மற்றும் வணிகமய மீன் வளர்ப்பு முறை, உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும், உணவு உற்பத்தித் துறையாக உருவாகி உள்ளது. மற்ற உணவு உற்பத்தித் துறைகளைப் போலவே, மீன் வளர்ப்பில் பின்பற்றப்படும் தீவிர வளர்ப்பு முறைகள் மற்றும் இத்துறை வேகமாக வளர்ந்து வருவதால், நோய் சார்ந்த சிக்கல்களும் ஏற்படுகின்றன.

மீன் வளர்ப்பு (Fish Farming)

பொதுவாக நோய்கள்; வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் அல்லது கண்டறியப்படாத மற்றும் புதிதாக உருவாகும் நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன. இத்தகைய நோய்கள், மீன் வளர்ப்பில் முக்கியத் தடையாக உள்ளன. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் தடைபடுகின்றன. இந்தியாவில் உவர்நீர் மீன் வளர்ப்பு; ஏற்றுமதி வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நோய்க்கிருமி, உயிரினம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையில் ஏற்படும் எதிர்மறைத் தொடர்களின் இறுதி விளைவாக, வளர்ப்பு நீர்வாழ் உயிரினங்கள் நோய்களுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், சிறந்த மேலாண்மை மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள்; பண்ணைச் சுகாதாரத்தை மேம்படுத்தி, இலாபகரமான உற்பத்தியைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உவர்நீர்க் குளங்களில் சுகாதார மேலாண்மை

உவர்நீர் மீன் வளர்ப்புச் சுகாதார மேலாண்மையில்; மண் மற்றும் நீரின் தரம் பராமரித்தல், தீவன மேலாண்மை, முறையாகப் பண்ணையைத் தனிமைப்படுத்தல் ஆகியன அடங்கும். பண்ணைச் சுகாதாரம் என்பது, சிறந்த மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது, பண்ணையை நிறுவுவதற்கு முன், இடத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அறுவடை மற்றும் சந்தையில் முடிவடைகிறது. சிறந்த பண்ணைச் சுகாதார மேலாண்மையில் உள்ள முக்கிய நிலைகளாவன:

பண்ணை அமைவிடத் தேர்வு

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உவர்நீர் மீன் வளர்ப்பில் (Fish Farming) சரியான இடத்தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில், பின்வரும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • மீன் அல்லது இறால் வளர்ப்புக்கு உகந்த உப்புத் தன்மை, காரத்தன்மை, அமிலத் தன்மை மற்றும் மாசற்ற நீர் எல்லா நிலைகளிலும் கிடைப்பது.
  • அதிகக் கலங்கல் இல்லாத நீராக இருப்பது.
  • அலையின் ஏற்ற இறக்கங்கள், 2-3 மீட்டர் அளவில் மிதமாக இருப்பது.
  • மண்; களிமண் அல்லது வண்டல் களிமண்ணாக இருப்பது. அமில- சல்பேட் மண் பகுதியைத் தவிர்ப்பது.
  • குஞ்சுப் பொரிப்பகம் அருகில் இருப்பது.
  • பண்ணை, அனைத்து நிலைகளிலும் அணுகக் கூடியதாக இருப்பது. அதாவது, தொழில் நுட்ப உதவி, தொழிலாளர்கள், மின்சாரம் மற்றும் சந்தை வாய்ப்புள்ள பகுதியில் பண்ணை அமைவது.

பண்ணை வடிவமைப்பும் கட்டுமானமும்

பண்ணையை முறையாக அமைத்தல் என்பது, திறமையான நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அவசியம். பண்ணை அமைவிடக் கூறுகள், இடத்துக்கு இடம் வேறுபடுவதால், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பின்வரும் அணுகுமுறைகள் அவசியமாகும்.

  • வெள்ளம், அலை உந்துதல் மற்றும் சூறாவளியில் இருந்து பண்ணையைக் காக்கும் அளவில், புற வாய்க்கால் வலுவாக இருக்க வேண்டும்.
  • மீன் வளர்ப்புக் (Fish Farming) குளக்கரையின் சாய்வுப்பகுதி களிமண்ணாக இருந்தால், 1:1 என்னும் விகிதத்திலும், மணலாக இருந்தால், 3:1 என்னும் விகிதத்திலும் இருக்க வேண்டும்.
  • நீரை வெளியேற்றும் அமைப்பு, நீரேற்றும் அமைப்புக்கு எதிரே குறுக்காக இருக்க வேண்டும்.
  • குளத்தின் வடிகால் படுக்கை; குளத்தின் தரையிலிருந்து குறைந்தது 30 செ.மீ.க்குக் கீழே இருக்க வேண்டும்.
  • வளர்ப்புக் குளங்களைச் செவ்வகமாக அல்லது சதுரமாக அமைக்க வேண்டும்.
  • குளத்தின் அடிப்பகுதி, நீரை வெளியேற்றும் கால்வாயை நோக்கி, 1:2000 என்னும் விகிதத்தில் சாய்வாக இருக்க வேண்டும்.
  • நீர்த்தேக்கக் குளம் ஒன்றைப் பண்ணையில் அமைக்க வேண்டும். இது, கலங்கல் நீரைப் படிய வைக்கும் குளமாகவும், நீர்ச்சேமிப்புக் குளமாகவும் செயல்பட வேண்டும்.

குளத்தைத் தயார் செய்தல்

  • மீன் வளர்ப்புக் (Fish Farming) குளத்தில் புதிதாக மீன் அல்லது இறால்களை இருப்புச் செய்வதற்கு முன், முந்தைய மீன் வளர்ப்பால் குளத்தில் ஏற்பட்ட கழிவுகளைச் சரியான முறையில் அகற்ற வேண்டும்.
  • நோய்ச்சூழலைக் குறைக்கும் வகையில், குளத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • அதாவது, குளத்தின் அடிப்பகுதி ஈரமாக இருக்கும் போது, கறுப்பு அடுக்குப் போன்ற பகுதி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
  • குளத்தில் உணவளிக்கும் பகுதிகள் மற்றும் மூலைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கறுப்பு மண்ணடுக்கை அகற்ற வேண்டும்.
  • மேலும், இந்தக் கறுப்பு மண்ணை, குளத்தில் இருந்து சரியான முறையில் அகற்ற வேண்டும்.
  • குளத்தின் அடியில் சேர்ந்துள்ள கறுப்பு மண்ணை அகற்றிய பிறகு, அடிப்பகுதி மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.5-ஆக இருக்க வேண்டும். இதைவிடக் குறைவாக இருந்தால், சுண்ணாம்பை இட்டுச் சரி செய்ய வேண்டும்.
  • நீர் ஆதாரங்கள் மூலம், குளத்தில் நீரை நிரப்பும் போது, நீர் வரும் குழாய்களில், ஈரடுக்கு நுண் வலையைக் கட்ட வேண்டும்.
  • குளத்தில் அதிகளவு நீர்ச்சுழற்சிக்கு, ஏரேட்டர் என்னும் காற்றூதிகளைச் சரியாக நிலை நிறுத்த வேண்டும்.
  • குளத்தை, 60 பிபிஎம் (20 பிபிஎம் குளோரின்) ப்ளீச்சிங் பவுடரை இட்டு, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • சுத்தம் செய்து ஏழு நாட்கள் கழித்து, குளத்தில் உரமிட வேண்டும். இது, தாவர மற்றும் விலங்கு மிதவை உயிரினங்களின் வளர்ச்சியைத் தூண்டி விடும்.
  • குளத்தில் மீன் குஞ்சுகளை விடும் போது, நீரின் ஆழம், 120-140 செ.மீ. இருக்க வேண்டும்.
  • நீரின் தினசரி கார அமில ஏற்ற இறக்க அளவு, 0.5-க்குக் கீழே இருக்க வேண்டும். மற்ற காரணிகள் உகந்த வரம்பில் இருக்க வேண்டும்.

இருப்புச் செய்தல்

தரமான மீன் அல்லது இறால் குஞ்சுகளைக் குளத்தில் இருப்பு வைத்தல், மீன் வளர்ப்பு (Fish Farming) மேலாண்மையில் முக்கியமானது. ஆகவே, நம்பகமான குஞ்சுப் பொரிப்பகத்தில் இருந்து, நலமான, தரமான மீன் குஞ்சுகளை வாங்க வேண்டும். மீன் குஞ்சுகள் தேர்வு மற்றும் இருப்பு வைப்பின் போது செய்ய வேண்டியவை:

  • 6-8 மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள, நம்பகமான குஞ்சுப் பொரிப்பகத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • மீன் குஞ்சுகள் தரமாகவும், ஒரே அளவிலும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • மீன் குஞ்சுகளின் உயிர் வாழும் திறனை மேம்படுத்தும் நாற்றங்கால் குளம், மொத்தக் குளத்தின் பரப்பில் 5-10 சதவீதம் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இன மீன்களையும், பரிந்துரைக்கப்பட்ட வளர்ப்பு அடர்த்தியில் இருப்பு வைக்க வேண்டும்.
  • மீன் அல்லது இறால் குஞ்சுகளை, புதிய சூழலுக்கு இணங்க, விடியற்காலை அல்லது பின்னிரவு நேரத்தில் குளத்தில் இருப்பு வைக்க வேண்டும்.

தீவன மேலாண்மை

மீன் வளர்ப்பின் மொத்தச் செலவில், தீவனச்செலவு மட்டும் 60 சதமாகும். உணவை அதிகமாக இடுவதும், குறைவாக இடுவதும், மீன் வளர்ப்பில் (Fish Farming) பாதிப்பையே ஏற்படுத்தும். எனவே, சரியான தீவன முறைகளைப் பின்பற்ற வேண்டும். அவையாவன:

  • மீன்களின் அளவுக்கேற்ப, நொறுக்கிய அல்லது சிறு உருண்டை உணவை இட வேண்டும்.
  • தீவனத்தில் மீன் இனத்துக்கு ஏற்ப, சரியான சத்துகள் இருக்க வேண்டும்.
  • புதிதாகத் தயாரித்த தீவனமாக இருக்க வேண்டும், இரண்டு மாதங்களுக்கு மேலான தீவனமாக இருக்கக் கூடாது.
  • சரியான கால இடைவெளியில், மீன் குளத்தில் மாதிரிகளை எடுத்து, மதிப்பிடப்பட்ட இருப்படர்த்தி மற்றும் உயிர்த் தொகுதியின் அடிப்படையில், தினசரி தீவன அளவைக் கணக்கிட வேண்டும்.
  • மீன் அல்லது இறால் இனங்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட முறைப்படி, சரியான தீவனக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

நீர் மற்றும் மண் தர மேலாண்மை

நோய்ச் சூழல்களைக் குறைத்து, சிறந்த உற்பத்தியைப் பெறுவதற்கு, நீர் மற்றும் மண்ணின் தரத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இவ்வகையில்,

  • குளத்தின் ஆழமற்ற பகுதியில் நீரின் ஆழம், குறைந்தது 120 செ.மீ. இருக்க வேண்டும். குளத்தில் மிதக்கும் பாசிகளை அகற்ற வேண்டும்.
  • உகந்த கார-அமில நிலையைப் பாரமரிக்க, சீரான இடைவெளியில் சுண்ணாம்பை இட வேண்டும்.
  • உகந்த கார அமிலநிலை வரம்பு, 7.5 முதல் 8.5 ஆகவும், தினசரி ஏற்ற இறக்கம் 0.05-க்குக் கீழேயும் இருக்க வேண்டும்.
  • அம்மோனியா, நைட்ரஜன் மற்றும் நைட்ரேட், எப்போதும், தீமை செய்யும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும்.
  • வளர்ப்புக் குளத்திலிருந்து மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில், மேல்நிலை அமைப்பு இருக்க வேண்டும்.
  • தகுந்த உணவளிப்பு முறை, சிறந்த நீர்த்தர மேலாண்மைக்கு முக்கியமாகும்.
  • மீன் அல்லது இறால் ஊட்டத்தைச் சரியாகப் பாரமரிக்க, உயிரியல் செயல்பாடுகளை வாரந்தோறும் மாதிரி மூலம் மதிப்பிட வேண்டும்.
  • கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு, லிட்டருக்கு 3 முதல் 10 மைக்ரோ கிராமுக்குள் இருக்க வேண்டும்.

உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள்

நோய்க்கிருமிகள் பண்ணைக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள், உப்புநீர் மீன் வளர்ப்பில் மிகவும் முக்கியம். இவ்வகையில், சிறந்த மீன் வளர்ப்பில் (Fish Farming) பின்பற்ற வேண்டிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பார்ப்போம்.

  • மீன்கள் மற்றும் இறால்களில் நோய்க் கிருமிகளைப் பரப்பும், பறவைகள் மற்றும் நண்டுகளைத் தடுக்கும் வகையில், பண்ணையைச் சுற்றி வேலியமைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு குளத்துக்கும் என, தனித்தனியாக உபகரணங்கள் இருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்து முன், குளோரின் கலந்த நீரில் கழுவ வேண்டும்.
  • நோய் அறிகுறிகள் உள்ள குளங்களை உடனடியாக மூடிச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பணியாளர்கள் பண்ணைக்குள் நுழையுமுன், சரியான பெட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவ வேண்டும்.
  • நீர்ப் பரிமாற்றம் மற்றும் குளத்துக்கு வேண்டிய நீரை எடுப்பதற்கென, தனிக்குளம் இருக்க வேண்டும்.
  • வளர்ப்புக் குளம், 120 செ.மீ.க்கு மேல் ஆழமாக இருந்தால், அழுத்தமும், நோய்ச் சூழலும் குறையும்.
  • வளர்ப்புக் குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால்களில் கசிவு இருக்கக் கூடாது.
  • சரியான ஊட்டத்தைப் பராமரிக்க, வாரந்தோறும் மாதிரிகளை எடுத்து உயிரிகளை மதிப்பிட வேண்டும்.
  • உயிரியல் பாதுகாப்புப் பற்றிய, தனி நபர்களின் சரியான புரிதல் மிகவும் முக்கியம்.

மீன் சுகாதார மேலாண்மை

மீன் சுகாதார மேலாண்மை என்பது, தனிமைப்படுத்தல், அடைக்குஞ்சுகள், இலார்வாக்கள் மற்றும் மீன் வளர்ப்புச் சுகாதாரக் கண்காணிப்பைச் செயல்படுத்துதல் ஆகும். இது, நோய்க் காரணியை ஆரம்பத்திலேயே கண்டறிவதைப் பொறுத்தது. சரியான நேரத்திலும், ஆரம்ப நிலையிலும் நோய்களைக் கண்டறிதல், சுகாதார மேலாண்மைக்கு உதவும்.

மீன் வளர்ப்பில் (Fish Farming) நோய்களைக் கண்டறிவதில், பலவகை நோயறிதல் முறைகள் பயன்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நோயறிதல் முறைகள், வழக்கமான நோய்க்கிருமிக் கண்காணிப்பு அல்லது சுகாதாரக் கண்காணிப்பில் பயன்படுகின்றன. உவர்நீர் மீன் வளர்ப்பு, கிராமியத் தொழிலாக இருப்பதால், நோய்களைக் கண்டறியும் வசதியும், நிபுணத்துவமும் குறைவாகவே உள்ளன.

மேலும், சில நோய்கள் விரைவாகப் பரவும். இவை, தொலைவிலுள்ள நோயறியும் முறைகளை மேற்கொள்ள அதிக நேரத்தைக் கொடுக்காது. இருப்பிலுள்ள மீன்களின் நடத்தை மற்றும் நோய் மருத்துவ அறிகுறிகள் மூலம், பண்ணையாளார்கள் அவற்றைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க, மேற்கூறிய அறிகுறிகள் உதவும்.

மீன்களில் நோயறிதலுக்கான நேரடிக் காட்சி ஆய்வு

மீன்களின் மருத்துவ நோய் அறிகுறிகளை; குளத்தின் அருகிலேயே நேரடிக் காட்சி முறையில் ஆய்வு செய்யலாம். பெரும்பாலான நேரங்களில், இந்த மருத்துவ நோய் அறிகுறிகள் ஒருசில நோய்களுக்குப் போதியளவில் இருப்பதில்லை என்றாலும், நோய்களைக் கண்டறியும் ஆரம்ப நிலைக்கு, இந்தத் தகவல்கள் அவசியமாக உள்ளன.

துல்லியமான மற்றும் கூர்நோக்குக் காட்சி ஆய்வு விவரங்கள்; சிறந்த செயல் திட்டத்தைத் தொடங்கி, இழப்புகள் அல்லது நோய்கள் மேலும் பரவுவதைக் குறைக்க வகை செய்யும். எடுத்துக்காட்டு: நோயுற்ற மீன்களை அழித்தல், தனிமைப்படுத்தல், சிகிச்சையளித்தல் அல்லது வளர்ப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்தல். அதாவது, உணவு முறை, இருப்படர்த்தி, குளத்தில் உரமிடுதல் முதலியன. இன்னும் உறுதியான நோயறிதல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் போது, மேற்கூறிய நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

நடத்தை

பண்ணையாளர்கள் அல்லது பணியாளர்கள், இருப்பிலுள்ள மீன்களைத் தினமும் கண்காணிப்பதன் மூலம் மாற்றம் ஏதும் ஏற்பட்டால், உடனே அதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும். இதில், உணவெடுப்பதில் ஏற்படும் மாற்றம், நீந்தும் தன்மை அல்லது இயல்புக்கு மாறாக மொத்தமாகக் கூடுதல் போன்ற மாற்றங்களை வைத்து அறியலாம். இந்த நடத்தை மாற்றங்கள் மூலம், நோய்த்தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதைச் சரியான நேரத்தில் கண்டறிய முடியும்.

இறப்புகள்

குளத்தில் ஏற்படும் இறப்புகள் ஒரே மாதிரி இருந்தால், உடனே ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் காரணிகளைச் சரி செய்ய வேண்டும். இறப்பானது, சீரற்று அல்லது ஆங்காங்கே ஏற்படுவதற்கு; குளத்தின் அமைப்பு அல்லது மீன்களின் நலத்தில் சிக்கல் இருக்கலாம். குளத்தில் பரவும் இறப்புகள், ஒரு நோய்த் தொற்றால் நிகழலாம். எனவே, உடனே மாதிரிகளை எடுத்து, நோய்க் காரணியைக் கண்டறிய வேண்டும்.

உணவளித்தல்

மீன்கள் அல்லது இறால்களின் உணவெடுப்பில் ஏற்படும் மாற்றங்கள், குடலில் தீவனம் இல்லாமை போன்றவை, நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும். வளர்ப்புக் குளத்தில் தீவனத்தை இட்ட பிறகு, மீன்களின் குடலில் தீவனம் இல்லாமல் இருப்பது; குறைவாக உணவளித்தல் அல்லது மீன்களின் உணவெடுக்கும் தன்மை குறைவதைக் குறிக்கும்.

நிறம்

இயற்கையான வளர்ப்பு மீன்கள் (Fish Farming) மற்றும் இறால்கள் நோயுறும் போது, அவற்றின் நிறம் மாறும். நோயுற்ற இறால்கள் சிவப்பாக இருக்கும். சில நேரங்களில் இறால்களின் தலைப்பகுதி மஞ்சளாக இருக்கும். மஞ்சள் தலை நோயுடன் தொடர்புள்ள இந்நோய், வைரஸ் கிருமியால் ஏற்படும். சில நேரங்களில் இறால்களின் கல்லீரல், நிறம் குறைந்து காணப்படும். இது, சுற்றுச்சூழல் அல்லது நச்சுத் தன்மையால் ஏற்படுவதாகும். நோயுற்ற மீன்கள் அடர் நிறத்தில் காணப்படும். மேலும், மீன்களின் இருப்பு அடர்த்தியால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, மீன்களின் இயல்பான நிறம் அடர் நிறமாக மாறும்.

வெளித்தோல் மென்மையாதல், புள்ளிகள் மற்றும் சேதமடைதல்

தோலுரிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இறால்களின் தோல் மென்மையாக இருப்பது, அவை நோயுற்று இருப்பதைக் குறிக்கும். இறால்களின் தோலில் ஏற்படும் சேதம் அல்லது காயங்கள். பாக்டீரிய மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு வகை செய்யும்.

மேலும், இந்த நோய்க் கிருமிகள், திசுக்களில் புகுந்து பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவற்றால், இறால்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். இறால்களின் வெளித்தோலில் வெண் புள்ளிகள் காணப்படும். இந்த அறிகுறி, வெண்புள்ளி நோயால் ஏற்படும்.

சுற்றுச்சூழல் காரணிகள்

சுற்றுச்சூழல் காரணிகளில், நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை, கலங்கல் தன்மை, கரைந்துள்ள உயிர்வாயு, முதன்மை உற்பத்தியாளர்களின் வளர்ச்சி (Fish Farming) ஆகியன, மிகவும் முக்கியமானவை. சுற்றுச்சூழல் காரணிகளின் உகந்த நிலைகளில் அல்லது அளவுகளில், படிப்படியாக ஏற்படும் மாற்றங்களைக் காட்டிலும், விரைவாக ஏற்படும் மாற்றங்கள், நோய்கள் உருவாகும் வாய்ப்புகளைத் தூண்டி விடும்.

எனவே, பண்ணையாளர்கள், குளத்தில் வளர்க்கும் மீன் அல்லது இறால்களுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் காரணிகளின் அளவுகளை, உகந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். குளத்தின் சுற்றுச்சூழல் காரணிகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள், இறாலின் நலத்தைப் பாதிப்பதில்லை. எனினும், இந்தச் சிறிய மாற்றங்கள், பல காரணிகளால் ஒரே நேரத்தில் ஏற்படும் போது, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


உவர்நீர் மீன் வளர்ப்பில் நோய்த்தடுப்பு முறைகள்!

முனைவர் தே.கவியரசு,

சு.சரவணன், வே.சந்தியா, செ.பொற்செல்வன், நீர்வாழ் உயிரின நோய் மேலாண்மைத்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி – 601 204.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

  • தொட்டியிலும் மீன் வளர்த்து வருமானம் பார்க்கலாம்!

  • உயிர்க் கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு!

  • பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

  • விரால் மீன் வளர்ப்பு!

  • மீன் வளர்ப்பில் தாதுகளின் அவசியம்!

  • நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

  • கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

  • உவர்நீர் மீன் வளர்ப்பு!