My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

டலூர் மாவட்டம், பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையம், 1989-இல் நிறுவப்பட்டது. இது முதலில், தமிழ்நாட்டின் இரண்டாவது ஆராய்ச்சி நிலையமாக 1905-இல் தொடங்கப்பட்டது. அப்போது முதல் 1950 வரை மணிலா ஆராய்ச்சி மையமாகவும், 1952 முதல் 1988 வரை, பல்வேறு சாகுபடிக்கான சோதனை மையமாகவும் செயல்பட்டது.

சுமார் 38 ஆண்டுகளாகப் பல பயிர்கள் ஆராய்ச்சி மையமாகவும், 45 ஆண்டுகளாக, மணிலா ஆராய்ச்சிக்கான சிறப்பு மையமாகவும் திகழ்ந்தது. 1989-இல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த மையம், பலா மற்றும் காய்கறி ஆராய்ச்சிக்கான முதன்மை ஆராய்ச்சி நிலையமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வகையில், இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம், பலாவில் நான்கு இரகங்கள், கத்திரியில் இரண்டு இரகங்கள், புடலை, சுரைக்காய், தண்டுக்கீரையில் தலா இரண்டு இரகங்கள், சாம்பல் பூசணி மற்றும் மிளகாயில் தலா ஒரு இரகம் வெளியிடப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி மூலம் வெளியிடப்பட்ட தொழில் நுட்பங்கள்

விதையில்லா நாவல் இரகங்களைக் கண்டறிந்து, நான்கு மரபணு வகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிந்தாமணி என்னும் நாவல் இரக மரத்தில், 100 பிபிஎம், 200 பிபிஎம், 300 பிபிஎம் ஜிப்ராலிக் அமிலம் வீதம் எடுத்து, மொட்டு வெடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளித்தால், விதையில்லாத பழங்கள் கிடைக்கும்.

பாலூர் 1, பாலூர் 2 கத்தரியில், 60, 90, 120 நாட்களில், 3 பிபிஎம், 10 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலம் வீதம் தெளித்ததில், 96.4 சதம் பூக்கும் தன்மையும், 5.2, மற்றும் 5.5 சதமாக விதைப் பிடிப்புத் தன்மையும் உயர்ந்தன.

புடலைப் பழங்களில் இருந்து எடுத்த விதைகளை, மணலில் தேய்த்தல் மற்றும் மண்ணில் உராய்வதன் மூலம், விதைகளின் எடையும், முளைப்புத் திறனும் உயர்ந்தன.

பல்கலைக்கழக ஆராய்ச்சித் திட்டங்கள்

ரூபாய் 35 இலட்சம் மதிப்பீட்டில் உயர் விளைச்சல் பலா இனங்களைக் கண்டறிந்து இனப்பெருக்கம் மையம் அமைக்கவும், பலாவில் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கவும் என, பலா மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு எக்டர் பரப்பளவில், 35 சிறிய பழங்கள், உயர் விளைச்சல் மற்றும் ஆரஞ்சு, சிவப்பு அடர் மஞ்சள் நிறங்களைக் கொண்ட பலா இரகங்களைச் சேகரித்து, ஒட்டுக் கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில், மரபணு வகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

புடலை மற்றும் சுரைக்காயில், விதைகளைப் பிரிக்கும் தொழில் நுட்பமும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுரைக்காயில், நீண்ட உருளை வடிவ இரகத்தையும், குட்டையான மற்றும் தடித்த இரகத்தையும் கண்டறிந்து வெளியிடுதல் தொடர்பான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்குத் தமிழகத்துக்கு ஏற்ற வகையில், கொத்தாகக் காய்க்கும் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகத்தைக் கண்டறியும் ஆய்வு நடைபெற்று வருகிறது. உள்ளூர் ஊதாக் கத்தரியின் காய்ப்புத் திறைன மேம்படுத்தி, உயர் இரகத்தை வெளியிடுதல், இந்த நிலையத்தின் பணியாகும்.

தரமான பலா, பாலூர்-1, பாலூர்-2, பாலூர்-3 ஒட்டுக் கன்றுகைள உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கும், தோட்டக்கலைத் துறைக்கும் அளிப்பது; தரமான மா, நாவல், கொய்யா மற்றும் அழகுச் செடிகளை இனப்பெருக்கம் செய்து வழங்குவது; இந்த நிலையத்தில் வெளியிடப்பட்ட காய்கறிகளின் விதைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவது, இந்நிலையத்தின் நோக்கமாகும்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

சாகுபடிப் பயிர்கள்

கத்தரி, மிளகாய், மிளகாய், கொடிவகைக் காய்கறிகள், பிறவகைக் காய்கறிகள், பலா, மா, கொய்யா, நாவல்.

வெளியிட்டுள்ள இரகங்கள்

» கத்தரி – பாலூர் 1 – 1990

» பலா – பாலூர் 1 – 1992

» மிளகாய் – பாலூர் 1 – 1994

» பலா – பாலூர் 2 – 2007

» புடலை – பாலூர் 1 – 2007

» கத்தரி – பாலூர் 2 – 2008

» புடலை – பாலூர் 2 – 2009

» தண்டுக்கீரை பாலூர் 1 – 2013

» சுரைக்காய் – பாலூர் 1 – 2017

» சுரைக்காய் – பாலூர் 2 – 2019

» பலா – பாலூர் 3 – 2020

» வெண்தண்டுக்கீரை – பாலூர் 2 – 2024

» சாம்பல் பூசணி – பாலூர் 1 – 2025

பாலூர் கத்தரி-1

  • 1990-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • உள்ளூர் நாக்பூர் நகரத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 25 டன் காய்களைத் தரும்.
  • காய்கள் மினுமினுப்பாக ஊதா நிறத்தில் இருக்கும்.
  • கொத்தாகக் காய்க்கும் தன்மை மிக்கது.
  • காய்கள், 8-12 நாட்கள் வாடாமல் இருக்கும்.

பாலூர் கத்தரி-2

  • 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • திருச்சி மாவட்டம், செவந்தம்பட்டி கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • காய்கள் முட்டை வடிவில், கருநீலம் மற்றும் பிங்க் நிறத்தில் மினுமினுப்பாக இருக்கும்.
  • எல்லா வகையான சமையல் தயாரிப்புக்கும் உகந்தது.
  • அனைத்துப் பருவங்களுக்கும், வடகிழக்கு மண்டலத்துக்கும் ஏற்ற இரகம்.
  • தண்டுத் துளைப்பான், காய்த் துளைப்பான் தாக்குதல்களுக்கு மிதமான எதிர்ப்புள்ள இரகம்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

பாலூர் மிளகாய்-1

  • 1994-இல் கண்டாங்காடு பகுதியிலிருந்து தனிவழித் தேர்வு மூலம் வெளியிடப்பட்ட இரகம்.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 18 டன் மிளகாயைத் தரும்.
  • பச்சை மிளகாய் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படும்.
  • உவர் நிலத்துக்கு ஏற்ற இரகம். 8-10 முறை காய்களைப் பறிக்கலாம்.
  • டிசம்பர் – ஜனவரி பருவத்தில் பயிரிடலாம்.

பாலூர் புடலை-1

  • 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம்.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 40 டன் மகசூலைத் தரும்.
  • தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கும், வர்த்தகத்துக்கும் உகந்த இரகம்.
  • காய்கள் வெண்ணிறத்தில் கவர்ச்சியாக இருக்கும்.
  • கொடிகள் அதிகளவில் சுற்றாமல் இருக்கும்.
  • காய்களில் வாசம் குறைவாக இருக்கும்.

பாலூர் புடலை-2

  • 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 35 டன் மகசூலைத் தரும்.
  • காய்கள் தடித்தும், செழிப்பாகவும், வெண்ணிறத்தில் கவர்ச்சியாகவும் இருக்கும்.
  • அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். வடகிழக்கு மண்டல சாகுபடிக்கு ஏற்றது.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

பாலூர் சிறுகீரை-1

  • 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • முதன் முதலில் அறிமுகமாகிய சிறுகீரை இரகம்.
  • திருவண்ணாமலையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம்.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 8-9 டன் மகசூலைத் தரும்.
  • 20-21 நாட்களில் அறுவடை செய்யலாம்.
  • நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த, ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களைக் கொண்டது.
  • அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். வடகிழக்கு மண்டல சாகுபடிக்கு ஏற்றது.

பாலூர் வெள்ளைத் தண்டுக்கீரை-2

  • 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • திருவதிகை கிராமத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • 50 நாட்கள் பருவம் கொண்டது.
  • ஆடி மற்றும் தைப்பட்ட சாகுபடிக்கு உகந்தது.
  • எக்டருக்கு 43 டன் மகசூலைக் கொடுக்கும்.
  • முளைக்கீரையாகவும் தண்டுக் கீரையாகவும் அறுவடை செய்யலாம்.
  • முப்பது நாட்களில் எக்டருக்கு 10 டன் முளைக்கீரை கிடைக்கும்.
  • ஐம்பது நாட்களில் எக்டருக்கு 33 டன் தண்டுக்கீரை கிடைக்கும்.
  • அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 62 டன் கீரை கிடைக்கும்.
  • கோ-1 இரகத்தை விட 13% அதிக மகசூலைக் கொடுக்கக் கூடியது.
  • உள் முற்றம் அல்லது வீட்டு நிலங்களில் சாகுபடி செய்ய ஏற்றது.
  • நூறு கிராம் கீரையில், 69 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டினாய்டுகள் இருக்கும். சூப் மற்றும் நூடுல்ஸ்களில் சத்துமிகு உணவாக, குழந்தைகள் விரும்பும் சுவையில் இருக்கும்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

பாலூர் சுரைக்காய்-1

  • 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • சாலட் தயாரிக்க உகந்தது, சத்து மிகுந்தது.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 4 டன் மகசூலைத் தரும்.
  • அனைத்து வகையான சமையல்களுக்கும் ஏற்றது.
  • பயிரின் காலம் 130-135 நாட்கள்.
  • காய், நடுத்தர நீளத்தில் 450 கிராம் எடையில் இருக்கும்.
  • சாம்பல் நோய்த் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் மிக்கது.

பாலூர் சுரைக்காய்-2

  • 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியிலிருந்து உள்ளினத் தேர்வு மூலம் வெளியிடப்பட்ட இரகம்.
  • காய், உருளை வடிவத்தில் பாரம்பரிய இரகத்தைப் போலிருக்கும்.
  • காய், சிறிய கழுத்து மற்றும் வரிகளற்ற இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • ஒரு கொடியிலிருந்து 12-15 காய்கள் கிடைக்கும்.
  • சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் மிக்கது.
  • இந்த உயர் விளைச்சல் இரகம், எக்டருக்கு 42 டன் மகசூலைத் தரும்.

பாலூர் சாம்பல் பூசணி-1

  • 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • அயன்பனைப்பாக்கம் உள்ளூர் இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்றது.
  • ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை மிக்கது.
  • இந்த இரகம் ஆண்டுக்கு எக்டருக்கு 21 டன் மகசூலைத் தரும்.
  • நகர்ப்புற மாடித் தோட்டங்களுக்கு ஏற்ற இரகம்.
  • காய், சிறியளவில் 350 கிராம் இருக்கும். சுவைமிகு பச்சடிக்கு உகந்தது.
  • நூறு கிராம் காயில், 51 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டின் இருக்கும்.
  • சாம்பல் பூசணியின் ஒவ்வா வாசனையற்றது. விதைகள் குறைந்தும், சதைப்பற்று மிகுந்தும் இருக்கும்.
  • கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிட ஏற்ற இரகம்.

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

பாலூர் பலா-1

  • 1992-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • பனிக்கன்குப்பத்தில் இருந்து ஒட்டுக்கன்று முறையில் தேர்வு செய்யப்பட்ட இரகம்.
  • ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கும் திறன் மிக்கது.
  • பருவம்: ஏப்ரல்-ஜூன், நவம்பர்-டிசம்பர்.
  • இந்த உயர் விளைச்சல் இரக மரம், 80 பழங்களைக் காய்க்கும்.
  • பலாச்சுளை, கவர்ச்சியான மஞ்சள் நிறத்தில், இனிப்புச் சுவையில் இருக்கும்.
  • வீட்டுத்தோட்ட சாகுபடிக்கும், அடர் நடவு முறைக்கும் ஏற்றது.

பாலூர் பலா-2

  • 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • பத்திரக்கோட்டை கிராமத்திலிருந்து தனித்தேர்வு மூலம் வெளியிடப்பட்ட இரகம்.
  • நடுத்தர உயரமுள்ள இம்மரம், 107 பழங்களைக் காய்க்கும்.
  • அடர் நடவுக்கு ஏற்ற இரகம்.
  • சுளைகள், பிசுபிசுப்பு இல்லாமல், இனிப்புச் சுவையில் இருக்கும்.
  • நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம்.

பாலூர் பலா-3

  • 2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம்.
  • பிசின் அல்லது பால் அற்றது.
  • உயர் விளைச்சலைத் தரக்கூடிய இம்மரம், 212 பழங்களைக் காய்க்கும்.
  • பழங்கள் சிறியளவில், ஐந்து கிலோ எடையில் இருக்கும்.
  • நகர்ப்புறங்களில் இருக்கும் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது.
  • பழங்கள், பாலற்ற, பிசுபிசுப்பற்ற நிலையில் இருக்கும்.
  • சுளைகளை எளிதாக எடுக்கலாம்.
  • பழத்தில், இரும்புச்சத்து மிகுதியாக இருக்கும். நூறு கிராம் பழத்தில், 28 மி.கி. இரும்புச் சத்தும், 6.37 மி.கி. துத்தநாகமும் இருக்கும்.
  • கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.

மேலும் விவரங்களுக்கு: முனைவர் கு.காயத்ரி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர்- 607 102. தொலைபேசி: 04142-275222, email: hrspalur@tnau.ac.in


பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

முனைவர் கு.காயத்ரி,

முனைவர் இரா.லெனின், முனைவர் கோ..சுதாகர் ராவ், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். முனைவர் க.வெங்கடேசன், முதன்மையர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!