தர்ப்பூசணி சாகுபடி விவசாயிகள், அதிக மகசூலைப் பெறுவதற்காக, உரத்தையும், பூச்சி மருந்தையும் மற்றும் பாசனத்தையும் பயன்படுத்தி, கடும் மகசூல் பாதிப்பை அடைவதைப் பார்க்கிறோம். எனவே, பரிந்துரைப்படி உரம், குறிப்பாக, முடிந்தவரை உரப்பாசனம், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு, நுனிக்கிள்ளுதல், ஊடுபயிர் சாகுபடி, தேவைக்கேற்ற பாசனம், முறையாகச் சேமித்தல் முதலிய உத்திகள் மூலம், அதிக மகசூலைப் பெறலாம்.
நீர்த் தேங்காத வளமான மண்ணில் தர்ப்பூசணி நன்கு வளரும். கார அமிலத் தன்மை 5 வரை உள்ள நிலத்திலும் தர்ப்பூசணியைப் பயிரிடலாம். ஆனால், தர்ப்பூசணி அதிகப் பனியைத் தாங்காது. மித வெப்பம், அளவான ஈரப்பதம், நல்ல சூரிய ஒளி இருந்தால், தர்ப்பூசணி சிறப்பாக வளரும். காய்கள் பழங்களாக மாறும் போது, வெப்பநிலை அதிகமாக இருப்பின், இனிப்புச்சுவை கூடுதலாக இருக்கும். எனவே, ஜனவரி பிப்ரவரி, ஜூன் ஜூலையில் தர்ப்பூசணியைப் பயிரிட வேண்டும்.
ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 1,200-1,400 கிராம் விதைகள் தேவைப்படும். அவற்றைக் குழித்தட்டு முறையில் வளர்த்தால், ஏக்கருக்கு 5,800-6,000 நாற்றுகள் கிடைக்கும். மண்பரிசோதனை முடிவின்படி உரங்களை இட வேண்டும். அடியுரமாக, ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் அல்லது 5 டன் மண்புழு உரம் தேவை. இது, தழைச்சத்துத் தேவையைச் சரி செய்யும்.
நடவு நிலத்தில் 2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்து, அவற்றில் ஒரு மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல, உயரத்தில் குழிகளை எடுக்க வேண்டும். அவற்றில், குழிக்கு 100 கிராம் தொழுவுரம், 80 கிராம் வீதம் அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாவை இட்டு, செடிகளை அல்லது விதைகளை நடலாம். குழிக்கு 80 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் வீதம் இட வேண்டும்.
தர்ப்பூசணியில் இரு இலைப் பருவத்தில், எத்ரல் வளர்ச்சி ஊக்கியை, 10 லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதனை ஒருவார இடைவெளியில் 3 முறை தெளித்தால், காய்படிப்புத் திறன் 5-7 சதவீதம் அதிகமாகும். இதற்கு முக்கியக் காரணம், பெண் பூக்களின் எண்ணிக்கை கூடுவது தான்.
மேலுரமாக, பயிர் முளைத்த 40 நாள் முதல், ஒரு வார இடைவெளியில் மூன்று முறை, நீரில் கரையும் 13:0:45 உரத்தையும், 0:0:50 உரத்தையும், ஒரு லிட்டர் நீருக்குத் தலா 5 கிராம் வீதம் கலந்து தெளித்தால், 10 சதவீதம் வரை மகசூல் கூடும்.
சிவப்புப் பூசணி வண்டைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் கார்பரில் 50% தூள் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தேமல் நோயைத் தடுக்க, அதைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் அசிப்பேட் அல்லது இரண்டு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. இமிடாகுளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோயைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் அல்லது 2 கிராம் மேன்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தாமிரப் பூசணக்கொல்லி மற்றும் லிண்டேன் மருந்தைப் பயன்படுத்தவே கூடாது. தர்ப்பூசணியைச் சேமிக்கும் இடத்தில், ஆப்பிள் மற்றும் வாழைப் பழங்களைச் சேர்த்து வைக்கக் கூடாது.
கொடிகள் பூக்கும் போதும், காய்கள் உருவாகும் போதும், கொடிகள், இலைகள் மற்றும் காய்களில் பாசனநீர் படக்கூடாது. இதுதான் நோய்கள் வருவதற்கான மூல காரணமாகும். பல நாட்கள் பாசனம் செய்யாமல், மண்ணின் ஈரத்தன்மை மிகவும் குறைந்த நிலையில், திடீரென்று நீரைப் பாய்ச்சினால், காய்களில் வெடிப்பு ஏற்டும். அதைப் போல, பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது பாசனம் செய்தால், பழங்களை வண்டியில் ஏற்றும் போது, பழங்களில் வெடிப்பு ஏற்படும்.
இயற்கை வேளாண்மை உத்தியாக, வேப்பம் புண்ணாக்கை உரமாக இடலாம், வேப்பம் புண்ணாக்கைக் கரைசலாகத் தெளிக்கலாம், ஏக்கருக்கு 2 லிட்டர் வரை, சுத்தமான வேப்ப எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
தர்ப்பூசணியை ஊடுபயிராகப் பயிரிடலாம். அதாவது, செடி முருங்கை, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு இடையில் இணைப் பயிராகத் தர்ப்பூசணியைப் பயிரிடலாம்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

