My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

மிழகச் சட்டப் பேரவையில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, 6.8.2026 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தாக்கல் செய்தார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை என்பதால், இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள், விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

மொத்த நிதி ஒதுக்கீடு

வேளாண் திட்டங்களுக்காக நடப்பாண்டில் மொத்தம் ரூ.58,374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர் நலன், விவசாயிகளின் வருமான உயர்வு, நீர்வள மேம்பாடு, இயற்கை வேளாண்மை, வேளாண் வணிகம் ஆகியவற்றுக்கு இந்த அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியை எட்ட இலக்கு

நடப்பாண்டில் 125 இலட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டவும், அடுத்த 5 ஆண்டுகளில் இதை 131 இலட்சம் டன்னாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியத் திட்டங்களாவன:

மண்வளப் பாதுகாப்பு

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவது, மண்வளத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை, மண்வளப் பாதுகாப்பு, நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மண்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், ரூ.600 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளுக்கான மண்வளப் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், மண்ணின் தரத்தை மேம்படுத்துதல், மண்வளத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்ம வேளாண்மைக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், இயற்கை வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளை இயற்கை வேளாண்மையைத் திருப்பும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ட்ரோன் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம்

வேளாண்மையில் ட்ரோன் தொழில் நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 500 பேருக்கு ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட உள்ளது. வெற்றி வான்மகள் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 100 பெண்கள் உள்ளிட்ட 500 பேருக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் பயிற்சி வழங்கப்படும்.

மேலும், பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவும்.

உலகளவில் சந்தைப்படுத்துதல்

தமிழக விவசாயிகளின் விளைபொருள்களை உலகளவில் சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் 4 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் மூலம் 1,000 விவசாயிகளை சர்வதேசச் சந்தையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்குக் கூடுதல் சந்தை வாய்ப்புகளைப் பெறுவதுடன், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

வேளாண் காடுகள் திட்டம்

வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்த, மாநில அரசுகளின் பங்களிப்பாக, 17.70 கோடி ரூபாயில், 12,500 ஏக்கர் தரிசு நிலங்கள் மீட்கப்பட்டு, ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேக்கு, மகோகனி, சந்தனம், மலைவேம்பு, செம்மரம் போன்ற பொருளாதார மதிப்புமிக்க மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

சான்று விதைகளுக்கு முக்கியத்துவம்

சான்று விதைகளைப் பயன்படுத்தினால், 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதற்காக, 250 கோடி ரூபாயில், 43,400 டன், நெல், சிறுதானியங்கள், பயறு, எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற சான்று விதைகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அவற்றை, தமிழக விதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்து, 10 இலட்சம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த மானியம்

பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விரட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, 1.35 கோடி ரூபாய் மதிப்புள்ள திரவ வடிவிலான காட்டுப்பன்றி விரட்டியை வழங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

மின்வேலி மானியம்

வன விலங்குகளான யானை, காட்டெருமை மற்றும் மான்களிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, 134 விவசாயிகளுக்கு, 2 கோடி ரூபாயில் சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

தார்ப்பாய் திட்டம்

விளைபொருள்களை மழையிலிருந்து பாதுகாக்கவும், வெயிலில் உலர்த்தவும், 10 கோடி ரூபாயில், 43,500 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

வேளாண் விரிவாக்க மையம்

அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில், திருவண்ணாமலை, காட்பாடி, குடியாத்தம், முசிறி, நரிக்குடி, போடிநாயக்கனுார், கயத்தாறு, தொண்டாமுத்துார் ஒன்றியங்களில், மத்திய, மாநில அரசுகளின் நிதியான, 27.82 கோடி ரூபாயில், 300 டன் கொள்ளளவு உள்ள சேமிப்புக் கிடங்குடன் கூடிய, எட்டுப் புதிய வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

விவசாயக் கண்காட்சி

நவீனத் தொழில் நுட்பங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், வேளாண் இயந்திரங்கள், இயற்கை வேளாண்மை, வருவாய்ப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 3 கோடி ரூபாயில் வேளாண்மைக் கண்காட்சி நடத்தப்படும்.

விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள்

சேலம் மாவட்டம் கங்கவல்லி, துாத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு ஆகிய இடங்களில் தலா 250 டன் கிடங்குடன் கூடிய, விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

விதைக்கரும்பு மானியம்

விதைக்கரும்பு மானியத் திட்டத்தின் கீழ், இயந்திர அறுவடைக்கு உகந்த அகலப்பார் முறையில், 17,315 ஏக்கரில் கரும்பு நடவு செய்யும் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் நாற்றுகள் வழங்க, 9.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

எத்தனால் ஆலை

செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு சார்பில், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒவ்வொரு நாளும், 100 கிலோ லிட்டர் எத்தனால் உற்பத்தி வடிப்பாலை அமைக்க, 20 இலட்சம் ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நுண்ணீர்ப் பாசனத் திட்டம்

மத்திய, மாநில அரசுகளின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில், 2 இலட்சத்து 2,794 ஏக்கரில், 95,000 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், 100 சதவீதம் மானியமும், மற்றவர்களுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்க, 785 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பனைப் பாதுகாப்பு இயக்கம்

பனைப் பாதுகாப்பு இயக்கம் மூலம், பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், பனை மற்றும் பனைப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், பனைப் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். பனை மரங்களை வெட்டுவதை முறைப்படுத்தவும், பனைவளத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பனைப் பொருள்களின் மதிப்புக் கூட்டலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பனைப் பொருள்கள் தயாரிப்புக் கூடங்கள், பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கு 2.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வெற்றி இல்லத்தரசித் திட்டம்

வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டத்தின் கீழ், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வீடுகளில், நஞ்சற்ற காய்கறி, பழங்களை உற்பத்தி செய்ய, செடி வளர்ப்புப் பைகள், நீரியல் தோட்ட அமைப்புகளுக்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தளிர் கீரைகள் வளர்ப்புத் திட்டம்

தளிர் கீரைகள் திட்டத்தின் கீழ், முதிர்ந்த செடிகளை விட, 40 மடங்கு சத்துமிக்க, மூன்று வார தளிர் கீரைகளை வளர்க்க, சென்னை, கோவை, திருச்சி நகரங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில் திட்டம்.

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

சாமந்தி விளக்குத் திட்டம்

சாமந்தி விளக்குத் திட்டத்தின் கீழ், சாமந்தி பூக்கும் பருவத்தில், சூரிய ஒளி மாற்றத்தால், விதைகளின் தரம் குறைகிறது. எனவே, பூக்கும் தருணத்தை, சந்தையின் தேவைக்கு ஏற்ப மாற்றும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

நஞ்சில்லா வேளாண்மை

நஞ்சால் ஏற்றுமதி பாதிக்கப்படுவதால், மா, கொய்யா, தக்காளி, முருங்கை, சின்ன வெங்காயத்தை குழுவாகப் பயிரிடும் விவசாயிகளுக்கு, 3,000 ஏக்கரில் நஞ்சில்லா வேளாண்மையை ஊக்குவித்து, ஏற்றுமதி இணைப்பு வசதிகளை ஏற்படுத்த, 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னை விவசாயம்

தென்னை விவசாயத்தை வளப்படுத்தும் வகையில், 86,000 ஏக்கர் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தும் விதமாக, 6.20 கோடி ரூபாயில் தென்னை டானிக், 1 கோடி ரூபாயில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் வழங்கப்படும். ஆழியாறு நகர், கண்ணம் பாளையம், வைகை அணை, தேவதானம், புத்தளம் ஆகிய இடங்களில், ஐந்து புதிய தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்

புதிதாக 200 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதில் உள்ளவர்களுக்கு, சமபங்கு மானியமாக, முதல் ஆண்டில் 2,000 ரூபாய், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டில் தலா 1,500 ரூபாய் என, மொத்தம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு, நடப்பாண்டில் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பெங்களூரா மாம்பழத்துக்கு மானியம்

பெங்களூரா மாம்பழத்துக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, இனிவரும் காலங்களில், பெங்களூரா மாம்பழத்துக்கு மானியம் வழங்கப்படும்.

நீல பசுமை தோட்டக்கலைப் பூங்கா

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், உவர் நீருக்கு மேல் இருக்கும் நன்னீரைப் பயன்படுத்தி, தோட்டக்கலைப் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில், நீல பசுமை தோட்டக்கலைப் பூங்காக்கள் அமைக்கப்படும். நன்னீர்ச் சேமிப்புக் கிணறுகள் அமைக்க, 10 விவசாயிகளுக்கு தலா, 1.50 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம்

தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம், 23 கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்படும். இப்பணிகளுக்கு, 5.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சேமிப்புக் கிடங்குகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், தலா 1,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள். காஞ்சிபுரம், திருச்சி, துாத்துக்குடி மாவட்டங்களில், தலா 500 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

நம்மாழ்வார் பெயரில் கல்லூரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், 10 கோடி ரூபாயில் வேளாண் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையமாகத் தரம் உயர்த்தப்படும். தஞ்சாவூர் மாவட்டம், சாக்கோட்டையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில், புதிய இயற்கை வேளாண்மை பட்டயக் கல்லுாரி அமைக்கப்படும்.

இயற்கை வேளாண்மை மற்றும் நவீன வேளாண் தொழில் நுட்பம் தொடர்பான கல்வியை வழங்குவதுடன், விவசாயத் துறைக்குத் தேவையான திறன்மிகு மாணவர்களை உருவாக்கும் நோக்கில் இந்தக் கல்வி நிறுவனம் செயல்படும்.

தொழில்நுட்ப மையங்கள்

ஏற்றுமதிக்கேற்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கான தொழில் நுட்ப மையங்கள், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும். முதல் கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில், மா தொழில் நுட்ப மையம், இராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மிளகாய் தொழில் நுட்ப மையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் தொழில் நுட்ப மையம் ஏற்படுத்தப்படும்.

கோழிக்கழிவு உரம் திட்டம்

தமிழகக் கோழிப் பண்ணைகளில், தினமும் 5,400 முதல் 6,700 டன் வரை கோழிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. நாமக்கல், சேலம், கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகளை உலர்த்தி, பொடியாக்கி, உர உருண்டைகள் தயாரிக்கப்படும். இதற்கான பணிகள், சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

பால் பண்ணை அமைக்கும் திட்டம்

குறு, சிறு பால் உற்பத்தியாளர்களிடம் பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்க, தலா ஐந்து கால்நடைகள் கொண்ட, 500 நடுத்தரப் பால் பண்ணைகளை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, 25 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். 5,000 சிறிய பால் பண்ணைகளை அமைக்க வட்டி மானியம் வழங்கப்படும்.

வெங்காயச் சேமிப்புக் கிடங்கு

வெங்காய விலை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. 2026-27-ஆம் ஆண்டில் 57 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட வெங்காயச் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க, ரூ.22 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம், தேவையான காலம் வரை வெங்காயத்தைச் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியும்.

பயிர்க்கடன்

தமிழகத்தில் நடப்பாண்டில் 17,000 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு, 3,000 கோடி ரூபாய் மூலதனக் கடன் வழங்கப்படும். விவசாய நிலமற்ற பட்டியல் இனத்தவருக்கு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வாங்க, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்படும்.

வெற்றி விவசாயி விருது

அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், வெற்றி விவசாயி விருது வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட பயிர்களில், அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்படும்.


-மு.உமாபதி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?