முட்டைக்கோழி என்பது, 19-72 வார இடைவெளியில் வளர்க்கப்படும் கோழியாகும். முட்டைப்பருவக் கோழிகள் 19-வது வாரத்திலிருந்து முட்டை இடுவதற்குத் தயாராகி விடும். நன்கு வளர்ச்சியடைந்த, அதாவது, 1,250-1,300 கிராம் எடையுள்ள இளம் முட்டைக் கோழிகளைக் கவனத்துடன் பராமரித்து வந்தால், முட்டை உற்பத்திச் சீராக இருந்து, அதிக வருமானம் கிடைக்க வழி வகுக்கும்.
ஆழ்கூள முறையில் முட்டைக்கோழிப் பராமரிப்பு
முட்டைக்கோழி வீடு தயாரிப்பு: 19-வது வார ஆரம்ப நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த கோழிகளை, முட்டையிடும் வீட்டுக்கு (Layer House) மாற்றுவதற்கு முன், 2 வார இடைவெளியில், வீட்டிலுள்ள ஆழ்கூளத்தளம், கம்பிவலை, மேற்கூரை, பக்கச் சுவர், உபகரணங்கள், தீவனத்தட்டு, குடிநீர்த்தட்டு ஆகியவற்றைச் சரி செய்து வைத்திருக்க வேண்டும். கிருமிநாசினிக் கலவையைப் பண்ணையின் உள்ளும் புறமும் நன்றாகத் தெளித்து, பண்ணையை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
இடவசதி: 19 வாரத்துக்கு மேல் ஒவ்வொரு கோழிக்கும் 2 சதுரடி இடவசதி தேவைப்படும்.
தீவனத்தட்டு (Feeder): ஒவ்வொரு கோழிக்கும் தீவன இடவசதி 5 அங்குலம் தேவைப்படும். வட்ட வடிவத் தீவனத்தட்டு (Circular Feeder) மற்றும் தானியங்கித் தீவனத்தட்டைத் (Automatic Feeder) தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
முட்டைப்பருவக் கோழிகளுக்கு, முட்டைக்கோழித் தீவனத்தைப் (Layer Mash) போதியளவில் கொடுக்க வேண்டும். இதில், 18 சதம் புரதமும், 2,700 கி.கலோரி எரிசக்தியும் இருக்கும். ஒரு நாளைக்கு 4 முறையெனத் தீவனத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கோழியும் முட்டையிடும் பருவத்தில், ஒரு நாளைக்கு 100-120 கிராம் தீவனத்தை எடுத்துக் கொள்ளும்.
முட்டை உற்பத்தி படிப்படியாகக் குறையும் காலத்தில், அதாவது, 60 வாரத்துக்கு மேல், ஒரு நாளைக்கு 130-150 கிராம் தீவனத்தை எடுத்துக் கொள்ளும். அப்போது, ஒரு நாளைக்கு மூன்று முறை தீவனம் கொடுத்தால் போதுமானது.
தண்ணீர்த் தட்டு (Waterer): 16 அங்குல விட்டமுள்ள வட்ட வடிவ அலுமினிய அல்லது பிளாஸ்டிக் தட்டுகள், 100 கோழிகளுக்கு 4 வீதம் தேவைப்படும். ஒரு கோழிக்கு 1.5 அங்குல நீர் இருந்தால் போதும்.
செயற்கை ஒளி (Lighting): முட்டைப்பருவ ஆரம்ப நாளிலிருந்து வளரும் பருவத்தில் கொடுக்கப்பட்ட செயற்கை வெளிச்சத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலாக 1 மணி நேரம் செயற்கை ஒளி கொடுக்க வேண்டும். பிறகு, படிப்படியாக வாரம் ஒரு மணி நேரம் வீதம் கூட்டி, 24 வாரத்தில் 16 மணி நேரம் ஒளி கொடுக்க வேண்டும்.
முட்டைப்பெட்டி (Nesting Box): 5 அடி நீளம், 2 அடி அகலமுள்ள இப்பெட்டிகளை 25 கோழிகளுக்கு ஒன்று வீதம் எடுத்து, தரையிலிருந்து 1.5 அடி உயரத்தில் பொருத்த வேண்டும். முட்டைப் பெட்டிக்குள் முட்டைகள் உடைவதைத் தவிரக்க, மென்மையான ஆழ்கூளப் பொருள்களை இட வேண்டும்.
காற்றோட்ட வசதி: முட்டைக்கோழிகளைக் கூண்டுகளில் (Layer cage) வளர்க்கும் போது, சுற்றுபுறச் சூழ்நிலையைத் தூய்மையாக வைத்திருந்தால், முட்டை உற்பத்தி அதிகரிக்கும். கோடையில், பண்ணைக்குள் குளிர்ச்சியும் காற்றோட்டமும் ஏற்படுவதற்கு, நிழல் தரும் மரங்களைப் பண்ணையின் ஓரப்பகுதியில் வளர்க்க வேண்டும்.
மேலும், வெளிக்காற்றின் வெப்பநிலையைத் தணிப்பதற்கு, பண்ணைக்கு வெளியே பசும்புல் தரையைப் பராமரிக்க வேண்டும். இதனால், கோழிகளுக்குக் குளிர்ந்த காற்று எளிதில் கிடைக்கும். குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் ஈரக்காற்றின் வேகத்தைத் தடுக்க, பக்கவாட்டுக் கம்பி வலையின் மீது, கெட்டியான கோணிப்பைகளைக் கட்டித் தொங்கவிட வேண்டும்.
மேலும், அருகிலுள்ள மரக்கிளைகளை வெட்டிவிட வேண்டும். மழைநீர்த் தேங்காத வகையில், வெளிப்பரப்பைச் சீரமைக்க வேண்டும். இப்படிச் செய்தால், பண்ணைக்குள் சுகாதாரமான சூழ்நிலை உருவாகும்.
முட்டை உற்பத்தி: கோழிகளின் 19 வார வயதிலிருந்து முட்டை உற்பத்தி, படிப்படியாகக் கூடும். 22-வது வாரத்தில் 50 சதம், 23-வது வாரத்தில் 70 சதம் மற்றும் 24-25-வது வாரத்தில் 90 சதவீதம் முட்டை உற்பத்தி இருக்கும். 28-வது வாரத்துக்கு மேல் முட்டை உற்பத்தி 90 சதத்துக்கு மேல் இருக்கும். இது, தொடர்ந்து 45-வது வாரம் வரை நீடிக்கும்.
45-வது வாரத்துக்குப் பிறகு, முட்டை உற்பத்தியில் சீரான தொய்வு ஏற்படும். 62-வது வாரத்தில் 80 சதம், 67-வது வாரத்தில் 75 சதம் மற்றும் 70-வது வாரத்துக்குப் பிறகு 60 சதவீதம் இருக்கும். முட்டை உற்பத்தி 60 சதமாக வரும் போது, தொடர்ந்து வளர்ப்பது இலாபம் தராது என்பதால், முட்டைக் கோழிகளை விற்று விட வேண்டும்.
முட்டைகள் சேகரிப்பு (Egg Collection): கூண்டின் அடிப்பகுதியோடு இணைந்த சாய்வான பகுதியிலிருந்து முட்டை உருண்டு வந்து, அதற்கான பாதையில் (Egg Channel) வந்து நிற்கும். இப்பகுதியில் முட்டைகளைச் சேகரிப்பது எளிதாக இருக்கும். கோழிகள் பெரும்பாலும் காலை 9 முதல் மாலை 3 மணிக்குள் 90 சதவீத முட்டைகளை இட்டு விடும்.
தினமும் 3-4 முறை முட்டைகளைச் சேகரிக்க வேண்டும். மீதமுள்ள 10 சதவீத முட்டைகளை, மாலை 5 மணிக்குள் இட்டு விடும். எனவே, முட்டைகள் சேகரிப்பை, காலை 7.30 மணி, 9.30 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 5 மணிக்கு மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில், பண்ணையில் முட்டை உற்பத்தியைக் கணக்கிடும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கூண்டு முறையில் முட்டைக்கோழிப் பராமரிப்பு
முட்டைக்கோழிக் கூண்டுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அவையாவன:
- 45 செ.மீ x 30 செ.மீ – 3 கோழிகள்
- 45 செ.மீ x 40 செ.மீ – 4 கோழிகள்
- 50 செ.மீ x 35 செ.மீ – 4 கோழிகள்
- 55 செ.மீ x 45 செ.மீ – 5 கோழிகள்
- 60 செ.மீ x 37.5செ.மீ – 5 கோழிகள்
ஈரடுக்கு, மூன்றடுக்கு முறைகளில் கூண்டுகளை அமைத்து, ஒரே வரிசையில் நூற்றுக்கணக்கான கூண்டுகளைப் பொருத்தலாம். இப்படி, ஒவ்வொரு பண்ணையிலும் நீளவாக்கில் 3 அல்லது 5 வரிசைகளில் பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வரிசைக்கும் இடையேயான நடைபாதை இடைவெளி 3-4 அடி இருக்கும். கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் எச்சம் காற்றினால் எளிதில் உலர்ந்து விடும். இதிலிருந்து கிடைக்கும் எரு, தரமிக்கதாக, சுத்தமானதாக இருக்கும்.
இறகு உதிர்தல்: அறுபது வாரங்களைக் கடந்த முட்டைக்கோழிகளில் இறகுகள் உதிரும். இதனால், முட்டை உற்பத்தி சற்றே குறையும். இதைத் தடுப்பதற்கு, அதிகளவு புரதச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமன் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை நீரில் கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
அதிகளவில் முட்டையிடும் கோழிகளைக் கண்டறிதல்
தரமான முட்டைக்கோழி
- வீரியமாக, சுறுசுறுப்பாக, தசைப்பற்றுடன் இருக்கும். இறகுகள் தேய்ந்து மடங்கி மங்கியிருக்கும்.
- இறகு வளர்ச்சி நெருக்கமாகவும், அடர்ந்தும் இருக்கும். இறகுகள் நீண்ட நாட்கள் கழித்து, குறுகிய காலத்தில் உதிர்ந்து வளர்ந்து விடும்.
- தோல், மென்மையாக, வெதுவெதுப்பாக இருக்கும். தோலுக்கடியில் கொழுப்பு அதிகமாக இருக்காது. வயிற்றுப்பகுதி பருத்து விரிந்திருக்கும்.
- கண்கள் பெரிதாக, விழிப்புடன், சுறுசுறுப்பாக இருக்கும். தலை அழகாக, கொண்டைப்பூ மடங்கி, பருத்து, சிவந்திருக்கும்.
- உடல் நீண்டு, அகன்று, இடுப்பெலும்புகள் மெலிந்திருக்கும். ஆசனவாய் ஈரப்பதமாக இருக்கும்.
- ஆசனவாய்ப் பகுதியில் உள்ள இரண்டு இடுப்பு எலும்புகளுக்கு இடையே மூன்று விரல்கடை இடைவெளி இருக்கும்.
- ஆசன வாய்க்கும், மார்பெலும்பின் நுனிக்குமான இடைவெளி, 4 விரல்கடை இருக்கும்.
தரமற்ற முட்டைக்கோழி
- வீரியமின்றி, சோர்வுடன் மெலிந்தும் அயர்ந்தும் இருக்கும். இறகுகள் தேயாமல் பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
- இறகுகள் தளர்வாக இருக்கும். இறகுகள் குறுகிய வயதில் உதிர ஆரம்பித்து, மீண்டும் வளர்வதற்கு நீண்ட நாட்களாகும்.
- தோல் கடினமாக, இறுகலாக இருக்கும். தோலுக்கடியில் கொழுப்பு மிகுதியாக இருக்கும்.
- வயிற்றுப்பகுதி, குறுகியும் சுருங்கியும் இருக்கும். கண்கள் சிறுத்து, குழி விழுந்து இருக்கும். தலை நேராகவும், கொண்டைப்பூ சிறிதாகச் சுருங்கியும் இருக்கும்.
- உடல், குறுகியும், சுருங்கியும், இடுப்பு எலும்புகள் பருத்தும் இருக்கும். அலகு, மஞ்சளாக, பருத்து உருண்டு காணப்படும்.
- ஆசனவாய், உலர்ந்து சுருங்கியிருக்கும். அப்பகுதியில் இருக்கும் இரண்டு இடுப்பு எலும்புகளுக்கு இடையே 1-2 விரல்கடை இடைவெளி இருக்கும்.
- ஆசன வாய்க்கும், மார்பெலும்பின் நுனிக்குமான இடைவெளி, இரண்டு விரல்கடைக்குக் குறைவாக இருக்கும்.
அதிக முட்டை உற்பத்திக்கான வழிமுறைகள்
- ஒவ்வொரு வீரிய இனக் கோழிகளுக்கும் முட்டையிடும் திறன் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த முழு ஆற்றலை வெளிப்படுத்தும் சூழலை, முட்டைக் கோழிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
- அதிகபட்ச முட்டை உற்பத்தியை அடைய, குஞ்சுகள் வந்த ஒருநாள் முதல், 72 வாரம் வரை, பின்வரும் முக்கியக் குறிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- தரமான வீரியக் கலப்பின முட்டைக்கோழிக் குஞ்சுகளைத் தருவிக்க வேண்டும்.
- கோழிகளுக்குத் தேவையான இடவசதியை அளிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட கால இடைவெளியில், உணவு மாற்றுத்திறன் மற்றும் உடல் எடையைச் சோதித்தறிய வேண்டும்.
- வளர்ச்சி நிலைக்கேற்ப உடல் எடையைக் கொண்டு வர வேண்டும்.
- சத்து மிகுந்த தரமான தீவனப் பொருள்களைக் கொடுக்க வேண்டும்.
- முட்டையிடும் பருவத்தில், வைட்டமின்கள், கிளிஞ்சல் தூள், தாதுப்புகள் ஆகியவற்றை, தீவனத்தில் கூடுதலாகக் கலந்து கொடுக்க வேண்டும்.
- தரமான தீவனம் மற்றும் சுத்தமான குடிநீரை அளிக்க வேண்டும்.
- ஆழ்கூளப் பராமரிப்பைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
- தடுப்பூசி முறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
- பண்ணையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையான அளவில் செயற்கை ஒளியை அளிக்க வேண்டும்.
நோய் மேலாண்மை
நுண் கிருமிகள், நச்சுக் கிருமிகள், பூஞ்சைக் காளான்கள், புரோட்டோ சோவா ஒட்டுண்ணிகள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளால், கோழிகள் நோய்களுக்கு உள்ளாகும். பண்ணைகளில் நோய்கள் பரவாமல் இருக்க, பண்ணையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
உற்பத்தித் திறனற்ற கோழிகளைக் கழித்தல், ஒட்டுண்ணி நீக்கம், மருந்து நீர்க்குளியல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அசுந்தால் என்னும் வெளிப்புற ஒட்டுண்ணி நீக்கக் கரைசலை, பெரிய நீர்த் தொட்டியில் கரைத்து, அதில், தலை மற்றும் கண்கள் படாத வகையில், கோழிகளை முக்கியெடுத்தல், கோழிப்பேன் நீக்குதல் ஆகும்.
கோழிகள் இறப்பு 10 சதத்துக்கு மேல் இருந்தால், அது பராமரிப்பு முறை சரியில்லை என்பதாகும். கோழிகளுக்குக் கொடுத்த மருத்துவச் சிகிச்சை, குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட எடையை அடைதல், எடுத்துக்கொண்ட தீவன அளவு, தடுப்பூசி போடுதல், இறப்பு சதவீதம் ஆகியவற்றை, தனித்தனிப் பதிவேடுகளில் குறித்து வைக்க வேண்டும்.
தடுப்பூசிகள்
- முதல் நாளில், 0.2 மி.லி. மேரக்ஸ்(MD) தடுப்பூசியை, தோலுக்கு அடியில் போட வேண்டும்.
- 5-ஆம் நாளில், ராணிக்கெட்(ForB) தடுப்பூசியை, நாசித்துளையில் செலுத்த வேண்டும்.
- 7-ஆம் நாளில், மேரக்ஸ் (MD booster) மருந்தை, கண்ணில் விட வேண்டும்.
- 12-ஆம் நாளில், ஐ.பி.டி.(IBD- Intermediate) மருந்தை, கண்ணில் விட வேண்டும்.
- 20-22-ஆம் நாளில், ஐ.பி.டி.(IBD-Plus) மருந்தை, கண் அல்லது குடிநீர் மூலம் தர வேண்டும்.
- 27-ஆம் நாளில், லசோட்டா (LaSota) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 30-ஆம் நாளில், ஐ.பி.(B) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 42-ஆம் நாளில், கோழியம்மை (Fowl pox) மருந்தை, இறக்கையில் செலுத்த வேண்டும்.
- 47-ஆம் நாளில், குடற்புழு நீக்கம்-1 (I-Deworming) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 52-ஆம் நாளில், லசோட்டா (LaSota) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 64-ஆம் நாளில், ஆர்.பி.(R2B)ஆர்.பி.(RB) மருந்தை, தசையில் போட வேண்டும்.
- 86-ஆம் நாளில், 0.5 மி.லி. கொரைசா (Coryza) அல்லது கோழிக்காலரா (Fowl Cholera) மருந்தை, தோலுக்கு அடியில் போட வேண்டும்.
- 93-ஆம் நாளில், குடற்புழு நீக்கம்-2 (II-Deworming) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 110-ஆம் நாளில், குடற்புழு நீக்கம்-2 (II-Deworming) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 112-ஆம் நாளில், லசோட்டா (LaSota) மருந்தை, குடிநீரில் கலந்து தர வேண்டும்.
- 126-ஆம் நாளில், 0.5 மி.லி. என்.டி.கில்டு (ND-killed) மருந்தை, தோலுக்கு அடியில் போட வேண்டும்.
- 40-ஆம் வாரம், குடற்புழு நீக்கம்/ லசோட்டா (LaSota) என்.டி.கில்டு (ND-killed) மருந்தை, 0.5 மி.லி. வீதம் எடுத்து, குடிநீரில் கலந்து அல்லது தோலுக்கு அடியில் போட வேண்டும்.
விற்பனை முறைகள்
நமது நாட்டில் முட்டை விற்பனை விலையை, தேசிய முட்டை உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்கிறது. முட்டை விற்பனையை நேரடியாகவும், முட்டை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தும் மேற்கொள்ளலாம்.

முனைவர் க.பிரேமவல்லி,
பேராசிரியர், கோழியின அறிவியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-7.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

