தென்னந்தோப்பில் வெட்டிவேரை சாகுபடி செய்தால், காற்றின் வெப்பம் குறையும். மழைநீரைச் சேமிக்கவும் உதவுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். வெட்டிவேரைப் பயன்படுத்தி, குளிர்ச்சி தரும் பொருள்களைத் தயாரிக்கலாம். கை விசிறிகள், தட்டிகள், வாசனைப் பத்திகள், மாலைகள், கம்ப்யூட்டர் இருக்கைகள், பாய்கள் மற்றும் யோகா பாய்கள்,
கார் இருக்கைகள், பாய்கள், சென்ட் வகைகள், அழகு பொம்மைகள் மற்றும் கடவுள் பொம்மைகள், கூடைகள், பைகள், தொப்பிகள் போன்ற பலவிதமான பொருள்களைத் தயாரிக்க, வெட்டிவேர் பயன்படுகிறது. கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இத்தகைய தொழில்களில் இறங்கி நன்கு சம்பாதிக்கலாம்.
வெட்டிவேரைத் தனிப்பயிராகவும் பயிரிடலாம். இதனால், ஆண்டுதோறும் கூடுதல் வருமானம் பெறலாம். இதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் சுமார் 4.5 மெட்ரிக் டன் வெட்டி வேரும், 20 டன் உலர்ந்த வெட்டிவேர்ப் புல்லும் கிடைக்கும். வெட்டிவேர் சாகுபடி விவசாயிகளே மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டால், இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
விளைநிலங்களில் சரிவாக உள்ள இடங்களில், வரப்புக்கு அருகில், கிணற்று மேட்டுக்கு அருகில் மற்றும் மரங்களின் அடியில், மண்ணை அனைத்து வெட்டிவேரை நடலாம். நிலப்பாதுகாப்பு, அதாவது, நீர் மூலமும், காற்று மூலமும் ஏற்படும் மண்ணரிப்பை, வெட்டிவேர் மூலம் தடுக்கலாம்.
வாய்க்கால் ஓரங்களில் உள்ள மண்ணை அடித்துச் செல்லாமல் தடுக்கவும் உதவுவதால், வெட்டிவேர், பசுமைப் புரட்சிக்கும் வழிகோலும் தாவரமாக உள்ளது. சுற்றுச்சூழலைக் காப்பதுடன், மண், காற்று மாசுபடாமல் இருக்கவும், வறட்சிப் பகுதியில்கூடக் கால்நடைச் செல்வங்களைக் காக்கவும் வெட்டிவேர் உதவுவதால், இதனை, வெற்றி தரும் வேர் என்று பெருமையுடன் கூறலாம்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

