My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்! IND MILK COW https://pachaiboomi.net/579607-2/

மது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் பாதிக்கப்படும் காலங்களில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பின் பங்கு முக்கியமானது. இருபதாம் கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கறவை மாடுகளின் வளர்ச்சி 18 சதவீதமும், நாட்டினக் கறவை மாடுகளின் வளர்ச்சி 10 சதவீதமும் அதிகரித்து உள்ளன.

ஆயினும், இந்தியாவில் உள்ள கலப்பினக் கறவை மாடுகளின் சராசரி பால் உற்பத்தி 7.8 லிட்டர் அளவில் மட்டுமே உள்ளது. இதற்கு, மலட்டுத்தன்மை முக்கியக் காரணமாகும். கறவை மாடு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சந்ததியை உருவாக்காத நிலை, மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

சினையாகாத கறவை மாட்டைப் பராமரிப்பது, பால் பண்ணை விவசாயிகளுக்குப் பொருளாதாரச் சுமையாகும். கறவை மாடுகள் ஆண்டுக்கு ஒருமுறை ஈனத் தவறினால், பண்ணை நட்டத்தை நோக்கிச் செல்லும். எனவே, பண்ணையில் இனப்பெருக்கம் சரியாக நடப்பதற்கு, இனப்பெருக்கத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 

மலட்டுத் தன்மைக்கான முக்கியக் காரணிகள்

பருவமின்மை, கனநீர்க் குறைபாடு, நோய்க்கிருமிகள், ஊமைச்சினைப் பருவம், கருத்தங்காமை, தீவனச் சத்துகள் குறைபாடு, இடைச்சினைப் பருவம்.

பருவமின்மை

கறவைமாடு வளர்ப்பில் அதிக இலாபம் கிடைப்பதில், இனப்பெருக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. இனப்பெருக்கப் பருவம் என்பது, இனப்பெருக்க மண்டலம் முழுமையாக வளர்ந்து, முதலில் சினைப் பருவத்தையும், அதைத் தொடர்ந்து, கருமுட்டையையும் வெளிப்படுத்தும் காலமாகும். கிடேரிகள் சில நேரங்களில் சரியான காலத்தில் பருவத்துக்கு வருவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சத்துப் பற்றாக்குறைக்கு முக்கியப் பங்குண்டு.

பருவமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்: அறிகுறியற்ற பருவம், சத்துப் பற்றாக்குறை, ஹார்மோன் குறைபாடு அல்லது கோளாறுகள், மரபியல் குறைபாடு, இனப்பெருக்க உறுப்புகளில் கோளாறு.

பருவமின்மை  அறிகுறிகள்: இருபது மாதங்கள் ஆன பிறகும் கிடேரியில் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருப்பது அல்லது ஒரு கறவை மாடு ஈன்று நான்கு மாதங்கள் ஆன பிறகும் பருவ அறிகுறிகள் வெளியாகாமல் இருப்பது.

பருவமின்மையின் போது கடைப்பிடிக்க வேண்டியவை: கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு, பருவ அறிகுறிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். போதியளவில் பசுந்தீவனம் அளிக்க வேண்டும். தாதுப்புகள் கலந்த சமச்சீர்த் தீவனத்தை அளிக்க வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தடுப்பூசியைப் போட வேண்டும்.

கிடேரிகளுக்கு மூன்று வாரங்களுக்கு, தினமும் 200 கிராம் கொண்டைக்கடலை வீதம் எடுத்து ஊற வைத்து அரைத்துக் கொடுக்க வேண்டும். முருங்கைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை அரைத்து, எலுமிச்சம் பழம் அளவில், ஒரு வாரம் கொடுத்தால், விரைவில் பருவத்துக்கு வரும்.

கனநீர்க் குறைபாடு

இனப்பெருக்கம், கால்நடைகளின் உடலில் சுரக்கும் கனநீர் மூலம் கட்டுப்படுத்தப்படும்.  சினைப்பருவ அறிகுறிகள், கனநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். கனநீர்ச் சுரப்பு மாறுபட்டால் 21 நாட்களுக்கு ஒருமுறை என்பது மாறி, கண்ட நேரத்தில் கறவை மாடுகள் பருவத்துக்கு வரும். இத்தகைய கறவை மாடுகளைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி, உரிய முறையில் சிகிச்சையளிக்க வேண்டும்.

சில மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் 2-3 நாட்களுக்குக் கூடத் தொடரும். இந்த மாடுகளுக்கு அடுத்தடுத்து 2 நாட்களுக்குக் கருவூட்டல் செய்யலாம். சில சினை மாடுகளில் 1.5-3 மாதத்துக்குள் பிறப்பு உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு ஏற்படும். எனவே, கருவூட்டல் செய்து இரண்டு மாதங்களில் சினைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய்க்கிருமிகள்

கிடேரிகள் பருவத்துக்கு வரும் வரை, அவற்றின் கருப்பையில் எவ்விதமான நுண்கிருமியும் இருக்காது. ஆனால், ஈற்று மாடுகள் ஒவ்வொரு முறையும் பருவத்துக்கு வரும் போது, கருப்பையின் வாய், சற்றுத் தளர்வதால், நுண்கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்புண்டு.  மேலும், ஈற்றுக் காலத்தில் சில மாடுகளில் கருப்பை வெளியாவதால், நோய்க் கிருமிகள் கருப்பைக்குள் செல்லலாம். இந்தக் கிருமிகள் கருப்பையில் புண்களை உண்டாக்கும்.

சினைப் பருவத்தில் வெளிப்படும் திரவம், கண்ணாடியைப் போல வழவழப்பாக இல்லாமல், மங்கலாக அல்லது மூக்குச்சளியைப் போல மஞ்சளாக இருக்கலாம். இத்தகைய மாடுகளின் கருப்பையை உரிய சிகிச்சை மூலம் குணமாக்கிய பிறகே, அதாவது, அடுத்த சினைப் பருவத்தில் சினை ஊசியைப் போட வேண்டும்.

சரியான நேரத்தில் கருவூட்டல் செய்தால், இனப்பெருக்க உறுப்பில் நோய்க்கிருமிகள் புகும் வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். மேலும், இந்த நேரத்தில் நோயெதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்பதால், நோய் ஏற்பட வாய்ப்பில்லை.

ஊமைச்சினை

கறவை மாடுகள் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்துக்கு வரும். ஆனால், ஒருசில மாடுகள் வழக்கம் போல் சினைப்பருவ நிலைக்கு வந்தாலும், அதற்கான அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும். இதையே ஊமைச்சினை என்கிறோம். இதற்கு, சத்துக்குறை, நோய்கள், பலவீனம், பருவக்கால மாற்றம் மற்றும் உடற்பயிற்சி இன்மை போன்றவை காரணங்களாக உள்ளன.

சினைப்பருவ அறிகுறிகளைக் கண்டறியும் முறைகள்: பதிவேடுகள் மற்றும் ஆசனவாய்ப் பரிசோதனை மூலம் கருப்பையைத் தொட்டு அதன் தன்மையைக் கண்டறிதல். கறவை மாடுகள் பிற மாடுகள் மீது தாவுதல் அல்லது மற்ற மாடுகளைத் தம்மீது தாவ விடுதல் மூலம் கண்டறிதல். சிறந்த வேலையாட்கள் மூலம் கண்டறிதல். ஹார்மோன்கள் மூலம் சினைப் பருவத்தைத் தூண்டுதல் மூலம் கண்டறிதல். பயோமெட்ரிக், வாசக்டமி மற்றும் மின்சாதனப் பொருள்கள் மூலம் பருவ நிலைகளைக் கண்டறியலாம்.

தீர்வுகள்: மாடுகளுக்குச் சத்துமிக்க கலப்புத் தீவனமும், பசுந்தீவனமும் தினமும் தரப்பட வேண்டும். மாடுகளைத் தாக்கும் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும். மாடுகளைக் கொட்டிலிலேயே அடைத்து வைக்காமல் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மாடுகளின் கருப்பை அயர்ச்சிக்குத் தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். மேலும், கனநீரின் பங்கும் முக்கியமாகும். ஈஸ்ட்ரஜன் FSH மற்றும் LH மூலம் மாற்றி, சினைப் பருவத்துக்கு வரச் செய்யலாம்

கருத்தங்காமை

குறைபாடு எதுவும் இல்லாத பசுவை; சரியான இனப்பெருக்கக் குழாய் மற்றும் 18-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்துக்கு வரும் பசுவை; சுத்தமான சினைப்பருவத் திரவ ஒழுக்குள்ள பசுவை; மூன்று முறைக்கு மேல் செயற்கை முறை கருவூட்டல் செய்தும் சினையாகாத பசுவை; திரும்பத் திரும்பச் சினைக்கு வரும் பசு என அழைக்கிறோம். மலட்டுத்தன்மை என்னும் தலைப்பில் இவ்வகைப் பசுக்கள் 16 சத அளவில் உள்ளன.   இதில், அறிகுறியற்ற கருப்பை உள்ளயர்ச்சியின் பங்கு மிகவும் குறைவாகும்.

ஈற்றுப் பசுக்களில் எதிர்மறை எரிசக்தி, சமநிலையை அடையும் போது, யோனியைச் சுற்றியுள்ள கொழுப்புப்படிவு கரைந்து சமன் செய்யும். இதனால், பெண் குறியின் வெளியிதழ்த் தோற்றம் மாறி, சிறுநீரும் சாணமும் யோனியில் தேங்கி நிற்பதால், நோய்த்தொற்று ஏற்படும்.

எனவே, கருவுறாமல், திரும்பத் திரும்பச் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டும் பசுக்களில், ஒயிட்சைடு சோதனை செய்து, கருப்பை உள்ளயர்ச்சி உள்ளதா என்பதை அறிந்து, சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

லூகாஸ் அயோடின் மிகச்சிறந்த கிருமிநாசினி. இதிலுள்ள அயோடின், பசுவின் உடலில் வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெற உதவும். புரொஜஸ்டிரான் கனநீரானது, ஹைப்போதலாமசைத் தூண்டி விட்டு, சினைப்பருவ அறிகுறிகளை வெளியிடுவதில் மற்றும் நுண் குமிழ்கள் வளர்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே, பலமுறை சினைப் பருவத்துக்கு வந்தும் கருவுறாத பசுக்களின் கருப்பையில் மருந்துகளைச் செலுத்தி, புரொஜன்டிரானைச் செலுத்திய யோனி உபகரணம் மூலம், குறித்த காலத்தில் சினை ஊசியைப் போட்டால், இத்தகைய பசுக்களில் சினைப்பிடிப்புத் திறன் மேம்படும்.

தீவனச் சத்துகள் குறைபாடு

கறவை மாடுகளுக்கு, உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் அவசியம்.  பசுக்களின் உடல் பராமரிப்பு மற்றும் முதல் 2.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 1.5 கிலோ கலப்புத் தீவனம் அவசியம். பால் உற்பத்திக்கு ஒரு கிலோ கலப்புத் தீவனம் தேவைப்படும்.  பத்து லிட்டர் பாலைத் தரும் பசுவுக்கு, தினமும் 4.5 கிலோ கலப்புத் தீவனம் தரப்பட வேண்டும்.

கலப்புத் தீவனத்தை அளித்தால், இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.  பாலில் கொழுப்பற்ற திடப்பொருள்களின் அளவு கூடும். கலப்புத்தீவனம் தரப்படாத ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் 30-40 கிராம் தாதுப்புக் கலவையைத் தர வேண்டும். பசுந்தீவனத்தில் உள்ள கரோட்டீன், கருமுட்டை உற்பத்திக்கு உதவும். எனவே, தினமும் 15-20 கிலோ பசுந்தீவனமும், 4-6 கிலோ உலர் தீவனமும் தரப்பட வேண்டும்.

இடைச்சினைப் பருவம்

கறவை மாடுகளில் சினைப்பருவம் 18-21 நாட்களுக்கு ஒருமுறை வெளிப்படும். இது, 18-24 மணி நேரம் இருக்கும். பருவ அறிகுறி வெளியானதும் கருவூட்டல் செய்ய வேண்டும். அதாவது, காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் மாலையிலும், மாலையில் தென்பட்டால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். பருவ அறிகுறி முடிந்து 12 மணி நேரம் கழித்து, கருமுட்டை வெளிவரும்.

இடைச்சினைப் பருவம் என்பது, குறைந்த இடைவெளியில் பருவ அறிகுறிகள் வெளியாவது. அதாவது, பருவ அறிகுறிகள் தென்பட்டு, கருவூட்டல் செய்த அல்லது செய்யாத நிலையில், 7-12 நாட்கள் இடைவெளியில் மீண்டும் பருவ அறிகுறி வெளியாகும். 

இடைச்சினைப் பருவமுள்ள மாடுகள், இயல்பான பருவத்தில் உள்ள மாடுகளைப் போலவே அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆசனவாய்ப் பரிசோதனை மூலம் இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது சற்றுக் கடினம். நுண்ணொளி அல்லது சூலகச் சோதனை மூலம், இடைச்சினைப் பருவத்தை உறுதி செய்யலாம். இடைச்சினைப் பருவமுள்ள மாடுகளில், கருமுட்டை முழுமையாக வெளியேறுவது கிடையாது.

நுண்ணொளி இல்லாத நிலையில், ஆசனவாய்ச் சோதனை மூலம், கருப்பை வாயின் விரிந்த நிலையைக் கண்டறிந்து கருவூட்டல் செய்ய வேண்டும். அதிலும் சிரமம் ஏற்பட்டால், அதாவது, மையக் கருப்பை வாய் விரியாத நிலையில், செயற்கை முறை கருவூட்டலைச் செய்ய வேண்டும். அதன் பிறகு, சினைப்பருவ அறிகுறிகள் எத்தனை நாட்களில் வெளிப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, இடைச்சினைப் பருவமுள்ள மாடுகளைக் கண்டறிந்து, சரியான முறையில் அணுக வேண்டும்.


கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்! DR.S.RAJA https://pachaiboomi.net/579607-2/

முனைவர் செ.இராஜா,

முனைவர் ம.பழனிசாமி, முனைவர் கா.இரவிக்குமார், முனைவர் ச.மனோகரன், முனைவர் து.கோபிகிருஷ்ணன், முனைவர் ம.செல்வராஜு, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!

  • கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

  • கோடையில் கோழிகள் பராமரிப்பு!