கடலூர் மாவட்டம், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிகள் ஆராய்ச்சி மற்றும் புதிய இரகங்கள் உற்பத்தில் ஈடுபட்டு வருகிறது. இவ்வகையில், இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்ட கீரை இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடி முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பாலூர் சிறுகீரை-1 (பிஎல்ஆர்-1)
இந்தக் கீரை, வடகிழக்கு மண்டலத்தின் பருவநிலை மற்றும் மண் தன்மைகளுக்கு மிகவும் ஏற்றது. கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பலவகை மண் வகைகளில் பயிரிட ஏற்ற இந்தக் கீரையை, முக்கிய மழைக்காலம் தவிர, மற்ற மாதங்களில் பயிரிடலாம்.
பாலூர்-1 சிறுகீரை பச்சையாக இருக்கும். எனவே, அனைவராலும் அதிகமாக விரும்பக் கூடியதாக உள்ளது. இதனால், சந்தையில் நல்ல விலை கிடைக்க ஏதுவாகவும் இருக்கிறது. இக்கீரை, இலைத்தின்னிப் புழுக்கள், சாறு உறிஞ்சிப் பூச்சிகள் மற்றும் வெள்ளைத் துருநோயை எதிர்த்து வளரும் திறன் மிக்கது. எக்டருக்கு 8-9 டன் கீரை கிடைக்கும்.
சாகுபடி
பருவம்: மழைக்காலம் தவிர, மற்ற மாதங்களில் பயிரிடலாம்.
விதையளவு: எக்டருக்கு 3 கிலோ விதைகள்.
நிலம் தயாரிப்பு மற்றும் உரமிடல்: நிலத்தை 4-5 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா வீதம் எடுத்து, மட்கிய எருவில் கலந்து நிலத்தில் இட வேண்டும். மேலும், 50 கிலோ யூரியா மற்றும் 40 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும்.
விதைப்பு: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் அல்லது ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்துக் கலந்து, 2×1.5 மீட்டர் அளவில் பாத்திகளை அமைத்து விதைக்க வேண்டும். விதைகளைப் பத்துக் கிலோ மணலில் கலந்து விதைக்கலாம்.
பாசனம்: விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, மூன்று நாட்கள் கழித்தும் அடுத்து, ஏழு நாட்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்ய வேண்டும்.
பின்செய் நேர்த்தி: ஒருமுறை களையெடுக்க வேண்டும். விதைத்து ஏழாம் நாள் பயிர்களைக் கலைத்து விடுதல் அவசியம். பயிர் இடைவெளி, வரிசை இடைவெளி 10 செ.மீ. என, நெருக்கமாக இருக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: இலைத்தின்னிப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பரில் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை: விதைத்த 20-21 நாட்களில் கீரையை அறுவடை செய்யலாம். எக்டருக்கு 8-9 டன் கீரை கிடைக்கும். விதைகள் உற்பத்தியாக, 50-55 நாட்கள் ஆகும். எக்டருக்கு 200 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைகளை 500-600 ரூபாய்க்கு விற்கலாம்.

பாலூர் வெள்ளைத்தண்டுக் கீரை-2 (பிஎல்ஆர்-2)
இந்தக் கீரை இரகம், 2024-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது, திருவதிகை கிராம உள்ளினத் தேர்வு மூலம் வெளியிடப்பட்ட இரகம். இதன் வயது 55-60 நாட்களாகும். இக்கீரை, வெள்ளைத்தண்டு மற்றும் வீரிய வேர்ப்படலத்தைக் கொண்டது. ஆடி மற்றும் தைப்பட்டத்தில் சகுபடி செய்யலாம். எக்டருக்குச் சராசரியாக 43 டன் கீரை கிடைக்கும்.
இதை, முளைக்கீரையாகவும், தண்டுக்கீரையாகவும் பயிரிடலாம். விதைத்து முப்பது நாட்களில் முளைக்கீரையாக அறுவடை செய்யலாம். எக்டருக்கு பத்து டன் கீரை கிடைக்கும். விதைத்து ஐம்பது நாட்களில் தண்டுக்கீரையாக அறுவடை செய்யலாம். எக்டருக்கு 33 டன் கீரை கிடைக்கும். இந்தக் கீரை அதிகக் கிளைகளைக் கொண்டது என்பதால், அதிகபட்சமாக, எக்டருக்கு 62 டன் கீரை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
சிறப்புகள்: கோ-1 இரகத்தை விட 13 சதவீத அளவில் கூடுதல் கிளைகள் மற்றும் மகசூலைத் தரவல்லது. தண்டில் நார்த்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். முற்றம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் பயிரிட ஏற்றது.
நூறு கிராம் கீரையில், கண் பார்வைக்கு மிகவும் உகந்த, பீட்டா கரோட்டினாய்டுகள் 8095.69 மைக்ரோ கிராம் உள்ளது. சூப், நூடுல்ஸ், சாலட் போன்ற உணவுகளில் சேர்த்துப் பரிமாறலாம். குழந்தைகளுக்குப் பிடித்த சுவையும் சத்தும் கொண்டுள்ளது.
சாகுபடி
பருவம்: ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி, ஏப்ரல்-மே.
நிலம் தயாரிப்பு மற்றும் உரமிடல்: நிலத்தை 4-5 முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 25 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா வீதம் எடுத்து, மட்கிய எருவில் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். மேலும், 50 கிலோ யூரியா மற்றும் 40 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும்.
விதைப்பு: எக்டருக்குத் தேவையான 3 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் அல்லது இரண்டு கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்துக் கலந்து 2×1.5 மீட்டர் அளவில் பாத்திகளை அமைத்து விதைக்க வேண்டும். விதைகளைப் பத்துக் கிலோ மணலில் கலந்து விதைக்கலாம். முளைத்த பிறகு செடிகள் 15-20 செ.மீ இடைவெளியில் இருக்கும்.
பாசனம்: விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, மூன்று நாட்கள் கழித்தும், அடுத்து, ஏழு நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
பின்செய் நேர்த்தி: ஒருமுறை களையெடுக்க வேண்டும். விதைத்து ஏழாம் நாள் பயிர்களைக் கலைத்து விட வேண்டும். பயிர் இடைவெளி, வரிசை இடைவெளி 10 செ.மீ. என, நெருக்கமாக இருக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: இலைகளைப் பிணைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மூன்று சதவீத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி.லி. வீதம் கலந்த பினால் 25 EC மருந்தைத் தெளிக்கலாம்.
அறுவடை: விதைத்த 20-21 நாளில் கீரையாக அறுவடை செய்யலாம். விதைத்த 30 நாட்களில் முளைக்கீரையாக, 50 நாட்களில் தண்டுக்கீரையாக அறுவடை செய்யலாம்.
மகசூல்: விதைத்து 30 நாட்களில் 10 டன் முளைக்கீரை கிடைக்கும். விதைத்து 50 நாட்களில் 33 டன் தண்டுக்கீரை கிடைக்கும். விதைகள் உற்பத்தியாக 60 நாட்களாகும். ஒரு கிலோ விதைகளை 500-600 ரூபாய்க்கு விற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் கு.காயத்ரி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர்- 607 102. தொலைபேசி: 04142-275222, email: hrspalur@tnau.ac.in

முனைவர் கு.காயத்ரி,
முனைவர் இரா.லெனின், முனைவர் கோ.ப.சுதாகர் ராவ், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். முனைவர் க.வெங்கடேசன், முதன்மையர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

