கால்நடை வளர்ப்பில், பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில், தரமான பசுந்தீவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவனச் செலவைக் குறைத்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீனத்தை, சொந்த நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். புல்வகை, பயறுவகை மற்றும் மரவகைத் தீவனப் பயிர்களை இணைத்து வளர்ப்பதன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகளைச் சமச்சீராக வழங்க முடியும்.
அதிக மகசூலைத் தரும் நேப்பியர் புல்
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் இரகமான கோ-5, பாசன வசதியுள்ள நிலங்களில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றது. எக்டருக்கு ஆண்டுக்கு 360-400 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதில், சுமார் 14 சதவீதம் புரதச்சத்து உள்ளது. நடவு செய்த 75-80 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். அதன் பிறகு, 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.
பலமுறை அறுவடைக்கு ஏற்ற தீவனச் சோளம்
தீவனச் சோளம் கோ.31 இரகத்தை, ஒருமுறை நடவு செய்து விட்டால், அதைப் பலமுறை அறுவடை செய்யலாம். முறையாகப் பராமரித்தால், சுமார் மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக வளர்ந்து பயன் தரும். ஆண்டுக்கு 6-7 முறை அறுவடை செய்யலாம். பயிரிட்டு 65-70 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும். அதன் பிறகு, 50 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 192 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
கினியாப்புல்
கோ-ஜிஜி-3 கினியாப்புல் இரகம், பல்லாண்டுத் தீவனப் பயிராகும். ஆண்டு முழுவதும் பாசனம் மற்றும் பருவமழையைப் பயன்படுத்தி வளர்க்கலாம். தென்னை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கு இடையிலும் சாகுபடி செய்யலாம். இதன் மூலம், ஆண்டுக்கு, 320-360 டன் பசுந்தீவனம் கிடைக்கும். பயிரிட்டு 75-80 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும். அதன் பிறகு, 40-45 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
பயறுவகைத் தீவனப் பயிர்கள்
குதிரை மசால், வேலிமசால் போன்ற பயறுவகைத் தீவனப் பயிர்கள் மூலம், கால்நடைகளுக்கு நல்ல புரதச்சத்துக் கிடைக்கும். கோ.2 குதிரை மசால் இரகம் மூலம், ஆண்டுக்கு சுமார் 130 டன் பசுந்தீவனம் கிடைக்கும். இதில், 23.5 சதவீதம் புரதச்சத்து உள்ளது. சாகுபடி செய்து 65-70 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம்.
வேலிமசால் ஆண்டுக்கு 90-100 டன் பசுந்தீவனத்தைத் தரக்கூடியது. இதில், 20-22 சதவீதம் புரதச்சத்து உள்ளது. சாகுபடி செய்து சுமார் 90 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம்.
தீவனத் தட்டைப்பயறும் சிறந்த பயறுவகைத் தீவனமாகும். சாகுபடி செய்து 50-55 நாட்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். இதில், 21 சதவீதத்துக்கும் அதிகமாக புரதச்சத்து உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 18 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
வறட்சியைத் தாங்கும் முயல் மசால்
முயல் மசால் வறட்சியைத் தாங்கி வளரும் பயறுவகைத் தீவனப் பயிராகும். இதில், 15-18 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மானாவாரி நிலங்களில் கொழுக்கட்டைப் புல்லுடன், 3:1 விகிதத்தில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். பயிரிட்டு 75 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும்.
மரவகைத் தீவனப் பயிர்கள்
சவுண்டல், அகத்தி போன்ற மரவகைத் தீவனப் பயிர்களை, பண்ணை வரப்புகள் மற்றும் தனி இடங்களில் வளர்க்கலாம். சவுண்டல் வறட்சியைத் தாங்கி ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை வழங்கும். பயிரிட்டு 120 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும்.
அகத்தி, ஆடுகள் விரும்பி உண்ணும் இலைத்தீவனம். இந்த இலைகளில் சுமார் 25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. பாசன வசதியுடன் ஆண்டு முழுவதும் வளர்க்கலாம். ஆண்டுக்கு சுமார் 100 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
விவசாயிகள் கவனத்துக்கு
தீவன மக்காச்சோளம் போன்ற தானியப் பயிர்களுடன், தட்டைப்பயறை 3:1 வீதம் ஊடுபயிராக சாகுபடி செய்வது பயனுள்ளதாகும். மொத்தத்தில், புல்வகை + பயறுவகை + மரவகை முறையில் தீவனத் திட்டத்தை அமைத்தால், ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை, தொடர்ந்து பெற முடியும். தீவனப் பயிர்களைத் திட்டமிட்டுப் பயிரிட்டு, கால்நடைகளுக்குச் சத்தான உணவை வழங்குவதுடன், தீவனச் செலவையும் குறைக்கலாம்.
சமச்சீரான அடர் தீவனம்
கால்நடைகளுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், கனிமங்கள் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளையும், சரியான விகிதத்தில் கலந்து கொடுப்பதே சமச்சீரான தீவனமாகும். இத்தகைய தீவனம் மூலம், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் உடல் நலம் மேம்படுவதுடன், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியும் கூடும்.
அடர் தீவனம் அல்லது கலப்புத் தீவனம், கால்நடைகளுக்கு அதிக ஆற்றலையும் புரதச் சத்தையும் வழங்கக் கூடியது. இதனால், பால் உற்பத்தி, உடல் எடை மற்றும் வளர்ச்சி மேம்படும். பொதுவாக, கலப்புத் தீவனத் தயாரிப்பில், மக்காச்சோளம், கம்பு போன்ற தானியங்களை, 30-35 சதவீதம் சேர்க்கலாம்.
கடலைப் புண்ணாக்கு, எள் புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு போன்றவற்றை, 20-25 சதவீதம் சேர்க்கலாம். கோதுமைத் தவிடு, அரிசித் தவிடு போன்ற தவிட்டு வகைகளை, 30-40 சதவீதம் சேர்க்கலாம். மேலும், தாதுப்புக் கலவை மற்றும் உப்பை, 2-3 சதவீதம் சேர்த்து வழங்கலாம்.
பசுந்தீவனத்துடன் தேவையான அளவு அடர் தீவனத்தையும் வழங்குவதன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் சமச்சீராகக் கிடைக்கும். கால்நடையின் வயது, உடல் எடை, பால் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப, தீவன அளவை மாற்றி வழங்க வேண்டும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


