My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!

மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!

ண்ணிலுள்ள இலை மட்கை உண்ணக்கூடிய மண் புழுக்களை, எளிய முறையில் சேகரித்து வளர்த்து, மண்புழு உரத் தயாரிப்புக்குத் தேவையான அளவில் கூடுதலான மண் புழுக்களை உருவாக்க முடியும். இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் மண்புழு உரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். மண்ணிலிருந்து மண் புழுக்களைச் சேகரிப்பது தான், மண்புழு உரத் தயாரிப்பில் மிக முக்கியச் செயலாகும். மேல் மண்ணில் உள்ள இலை மட்கை உண்ணும் புழுக்களே, மண்புழு உரத் தயாரிப்புக்கு ஏற்றவை.

இந்தப் புழுக்கள் சிவப்பு மற்றும் சிவப்புக் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை, அனைத்து வகையான பயிர்க் கழிவுகளையும் எளிதில் உண்டு மண்புழு உரமாக மாற்றி விடும். நிலத்தின் ஆழமான பகுதியில் வாழும் மண் புழுக்கள் பயிர்க்கழிவை அதிகமாக உண்பதில்லை. மேலும், இந்த மண் புழுக்களைத் தோண்டி எடுக்கும் போது காயங்கள் ஏற்பட்டு இறக்கவும் நேரிடும். எனவே, மேல் மண்ணில் வாழும் மண் புழுக்களைச் சேகரித்துப் பயன்படுத்துவதே மிகச் சிறந்த முறையாகும். இந்த மண் புழுக்களைச் சேகரிக்க, மின்சார முறை, இரசாயன முறை, அங்கக முறை எனப் பல முறைகள் உள்ளன.

மின்சார முறை

இந்த முறையில், பல நாடுகளில் மண் புழுக்களைச் சேகரித்து வருகின்றனர். அதாவது, வெவ்வேறான மின்னூட்டங்கள் மூலம் மண்ணில் அதிர்வை உண்டாக்கி, மண் புழுக்களை வெளியேற வைத்து அவற்றைச் சேகரிக்கின்றனர். இந்த முறையில் அதிகளவில் மண் புழுக்கள் இறக்க நேரிடுகிறது. இப்படி இறந்து போகும் புழுக்களை, மீன்களுக்கு உணவாக இடுகின்றனர். ஆபத்து மிகுந்த இந்த முறையை நம் நாட்டில் பின்பற்றுவதில்லை.

இரசாயன முறை

இந்த முறையில் மண் புழுக்களைச் சேகரிக்க, பொட்டாசியம் பர்மாங்கனேட், பார்மலின் போன்ற இரசாயனப் பொருள்கள் பயன்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களை இரண்டு சதவீதக் கலவையாக மாற்றி, நிழல் மற்றும் ஈரமான இடங்களில் ஊற்றும் போது, மண்ணை விட்டு மண் புழுக்கள் வெளியேறுகின்றன. இப்படிச் சேகரிக்கும் புழுக்களை நல்ல நீரில் பலமுறை கழுவிய பிறகு தான், மண்புழு உரத் தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இந்த இரசாயனப் பொருள்களால் ஏற்படும் விளைவுகளில் இருந்து, இயல்பான நிலைக்கு மீண்டும் வருவதற்கு, இந்தப் புழுக்களுக்கு அதிக நேரமாவதுடன், இம்முறையிலும் மண் புழுக்கள் அதிகளவில் இறக்க நேரிடுகிறது. மேலும், இம்முறையால் அடி மண்ணில்      வாழும் மண் புழுக்களும் வந்து விடுவதால், மண்புழு உரத் தயாரிப்பில் பயன்படுத்த முடிவதில்லை. மேலும், இந்த இரசாயனப் பொருள்கள் கிடைப்பதும், இவற்றைச் சரியான அளவில் கரைசலாக்கிப் பயன்படுத்துவதும் மிகவும் கடினம்.

அங்கக முறை

இந்த முறையில், எளிதில் கிடைக்கும் மாட்டுச்சாணம், சர்க்கரை ஆலைக்கழிவு, சர்க்கரைப்பாகு, தயிர், மோர், பழச்சாறு போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு, எவ்விதப் பாதிப்புமின்றி, எளிய முறையில் மண் புழுக்களைச் சேகரிக்கலாம்.   

முதலில், வயலில் நிழலான இடங்களில் அல்லது மாட்டுத் தொழுவத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஓரத்தில், சாணக் கரைசலைத் திட்டுத்திட்டாக இட வேண்டும். அடுத்து, அதன்மேல் வைக்கோல் அல்லது காய்ந்த இலைகளைப் பரப்பி நீரைத் தெளித்து விட்டு, ஈரச்சாக்கால் மூடி விட வேண்டும். தினமும் சாக்கின் மேல் நீரைத் தெளித்து ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்து வந்தால், 10-15 நாட்களில், ஈரம் மற்றும் சாணக் கரைசலால் ஈர்க்கப்பட்டு நிறைய மண் புழுக்கள் வந்திருப்பதைக் காணலாம். இவற்றை எளிதாகச் சேகரிக்கலாம்.

அப்போது, அந்தப் பகுதி மண்ணையும் சேர்த்து எடுக்கும் போது, மண் புழுக்களின் முட்டைக் கூடுகளும் (Cocoon)  சேர்ந்து வந்து விடும். ஒவ்வொரு முட்டைக்கூட்டில் இருந்தும் 3-5 மண் புழுக்கள் உருவாகும். வாழை மற்றும் பயறு வகைகள் பயிரிடப்பட்ட நிலங்களில், மண் புழுக்கள் அதிகமாக இருக்கும்.

இவ்வகை நிலங்களில் உள்ள நிழல் மற்றும் ஈரமான இடங்களில் சாணக் கரைசலுடன், சர்க்கரைப்பாகு அல்லது சர்க்கரை ஆலைக்கழிவு மற்றும் பாகை, சம அளவில் கலந்து இட வேண்டும். பிறகு, அதன்மேல், வைக்கோல் அல்லது காய்ந்த இலைகளைப் போட்டு, ஈரநிலையில் பராமரித்து வந்தால், குறுகிய நாட்களில் அங்கே மண் புழுக்கள் உருவாகி விடும்.

மட்கிய சாணக்கரைசல் மற்றும் சர்க்கரைக் கரைசலில் இருந்து வெளிவரும் மணத்தால் கவரப்படும் மண் புழுக்கள் ஒரே இடத்தில் சேர்ந்து விடுவதால், அந்தப் புழுக்களை எளிதாகச் சேகரிக்கலாம். இதைப்போல, பால், தயிர் மற்றும் மோரைப் பயன்படுத்தியும்   மண் புழுக்களைச் சேகரிக்கலாம். புளிப்பு மிகுந்த பழரசங்களையும் பயன்படுத்தலாம். இப்படிச் சேகரிக்கப்படும் மண் புழுக்கள், அவ்விடத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, தம்மை நிலைப்படுத்திக் கொள்வதால், இவற்றின் இறப்பும் குறைவாக இருக்கும்.

திரிபுராவில் காணப்படும் பாலிகோனம் ஹைட்ரோபைப்பர் என்னும் மரத்தின் இலைவடிச் சாற்றைப் பயன்படுத்தி, மிக எளிதாக, விரைவாக மண் புழுக்களைச் சேகரிக்கலாம் என்பது, ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இது, இரசாயன முறையில் மண் புழுக்களைச் சேகரிப்பதைக் காட்டிலும் சிறந்தது.

இம்முறையில் சேகரிக்கப்படும் மண் புழுக்கள், மிகக் குறுகிய காலத்திலேயே இயல்பான நிலைக்குத் திரும்புவதுடன், உரத்தயாரிப்பின் போது விரைவாகவும் அதிகளவிலும் பயிர்க் கழிவுகளை உண்ணுகின்றன. மேலும், இவற்றின் இனப்பெருக்கத் திறனும் அதிகமாக உள்ளது. இத்தகைய மண் புழுக்களைத் தகுந்த முறையில் வளர்த்து அவற்றைப் பெருக்க வேண்டும்.

மண் புழுக்களை வளர்க்கும் முறைகள்

அங்கக முறையில் சேகரித்த மண் புழுக்களைப் பன்மடங்காகப் பெருக்கினால், உரத் தயாரிப்புக்குத் தேவையான மண் புழுக்களைப் பெறலாம். இதற்கு, குழிமுறை வளர்ப்பு அல்லது பெட்டி அல்லது தொட்டி முறை வளர்ப்பு என, இரு முறைகள் உள்ளன.

குழிமுறை வளர்ப்பு: இதற்கு, தோட்ட நிழல் அல்லது மாட்டுக் கொட்டகை நிழலில், 1x1x1 மீட்டர் நீள, அகல, உயரமுள்ள குழியைத் தோண்ட வேண்டும். அதில், நிழலில் நன்கு  காய்ந்த 50 கிலோ மாட்டுச் சாணத்தை நன்கு நொறுக்கி இட வேண்டும். பிறகு, இக்குழியில், நன்கு வளர்ந்த 100-150 பிரியானிக்ஸ் எஸ்கவேட்டஸ், யூடிரல்லஸ் யூஜினேயே, எய்சினியா பெயிடிடா போன்ற மண் புழுக்களைத் தனித்தனியே விட்டு வளர்க்க வேண்டும். 

இதன் மேல் வைக்கோலை மூடி, தினமும் நீரைத் தெளித்துப் பதமாகப் பாதுகாக்க வேண்டும். நன்கு வளர்ந்த மண் புழுக்கள் இனச் சேர்க்கையில் ஈடுபட்டு, ஒருசில நாட்களில் 3-4 முட்டைக் கூடுகளை (Cocoon) இடும். அடைப்பருவம் பருவம் முடிந்ததும், ஒவ்வொரு முட்டைக் கூட்டிலிருந்தும் 3-5 இளம் புழுக்கள் வெளிவரும்.

யூடிரல்லஸ் யூஜினேயே, எய்சினியா பெயிடிடா போன்ற மண் புழுக்களின் முட்டைக் கூட்டில் இருந்து 5-9 புழுக்கள் வெளிவரும். இவற்றின் எண்ணிக்கை, 40-50 நாட்களில் 3-5 மடங்காகப் பெருகும். ஒவ்வொரு இளம் புழுவும் 30-40 நாட்களில் இனவிருத்திக்குத் தயாராகும். நல்ல தட்பவெப்ப நிலையின் போது, அதாவது, குளிர்ச்சிக் காலத்தில் இவற்றின் எண்ணிக்கை, பத்து மடங்கு வரை அதிகரிக்கும்.

பெட்டி அல்லது தொட்டி முறை வளர்ப்பு: மண் புழுக்களை, மரப்பெட்டி மற்றும் சிமெண்ட் தொட்டியிலும் வளர்க்கலாம். இதற்கு, 50x25x15 செ.மீ. நீள, அகல, உயரமுள்ள மரப்பெட்டி அல்லது சிமெண்ட் தொட்டியைப் பயன்படுத்தலாம். இவற்றின் அடிப்பகுதியில் முதல் கால் பகுதிக்கு, எந்தப் பகுதியிலிருந்து மண் புழுக்களைச் சேகரித்தோமோ, அந்தப் பகுதி மண்ணையும், அதன் மேல் நன்கு தூளாக்கிய பயிர்க் கழிவையும் இட வேண்டும்.

பிறகு, நிழலில் காய்ந்த 10 கிலோ மாட்டுச் சாணத்தைப் பொடியாக்கி இட்டு நிரப்ப வேண்டும். இரண்டு நாட்கள் நீரைத் தெளித்து, இதை மட்க வைக்க வேண்டும். கடைசியில் இதைக் கிளறி உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி விட்டு, நன்கு        வளர்ந்த 100 யூடிரல்லஸ் யூஜினேயே மண் புழுக்களை விட வேண்டும். மழை மற்றும் வெய்யிலில் இருந்து பாதுகாக்க, பந்தல் அமைப்பது நல்லது. தினமும் நீரைத் தெளித்து விட்டு, 50-60 சதவீத ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும்.

மண் புழுக்களின் உணவு தீர்ந்து விட்டால், மீண்டும் உலர்த்திய மாட்டுச் சாணத்தை இட வேண்டும். சில சமயங்களில் மாட்டுச் சாணத்துடன் கோதுமைத் தவிடு, பருப்புத் தவிடு, காய்கறிக் கழிவுகள், தழைச்சத்து நிறைந்த கிளைரிசிடியா, சூபாபுல், பூவரசு     போன்ற இலைகளையும் இடலாம். இப்படி வளர்க்கும் போது, 1-2 மாதங்களில் மண் புழுக்கள் இருபது மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மண்புழு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

  • தொட்டியில் புழுக்களை இடும் போது, இறந்த மற்றும் வெட்டுப்பட்ட மண் புழுக்களை நீக்கிவிட வேண்டும்.
  • தொட்டியும் சுற்றியுள்ள இடங்களூம், அதிக ஈரமில்லாமல் இருக்க வேண்டும். ஈரமிருந்தால், தொட்டியிலிருந்து புழுக்கள் வெளியேறி விடும்.
  • மண் புழுக்களின் எதிரிகளான எலி மற்றும் பெருச்சாளிகள் நுழையாத வகையில், புழு வளர்ப்புத் தொட்டியை, இரும்பு வளைகளால் மூடி வைக்க வேண்டும்.
  • கழிவின் ஈரப்பதம் சரியாக இருக்க வேண்டும். ஈரம் இல்லாமல் இருந்தாலும், ஈரம் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.
  • மண் புழுக்களின் எதிரிகளான, எறும்பு, மரவட்டை, பாச்சை போன்றவற்றைக் கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்குத் தூள், வேலிக்கருவேல் (Prosopis juliflora) இலைத்தூள், அல்லது உண்ணி (Lantana camara) இலைத்தூளைத் தூவி விடலாம். இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை இடுவது உகந்தது அல்ல.

மேற்கூறிய எளிய முறைகள் மூலம், மண் புழுக்களைச் சேகரித்துப் பெருக்கி, மண்புழு உரத்தைத் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.


SUDHAKAR

முனைவர் கு.சுதாகர்,

முனைவர் மொ.ப.கவிதா, முனைவர் சி.பரமேஸ்வரி, முனைவர் பெ.கீதாராணி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை – 625 562.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!

  • சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!

  • நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

  • கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • உயிர் உரங்களும் அவற்றை இடும் அளவுகளும்!

  • பயிர்க்கழிவுகள் வீணல்ல; வருமானம் தரும் வளம்!

  • பலா சாகுபடி!

  • விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!