My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

ண் என்பது, வேளாண்மையின் அடிப்படை வளமாகும். மக்களுக்கு உணவு, கால்நடைகளுக்குத் தீவனம், பல்வேறு தொழில்களுக்கு மூலப்பொருள் என, நமது வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மண். குறிப்பாக, பயிர் வளர்ச்சிக்கும், மக்கள் நலத்துக்கும் தேவையான சத்துகள் மண் மூலம் கிடைக்கின்றன. எனவே, மண்வளத்தையும் அதன் இயல்புத் தன்மையையும் பாதுகாப்பது, விவசாயிகளின் முக்கியக் கடமையாகும்.

மண்வளம் என்றால் என்ன?

மண்; பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், நீர், காற்று, நுண்ணுயிரிகள் மற்றும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளைச் சமநிலையில் கொண்டிருப்பதே மண்வளம் எனப்படுகிறது. வளமான மண், நல்ல வேர் வளர்ச்சிக்கு உதவுவதுடன், பயிர்களுக்கு வேண்டிய சத்துகளைச் சரியான அளவில் வழங்குகிறது.

மண்ணிலுள்ள முக்கியச் சத்துகள்

தாவரங்களின் சீரான வளர்ச்சிக்கு முக்கியமான 18 சத்துகள் தேவை. இவற்றில், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவை, வளிமண்டலம் மற்றும் நீரிலிருந்து கிடைக்கின்றன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற பேரூட்டச் சத்துகளும்; இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, செம்பு, போரான், மாலிப்டினம், குளோரின், நிக்கல் போன்ற நுண்சத்துகளும் பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மண்ணில் இந்தச் சத்துகள் சமநிலையில் இருந்தால் தான், பயிர்கள் திடமாக வளர்ந்து தரமான விளைச்சலை அளிக்கும். குறிப்பிட்ட ஒரு சத்துக் குறைந்தாலும் சரி, கூடினாலும் சரி, பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.

மண்வளம் குறைவதற்கான காரணங்கள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது, அதிகளவில் இரசாயன உரங்களை இடுவது, கரிம உரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, பயிர்க் கழிவுகளை எரிப்பது, மண்ணரிப்பு, அதிகப்படியான பாசனம், தவறான வேளாண் முறைகள் போன்றவை, மண்வளம் குறைவதற்கான காரணங்கள் ஆகும்.

குறிப்பாக, மண்ணில் கரிமப் பொருள்கள் குறைவதால், நிலத்தின் நீர்ப்பிடிப்புத் திறனும், நுண்ணுயிரிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். இதனால், பயிர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மண்வளத்தைப் பாதுகாக்கும் முறைகள்

மண்வளத்தைப் பாதுகாக்க, விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான வேளாண் முறைகளைப் பின்பற்ற வேண்டும். மண்ணாய்வைச் செய்து, அதன்படி உரங்களை இடுவது மிகவும் அவசியம். இதன் மூலம், தேவையற்ற உரச்செலவைக் குறைப்பதுடன், மண்ணில் சத்துச் சமநிலையையும் பராமரிக்க முடியும்.

பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், கம்போஸ்ட் போன்ற கரிம உரங்களை இடுவது, மண்ணின் கரிமப்பொருள் அளவை உயர்த்த உதவும். மேலும், பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றை மட்கச் செய்து மண்ணில் சேர்ப்பது, மண் வளத்தை மேம்படுத்தும்.

பயிர்ச்சுழற்சி முறையைப் பின்பற்றுவதும் முக்கியம். ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், பல்வேறு பயிர்களை மாற்றி மாற்றிப் பயிரிடுவதன் மூலம், மண்ணின் சத்துச் சமநிலையைப் பராமரிக்கலாம். குறிப்பாக, பயறுவகைப் பயிர்களைச் சேர்ப்பது, மண்ணின் நைட்ரஜன் வளத்தை மேம்படுத்த உதவும்.

மண்ணரிப்பைத் தடுப்போம்

மழை மற்றும் காற்றால், மேல் மண் அடித்துச் செல்லப்படுவது, மண்ணரிப்பு எனப்படும். மேல் மண்ணில் தான் கரிமப் பொருள்களும் சத்துகளும் அதிகமாக உள்ளன. எனவே, மண்ணரிப்பு ஏற்படாமல் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மரங்கள் மற்றும் புல் வகைகள் வளர்ப்பு, வயல் வரப்புகள் பாதுகாப்பு, மூடாக்குப் பயிர்கள் வளர்ப்பு, சரிவான நிலங்களில் முறையான உழவு முறைகளைக் கையாள்வது போன்ற செயல்கள் மூலம் மண்ணரிப்பைக் குறைக்கலாம்.

மண்வளமும் மனித நலமும்

மண்வளம், உணவின் தரத்துடன் நேரடித் தொடர்புடையது. வளமான மண்ணில் வளர்க்கப்படும் பயிர்கள், தரமான உணவுப் பொருள்களை வழங்குகின்றன. சில சத்துகள் குறைவாக உள்ள மண்ணில் விளையும் உணவுப் பொருள்களில், குறைவாக உள்ள அந்தச் சத்துகள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியமான மண், ஆரோக்கியமான பயிர், ஆரோக்கியமான மனிதன் என்னும் அணுகுமுறையை, வேளாண்மையில் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

விவசாயிகளின் பங்கு

மண்வளத்தைப் பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு சாகுபடிப் பருவத்துக்கு முன், மண்ணாய்வைச் செய்து, அது பரிந்துரைக்கும் அளவில் உரங்களை இட வேண்டும். கரிம உரங்கள் மற்றும் உயிர் உரங்களைச் சரியான முறையில் இடுவதுடன், பயிர்ச்சுழற்சி, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற நிலையான வேளாண் முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

எதிர்காலத் தலைமுறைக்கான பொறுப்பு

மண் தனது வளத்தை ஒருமுறை இழந்து விட்டால், அதை மீட்டெடுப்பது எளிதானதல்ல. இன்று, அதிக விளைச்சலைப் பெறுவதற்காக, மண்ணை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, எதிர்கால வேளாண்மையைப் பாதிக்கக்கூடும். எனவே, தற்போதைய தேவையை நிறைவேற்றுவதோடு, எதிர்காலத் தலைமுறைக்கும் வளமான மண்ணை விட்டுச் செல்லும் வகையில், வேளாண் முறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மண் என்பது வெறும் நிலமல்ல; அது உணவின் அடித்தளம், விவசாயியின் வாழ்வாதாரம் மற்றும் மனித குலத்தின் எதிர்காலம். எனவே, மண்ணாய்வு, சமச்சீர் உரமிடல், கரிம உரப் பயன்பாடு, பயிர்ச்சுழற்சி, மண்ணரிப்புத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, மண்வளத்தைப் பேணிக் காப்போம். சத்துமிகு மண்ணே வளமான வேளாண்மைக்கும், வளமான வேளாண்மையே ஆரோக்கியமான சமுதாயத்துக்கும் அடித்தளமாகும்.

மண்ணாய்வு மூலம் மண்வளத்தைப் பாதுகாப்போம்

மண்ணின் உண்மையான வளநிலையை அறிய, மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். மண்ணில் உள்ள சத்துகள், அமிலத்தன்மை (pH), உப்புத்தன்மை (EC), கரிமக் கார்பன் உள்ளிட்ட முக்கியப் பண்புகளை, மண்ணாய்வு மூலம் அறிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் பயிருக்குத் தேவையான உரங்களைச் சரியான அளவில் இடுவதால், தேவையற்ற உரச்செலவைக் குறைத்து, மண்வளத்தையும் பாதுகாக்கலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், தமிழ் மண்வளம் இணையதளத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளநிலை மற்றும் சத்துநிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். தற்போதைய மண் நிலையைத் துல்லியமாக அறிய, புதிதாக மண் பரிசோதனை செய்யுமாறு வேளாண்மைத்துறை ஆலோசனை கூறுகிறது.

எனவே, மண்வளத்தை அறியவும், மண்ணைப் பாதுகாக்கவும், விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள மண் பரிசோதனை நிலையத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டும். மண்ணாய்வு முடிவுகளின் அடிப்படையில் உரமிடுதல், பயிர்த் தேர்வு மற்றும் மண் மேலாண்மை நடவடிக்கைகள் மூலம், நீடித்த மற்றும் இலாபமிகு வேளாண்மையை உருவாக்க முடியும். மண்ணை அறிந்து சாகுபடி செய்வோம்; மண்வளத்தைப் பாதுகாத்துத் தலைமுறைகளை வளமாக்குவோம்.


நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!

  • கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • உயிர் உரங்களும் அவற்றை இடும் அளவுகளும்!

  • பயிர்க்கழிவுகள் வீணல்ல; வருமானம் தரும் வளம்!

  • பலா சாகுபடி!

  • விளைச்சலுக்கு அடிப்படை; விதைப்புக்கு முன் மண் பரிசோதனை!

  • பயிர்ப் பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய 9 முக்கியக் கோட்பாடுகள்!

  • வேர் மண்டலத்தைப் பாதுகாக்கும் சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ்!