My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!

சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்! SF3 https://pachaiboomi.net/579506-2/

ண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கிய இடம் வகிப்பது சூரியகாந்தி. இப்பயிர், குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருவதுடன், குறைந்த நீரிலும் வளரக்கூடியது. தமிழ்நாட்டில், இறவை மற்றும் மானாவாரி முறையில், சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. நவீன சாகுபடி உத்திகளை முறையாகக் கடைப்பிடித்தால், நல்ல மகசூலைப் பெறலாம்.

ஏற்ற மண்

சூரியகாந்திக்கு, நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணல் கலந்த களிமண் ஆகியன ஏற்றவை. அதிக நேரம் நீர்த்தேங்கி நிற்கும் நிலங்களைத் தவிர்க்க வேண்டும்.

மண்ணின் பி.எச். 6.5 முதல் 8.0 வரை இருப்பது சிறந்தது. உப்புத்தன்மை மிகுந்த நிலங்களில் முளைப்பும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். எனவே, விதைப்புக்கு முன், மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உரமிடுவது அவசியம்.

முக்கிய வீரிய ஒட்டு இரகங்கள்

தமிழ்நாட்டில், KBSH1, KBSH44, DRSH1, TNAU Sunflower Hybrid CO2 உள்ளிட்ட வீரிய ஒட்டு இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்தந்தப் பகுதி மற்றும் பருவத்துக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்களின் வீரிய ஒட்டு விதைகளை, வேளாண் துறையின் பரிந்துரைப்படி சாகுபடி செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை, கட்டிகள் இல்லாமல் 2-3 முறை நன்கு உழுது புழுதியாக்க வேண்டும். கடைசி உழவின் போது, மட்கிய தொழுவுரத்தை எக்டருக்கு 12.5 டன் வீதம் இட வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாத்திகள், பார்கள் மற்றும் வாய்க்கால்களை அமைத்து, நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்

மானாவாரி சாகுபடியில் விதைக் கடினப்படுத்தல் என்பது, ஆரம்ப முளைப்பு மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்த உதவும். தரமான விதைகளைத் தேர்வு செய்து, ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் கலந்து நிழலில் உலர்த்தி, இயல்பான ஈரப்பதத்துக்குக் கொண்டு வந்து விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி

விதை மூலம் பரவும் பூஞ்சை நோய்களைத் தடுக்க, சூரியகாந்தி விதைகளை நேர்த்தி செய்வது அவசியம். இதற்கு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைகளின் ஆரம்ப வளர்ச்சியை ஊக்குவிக்க, ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 25 கிராம் பாஸ்போபாக்டீரியா வீதம் கலந்து, உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இப்படி, நேர்த்தி செய்த விதைகளை, நேரடியாக வெய்யிலில் உலர்த்தாமல், நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதன் மூலம், விதை முளைப்பு, ஆரம்ப வேர் வளர்ச்சி மற்றும் பயிரின் ஆரம்ப வளர்ச்சி சீராக இருக்கும்.

விதைப்பு

  • வீரிய ஒட்டு இரக விதைகளை 60×30 செ.மீ. இடைவெளியில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.
  • இவ்வகையில், இறவை சாகுபடிக்கு எக்டருக்கு 4 கிலோ விதைகளும், மானாவாரியில் பயிரிட, எக்டருக்கு 5 கிலோ விதைகளும் தேவைப்படும்.
  • விதைத்து 10-ஆம் நாளில், ஒவ்வொரு குத்திலும் தரமான ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு, மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.

சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்! SF4 https://pachaiboomi.net/579506-2/

உர மேலாண்மை

மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுவதே சிறந்தது. இறவையில் வீரிய ஒட்டு இரகத்தைப் பயிரிட ஏக்கருக்கு, 24:36:24 கிலோ தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகள் தேவைப்படும்.

இதற்கு, 53 கிலோ யூரியா, 228 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாசியம் குளோரைடை இட வேண்டும். ஆனால், மண்ணாய்வு மற்றும் இடப்போகும் உரத்திலுள்ள சத்துகளின் அளவைப் பொறுத்து, இந்த அளவை மாற்ற வேண்டும்.

கந்தகத்துக்கு முக்கியத்துவம்

இது, சூரியகாந்திச் செடிகளின் சீரான வளர்ச்சிக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் உதவும். எனவே, இதை எக்டருக்கு 20 கிலோ வீதம் இட வேண்டும். இதற்கு, ஜிப்சம், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அல்லது அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்களை இடலாம்.  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டை இடும்போது, அதிலுள்ள கந்தகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாசனம்

விதைத்ததும் முளைப்பு நீரும், 4-5-ஆம் நாளில் உயிர்ப்பு நீரும் தர வேண்டும். பிறகு, மண்வாகு மற்றும் பருவநிலைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும்.

மொட்டுகள் உருவாகும் போது, பூக்கும் போது மற்றும் விதைப்பிடிப்பின் போது, பாசனம் செய்தல் மிகவும் அவசியம். குறிப்பாக, பூக்கும் காலத்தில் பாசனப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

களை மேலாண்மை

ஆரம்ப வளர்ச்சி நிலையில், பயிருடன் களைகள் போட்டியிட்டால் மகசூல் குறையும். எனவே, விதைத்து 15 மற்றும் 30 நாளில், கைக்களை எடுக்க வேண்டும். தேவைப்படின், சரியான களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தலாம்.

நல்ல விதைப்பிடிப்புக்கு என்ன செய்யலாம்?

சூரியகாந்தியில் அதிக மகசூலைப் பெறுவதற்கு, நல்ல விதைப்பிடிப்பு மிகவும் முக்கியம். எனவே, பூக்கும் காலத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். எக்டருக்கு 5 தேனீப் பெட்டிகளை வைத்துப் பராமரிப்பதன் மூலம், இயற்கையான மகரந்தச் சேர்க்கையைக் கூட்டலாம். பூக்கும் காலத்தில் தேனீக்களின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

இந்தக் காலத்தில், தேவையற்ற பூச்சிக்கொல்லித் தெளிப்பைத் தவிர்க்க வேண்டும். தேவையெனில், பூந்தலை முழுமையாக விரியும் காலத்தில், காலை 9 முதல் 11 மணி வரை, கை மகரந்தச் சேர்க்கையைச் செய்து, விதைப்பிடிப்பைப் பெருக்கலாம். 

மேலும், பூந்தலை விரியும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து தெளிப்பது, தரமான விதைகள் உருவாக உதவும்.

பூக்கும் காலத்தில் மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்கும் வகையில் பாசனம் அளிக்க வேண்டும். இத்தகைய செயல்களை முறையாகச் செய்வதன் மூலம், சூரியகாந்தியில் திரட்சியான விதைகள் நிறைந்த, நல்ல மகசூலைப் பெறலாம்.

முக்கியப் பூச்சிகள்

  • சூரியகாந்தியைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளில், தண்டு ஈ, தலைப்புழு, அசுவினி, வெள்ளை ஈ, இலைத் துளைப்பான், கம்பளிப்புழு ஆகியன அடங்கும்.
  • பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். வயல் கண்காணிப்பு, இனக்கவர்ச்சிப்பொறி, பறவைத் தாங்கிகள், வேம்பு சார்ந்த மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • பூச்சித் தாக்குதல் பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால் மட்டுமே, முறைப்படி, பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

முக்கிய நோய்கள்

  • சூரியகாந்தியில், ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய் (Alternaria Leaf Blight), துருநோய் (Rust), வேரழுகல் மற்றும் வாடல் நோய் (Sclerotium Wilt), கரித்தண்டு அழுகல் நோய், அடிச்சாம்பல் நோய் (Powdery Mildew), மொசைக் நோய் போன்றவை ஏற்படலாம்.
  • நோயற்ற விதை, விதை நேர்த்தி, நல்ல வடிகால், பயிர்ச்சுழற்சி, பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல் ஆகியன, முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
  • விதை மற்றும் மண் மூலம் பரவும் அடிச்சாம்பல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட முறையில் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • நோய் அறிகுறி தெரிந்ததும், அதற்கான பூசணக்கொல்லி மருந்தை, வேளாண் துறையின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்.

அறுவடை

பூந்தலையின் பின்புறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறி, விதைகள் நன்கு கடினமாகும் போது அறுவடை செய்ய வேண்டும். பூந்தலைகளை வெட்டி நன்கு உலர்த்திய பிறகு விதைகளைப் பிரிக்க வேண்டும். விதைகளைச் சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி, பாதுகாப்பான இடத்தில் சேமிக்க வேண்டும். அதிக ஈரப்பதத்தில் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

விவசாயிகள், மண்ணாய்வு முடிவின்படி, உரம் மற்றும் நுண்சத்துகளை இட்டு, சாகுபடி செய்வதே நல்ல பொருளாதாரப் பலனைத் தரும். பூச்சிக்கொல்லி, பூசணக் கொல்லிகளின் பயன்பாட்டில் தற்போதைய பதிவு, லேபிள் பரிந்துரை அளவு மற்றும் அறுவடைக்கு முன் காத்திருப்புக் காலத்தை அவசியம் பின்பற்ற வேண்டும்.


சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/579506-2/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!

  • மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!

  • நிலையான வேளாண்மைக்கு மண்வளமே அடித்தளம்!

  • கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவை ஊட்டமேற்றிய உரமாக மாற்றுதல்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!