My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பலா சாகுபடி!

Jackfruit

லவிதமான மரங்களில் ஒன்றான பலா மரம் அதிசய மரம். முள்ளுக்குள் முத்துச் சுளைகளைக் கொண்ட மரம், முக்கனிகளில் நடுநாயகமாக விளங்கும் பழத்தைத் தரும் மரம், பாருக்குள்ளே நல்ல மரம், கற்பக விருட்சம், ஏழை மனிதனின் பழ ரொட்டியைத் தரும் மரமென்று, பலாமரம் பலவாறு போற்றப்படுகிறது. அரசமரம், ஆலமரம், அத்திமரம், கரிப்பலா ஆகியன, பலாக் குடும்பத்தைச் சேர்ந்த மரங்களாகும்.

Jackfruit Cultivation | பலா சாகுபடி!

பலா, சங்ககாலக் கவிதைகள் மற்றும் பழமொழிகளில் காணப்படுகிறது. இனிப்புச் சுளைக்காக, ஐந்து சுவைகள் அடங்கிய காய்கறிக்காக மட்டுமின்றி, மரப்பொருள்கள் மற்றும் தீவன நோக்கிலும் பயிரிடப்படும் மரம். தமிழ்நாட்டில், பண்ருட்டி, திண்டுக்கல், கொல்லிமலை, பழனி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

பலா இரகங்களான, பாலூர்-1 (PLR-1), பாலூர்-2 (PLR-2), பர்லியார்-1, பேச்சிப்பாறை-1 (PPI-1), சிங்கப்பூர் பலா, வியட்நாம் சூப்பர் இயர்லி, ஜெ-33 மற்றும் நாட்டு இரகங்கள், விதைகள் மூலம் வளர்ந்த செடிகள், எட்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆனால், ஒட்டுக்கட்டிய செடிகள் ஐந்து ஆண்டுகளிலேயே காய்ப்புக்கு வந்து விடும். பழங்களை, மார்ச் முதல் ஜூலை வரை அறுவடை செய்யலாம்.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம், பண்ருட்டிப் பகுதியில் உள்ள பலா மரங்கள் (Jackfruit ), இந்தியாவின் பிற இடங்களில் உள்ள பலா மரங்களிலிருந்து மாறுபட்ட சில பண்புகளைக் கொண்டுள்ளன. பண்ருட்டிப் பகுதியில் பலா சாகுபடி அதிகப் பரப்பில் நடந்து வருகிறது. அதிலும், தனிப்பயிராக மட்டும் 800 எக்டரில் பலா சாகுபடி உள்ளது. நாட்டிலேயே இது மிகவும் அரிதானது. அதனால் தான் பண்ருட்டி, இந்தியாவின் பலாப்பழத் தலைநகரம் எனப்படுகிறது.

இப்பகுதியில் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பலாக்கன்றுகள் உற்பத்தி ஆகின்றன. மேலும், மென்மையான அமைப்பு, சுளைகள், நறுமணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பண்ருட்டிப் பலாப்பழத்துக்குப் புவிசார் குறியீடு 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இங்குள்ள பலா மரங்கள் (Jackfruit) ஒரு பருவத்தில் 150 முதல் 200 பழங்களைத் தருகின்றன. பழைய, மாதிரி பலா மரங்கள் சில, இன்னும் ஆண்டுக்கு 200-300 பழங்களை விளைவித்துத் தருகின்றன. லேட்டரைட் நிறைந்த மண்ணுடன் இணைக்கப்பட்ட சுவை, அமைப்பு, உள்ளூர்க் காலநிலை ஆகியன, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் விளையும் பலாப்பழங்களை விட, பண்ருட்டிப் பலாப்பழங்களுக்கு, அடர்த்தியான சுளைகள், இனிப்பு மற்றும் அதிக நறுமணத்தை அளிக்கின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பண்ருட்டிப் பலாவுக்கு, சென்னை, பெங்களூரு சந்தைகளில் நல்ல விலை கிடைக்கிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பண்ருட்டியில் 200 ஆண்டுகள் பழமையான மரமொன்று, ஆயிரங்காச்சி மரமென்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது. தானே புயலில் சிக்கி, எத்தனையோ மரங்கள் விழுந்த போதிலும், இந்த ஆயிரங்காச்சி மரம் விழாமல் நின்று, இன்றும் காய்த்துக் கொண்டிருக்கிறது.

கரையான் எதிர்ப்பு, நீர்ப்புகா தளவாடங்கள் மற்றும் வீணை, மிருதங்கம் போன்ற  இசைக் கருவிகளைச் செய்வதற்கு, தேக்கு மரத்தைக் காட்டிலும் பலா மரம் சிறந்தது. விதை மூலம் உருவான பலாமரச் சந்ததிகளில், குறுக்கு மகரந்தச் சேர்க்கை எளிதாக நடைபெறுவதால், விவசாயிகள் பெரும்பாலும் தாய் மரத்தின் தன்மை மற்றும் தரத்தைப் பாதுகாத்து வைத்திருக்க ஒட்டுச் செய்கிறார்கள்.

பலாமர வகைகள்

பலா மரங்களில், வெளிப்பலா என்னும் விறகு பலா, பழப்பலா என்னும் ஊறல் பலா என, இரண்டு வகைகள் உள்ளன.

இந்தியாவின் பலா இரகங்கள்

தமிழ்நாட்டில், பாலூர் 1, பாலூர் 2, பாலூர் 3, பெரியகுளம் 2, பேச்சிப்பாறை 1, ஹரி கோல்ட், திருமலா, தஞ்சாவூர் பலா, ஆரஞ்சு பலா, மல்லேஸ்வரம் சுப்பண்ணா, டான்ஸ் சூர்யா, சிவப்புப் பலா, சித்து சங்கரா, செந்தூரா, செம்பருத்தி ஆகிய இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் பலா, முட்டம் வரிக்கோ, கிருஷ்ணா, சந்திர ஹசினா போன்ற இரகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பலாமர ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மையங்கள்

பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பலாப்பழ (Jackfruit) மரபணு வகைகளைச் (ஜாம் பிளாசம்) சேகரித்து, அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் தேர்வு ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. திருச்சூர் கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகம், கேரளம் மற்றும் தென்னிந்திய பலாமர வகைகளின் மரபணு வங்கியைப் பராமரித்து வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், PLR-1, PLR-2, PLR-3, PLR-4 ஆகிய பலா இரகங்களை உருவாக்கியுள்ளது. PLR-3 பலா இரகம், பிசுபிசுப்புக் குறைந்த மற்றும் பாலில்லாப் பலாவாக விளங்குகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பிதான் சந்திர கிரிஷி விஸ்வ வித்யாலயா, உயர் புலன்களை அடையாளம் கண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, கஜ்வா பலா இரகத்தைத் தேர்வு செய்துள்ளது.

பலாவிலிருந்து கிடைக்கும் பொருள்கள்

குறைந்த விலையில் கிடைக்கும் விளைபொருள்களை, அவற்றின் நிறம், வாசம், சத்துகள், சுவை ஆகிய தன்மைகள் மாறாமல், பல நாட்களுக்கு இருக்கும் வகையில் தயாரிக்கப்படும் பொருள்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஆகும்.

இவ்வகையில், பலாப்பழத்தில் இருந்து, ஜாம், ஜெல்லி, தயார் நிலை பருகும் பானங்கள், பலாப்பழப் பார், சிப்ஸ், பலாப்பழ ஊறுகனி, பலாக் கேண்டி ஆகிய பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

பலாவில் எடுக்கப்படும் ஜாக் லைன் என்னும் வேதிப்பொருள், எச்.ஐ.வி. வைரசை அழிக்கப் பயன்படுவதாக, பிரான்ஸ் நாட்டின், மாண்ட் சியர் பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

பலாப்பழத்தைப் (Jackfruit) பச்சையாக அல்லது அவியலாக, பொரியலாகத் தயாரித்து உணவில் சேர்க்கலாம். மாவுச்சத்து மிகுந்த பலா விதைகள், சத்தில்லாக் குழந்தைகளுக்கான சத்துணவுத் தயாரிப்பில் பயன்படுகிறது.

பலாமரப் பட்டையில் எடுக்கப்படும் ரேக்சன் என்னும் பொருள், மின்சாரச் சுற்றுகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பலா மரத்திலிருந்து இயற்கை நிறமி மற்றும் நறுமணப் பொருளைத் தயாரிக்கலாம். பலா இலைகள், ஆடுகளுக்கு நல்ல தீவனமாகும்.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள்

நூறு கிராம் இளம் காயில்: நீர் 76.2-85.2 கிராம், புரதம் 2.0-2.6, கொழுப்பு 0.1-0.6 கிராம், மாவுச்சத்து 9.4-11.5 கிராம், நார்ச்சத்து 2.6-3.6 கிராம், மொத்தத் தாதுப்புகள் 0.9 கிராம், கால்சியம் 30.0-73.2 மி.கி,, பாஸ்பரஸ் 20.0-57.2 மி.கி., பொட்டாசியம் 287-323 மி.கி., சோடியம் 3.0-35.0 மி.கி., இரும்பு 0.4-1.9 மி.கி., வைட்டமின் ஏ 30 மி.கி., தையாமின் 0.05-0.15 மி.கி., ரிபோ பிளேவின் 0.05-0.2 மி.கி., வைட்டமின் சி 12.0-14.0 மி.கி., ஆற்றல் 50-210 கி/ கலோரி.

நூறு கிராம் முதிர் பழத்தில்: நீர் 72.0-94.0 கிராம், புரதம் 1.2-1.9 கிராம், கொழுப்பு 1.0-0.4 கிராம், மாவுச்சத்து 16.0-25.4 கிராம், நார்ச்சத்து 1.0-1.5 கிராம், மொத்தச் சர்க்கரை 20.6 கிராம்,  மொத்தத் தாதுப்புகள் 0.87-0.9 கிராம், கால்சியம் 20.0-37.0 மி.கி., மெக்னீசியம் 27.0 மி.கி., பாஸ்பரஸ் 38.0-41.0 மி.கி., பொட்டாசியம் 191-407 மி.கி., சோடியம் 2.0-41.0 மி.கி., இரும்பு 0.5-1.1 மி.கி., வைட்டமின் ஏ 175-540 மி.கி., தையாமின் 0.03-0.09 மி.கி., ரிபோ பிளேவின் 0.05-0.4 மி.கி., வைட்டமின் சி 7.0-10.0 மி.கி., ஆற்றல் 88-410 கி/கலோரி.

சாகுபடி முறை

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: பலாவை, (Jackfruit) கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் பயிரிடலாம். எல்லாவித நிலத்திலும் நன்கு வளரும். ஜூன்-டிசம்பர் காலத்தில் நட வேண்டும். மண் கண்டம் ஆழமாக, நல்ல வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.

நிலத்தயாரிப்பு: நிலத்தை நன்றாக உழுது, மணல் சார்ந்த நிலமாக இருந்தால், 2x2x2 அடி, இறுக்கமான நிலமாக இருந்தால், 3x3x3 அடி அளவில், குழிகளை எடுக்க வேண்டும். செடிகளை நடுவதற்குப் பத்து நாட்களுக்கு முன், ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் மேல் மண்ணைக் கலந்து இட வேண்டும். செடிகளை நட்ட பிறகு, குழிக்கு, ஐந்து லிட்டர் நீருக்கு பத்து மி.லி. பயோ NPK உரக்கலவை வீதம் கலந்து ஊற்ற வேண்டும்.

இடைவெளி: பொதுவாக, ஒட்டுச்செடிகளை 8×8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். மேலும், கீழே கூறியுள்ள இடைவெளிகளிலும் பலாச் செடிகளை நடலாம். ஏக்கருக்கு எண்பது மரங்கள் இருக்கும் வகையில், 7×7 மீட்டர், ஏக்கருக்கு 60 மரங்கள் இருக்கும் வகையில், 8×8 மீட்டர், ஏக்கருக்கு 40 மரங்கள் இருக்கும் வகையில், 10×10 மீட்டர், ஏக்கருக்கு 160 மரங்கள் இருக்கும் வகையில், 5×5 மீட்டர் ஆகிய இடைவெளிகளிலும் நடலாம்.

பருத்த மரம், பழங்கள் மற்றும் காய்ப்பலா அறுவடைக்கு ஒட்டு இரகங்களையும், நீடித்த வேளாண்மை, காய்கள் மற்றும் பழ மகசூல், சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் தடிமர உற்பத்திக்கு, விதைச் செடிகளையும் தேர்வு செய்து நடலாம்.

நீர் நிர்வாகம்: செடிகள் நன்றாக வளரும் வரை, வாரம் ஒருமுறையும், பிற்காலங்களில் தேவைப்படும் போதும் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்: பலாச் செடிகளுக்கு (Jackfruit) ஆண்டுதோறும் இட வேண்டிய உரங்களை இரண்டாகப் பிரித்து, மே ஜூன் காலத்திலும், செப்டம்பர் அக்டோபர் காலத்திலும் இட வேண்டும். இவ்வகையில், ஐந்து ஆண்டுகள் வரை, செடிக்கு 10 கிலோ தொழுவுரம், 150 கிராம், 80 கிராம், 100 கிராம் வீதம், தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகள் தேவைப்படும்.

ஆறாம் ஆண்டிலிருந்து 50 கிலோ தொழுவுரம், 750 கிராம், 400 கிராம், 500 கிராம் வீதம், தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகள் தேவைப்படும். இவற்றை, மேலே கூறியபடி இரண்டாகப் பிரித்து இட வேண்டும்.

கவாத்து: புயல் மற்றும் வேகமாகக் காற்று வீசும் பகுதிகளில் உள்ள மரங்களின் வளர் நுனியை 12 அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். நான்கடி உயரத்தில் இருந்து திடமான கிளைகளை வளர விட்டால், அறுவடையும் பராமரிப்பும் எளிதாக இருக்கும்.

மரங்களுக்காக வளர்த்தால், 12 அடி உயரம் வரை கன்றுகள் வளரும் போதே, பக்கக் கிளைகளை மாதம் ஒருமுறை வெட்டி விட வேண்டும். வளர்ந்த மரங்களில் ஆண்டுக்கு இருமுறை, பயனற்ற போத்துகளை, மெல்லிய கிளைகள் மற்றும் காய்ந்த சிம்புகளை, வெட்டி அகற்ற வேண்டும்.

பிஞ்சுகளைக் கழித்தல்: ஒடுக்கு மற்றும் பூச்சி, நோயற்ற தரமான காய்ப்புக்கு, காம்புக்கு ஒரு பிஞ்சு வீதம் விட்டு விட்டு, மற்ற பிஞ்சுகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்தின் வயது மற்றும் கிளைகளின் வளர்ச்சியைப் பொறுத்து, ஒரு மரத்தில், ஒரு பருவத்தில், இருபது முதல் நூறு பிஞ்சுகள் வரை காய்ப்புக்கு விடலாம்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: வயல் சுத்தம் மிகவும் அவசியம். அழுகிய பழங்கள், காய்ந்த சிம்புகளை அகற்றி வெய்யிலில் காய வைத்து எரித்து விட வேண்டும். (Jackfruit) அடிமரத்தில் மூன்றடி உயரம் வரை தாரைக் காய்ச்சிப் பூச வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது ஒரு சதவீத போர்டோ கலவையை, வெள்ளைக் களிமண்ணில் கரைத்துப் பூச வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு ஐந்து மி.லி. அசடிராக்ட்டின், ஐந்து மி.லி. சூடோமோனாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. பவேரியா பேசியானா பூச்சிக்கொல்லி, ஐந்து மி.லி. பேசிலஸ் சப்டிளிஸ் பூசணக்கொல்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.  

மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு, அரை மில்லி ஒட்டும் திரவத்துடன், 10 மி.லி. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஐந்து மி.லி. பேசிலஸ் துருஞ்சியன்சிஸ் அல்லது ஐந்து மி.லி. பர்புசீலியம் உயிரிப் பூஞ்சை வீதம் கலந்து பயன்படுத்தலாம்.

பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மி.லி. பிரபிகோனசால் அல்லது 0.5 மி.லி. ஹெக்சகோனசால் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தண்டுத் துளைப்பான்கள் ஏற்படுத்திய துளைகளைச் சுத்தம் செய்து, 25 மி.லி. பெட்ரோலை ஊற்றி, ஈர மண்ணால் பூசிவிட வேண்டும்.

வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, மழைக்காலத்தில், பத்துக்கிலோ சாணம், ஒரு கிலோ  டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்த கலவையை, ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் அரைக்கிலோ வீதம் தூவ வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் மெட்டலாக்சில் 4 சத மருந்து அல்லது ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, நோயுற்ற மரங்களைச் சுற்றி, மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 10 மி.லி. சூடோமோனாஸ் அல்லது 10 மி.லி. டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து ஊற்ற வேண்டும். மாதம் ஒருமுறை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் 19:19:19 நீரில் கரையும் காம்ப்ளக்ஸ் உரத்தை, செடிக்கு 10 லிட்டர் ஊற்றலாம். மேலும், 10 லிட்டர் நீருக்கு அரை லிட்டர் ஜீவாமிர்தம் வீதம் கலந்து ஊற்ற வேண்டும்.

வண்டு போன்ற பூச்சிகள் இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. பேரத்தையான் 50 ஈசி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது நடுத்தர வயது மரங்களுக்கு 2 சதவீத மெத்தைல் பாரத்தையான் அல்லது மரத்துக்கு 5 கிலோ குயினால்பாஸ் தூவு மருந்து 1.5% வீதம் தூவ வேண்டும்.

அறுவடை

பொதுவாக, பலா மரங்கள் (Jackfruit) எட்டு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். ஆனால், ஒட்டுக் கன்றுகள் 4-5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். எக்டருக்கு நூறு டன் பலாப் பழங்கள் கிடைக்கும். ஒரு மரம், 100 முதல் 200 பழங்கள் வரை காய்க்கும். ஒரு பழம், 10 முதல் 30 கிலோ எடை வரை இருக்கும்.

ஆனால், பண்ருட்டிப் பகுதியில் விளையும் பழத்தின் எடை, 2 கிலோவில் தொடங்கி, 40 கிலோ வரை இருக்கும். பத்துக்கிலோ பழத்திலிருந்து 3 கிலோ பலாச்சுளைகள், 2 கிலோ கொட்டைகள், 5 கிலோ சக்கை கிடைக்கும்.

மகசூல்

ஒரு Jackfruit மரத்திலிருந்து கிடைக்கும் காய்களின் எடை 250 கிலோ முதல் 1,000 கிலோ வரை இருக்கும். ஒரு ஏக்கரிலிருந்து 20 டன் முதல் 40 டன் காய்கள் வரை கிடைக்கும். ஒரு ஏக்கர் பலா மரங்கள் மூலம், 1-2 இலட்சம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும்.  

மேலும் விவரங்களுக்கு: முனைவர் கு.காயத்ரி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர்- 607 102. தொலைபேசி: 04142-275222, email: hrspalur@tnau.ac.in


பலா சாகுபடி!

முனைவர் கு.காயத்ரி,

முனைவர் இரா.லெனின், முனைவர் கோ..சுதாகர் ராவ், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். முனைவர் க.வெங்கடேசன், முதன்மையர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்: