My page - topic 1, topic 2, topic 3

முருங்கையின் மருத்துவ மதிப்பை உயர்த்தும் குளுகோ மொரிங்கின்!

Gluco moringin

முருங்கை, தமிழர்களின் அன்றாட உணவிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ள ஓர் அற்புதத் தாவரமாகும். அதிசய மரம் என்று உலகம் முழுவதும் புகழப்படும் முருங்கை, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, A, C, E வைட்டமின்கள்,  பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல்வேறு சத்துகளின் களஞ்சியமாக விளங்குகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையான அனைவருக்கும் ஏற்ற சிறந்த இயற்கை உணவாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில், அண்மைக் காலத்தில் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது, முருங்கையில் இயற்கையாகக் காணப்படும், குளுகோ மொரிங்கின் (Gluco moringin) என்னும் உயிர்ச் செயற்பாட்டு வேதிப்பொருளாகும். பல்வேறு நோய்களைத் தடுக்கும் திறனுள்ள இந்த இயற்கை மூலக்கூறு, எதிர்காலத்தில் செயற்பாட்டு உணவுகள், சத்து மருந்துகள், மருத்துவ உணவுகள் மற்றும் இயற்கை மருந்துகளை உருவாக்குவதற்கான முக்கிய மூலப்பொருளாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

முருங்கையில் உள்ள குளுகோ மொரிங்கின் (Gluco moringin)

குளுகோ மொரிங்கின் என்பது, குளுக்கோசினோலேட் (Glucosinolate) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இயற்கைத் தாவர வேதிப்பொருளாகும். பொதுவாக, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கடுகு போன்ற சிலுவைக் காய்கறிகளில் (Cruciferous vegetables) இவ்வகைச் சேர்மங்கள் உள்ளன. ஆனால், முருங்கையில் உள்ள குளுகோ மொரிங்கின், அதன் தனித்துவமான வேதி அமைப்பினால் மற்ற குளுக்கோ சினோலேட்டுகளில் இருந்து வேறுபடுகிறது. முருங்கை இலை, விதை, பூ, காய் மற்றும் இளம் தண்டுகளில் கூட இது காணப்படுகிறது. இதுவே, முருங்கையின் மருத்துவ மதிப்பை உலகளவில் உயர்த்தியுள்ளது.

இங்கே குறிப்பிடத்தக்க தகவல் யாதெனில், இந்த குளுகோ மொரிங்கின் (Gluco moringin) தானாக மனித உடலில் செயல்படுவதில்லை. முருங்கை இலைகளை நறுக்கும் போது, மென்று சாப்பிடும் போது அல்லது அரைக்கும் போது, தாவரத்தில் இயற்கையாக இருக்கும் மைரோசினேஸ் என்னும் நொதி, குளுகோ மொரிங்கினை மொரிங்கின் என்னும் சக்தி வாய்ந்த ஐசோதையோசியனேட் சேர்மமாக மாற்றுகிறது. இந்த மொரிங்கின் தான், முருங்கையின் பெரும்பாலான மருத்துவ நன்மைகளுக்குக் காரணமாக இருப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இயற்கையில் பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகளிடம் இருந்து தாவரத்தைப் பாதுகாக்க உருவான இந்தப் பாதுகாப்பு அமைப்பு, மனிதர்களுக்கும் பல்வேறு உடல் நல நன்மைகளை வழங்குகிறது.

ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் Gluco moringin

இன்றைய வாழ்க்கை முறையில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வலி, உடல் பருமன், புற்றுநோய் போன்ற, நாட்பட்ட நோய்களுக்கு நாள்பட்ட ஒவ்வாமை முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் திறன் மொரிங்கினுக்கு (Gluco moringin) இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, உடலில் ஒவ்வாமையைத் தூண்டும் வேதிப்பொருள்களின் உற்பத்தியைக் குறைத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சமன் செய்யும் பணியை இது செய்கிறது. இதனால், முருங்கையை உணவில் தொடர்ந்து சேர்ப்பது, உடல் ஒவ்வாமையைக் குறைத்து, பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குளுகோ மொரிங்கின் (Gluco moringin) மற்றும் அதிலிருந்து உருவாகும் மொரிங்கின், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. நமது உடலில் சுவாசம், மாசு, மன அழுத்தம், புகைப்பிடித்தல், புற ஊதாக் கதிர்கள் போன்ற காரணங்களால் உருவாகும் சுதந்திர மூலக்கூறுகள் செல்களைச் சேதப்படுத்துகின்றன. இந்த ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், முதுமையை வேகப்படுத்துவதோடு, பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.

மொரிங்கின், (Gluco moringin) இந்தத் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை நீக்குவதுடன் மட்டுமின்றி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பையும் தூண்டுகிறது. குறிப்பாக, சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூட்டேஸ், கேடலேஸ், குளூட்டதையோன் போன்ற இயற்கை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், செல்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பை வழங்குகிறது.

உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் குளுகோ மொரிங்கின் (Gluco moringin) முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இது இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, இன்சுலினின் செயல் திறனை மேம்படுத்தி, கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதையும் குறைத்து, கொழுப்பு மாற்றச் செயற்பாட்டைச் சீராக்குகிறது. இதனால், முருங்கையை அடிப்படையாகக் கொண்ட செயற்பாட்டு உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான துணை உணவுகளாகவும் அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

புற்றுநோய் ஆராய்ச்சியிலும் குளுகோ மொரிங்கின் (Gluco moringin) புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, புற்றுநோய்ச் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், அவற்றை இயற்கை முறையில் அழிக்கவும், புதிய இரத்த நாளங்கள் உருவாவதைத் தடுக்கவும், புற்றுநோய்ப் பரவலைக் குறைக்கவும், மொரிங்கின் உதவுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

இருப்பினும், இவை பெரும்பாலும் ஆய்வக மற்றும் விலங்கு ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் என்பதால், மனிதர்களில் மேலும் விரிவான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

முருங்கையில் உள்ள குளுகோ மொரிங்கின் (Gluco moringin) அளவு, எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மரத்தின் இனம், வளர்ந்துள்ள நிலை, மண்வளம், காலநிலை, அறுவடை செய்யும் பருவம், இலைகளை உலர்த்தும் முறை, சேமிப்பு முறை போன்ற பல காரணிகள், அதன் அளவை மாற்றுகின்றன. குறிப்பாக, அதிக வெப்ப நிலையில் உலர்த்தும் போது, மைரோசினேஸ் நொதி செயலிழக்கக் கூடும்.

இதனால், குளுகோ மொரிங்கின் (Gluco moringin) மொரிங்கினாக மாறும் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த வெப்ப நிலையில் நிழலில் உலர்த்துதல் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப நிலையில் உலர்த்துதல் போன்ற தொழில் நுட்பங்கள், தற்போது ஆய்வாளர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அண்மைக் கால ஆராய்ச்சிகளில், முளைக்கட்டிய முருங்கை விதைகளில் (Germinated Moringa Seeds) குளுகோ மொரிங்கின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், முளைக்கட்டிய முருங்கை விதைகள் எதிர்காலத்தில் உயர்தரச் செயற்பாட்டு உணவுப் பொருளாகவும், சத்துச் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், நானோ தொழில் நுட்பம், மைக்ரோ என்காப்சுலேஷன், மைக்ரோ ஃப்ளூயிடிக் தொழில் நுட்பங்கள் மூலம், குளுகோ மொரிங்கினைப் பாதுகாப்பாக உடலுக்குள் செலுத்தும் புதிய ஆய்வுகளும், உலகளவில் நடைபெற்று வருகின்றன.

இந்தியா, உலகின் மிகப்பெரிய முருங்கை உற்பத்தி நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் திண்டுக்கல், கரூர், திருப்பூர், தூத்துக்குடி, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள், முருங்கை சாகுபடியில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், முருங்கையை வெறும் காய்கறியாக மட்டுமின்றி, அதிக மதிப்புள்ள உயிர்ச் செயற்பாட்டுச் சேர்மங்களை வழங்கும் தொழில் துறைப் பயிராக மாற்றும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

குளுகோ மொரிங்கின் (Gluco moringin) அடிப்படையில் உயர்தரச் சத்து மாத்திரைகள், மூலிகை பானங்கள், உடல்நலப் பொடிகள், செயற்பாட்டு உணவுகள் மற்றும் மருத்துவ உணவுகளை உருவாக்குவதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்த முடியும்.

மொத்தத்தில் பார்க்கும் போது, குளுகோ மொரிங்கின் (Gluco moringin) என்பது, முருங்கையில் மறைந்திருக்கும் ஒரு சாதாரண வேதிப்பொருள் அல்ல; அது இயற்கை வழங்கியுள்ள நமது உடல் நலனுக்கான மூலக்கூறாகும். ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நீரிழிவு மேலாண்மை, இதயப் பாதுகாப்பு, நரம்புப் பாதுகாப்பு, புற்றுநோய்த் தடுப்பு போன்ற பல்வேறு துறைகளில், இது மிகுந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது.

மனிதர்களில் மேலும் விரிவான மருத்துவ ஆய்வுகள் தேவைப்பட்டாலும், முருங்கையின் மதிப்பை உலகளவில் உயர்த்தியுள்ள முக்கியக் காரணிகளில் குளுகோ மொரிங்கினும் ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை. நமது பாரம்பரிய உணவாக இருந்த முருங்கை, இன்று உலகளாவிய அறிவியல் உலகில், எதிர்காலச் செயற்பாட்டு உணவு என்னும் புதிய அடையாளத்தைப் பெற்றிருப்பதற்கு, இந்த அற்புத உயிர்ச் செயற்பாட்டு மூலக்கூறே முக்கியக் காரணமாக விளங்குகிறது.


முருங்கையின் மருத்துவ மதிப்பை உயர்த்தும் குளுகோ மொரிங்கின்!

முனைவர் மு.வெங்கிடசாமி,

உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • மதிப்புக் கூட்டிய தக்காளிப் பொருள்கள்!

  • கோழிக்கறி சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

  • நெல்லிக்காய் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

  • தேங்காய் – மதிப்புமிகு பொருள்கள்!

  • தினையில் உள்ள சத்துகளும், மதிப்புக் கூட்டல் முறைகளும்!

  • மீன் உரம் தயாரித்தல்!

  • நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

  • நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!