உணவுப் பொருள்களில், காய்கறிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த பொருள்கள், 27 சதம் இடம் வகிக்கின்றன. இந்தியாவில் காய்கறிகள் 7.98 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகின்றன. இதன் மூலம், 129.07 மில்லியன் டன் காய்கறிகள் உற்பத்தி ஆகின்றன. காய்கறிகளில், உயிர்ச் சத்துகள், தாதுச்சத்துகள், மாவுச்சத்து, புரதச்சத்து ஆகிய சத்துகளும், அதிகளவில் நார்ச்சத்தும் உள்ளன.
அன்றாடம் ஒரு மனிதன் 300 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டுமென, சத்தியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த அளவு 180 கிராமாக மட்டுமே உள்ளது. உயரிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்தால், காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்கலாம்.
காய்கறிப் பயிர்களில் ஒன்றான மிளகாய், முக்கியப் பணப்பயிராகும். இப்பயிர், உள்ளூர் வணிகம் மற்றும் ஏற்றுமதிக்காகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் மிளகாய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 9,30,000 எக்டரில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 8,00,100 டன் மிளகாய் வற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
விளைச்சலில் பெரும்பகுதி உள்நாட்டிலேயே பயன்படுகிறது. இலங்கை, குவைத், ஈரான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வற்றலாகவும், கறிமசால் பொடியாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், தமிழ்நாடு, பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 66,990 எக்டர் பரப்பில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 44,631 மெட்ரிக் டன் வற்றல் கிடைக்கிறது. தமிழகத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலும், ஈரோடு, கடலூர் மாவட்டங்களில் பரவலாகவும் பயிரிடப்படுகிறது. பச்சை மிளகாயும், வற்றலும், அதனதன் மணம் மற்றும் காரத்துக்காக உணவில் சேர்க்கப்படுகின்றன.
மிளகாயில் காரத்தன்மைக்கு, காப்சிசின் என்னும் வேதிப்பொருளே காரணமாகும். இது, விதைகளில், தோலில் மற்றும் விதைக்காம்பில் அதிகமாக உள்ளது. மிளகாய்க் காரம், எச்சில் சுரக்கவும், மாவுப்பொருள்கள் செரிக்கவும் உதவுகிறது. தக்காளியில் உள்ளதை விட, பழுத்த மிளகாயில் வைட்டமின்-சி அதிகமாக உள்ளது. வைட்டமின்கள் ஏ-யும் பி-யும் அதிகமாக உள்ளன.
மிளகாய்ச்சாறு, பல்வலி மற்றும் செரிப்புச் சிக்கலை நீக்கவல்லது. மிளகாய் வினிகர், வயிற்று வலியைக் குணப்படுத்தக் கூடியது. மீன் மற்றும் இறைச்சியில் வாசனையைச் சேர்க்கவும் மிளகாய் பயன்படுகிறது.
தமிழ்நாட்டில், இரண்டு மிளகாய் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில், வற்றலுக்கும் ஏற்றுமதிக்கும் உகந்த சம்பா மிளகாய் இரகம் அதிகளவில் பயிரிடப் படுகிறது. இதன் காய்கள் நீளமாக இருக்கும். அடுத்து, மானாவாரியில் பயிரிட ஏற்றது, குண்டு மிளகாய் இரகம். இதன் காய்கள் உருண்டையாக இருக்கும்.
உயர் விளைச்சல் இரகங்கள்
தமிழ்நாட்டில், கே.1, கே.2, கோ.1, கோ.2, கோ.3, கோ.4, எம்டியு.1, பி.கே.எம்.1, கே.கே.எம்.சி.எச்.1, பி.எம்.கே.1, பாலூர்1 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றுள், கே.1, பி.கேஎம்.1, கே.கே.எம்.சி.எச்1 ஆகியன, உயர் விளைச்சல் இரகங்கள் ஆகும்.
கே.1
இந்த இரகம், 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பி-72ஏ என்னும் அஸ்ஸாம் வகையில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. இதன் வயது 200-210 நாட்கள் ஆகும். செடிகள், உயரமாகவும், அடர்ந்தும், படர்ந்தும் வளரும். சம்பா வகையைச் சேர்ந்தது. விதைத்து 65 நாட்களில் பூக்கும். பழங்கள், 6.6 செ.மீ. நீளம், கூரான நுனி மற்றும் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பழத்தில், 70-75 விதைகள் இருக்கும். ஒரு எக்டரில் இருந்து, 1.6-1.7 டன் வற்றல் கிடைக்கும்.
பி.கே.எம்.1
இந்த இரகம், 1990-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, வளர்ப்பு எண் 1797 மற்றும் கோ.1 இரகத்தின் பண்பகக் கலப்பு மூலம் உருவாக்கப்பட்டது. குறைவான உயரம், அதாவது, 69.54 செ.மீ. உயரம் வளரும் இச்செடி, 204 காய்களை, குறைந்த பறிப்புகளில் கொடுக்கக் கூடியது. இதன் மூலம் 167 கிராம் வற்றல் கிடைக்கும். இதில், காப்சிசின் அதிகமாக இருக்கும். நடவு செய்த 180 நாட்களில், எக்டருக்கு 3.08 டன் வற்றல் கிடைக்கும்.
கே.கே.எம்.சி.எச்.1
இந்த இரகம், 2006-இல் வெளியிடப்பட்டது. இது, வளர்ப்பு எண் 240 மற்றும் கோ.3 இரகத்தின் கலப்பாகும். இந்தச் செடி அடர்ந்து, 60.40 செ.மீ. உயரம் வளரும். நடவு செய்து 92 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும். அடுத்து, ஒன்பது முறை அறுவடை செய்யலாம். ஒரு செடியில் 131.62 காய்கள் காய்க்கும். பழங்கள், கருஞ்சிவப்பு நிறத்தில் பளிச்சென்று இருக்கும். வற்றலில் 45 சதம் விதைகளும், 0.54 சதம் காரத் தன்மையும், 13.4 ஓலியோரசினும் இருக்கும். ஒரு எக்டரில் 3.03 டன் வற்றல் மகசூல் கிடைக்கும்.
பருவம்
மிளகாய் சாகுபடி, செப்டம்பர் அக்டோபர், அதாவது, புரட்டாசி ஐப்பசியில் மானாவாரி முறையிலும், ஜூன் ஜூலை மற்றும் மார்ச் ஏப்ரலில் இறவை முறையிலும் நடைபெற்று வருகிறது. விதை மூலம் பரவும், நுனிக்கருகல் நோய் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்தல் அவசியம்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் பெவிஸ்டின் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். நேரடி விதைப்புக்கு எக்டருக்கு 3 கிலோ விதையும், நாற்றங்கால் விட்டு நடுவதற்கு எக்டருக்கு 1 கிலோ விதையும் தேவைப்படும்.
நாற்றங்கால் அமைத்தல்
தமிழ்நாட்டில், மேட்டுப்பாத்தி மற்றும் பாலித்தீன் குழித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.
மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப் பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம், 15 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 7.5 கிலோ வீதம் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக விதைக்க வேண்டும். விதைத்த விதைகளை மணலால் மூட வேண்டும். பிறகு, வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளில் பரப்ப வேண்டும். விதைத்து 10-15 நாட்கள் கழித்து, பாத்திகளில் பரப்பிய, வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும்.
நாற்றுகள் நன்கு வளர்வதற்கு, தினமும் பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 15 நாட்கள் இடைவெளியில், ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் பைட்டோலான் அல்லது புளுகாப்பர் வீதம் கலந்து ஊற்ற வேண்டும். நாற்றுப் பறிப்புக்கு 15 நாட்களுக்கு முன், ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பியூரடான் குருணையை இடுவது, நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். நடவுக்கு 35-40 நாட்கள் வயதுள்ள நாற்றுகளே ஏற்றவை.
பாலித்தீன் குழித்தட்டு முறை: புரோ டிரே எனப்படும், பாலித்தீன் குழித்தட்டுகளில் நன்கு மட்கிய தென்னை நார்க்கழிவைப் (Cocopeat) இட்டு, பூச்சிகள் புகாத நிழல்வலைக் கூடாரத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்தால், விதைகளின் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும். பாலித்தீன் குழித்தட்டுகளில், ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். குழிக்கு ஒரு நாற்றென, தனித்தனியாக வளரும் போது, சீரான நாற்றுகள் உருவாகும்.
இம்முறையில் நாற்றுகள் வாளிப்பாக, முழுமையான வேர்களுடன் வளரும். இவ்வித நாற்றுகள் நடவு செய்ததும் விரைவாக உயிர் பெற்று வளரும். இம்முறையில் வீரிய ஒட்டு இரகங்களைப் பயிரிட்டால், விதைகளின் முளைப்புத் திறன் கூடுவதுடன், மகசூலும் பெருகும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை, 3-4 முறை உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது, எக்டருக்கு 25 டன் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை இட வேண்டும். அடியுரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து உரங்களையும் இட வேண்டும். கார அமிலத்தன்மை 8.5 வரையுள்ள மண்ணிலும் மிளகாய்ச்செடி நன்றாக வளரும். ஆனால், களர் நிலத்தில் 8.5க்கு மேல் கார அமில நிலை இருந்தால் மகசூல் பாதிக்கப்படும். இத்தகைய நிலத்தைச் சீர்திருத்தம் செய்ய, எக்டருக்கு 1,750 கிலோ ஜிப்சம் அல்லது 10 டன் தென்னை நார்க்கழிவை, கடைசி உழவின் போது இடலாம்.
களை நிர்வாகம்
களைகள் முளைக்குமுன் கட்டுப்படுத்த, இரசாயனக் களைக்கொல்லி மருந்து நல்ல பலனைக் கொடுக்கும். இறவையில், நடவு நட்ட மூன்றாம் நாள் எக்டருக்கு ஒரு கிலோ புளுகுளோரலின் வீதம் எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் சீராகத் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளித்ததும், அளவாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். அல்லது மேற்கூறிய களைக்கொல்லியை நிலத்தில் தெளித்து நீரைப் பாய்ச்சி விட்டு, அதற்குப் பிறகு நாற்றுகளை நடலாம்.
பாசனம்
கோடையில் ஒருவார இடைவெளியிலும், மழைக்காலத்தில் 10-12 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மழையைப் பொறுத்து, தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும். நடவு நட்ட 90-120 நாட்களில், செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் நீரின் தேவையும் இப்பருவத்தில் அதிகமாக இருக்கும். சொட்டுநீர்ப் பாசனம் செய்தால், நீர் வீணாவது குறையும்.
சமச்சீர் உரமிடல்
மிளகாயை விதைத்து 70 நாட்கள் கழித்துப் பூக்கள் தோன்றும். 90-110 நாட்களில் அதிகளவில் பூக்கள் உற்பத்தியாகும். செடிகள் பூப்பதும் காய்ப்பதும் அதிக நாட்களுக்குத் தொடர்ந்து இருப்பதால், தழைச்சத்து உரத்தைப் பிரித்து இடுவது அவசியம்.
மானாவாரியாக இருந்தாலும், இறவையாக இருந்தாலும், தழைச்சத்தைப் பிரித்து, விதைத்த 30, 60, 90 ஆகிய நாட்களில், ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் இட வேண்டும். உரமிட்டதும் நீரைப் பாய்ச்ச வேண்டும். மிளகாய்ப் பயிரின் வளர்ச்சி, மகசூல், தரம் மற்றும் வருமானத்தைக் கூட்ட, சாம்பல் சத்து அவசியம். சல்பேட் ஆப் பொட்டாஷ் உரம், மூரியேட் ஆப் பொட்டாஷை விடக் குறைவான உப்புச் சத்தைக் கொண்டது.
களர்த்தன்மை மிகுந்த வறண்ட நிலத்தில் குறைந்த உப்புச் சத்துள்ள இரசாயன உரங்களை இடுவதே மிகவும் சிறந்தது. சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தில் 50 சதவீதச் சாம்பல் சத்தும், 18 சதவீதக் கந்தகச் சத்தும் இருப்பதால், அதிகத் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பின்செய் நேர்த்தி
நாற்றுகளை நட்டு 8-10 நாட்கள் கழித்து, மண்ணைக் கொத்திவிட வேண்டும். முதலில் மேலாகவும் பின்பு ஆழமாகவும் கொத்திக் களையெடுக்க வேண்டும், நிலத்தைக் கொத்திய பிறகு ஒவ்வொரு முறையும் செடிகளைச் சுற்றி மண்ணை அணைத்து விட வேண்டும். இப்படி, 8-10 முறை களையெடுத்து மண் அணைப்பது அவசியம்.
காய்ப்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கும் வகையில், வரப்பு ஓரங்களில் ஆமணக்குப் பயிரையும், வாய்க்கால் ஓரங்களில் அகத்தியையும் பயரிடலாம் செம்மண் நிலத்தில் வெங்காயமும், களிமண் நிலத்தில், கொத்தமல்லியும் கத்தரியும் பயிர் செய்யப்படுகின்றன. மிளகாய் அதிகமாகப் பூக்கக் கூடியது என்றாலும், பூவும் பிஞ்சுகளும் உதிர்வதால் மகசூல் குறைகிறது.
எனவே, செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க, நட்ட 60 அல்லது விதைத்த 100 நாட்கள் கழித்து ஒருமுறையும், மேலும் 30 நாட்கள் கழித்து ஒருமுறையும், 4.5 லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. ப்ளானோபிக்ஸ் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
பூச்சிகள்: இலைப்பேன்: இளம் பருவத்திலிருந்து மிளகாய்ச் செடிகளைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும் பூச்சிகளில் முக்கியமானது இலைப்பேன் ஆகும். இலைப்பேன்கள் துளிர் இலைகளில் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் மேல் நோக்கிச் சுருண்டு உதிர்ந்து விடும். இப்பூச்சிகள் பூ மொக்குகளின் சாற்றையும் உறிஞ்சுவதால், பூ மொக்குகள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்த இலைப்பேனைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டைமித்தோயேட் வீதம் தெளிக்கலாம்.
அசுவினி: இதனால் தாக்கப்பட்ட இலைகள், சுருண்டு, மஞ்சள் அல்லது பச்சை நிற அசுவினிகளுடன் இருக்கும். அசுவினிகளின் தாக்கம் அதிகமானால், கரும் பூசணமும் வளர்ந்து ஒளிச்சேர்க்கைக்கான இலைகளின் பரப்பைக் குறைப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்த அசுவினியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அசிப்பேட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சள் சிலந்தி: இதனால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டும், சொரசொரப்பாகவும், இலைக்காம்புகள் நீளமாகவும் இருக்கும். இந்த மஞ்சள் சிலந்தியைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 25 கிலோ கந்தகத்தூள் வீதம் எடுத்து, பனிப்பதத்தில் தூவலாம். அல்லது எக்டருக்கு ஒரு லிட்டர் டைகோபால் அல்லது ஒரு லிட்டர் பாசலோன் வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
காய்த்துளைப்பான்: இளம் புழுக்கள் மற்றும் வளர்ந்த பச்சைப் புழுக்கள், இலைகள் மற்றும் காய்களைத் தின்று சேதம் செய்யும். இந்தப் புழுக்கள் தாக்கிய இலைகளிலும், காய்களிலும் துளைகள் இருக்கும். இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
காய்த் துளைப்பானின் தாய் அந்துப் பூச்சிகளை, விளக்குப்பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கவர்ந்து அழிக்கலாம். எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். இனக்கவர்ச்சிக் குழல்களைப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
ஆமணக்குச் செடிகளை வரப்புகளில் வளர்ப்பதன் மூலம், இச்செடிகளில் காணப்படும் காய்த்துளைப்பானின் முட்டைத் தொகுதிகளையும், கூட்டமாகக் காணப்படும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம். எக்டருக்கு 25 கிலோ தவிடு, 2.5 கிலோ சர்க்கரை, 1.25 கிலோ கார்பரில் வீதம் எடுத்து, போதுமான நீரைச் சேர்த்து, நச்சுணவைத் தயாரிக்க வேண்டும். இதைச் சிறு உருண்டைகளாக மாலை நேரத்தில் பாத்திகளில் இட வேண்டும். என்.பி.வி. நச்சுயிரி நோய்த் தாக்கிய 250 புழுக்களின் சாறுடன், 0.05 சதம் டீப்பால் என்னும் ஒட்டுத் திரவத்தையும் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். எக்டருக்கு 2 லிட்டர் குளோர்பைரிபாஸ் அல்லது ஒரு லிட்டர் டைகுளோர்வாஸ் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
நோய்கள்: நுனிக்கருகல் மற்றும் பழ அழுகல் நோய்: நுனிக்கருகல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், மேலிலிருந்து கீழாகக் காய்ந்து கொண்டே வரும். எனவே, இத்தகைய செடிகளைப் பிடுங்கி எரித்து விட வேண்டும். இப்படிச் செய்தால், காய்கள் பழுக்கும் காலத்தில், பழ அழுகல் நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம்.
பழ அழுகல் நோய் தாக்கிய பழங்களில், செம்பழுப்பு நிறத்தில் வட்டப் புள்ளிகள் இருக்கும். மேலும், கருப்பு நிறப் பூசணமும் வளர்ந்து இருக்கும். இலைப்புள்ளி, நுனிக்கருகல் மற்றும் பழ அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு கிலோ பைட்டோலான் அல்லது ஒரு கிலோ மாங்கோசெப் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
நச்சுயிரி நோய்கள்: தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகள், கரும்பச்சை மற்றும் மஞ்சள் திட்டுகள் உள்ள இலைகளுடன் வளர்ச்சிக் குன்றியிருக்கும். செடிகளில் காய்ப்பிடிப்பு நின்று விடும். இலைச்சுருட்டை நோயால் தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மொரமொரப்பாக இருக்கும். செடிகள் வளர்ச்சிக் குன்றியிருக்கும். செடிகளில் காய்ப்பிடிப்பு நின்று விடும்.
தேமல் மற்றும் இலைச்சுருட்டை நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிப்பதன் மூலம், இந்நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கலாம். பெமிசியா டபாசி என்னும் வெள்ளை ஈ, இலைச்சுருட்டை நோய்க்கான நச்சுயிரியை, கோடைக்காலத்தில், ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்குப் பரப்பும். இதைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 500 மி.லி. டைமித்தோயேட் அல்லது ஒரு லிட்டர் பாசலோன் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
அறுவடை
பச்சை மிளகாய் அறுவடையை, நட்ட 75 நாட்களிலும் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை அடுத்து ஒரு மாதம் கழித்தும் அறுவடை செய்யலாம். மேலும், 3-4 மாதங்கள் தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளில் பச்சை மிளகாயையும், அடுத்த பறிப்புகளில் பழுத்த மிளகாயையும் அறுவடை செய்யலாம்.
அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்கள்
அறுவடைக்குப் பிறகு, பழங்களைச் சுத்தமாகவும், தரமாகவும், காய வைத்து, வற்றலாக்க வேண்டும். அதற்கு, நன்கு பழுத்த பழங்களையே அறுவடை செய்ய வேண்டும். ஒரு நாள் வைத்திருந்து, நன்கு பழுத்த பிறகு வெய்யிலில் காய வைக்க வேண்டும். இந்தப் பழங்களின் ஈரப்பதம் 12 சதவீதம் இருக்கும் வகையில், 5-7 நாட்களுக்குக் காய வைக்க வேண்டும். பூசணம் (Afalotoxins) ஏதும் தாக்காத வகையில் சேமிக்க வேண்டும். மேலும், இரசாயனம், பூசணம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றில் எஞ்சிய நச்சு இல்லாத வகையில் பயிர் செய்தால், தரமான வற்றலாக ஏற்றுமதி செய்யலாம்.

முனைவர் கு.சுதாகர்,
முனைவர் மொ.ப.கவிதா, முனைவர் சி.பரமேஸ்வரி, முனைவர் பெ.கீதாராணி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை – 625 562.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


