My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை! ari 2 https://pachaiboomi.net/5803505/

யிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்த பிறகு கட்டுப்படுத்துவதை விட, ஆரம்ப நிலையிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உரிய கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது சிறந்தது. இதற்கு, பெரோமோன் பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகள் பயன்படுகின்றன. அதாவது, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பி இருக்காமல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில், இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளின் தாக்குதலைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கலாம்.

பெரோமோன் லூர்கள் செயல்படும் விதம்

பெரோமோன் லூர்கள், குறிப்பிட்ட பூச்சி இனங்களின் ஆண் அந்துப்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் செயல்படுகின்றன. எனவே, வயலில் எந்தப் பூச்சியைக் கண்காணிக்க வேண்டுமோ, அதற்கேற்ற பெரோமோன் லூரைத் தேர்வு செய்து, உரிய பொறியில் பொருத்த வேண்டும். இதன் மூலம், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அவற்றின் தாக்கம் அதிகரிக்கும் முன்பே, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பயிர்களுக்கு ஏற்ற லூர்களைப் பயன்படுத்தல்

பருத்தி, தக்காளி, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயிர்களைத் தாக்கும், பருத்திக் காய்ப்புழு, இலைத்தின்னிப்புழு, புள்ளிக் காய்ப்புழு மற்றும் இளஞ்சிவப்புக் காய்ப்புழுவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த, வெவ்வேறு பெரோமோன் லூர்கள் பயன்படுகின்றன.

பருத்திக்காய்ப் புழுக்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ எச்.ஏ. லூர் பயன்படுகிறது. இலைத்தின்னிப் புழுக்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ எஸ்.எல். பயன்படுகிறது. புள்ளிக்காய்ப் புழுக்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ ஈ.வி லூரும், இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ பி.ஜி. லூரும் பயன்படுகின்றன.

பூச்சிகளைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 7-8 பொறிகள் வீதமும், அந்துப் பூச்சிகளைப் பிடிக்க, ஏக்கருக்கு 9-10 பொறிகள் வீதமும் பயன்படுத்த வேண்டும். பொறிகளில் உள்ள லூரை, 60 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் பொறிகள்

தர்ப்பூசணி, முலாம் பழம், வெள்ளரி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி போன்ற காய்கறிப் பயிர்களிலும், மாம்பழம், கொய்யா, மாதுளை, திராட்சை, சப்போட்டா, சிட்ரஸ், பப்பாளி போன்ற பழப்பயிர்களிலும், பழ ஈக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 8-10 பொறிகள் வீதமும், அந்துப் பூச்சிகளைப் பிடிக்க, ஏக்கருக்கு 11-12 பொறிகள் வீதமும் பயன்படுத்த வேண்டும். பயோ ஃபெரோ பி.சி. அல்லது பி.டி. போன்ற லூர்களை, பழ ஈ பொறி, டம்ப்பெல் பொறி அல்லது மேக்பில் பொறிகளில் பொருத்திப் பயன்படுத்தலாம். பொறிகளில் உள்ள லூரை, 90 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

நெல், மக்காச்சோளம், கரும்பில் பயன்படும் பொறிகள்

நெற்பயிரில் மஞ்சள் தண்டுத் துளைப்பானைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ எஸ்.ஐ. (Bio Phero SI Lure) லூர் பயன்படுகிறது. இது, நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சியைக் (Yellow Stem Borer – Scirpophaga incertulas) கவர்ந்து அழிக்கப் பயன்படும், பெரோமோன் கவர்ச்சிப்பொறி (Pheromone Lure) ஆகும். துளைப்பானைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 10-12 வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 14-15 வீதமும், இந்தப் பொறியைப் பயன்படுத்த வேண்டும்.

மக்காச்சோளத்தில் படைப்புழுவை (Fall Armyworm – Spodoptera frugiperda) முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ எஸ்.எப். லூரைக் (Bio Phero SF Lure) கொண்ட இனக்கவர்ச்சிப் பொறி, மிகச்சிறந்த சூழல் நட்புத் தீர்வைத் தரும்.

இவ்வகையில், படைப்புழுவைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 5-7 வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 7-8 வீதமும், இந்தப் பொறியைப் பயன்படுத்த வேண்டும். இவ்வகை லூர்களை, 60 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

கரும்பில் கணுத்துளைப்பான் மற்றும் இளந்தண்டுத் துளைப்பானைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ சி.எஸ். மற்றும் பயோ ஃபெரோ சி.ஐ. லூர்கள் பயன்படுகின்றன.

காய்கறிப் பயிர்களில் ஒட்டும் பொறிகள்

காய்கறிப் பயிர்களைத் தாக்கும் வெள்ளை ஈ, ஜாசிட், அசுவினி, த்ரிப்ஸ், பழ ஈ, இலைச்சுரங்கப் பூச்சி மற்றும் சில அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை நிற ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தலாம்.

த்ரிப்ஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மஞ்சள் மற்றும் நீல ஒட்டும் பொறிகளை 4:1 வீதம் பயன்படுத்த வேண்டும். ஒட்டும் பொறியின் மேற்பரப்பு முழுவதும் பூச்சிகளால் மூடப்பட்டதும் அதை மாற்ற வேண்டும்.

ஒட்டும் பொறிகளை, வயலில் 5-10 மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். உயரமாக வளரும் பயிர்களின் உச்சிக்குச் சற்று மேலாகவும், குட்டைப் பயிர்களில் செடியின் உச்சியிலிருந்து அதிகபட்சம் 30 செ.மீ. உயரத்திலும் பொருத்த வேண்டும். பயிரின் அடர்த்தி, நடவு இடைவெளி, பயிரின் உயரம் மற்றும் பூச்சித் தாக்குதலைப் பொறுத்து, ஏக்கருக்கு 50 முதல் 150 ஒட்டும் பொறிகள் வரை பயன்படுத்தலாம்.

கத்தரி, தக்காளியில் சிறப்புக் கவனம்

கத்தரியில் தண்டு மற்றும் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ எல்.ஓ. லூரை, டெல்டா பொறி, வோட்டா பொறி அல்லது நீர்ப்பொறியில் இட்டுப் பயன்படுத்தலாம். டெல்டா பொறி முறையில் பூச்சிகளைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 10-12 பொறிகள் வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 15-20 பொறிகள் வீதமும் இட வேண்டும்.

தக்காளியில் டுட்டா அப்சலூட்டா என்னும் தக்காளி இலைச்சுரங்கப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ டி.ஏ. லூரை, டெல்டா பொறி அல்லது நீர்ப்பொறியில் பொருத்திப் பயன்படுத்தலாம். இம்முறையில் பூச்சிகளைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 10-12 பொறிகள் வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 14-15 பொறிகள் வீதமும் இட வேண்டும்.

தென்னையில் வண்டுகள் கண்காணிப்பு

தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ ஓ.ஆர். லூரை, வாளிப்பொறியில் இட்டுப் பயன்படுத்தலாம். இந்த வண்டைக் கண்காணிக்க, ஏக்கருக்கு ஒரு பொறி வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 2 பொறிகள் வீதமும் இட வேண்டும். இந்த லூரை, 120 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்

சிவப்புப் பனைவண்டைக் கட்டுப்படுத்த, பயோ ஃபெரோ ஆர்.எஃப் லூரை, வாளிப்பொறியில் இட்டுப் பயன்படுத்தலாம். இந்த வண்டைக் கண்காணிக்க, ஏக்கருக்கு ஒரு பொறி வீதமும், கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 2 பொறிகள் வீதமும் இட வேண்டும். இந்த லூரை, 180 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

லூர்களைக் கையாளுவதில் கவனம்

பெரோமோன் லூரை வெறும் கைகளால் தொடக்கூடாது. உரிய பொறியில் லூரை முறையாகப் பொருத்த வேண்டும். பயன்படுத்திய பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். பயன்படுத்திய லூர்களை, பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.

தொடர் கண்காணிப்பு

பூச்சிகள் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, தொடக்க நிலையிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதே பயனுள்ளதாகும். எனவே, விவசாயிகள் தங்கள் பயிர் மற்றும் வயல் நிலைக்கு ஏற்ப, பெரோமோன் பொறிகள் மற்றும் ஒட்டும் பொறிகளை முறையாக அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே பூச்சிகளைக் கண்டறிதல், தேவையான இடத்தில் மட்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுத்தல் மற்றும் இரசாயனப் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைத்தல் மூலம், பயிரின் மகசூல் மற்றும் தரத்தைப் பாதுகாக்க முடியும்.

ஒன்பது வகைப் பொறிகள் (Traps)

உயிரியல் ஒட்டுப்பொறி (Bio Stick Trap): இந்தப் பொறியில் உள்ள ஒட்டும் பொருள் பூசப்பட்ட பலகையில், பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும். இந்தப் பொறி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத் தத்துப்பூச்சி, த்ரிப்ஸ் போன்ற சிறிய பூச்சிகளைக் கண்காணிக்கப் பயன்படும்.

புனல் பொறி (Funnel Trap): இது, பெரோமோன் கவர்ச்சிப் பொருளால் பூச்சிகளை ஈர்த்து, புனல் வழியாக உள்ளே வர வைத்துப் பிடிக்கும். பெரிய மற்றும் நடுத்தர அளவிலான அந்துப் பூச்சிகளைப் பிடிக்கப் பயன்படும்.

டெல்டா பொறி (Delta Trap): இது, முக்கோண வடிவில் அமைந்த மற்றும் உள்ளே ஒட்டும் தாளைக் கொண்ட பொறி. பெரோமோனைப் பயன்படுத்தி, சிறிய மற்றும் நடுத்தர அந்துப் பூச்சிகளைக் கண்காணிக்கப் பயன்படும்.

நீர்ப்பொறி (Water Trap): இது, நீரால் நிரப்பப்பட்ட தட்டில், பூச்சிகள் விழுந்து சிக்கிக் கொள்ளும் வகையில் இருக்கும். தக்காளி இலைச் சுரங்கப்புழு, கத்தரிக்காய் மற்றும் தண்டுத் துளைப்பானைக் கண்காணிக்கப் பயன்படும்.

மேக்பெயில் பொறி (MacPhail Trap): இது, கவர்ச்சித் திரவம்- உணவுக் கவர்ச்சிப் பொருளைப் பயன்படுத்தி, ஈக்களை உள்ளே வரச்செய்து பிடிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, பழ ஈக்களைக் கண்காணிக்கப் பயன்படும்.

வோட்டா பொறி (WOTA Trap): இது, நீர்ப்பொறி வகையைச் சேர்ந்தது. கவர்ச்சிப் பொருளால் பூச்சிகளை ஈர்த்து, நீர், சர்பாக்டன்ட் மூலம் அவற்றைப் பிடிக்கப் பயன்படும்.

டம்பெல் பொறி (Dumbbell Trap): இது, நடுப்பகுதியில் குறுகியும், இருபுறமும் அகலமாகவும் இருக்கும். பொருத்தமான கவர்ச்சி அல்லது பெரோமோன் மூலம், இலக்குப் பூச்சிகளைப் பிடிக்கப் பயன்படும்.

பழ ஈ பொறி (Fruit Fly Trap): இது, பழ ஈக்களைக் கவர்ச்சிப் பொருளால் ஈர்த்துப் பிடிக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தாக்கும் பழ ஈக்களைக் கண்காணிக்கவும், குறைக்கவும் பயன்படும்.

வாளிப்பொறி (Bucket Trap): இது, கவர்ச்சிப் பொருளை மேலே வைத்து, புனல் வழியாகப் பூச்சிகள் வாளிக்குள் விழும் வகையில் இருக்கும். பெரிய பூச்சிகள், குறிப்பாக, சில வண்டு வகைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும்.


பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை! ARIPUTHIRAN e1769341128950 https://pachaiboomi.net/5803505/

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • தேனின் மருத்துவக் குணங்கள்!

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!