உலகமே உற்று நோக்கும் நமது பாரதத்தில், விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், ஒன்றிரண்டு பசுக்கள் அல்லது எருமைகளை வளர்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை விற்று, தங்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.
பால் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பால் பொருள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வேளாண் பெருமக்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்கள், கால்நடைகளைப் பேணிக் காப்பதுடன், அவற்றின் இனப்பெருக்கத் திறனைக் கூட்டுவதிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இவ்வகையில், நிலையான பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்ப உத்திகளைப் பற்றிப் பார்க்கலாம்.
பால் பண்ணைத் தொழில் இலாபகரமாக அமைய, நல்ல உற்பத்தித் திறனுள்ள தரமான கறவை மாடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். கறவை மாட்டின் உற்பத்தித் திறனை நிர்ணயம் செய்வதில், மடிக்கு இணையான உறுப்பு வேறில்லை எனலாம்.
எனவே, மடி பெரிதாகவும், உடலோடு நன்றாக இணைந்தும் இருக்க வேண்டும். அதிகப் பால் கொடுக்கும் மாட்டின் மடியானது, பாலைக் கறந்த பிறகு, நன்கு சுருங்கித் தளர்ந்தும், தொட்டால், பஞ்சைப் போலவும் இருக்க வேண்டும்.
பசு மாடாக இருந்தால், 50 சதுரடி, எருமை மாடாக இருந்தால், 60 சதுரடி, கன்றாக இருந்தால், 15 சதுரடி வீதம் இடவசதி கொடுக்க வேண்டும். மாடுகள் இருக்கும் கொட்டில் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டம் மிக்கதாக இருக்க வேண்டும்.
கொட்டிலில் இருந்து, மாடுகளின் சாணமும் சிறுநீரும், உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும். ஏனெனில், அசுத்தமான கொட்டில் தரையால், மாடுகளில் மடிவீக்க நோயும், அதனால் பொருளாதார இழப்பும் ஏற்படக்கூடும்.
கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு, ஈரமான கோணிச் சாக்குகளை, கொட்டிலின் பக்கவாட்டில் தொங்கவிட வேண்டும். மாடுகளைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும்.
கிடேரிக் கன்றுகளை முறையாக வளர்க்கும் போது, கலப்பினக் கிடேரிக் கன்றுகள் 15-18 மாதங்களிலும், எருமைக் கன்றுகள் 18-24 மாதங்களிலும் பருவத்துக்கு வந்து விடும். பசுக்கள் மற்றும் எருமைகள் 19-21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்துக்கு வரும். பருவ அறிகுறிகள் தெரிந்த 24 மணி நேரத்தில், கால்நடை மருத்துவர்கள் மூலம், செயற்கை முறைக் கருவூட்டல் செய்ய வேண்டும்.
சினை மாடுகளை, மற்ற மாடுகளிலிருந்து, தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும். ஈனுவதற்கு 60 நாட்களுக்கு முன்பே, பால் கறவையை, படிப்படியாக நிறுத்தி விட வேண்டும்.
கறவை மாடுகளுக்குக் கலப்புத் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் என, சமச்சீரான தீவனத்தை வழங்க வேண்டும். மேலும், பசுந்தீவனம் 15-25 கிலோ தரப்பட வேண்டும். இதில், 10 கிலோ புல்வகைத் தீவனம், 5 கிலோ பயறுவகைத் தீவனம் இருத்தல் அவசியம். இதன் மூலம், இனப்பெருக்க திறனும், உற்பத்தித் திறனும் கூடும்.
மாடுகளின் அன்றாடத் தீவனத்தில், 18 சதவீதம் நார்ச்சத்து இருக்க வேண்டும். நார்ச்சத்துத் தீவனம் மற்றும் அடர் தீவன விகிதம் 60:40 என இருக்க வேண்டும். இரவு முழுவதும் நன்கு ஊற வைத்த பருத்தி விதைப் புண்ணாக்கை 0.5-1 கிலோ கொடுப்பதன் மூலம், பாலில் கொழுப்புச்சத்தைக் கூட்டலாம்.
கறவை மாடு ஈனுவதற்கு 2-3 வாரங்களுக்கு முன், போதிய எரிசக்தியைத் தரவல்ல, பருத்தி விதைப் புண்ணாக்கு மற்றும் சூரியகாந்திப் புண்ணாக்கைக் கொடுக்க வேண்டும்.
பால் கறவையில் உள்ள மாடுகளுக்கு, போதிய எரிசக்தியைத் தரவல்ல தானியங்கள் நிறைந்த கலப்புத் தீவனத்தைத் தர வேண்டும். இதில், தானியங்கள் 32 சதம், புண்ணாக்கு 35 சதம், தவிட்டு வகைகள் 3 சதம், தாதுப்புக் கலவை 2 சதம், உப்பு 1 சதம் இருக்க வேண்டும். இந்தத் தீவனத்தில் உள்ள தானியங்கள் பெரிய துகள்களாக இருக்க வேண்டும்.
ஒரு மாட்டுக்கு 15-20 கிராம் சோடா உப்பு வீதம் எடுத்து, தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். இதனால், மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்; நன்மை தரும் நுண்ணுயிர்கள் பெருகி, நொதித்தல் தடையின்றி நடைபெறும்; கொழுப்புச் சத்தும் குறையாமல் இருக்கும்.
பால் மாடுகளுக்குத் தரமான தீவனத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், சினைப் பிடிக்காமை, ஈற்றுக்கால இடைவெளி அதிகரித்தல், நச்சுக்கொடி உள்ளேயே தங்கி விடுதல், ஈற்றுக்குப் பிறகு தாமதமாகப் பருவத்துக்கு வருதல் போன்ற சிக்கல்கள் நிகழக்கூடும்.
நீர்நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணிவகையைச் சேர்ந்த அசோலாவை, ஒரு மாட்டுக்குத் தினமும் 1.5-2 கிலோ வீதம் கொடுக்கலாம். இதன் மூலம், பால் உற்பத்தி, 15-20 சதவீதம் அதிகரிக்கும்.
பால் உற்பத்தியை அதிகரிக்க, ஒரு கறவை மாட்டுக்கு அன்றாடம் 30-50 கிராம் தாதுப்புக் கலவை வீதம் வழங்க வேண்டும். இதன் மூலம், பால் காய்ச்சல், சினைப் பிடிக்காமை போன்ற சிக்கல்களில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்து கொள்ளலாம். தாதுப்புக் கலவையை அளித்து நன்றாகப் பேணி வளர்த்தால், ஒரு மாடு 8-10 முறை ஈன்று பலன் கொடுக்கும்.
மாடுகளுக்குச் சுத்தமான குடிநீரை அவ்வப்போது வழங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளின் அன்றாட உடலியக்கம் மற்றும் அதிகப் பால் உற்பத்திக்கு, குடிநீர் மிகமிக முக்கியமாகும்.
கறவை மாடுகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறைகளாவது, குடற்புழுநீக்க மருந்தைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். முக்கியமான தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
சினைப்பருவம் இன்மை, சினைப் பிடிக்காமை, மலட்டுத் தன்மை, தாமதித்த கருப்பைச் சுருக்கம் போன்ற, இனப்பெருக்கம் சார்ந்த குறைகள் ஏற்படும் போது, கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளைக் கடைப்பிடித்தல் அவசியமாகும்.
கன்றை ஈன்று 45-60 நாட்களில் மாடுகள் சினைப் பருவத்துக்கு வரும் போது, அவற்றுக்குத் தவறாது சினை ஊசியைப் போட வேண்டும். சினை மாடுகள் ஈற்றுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே, அவற்றை முறையாகப் பராமரித்தால், தரமான கன்றுக் குட்டிகள் பிறக்கும்.
தரமற்ற மற்றும் குறைந்த உற்பத்தித் திறனுள்ள பல மாடுகளை வளர்ப்பதைக் காட்டிலும், தரமான மற்றும் அதிக உற்பத்தித் திறனுள்ள சில மாடுகளை வளர்ப்பதே சாலச் சிறந்த முறையாகும்.
இந்தியாவில் 70 சதவீதப் பால் உற்பத்தி, சிறு மற்றும் குறு விவசாயிகள் மூலம் தான் நடைபெறுகிறது. ஆகவே, விவசாயிகள் நல்ல முறையில் கறவை மாடுகளைப் பேணிப் பாதுகாப்பதன் மூலமே, நிலையான மற்றும் அதிகமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.
முனைவர் மூ.சுதா,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி – 625 534, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

