My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

முட்டை உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  பேப்காப் அல்லது பிவி 300, லோமன், போவன்ஸ், ஹை-லைன் ஆகிய வீரிய இன முட்டைக் கோழிகள் வணிக நோக்கில் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கோழிகள்  ஆண்டுக்கு 280-320 முட்டைகளை இடவல்லவை.

இந்த இளம் கோழிக் குஞ்சுகள் 8 வாரத்துக்குப் பிறகு, கோழிக்குஞ்சு வீட்டிலிருந்து வளர்கோழி வீட்டுக்கு மாற்றப்படும். கோழிகளின் வளர் பருவம், 9 முதல் 18 வாரம் வரையாகும். இந்த வளர் கோழிகளை, ஆழ்கூளமுறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.

அறிவியல் முறையில் வளர்த்தால், சரியான உடல் வளர்ச்சியும், சீரான முட்டை உற்பத்தியும் கிடைக்கும். இப்பருவத்தில் உடல் வளர்ச்சியைத் தூண்டும், வைட்டமின் கலவை மற்றும் தாதுப்புக் கலவையை, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

தகுந்த இடவசதி, வளர்ச்சிக் குறையுள்ள கோழிகளைத் தனியாகப் பிரித்து வைத்துக் கவனமாக வளர்த்தல், நோயுற்ற கோழிகளை உடனடியாக அகற்றுதல், முறையாகத் தடுப்பூசி மற்றும் மருத்துவச் சிகிச்சை அளித்தல் போன்றவற்றை, ஆல்-இன்-ஆல்-அவுட் முறையில் அல்லது தொடர் முறையில், வளர் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆழ்கூள முறையில் வளர்கோழி வளர்ப்பு

வளர்கோழி வீடு தயாரிப்பு: இளம் கோழிக் குஞ்சுகளை 8 வாரத்துக்குப் பிறகு, வளர் கோழி வீட்டுக்கு மாற்ற வேண்டும். இப்படி மாற்றுவதற்கு முன், பழைய ஆழ்கூளத்தை அகற்றி விட்டுப் புதிய ஆழ்கூளத்தை இடுதல், குடிநீர்த்தட்டு, தீவனத்தட்டு உள்ளிட்ட உபகரணங்கள், கம்பி வலை, மேற்கூரை, சுவர் வெடிப்புகள், பக்கச்சுவர், நுழைவாயில் ஆகியவற்றைச் சரி செய்தும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தும், வளர்கோழி வீட்டை வைத்திருக்க வேண்டும்.

இடவசதி (Floor Space): 9 முதல் 18 வார இடைவெளியில் உள்ள வளர் பருவக் கோழிகளுக்கு, 1.5 சதுரடி வீதம் இட வசதி வேண்டும். 9-12 வாரத்தில் 1 சதுரடி, 12-14 வாரத்தில் 1.25 சதுரடி, 16-18 வாரத்தில் 1.50 சதுரடி வீதம், இடவசதி தேவைப்படும்.

செயற்கை ஒளி: வளர் பருவக் கோழிகளுக்குச் செயற்கை ஒளியைக் கொடுக்கக் கூடாது. ஒருநாளில் இயல்பாகக் கிடைக்கும் 12-13 மணிநேர ஒளியே போதுமானது.

தண்ணீர்த் தட்டு (Waterer): 16 அங்குல விட்டமுள்ள வட்ட அலுமினிய அல்லது பிளாஸ்டிக் தட்டுகள், 100 கோழிகளுக்கு 4 வீதம் தேவைப்படும். ஒவ்வொரு கோழிக்கும் 2 அங்குல தண்ணீர் இடவசதி தேவைப்படும். கோடைக் காலத்தில் குளிர்ச்சியான நீரை தினமும் 5 முறையும், குளிர் காலத்தில் 3 முறையும் கொடுக்க வேண்டும். குடிநீர்த் தட்டுகள் சுத்தமாக இருக்க வேண்டும்.

தீவனத்தட்டு (Feeder): 9 முதல் 12 வார வயதில், 3x3x3 அளவுள்ள தீவனத்தட்டில்  3 அங்குலத் தீவன இடவசதியும் (Feeder Space), 12 முதல் 18 வார வயதில் 4x4x3 அளவுள்ள தீவனத்தட்டில் 4 அங்குலத் தீவன இடவசதியும் தேவைப்படும். 25 கோழிகளுக்கு ஒரு தட்டு இருந்தால் போதும். தீவனம் வீணாகாமல் இருக்க, தீவனத் தட்டில் முக்கால் பங்குக்குக் குறைவாகவே தீவனத்தை நிரப்ப வேண்டும். ஒருநாளில் 3-4 முறை தீவனம் இட வேண்டும்.

வளர்கோழித் தீவனம் (Grower Mash): வளர்கோழித் தீவனத்தில் 16 சதம் புரதமும் 2,600 கிலோ கலோரி எரிசக்தியும் இருக்கும். கோடையில், எஞ்சியுள்ள தீவனத்தில் சிறிதளவு நீர் விட்டு ஈரத் தீவனமாகக் கொடுத்தால், தீவனச் சேதத்தைத் தவிர்க்கலாம். மேலும், நண்பகலில் பசுங்கீரை வகைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தால், தீவனச் செலவைப் பெருமளவு குறைக்கலாம்.

கூண்டு முறையில் வளர்கோழி வளர்ப்பு

இடவசதி: ஆறடி நீளம், ஐந்தடி அகலம், ஓரடி உயரமுள்ள கூண்டில், இரு சம அறைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் 25-30 கோழிகளை வளர்க்கலாம்.

செயற்கை ஒளி: வளரும் பருவத்தில் செயற்கை ஒளி அவசியமில்லை. ஒருநாளில் இயல்பாகக் கிடைக்கும் 12-13 மணி நேர ஒளியே போதுமானது.

தீவனத்தொட்டி (Feeder Channal): வளர்கோழித் தீவனத்தை, நீள்வடிவத் தொட்டியில் இட்டு, தினமும் 4 முறை கொடுக்க வேண்டும்.

குடிநீர்த்தொட்டி (Water channel): கூண்டின் மேற்புறம் நீள்வடிவக் குடிநீர்த் தொட்டி இருக்கும். கோடையில் குளிர்ச்சியான நீரை, தினமும் 5 முறையும், குளிர் காலத்தில் கொதிக்க வைத்து ஆறிய நீரை 4 முறையும் கொடுக்க வேண்டும்.

கோழிகள் வளர்ச்சி: 9, 15 மற்றும் 19-வது வாரத்தில் ஒரு கோழி ஒருநாளில் 50-55, 65-75 மற்றும் 80-90 கிராம் தீவனத்தை உட்கொண்டு, 450-550, 1,000 மற்றும்  1,200-1,300 கிராம் உடல் எடையை அடைந்து, முட்டைகளை இடும் நிலையில் இருக்கும். உற்பத்தித் திறனற்ற கோழிகளைக் கழித்தல், ஒட்டுண்ணி நீக்கம், மருந்து நீர்க்குளியல் ஆகியவற்றை, ஆழ்கூள முறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் மேற்கொள்ள வேண்டும்.

தரமற்ற கோழிகளைப் பிரித்தல் (Culling): கோழிகளின் வளர்ச்சி நிலையில் அல்லது முட்டையிடும் நிலையில், குடிநீர் மற்றும் தீவனமெடுக்கும் அளவைப் பொறுத்து, உடல் உறுப்புகளின் இயக்கம், உடல் வளர்ச்சி, உடல் எடை, சுறுசுறுப்பு, இறகு வளர்ச்சி ஆகியன இருக்கும். ஆனாலும், சில கோழிகள் உடல் மெலிந்து, சோர்ந்த நிலையில் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்.

இத்தகைய கோழிகளைத் தனியாகப் பிரித்து வைத்து, கவனமாக வளர்த்தால், சரியான வளர்ச்சி மற்றும் உடல் எடையை அடைந்து முட்டை உற்பத்திக்குத் தயாராகும். கால் வாதம், கால் ஒடிதல், இறகு ஒடிதல் மற்றும் ஆறாத புண்ணால் பாதிக்கப்பட்ட கோழிகளை, பண்ணையில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

பராமரிப்பு முறைகள்: வளர்பருவக் கோழிகளில் முழுமையாக வளர்ந்த இறகுகள் உதிர்ந்து புதிய இறகுகள் முளைக்கும். இத்தகைய கோழிகள் இயல்பாக இருப்பதற்கு,  நல்ல காற்றோட்ட வசதி அவசியம்.

குடற்புழு நீக்கம்: ஆழ்கூளத்தில் வளரும் கோழிகளுக்கு 9 வாரத்தில் இருந்து, மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தை, நீரில் கலந்து தர வேண்டும். கோழிகளின் குடலில் உருளைப்புழு, நாடாப்புழு, தட்டைப்புழு ஆகிய மூவகைப் புழுக்கள் இருக்கும்.

இவற்றில், உருளைப்புழுவை நீக்க, பைப்பரசின் அல்லது பென்டசால் மருந்தைத் தரலாம். தட்டைப்புழுவை நீக்க, நிக்லெக்ஸ் அல்லது லிவாமிசால் மருந்தைத் தரலாம். நாடாப்புழுவை நீக்க, ஆல்பென்டசால் அல்லது பென்பென்டசால் மருந்தைத் தரலாம்.

அலகு வெட்டுதல்: அலகினை 12-14 வாரத்தில் மீண்டும் ஒருமுறை வெட்ட வேண்டும்.  இதனால், கோழிகளின் தீவனம் எடுக்கும் திறனும், உடல் வளர்ச்சியும் கூடும். தீவனச் சேதமும் தவிர்க்கப்படும்.

ஒட்டுண்ணி நீக்கம்: கோழிகளைத் தாக்கும், கோழிப்பேன், தெள்ளுப்பூச்சி ஆகிய வெளி ஒட்டுண்ணிகளை நீக்க, அசுந்தால் என்னும் மருந்து கலந்த கலவையைத் தொட்டியில் வைத்துக் கொண்டு, அதில், கோழிகளின் தலை மற்றும் கண்களில் படாத வகையில், கோழிகளை முக்கியெடுக்க வேண்டும்.

வளரும் பருவத்தில், 3-5 சதவீதக் கோழிகள் இறக்க நேரிடும். கோழிகள் இறப்பு 10 சதத்துக்கு மேல் இருந்தால், அது, பராமரிப்பு முறை சரியில்லை என்பதாகும்.

கோழிகளுக்கு வழங்கிய மருத்துவச் சிகிச்சை, குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட எடையை அடைதல், உட்கொண்ட தீவன அளவு, தடுப்பூசி போடுதல் மற்றும் இறப்பு வீதத்தை, பதிவேடுகளில் குறித்து வைக்க வேண்டும்.


வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

முனைவர் க.பிரேமவல்லி,

பேராசிரியர், கோழியின அறிவியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-7.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

  • கோடையில் கோழிகள் பராமரிப்பு!

  • கோடையில் பன்றிகள் பராமரிப்பு!

  • கோடையில் ஆடுகள் பராமரிப்பு

  • கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

  • தரமான கறவை மாடுகள்!

  • கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

  • கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!