My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்!

மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்! maize cob https://pachaiboomi.net/57940506-2/

க்காச்சோளம் (Zea mays L.), உலகளவில் அதிகமாகப் பயிரிடப்படும் முக்கியத் தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, போயேசியே (Poaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரமாகும். மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், இந்தியாவில் ஆண்டு முழுவதும் கரீப், ரபி மற்றும் கோடைப் பருவத்தில் பயிரிடப்படுகிறது.

கர்நாடகம், மத்திய பிரதேசம், பீகார், மராட்டியம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், மக்காச்சோள உற்பத்தியில் ஈடுபடும் முக்கிய மாநிலங்களாகும். தமிழ்நாட்டில், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், மக்காச்சோளம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. 

குறுகிய காலத்தில் அதிக மகசூலைத் தரும் திறன், பல்வேறு கால நிலைகளுக்கு ஏற்ப வளரும் தன்மை, சந்தையில் நிலையான தேவை ஆகிய காரணங்களால், மக்காச்சோளம், விவசாயிகளுக்கு இலாபகரமான பணப்பயிராகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் மக்காச்சோளம் சுமார் 12.09 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இதன் மூலம், 43.41 மில்லியன் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சராசரி உற்பத்தித் திறன், எக்டருக்கு 3,590 கிலோ ஆகும். இதை, பொருளாதாரம், புள்ளியியல் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு2024. வேளாண் புள்ளி விவரங்கள் ஒரு பார்வை, 2024-25 ஆகியன தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் மக்காச்சோளப் பரப்பளவு, 0.49 மில்லியன் எக்டராகும். உற்பத்தி, 2.66 மில்லியன் டன்னாகும். சராசரி உற்பத்தித் திறன், எக்டருக்கு 5,487 கிலோவாக  இருப்பதால், இந்திய சராசரியை விட அதிக மகசூலைப் பெறும் மாநிலங்களில், தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது.

தமிழகத்தில் மக்காச்சோளம், முக்கியத் தானியப் பயிர்களில் ஒன்றாகும். பெரும்பாலான மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படும் மக்காச்சோளம் உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனம், கோழித்தீவனம் மற்றும் தொழில் துறை மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இதனால், மக்காச்சோளத் தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையை ஈடு செய்ய, மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்குவது, இன்றைய அவசியமாகும்.

தமிழகத்தில் மக்காச்சோளம் மானாவாரியாகப் பெருமளவில் பயிரிடப்படுகிறது. பயிரின் வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் வறட்சியால், மக்காச்சோள மகசூல் குறைகிறது. மாறிவரும் தட்பவெப்பச் சூழலாலும் மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் மானாவாரிக்கு ஏற்ற மற்றும் வறட்சியைத் தாங்கக்கூடிய இரகங்கள் மற்றும் வீரிய ஓட்டு இரகங்களை உருவாக்குதல் அவசியமாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அங்கமாக, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வாகரையில், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில், இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற மற்றும் அதிக மகசூலைத் தரக்கூடிய வீரிய ஒட்டு இரகங்களை உருவாக்குதல், அதிக உற்பத்தியைத் தரக்கூடிய சாகுபடி நுட்பங்களைக் கண்டறிதல் போன்ற ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த ஆராய்ச்சி நிலையத்தில், அதிக விளைச்சலைத் தரக்கூடிய மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற, விஜிஐஎச்(எம்)2 என்னும் வீரிய ஒட்டு மக்காச்சோள இரகம் புதிதாக, 2024-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.

விஜிஐஎச்(எம்)2 வீரிய ஒட்டு மக்காச்சோளத்தின் சிறப்புகள்

  • அதிக விளைச்சலைத் தரக்கூடிய மற்றும் மானாவாரிக்கு ஏற்ற, இந்த ஓர்வழி வீரிய ஒட்டு இரகம் வறட்சியைத் தாங்கவல்லது.
  • 95-100 நாட்களில் விளையக் கூடியது.
  • அதிகபட்சமாக எக்டருக்கு 6,352 கிலோ மகசூலைத் தரக்கூடியது.
  • மக்காச்சோள மணி, மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் பெரிதாக இருக்கும். இவ்வகையில், 1,000 மணிகளின் எடை 385 கிராம் இருக்கும்.
  • கதிர் வரிசை எண்ணிக்கை, 12-14 ஆக இருக்கும். இவ்வகையில், ஒரு வரிசையில், 35-42 சோள மணிகள் இருக்கும்.
  • படைப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதலை, மிதமாக எதிர்க்கும் திறன் மிக்கது.
  • டர்சிகம் இலைக்கருகல் மற்றும் கரிக்கோல் அழுகல் நோயை, மிதமாக எதிர்க்கும் திறனுள்ளது.
  • அதிக உடைப்புத் திறனுள்ள கதிர்களைக் கொண்ட இரகம். இவ்வகையில், கதிரின் உடைப்புத் திறன் 81 சதவீதமாகும்.
  • இதன் ஆண் மற்றும் பெண் வரிசைகளை ஒரே நாளில் விதைப்பதால், விதை உற்பத்தி செய்வது எளிதாகும்.

விஜிஐஎச்(எம்)2 விதை உற்பத்தி

  • விதைப்புப் பருவம்: நவம்பர், டிசம்பர், அதாவது, ஏப்ரல்-ஜூலை.
  • பெண் உள்ளினம்: யுஎம்ஐ
  • ஆண் உள்ளினம்: விஐஎம்
  • பெண்ஆண் விதைப்பு: ஒரே நாளில்.
  • பெண்ஆண் வரிசைகள்: 4:2.
  • விதையளவுஏக்கருக்கு: பெண் விதை 5 கிலோ, ஆண் விதை 3 கிலோ.
  • பயிர் விலகு தூரம்: 400 மீட்டர்.
  • இடைவெளி: 60×25 செ.மீ.

அடிப்படைத் தேவைகள்

  • மரபுத் தூய்மையுள்ள ஆண் மற்றும் பெண்ணின விதைகள்.
  • நல்ல வடிகால் மற்றும் பாசன வசதி, சூரிய ஒளி, காற்றோட்டமுள்ள வளமான நிலம்.
  • பயிரிடவுள்ள நிலத்தின் முந்தைய பயிர் மக்காச்சோளமாக இருக்கக் கூடாது.
  • தான்தோன்றிப் பயிர்கள், குறிப்பாக, மக்காச்சோளம் அந்நிலத்தில் இருக்கக் கூடாது.
  • அருகில் மக்காச்சோளப் பயிர் இருக்குமாயின், பயிர் விலகு தூரம் 400 மீட்டர் இருக்க வேண்டும்.
  • அல்லது அப்பயிருக்கும் விதை உற்பத்திப் பயிருக்கும் இடையிலான விதைப்புக்கால இடைவெளி, குறைந்தது 25 நாட்கள் இருக்க வேண்டும்.
  • முக்கியமாக, விதை உற்பத்திப் பயிர் பூக்கும் சமயம், மழைக்காலமாக இருக்கக் கூடாது.

விதை உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை

நிலத்தேர்வு: விதைப்பு நிலத்தில், கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப்பயிரை, பயிரிட்டிருக்கக் கூடாது. பயிர் இடைவெளி, இறவையில் 60×25 செ.மீ. இருக்க வேண்டும்.

கலவன் நீக்கம்: தரமான ஒட்டு விதைகளைப் பெறுவதற்கு, பெண் மற்றும் ஆண் வரிசைகளில் இருக்கும் கலவன்களை நீக்குதல் மிக முக்கியம். கலவன்களை நீக்குவோர், ஆண், பெண் இனங்களின் மரபியல் பண்புகளை அறிந்து நீக்க வேண்டும். கலவன்களை எல்லா வளர்ச்சிப் பருவங்களிலும் கண்காணித்து நீக்க வேண்டும். கலவன்களை, மகரந்தம் கொட்டுவதற்கு முன்பே நீக்க வேண்டும்.

ஆண் பூங்கொத்துகளை அகற்றுதல்: பெண் வரிசைப் பயிர்களில் இருக்கும் ஆண் பூக்களை அகற்ற வேண்டும். இதற்கு, இடது கையால், பூங்கொத்துக்குக் கீழே பயிரைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் ஆண் பூங்கொத்தை, மேல்நோக்கி இழுக்க வேண்டும். ஆண் பூக்களை அகற்றும் போது, அவற்றின் இலைகளைப் பிடுங்கக் கூடாது.

ஆண் பூக்களை நீக்கும் வேலையை காலை 9 மணிக்குள் முடிக்க வேண்டும். பயிர்களில் இருந்து அகற்றிய ஆண் பூக்களை, நிலத்திலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். ஒரு பெண் பயிரில் கூட இல்லாத வகையில், ஆண் பூக்களை அகற்றும் வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும்.

உரமிடும் முறை (ஏக்கருக்கு)

  • அடியுரம்: யூரியா 55 கிலோ, சூப்பர் 188 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ.
  • இரண்டாம் மேலுரம்: விதைத்து 20-25 நாட்களில், யூரியா 110 கிலோ.
  • மூன்றாம் மேலுரம்: விதைத்து 40-45 நாட்களில், யூரியா 55 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ.

பாசனம்: மண்ணின் தன்மையைப் பொறுத்து, 8-10 நாட்களுக்கு ஒருமுறை என, மொத்தம் 9-12 முறை பாசனம் கொடுக்க வேண்டும்.

 படைப்புழு மேலாண்மை

  • ஆழமாக உழுவதன் மூலம், மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
  • எக்டருக்கு 250 கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம், கூட்டுப் புழுக்களில் இருந்து தாய் அந்துப் பூச்சிகள் வெளிவருவதைத் தடுக்கலாம்.
  • இறவையில் வரப்புப் பயிராக, தட்டைப்பயறு, எள் அல்லது சூரியகாந்தியையும், மானாவாரியில் ஊடுபயிராக, தீவனச் சோளத்தையும் விதைக்க வேண்டும்.
  • ஆண் அந்துப் பூச்சிகளைக் கண்காணிக்க, எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்க வேண்டும்.
  • முளைத்த 15-20 நாட்களில், 10 லிட்டர் நீருக்கு 5 மி.லி. குளோரோடேரேனிலிபுருள் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • முளைத்த 35-40 நாட்களில், 10 லிட்டர் நீருக்கு 5 மி.லி. ஸ்பைநிடோரம் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • ஆண்பூ பருவத்திலும், கதிர் உருவாகும் பருவத்திலும், தேவையெனில், 10 லிட்டர் நீருக்கு 5 மி.லி. இமாமெக்டின் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

எல்லாக் கதிர்களையும் ஒரே தடவையில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த கதிர்களிலிருந்து நிறமாறிய மணிகளை கொண்ட கதிர்கள் மற்றும் நோய் தாக்கிய கதிர்களைப் பிரித்தெடுக்க வேண்டும். கலவன் கதிர்களை அடையாளம் கண்டு நீக்கிவிட வேண்டும். ஒரே நிறம் மற்றும் சீரான வளர்ச்சியுள்ள கதிர்களின் மணிகளை மட்டும் விதைகளாகப் பயன்படுத்த வேண்டும்.  

அறுவடையான கதிர்களின் மேலுறையை நீக்கி, கதிர்களைக் காய வைக்க வேண்டும். பிறகு, விதைகளைப் பிரித்தெடுத்து, சூரிய ஒளியில் காய வைக்கலாம். இவ்வகையில், ஏக்கருக்கு 800-1,000 கிலோ ஒட்டு விதைகளை உற்பத்தி செய்ய முடியும். ஆண் இன வரிசைகளில் கிடைக்கும் மணிகளைத் தானியமாகப் பயன்படுத்தலாம்.

விதைகளை, சுமார் 12 சதவீத ஈரப்பதத்தில் காய வைத்து, சாதாரணத் துணிப் பைகளிலும்; 8 சதவீத ஈரப்பதத்தில் காய வைத்து, விதை நேர்த்தி செய்து, காற்றின் ஈரம் புகாத பாலித்தீன் பைகளிலும் இட்டு, சேமித்து வைக்கலாம்.

விதைத் தரம்: சான்று நிலை

  • விதை புறத்தூய்மைகுறைந்தளவு 0 சதம்.
  • அங்ககப் பொருள்கள் அதிகளவு 0 சதம்.
  • பிற பயிர் விதைகள் அதிகளவு 0 சதம்.
  • வேறு இரக விதைகள் அதிகளவு 0 சதம்.
  • களை விதைகள்இருக்கக் கூடாது.
  • முளைப்புத் திறன் குறைந்தளவு 0 சதம்.
  • ஈரப்பதம்அதிகளவுஈரக்காற்றுப் புகும் பை 0 சதம்.
  • ஈரக்காற்றுப் புகாத பை 0 சதம்.

மேலும் தகவல்கள் மற்றும் விதைகள் பற்றிய விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை – 624 613 என்னும் முகவரி மூலம் அல்லது 04545 – 295989, 89032 26693 தொலைபேசி எண்கள் மூலம் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.


மானாவாரிக்கு ஏற்ற புதிய வீரிய ஒட்டு மக்காச்சோளம்! THANGA HEMAVATHY https://pachaiboomi.net/57940506-2/

முனைவர் ஆ.தங்கஹேமாவதி,

முனைவர் கரு.வே.சத்தியசீலா, முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் ந.ரமேஷ், முனைவர் ப.சதீஷ்குமார், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை 624 613, திண்டுக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தர்ப்பூசணியில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

  • நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்!

  • குறைந்த நீரில் கை கொடுக்கும் சிறுதானியங்கள்!

  • மா சாகுபடி சிறக்க உதவும் உயிர் உரங்கள்!

  • பாரம்பரிய நெல் இரகங்களுக்கு ஏற்ற பட்டங்கள்!

  • மலர் சாகுபடியில் மனம் போல் காசு பார்க்கலாம்!

  • மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள்!

  • மண் புழுக்களைச் சேகரிக்கும் முறைகள்!

  • சூரியகாந்தி சாகுபடியில் உயர் மகசூலுக்கான உத்திகள்!