வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் பல்வேறு வழிமுறைகளில், மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தல் மிக முக்கியமானது. தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதால், மகசூலும் கூடும். மேலும், தேன் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயும் உயரும். தேன் மெழுகு, பல்வேறு தொழிற்சாலைகளின் தேவைக்குப் பயன்படும்.
தேனீக்கள் வளர்ப்பில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, நல்ல வளர்ப்பிடம், நல்ல தேனீக்கள் மற்றும் நல்ல பராமரிப்பு.
தேனீக்கள் வளர்ப்பிடம்
- அதிகளவில் மலர்கள் பூக்கும் இடங்களில், மரம், செடி, கொடி வகைகள் அடர்ந்திருக்கும் இடங்களில், தேனீப் பெட்டிகளை அமைக்க வேண்டும்.
- இருபது கிலோ தேனைச் சேகரிக்க, பூக்கும் தன்மையுள்ள 100 மரங்களும், பூக்கும் பயிர்கள் உள்ள 2-4 ஏக்கர் நிலப்பரப்பும் தேவை.
- தேனீக்கள் வளர்ப்பிடம், சாலை மூலம் எளிதாக அடையக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.
- தேனீக்கள் வளர்ப்பிடம், சுத்தமான நீர்க் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
- பலத்த காற்றால் தேனீக்கள் பாதிக்காத வகையில், தடுப்பு மரங்கள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
- காலையிலும் மாலையிலும் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். கோடை வெய்யிலால் தேனீக்கள் பாதிக்காத இடமாக இருக்க வேண்டும்.
தேனீக்களைத் தேர்ந்தெடுத்தல்
Apiscerena, Apis mellifera ஆகிய இரண்டு தேனீ வகைகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். தேனீ வளர்ப்பில் ஈடுபடுவோர், தேனீக்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் காலனிகளைப் பராமரிக்க வேண்டும்.
தேனீக் காலனிகளைக் கையாளுதல்
தேனீக் காலனிகளைப் பராமரிப்பதில் மிக முக்கியச் செயல், காலனிகளை அவ்வப்போது பரிசோதிப்பது ஆகும். இவற்றைச் சோதிப்பது ஆபத்தானது என்றும், தேனீக்கள் கொட்டி விடும் என்றும் அச்சப்படத் தேவையில்லை. தேனீ, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் நிலையில் மட்டுமே கொட்டும். ஒருமுறை கொட்டி விட்டால் அது இறந்து விடும். எனவே, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், தேனீக்கள் கொட்டுவதைத் தவிர்க்கலாம்.
காலனிகளைச் சோதித்தல்
- காலனியில் தேனீக்களுக்குப் போதியளவில் உணவு இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பற்றாக்குறை இருந்தால், அதைச் சரி செய்ய வேண்டும்.
- இராணித்தேனீ இருப்பதையும், அது முட்டைகளை இடுவதையும் உறுதி செய்ய வேண்டும். இராணித்தேனீ இல்லாத நிலையில் புதிய இராணித் தேனீயை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- தேனீப் பெட்டியில், முட்டைகளை இடுவதற்குப் போதுமான சட்டங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- காலனியில், தேனீக்களைத் தாக்கும் நோய், தேனீக்களின் எதிரியென ஏதும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
தேனீக்கூட்டைச் சோதிக்கும் போது பின்பற்ற வேண்டியவை
- தேனீக்களுக்குக் கறுப்பு நிறம் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், சோதனையின் போது கறுப்பு உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
- சோதனையின் போது, கடுமையான வாசனைத் திரவியங்கள், கடிகாரம், மோதிரம் ஆகியவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
தேனை எடுக்கும் முறை
- தேன் எடுப்பின் போது, முகக்கவசம் மற்றும் கையுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
- மின்னும் மற்றும் கண்களை உறுத்தும் ஆடைகள் மற்றும் வாசனைத் திரவியங்களைத் தவிர்க்க வேண்டும்.
- காலையில் தேனீக்கள் வெளியே சென்ற பிறகு புகையைச் செலுத்தினால், அடையிலுள்ள பெரிய தேனீக்கள் வெளியேறி விடும். கூட்டுக்குள் உள்ள சிறிய தேனீக்கள் கொட்டாது.
- பெட்டியில் இருக்கும் ஐந்து சட்டங்களையும் வெளியே எடுத்து, அவற்றிலுள்ள தேனைப் பிரித்தெடுத்து வடிகட்டி வைக்க வேண்டும்.
பயிர் மகசூலில் தேனீக்களின் பங்கு
- பயறுவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழமரப் பயிர்களில், தேனீக்கள் மூலமே அதிகளவில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. குறிப்பாக, பழங்களின் தரம் சிறப்பாக இருப்பதில், தேனீக்களின் பங்கு முக்கியமானது.
- சூரியகாந்தி, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களில், கூடுதல் மகசூல் கிடைப்பதற்குத் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. சூரியகாந்திப் பயிரில் விதை மகசூல் கூடுவதுடன், எண்ணெய்ச் சத்து, புரதச்சத்து மற்றும் விதைகளின் முளைப்புத் திறனும் கூடுவதில், தேனீக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- தென்னந் தோப்புகளில் தேனீக்களை வளர்க்கும் போது, நெட்டை வகைத் தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் குறைந்து, 13 சதவீத அளவில் மகசூலும் கூடுதலாகக் கிடைக்கும்.
- தேனுக்காகத் தேனீக்கள் வளர்ப்பு என்னும் நிலை மாறி, வெளிநாடுகளில் உள்ளதைப் போல், அயல் மகரந்தச் சேர்க்கையையும் திட்டமிட்டு, தேனீ வளர்ப்பு நடந்தால் தான், பயிர் மகசூலைக் கூட்ட முடியும்.
- ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும், தேனீ வளர்ப்பை மேற்கொள்வதன் மூலமும், இந்த இலக்கை அடைய முடியும்.
இயக்குநர்,
மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

