My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!

பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!

ருத்தியைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான மாவுப்பூச்சி (பெனோகாக்கஸ் சொலனாப்சிஸ்), பருத்தியின் இலை, காய்கள் மற்றும் இலைக்காம்புகளில் உள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் தாக்குதல் தீவிரமானால், காய்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். மேலும், காய்கள் வெடிப்பது தாமதமாகி, மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.

தாக்குதல் அறிகுறிகள்

தொடக்கத்தில், மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இங்கும் அங்குமென ஒரு சில செடிகளில் மட்டுமே இருக்கும். நுனிக்குருத்து, இலைகள், காய்கள் ஆகியவற்றை இப்பூச்சிகள் தாக்கிச் சாற்றை உறிஞ்சும். இதனால், செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடிக் காய்ந்து விடும். சில சமயங்களில் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடும். இப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக, பஞ்சைப் போல அடை அடையாக இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இளம் திசுக்களை உண்ணும் மாவுப்பூச்சிகள் தமது உமிழ்நீரை அங்கே விடுவதால் இலைகள் சுருளும். மேலும், இப்பூச்சிகள் தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், எறும்புகளின் வருகையும், இலைகளில் கரும்பூசண வளர்ச்சியும் ஏற்படும்.

மாவுப்பூச்சியின் உடல் மெழுகுப் படலத்தால் மூடப்பட்டு இருக்கும். வரப்புகளில் முதலில் தென்படும் இப்பூச்சிகள், பிறகு பயிர்களை அடைந்து அவற்றைத் தாக்கும். அனைத்து உண்ணி வகையைச் சார்ந்த இப்பூச்சிகள், எல்லாப் பயிர்களையும், களைகளையும் தாக்கும்.

சிறு சிறு கூட்டமாக வாழும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல், வறட்சிக் காலத்தில் அதிகமாக இருக்கும். எறும்புகள் மூலம் அதிகளவில் பரவும் மாவுப்பூச்சிகள், மனிதன், காற்று மற்றும் நீர் மூலமும் பரவும். எனவே, இயற்கை எதிரிகளைப் பெருக்கினால், இவற்றின் தாக்குதலைக் குறைக்கலாம்.

கட்டுப்படுத்துதல்

பருத்தியில் மாவுப்பூச்சியின் தாக்குதல் தீவிரமாக இருக்கும். இதனால், 25 முதல் 50 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

» பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். முந்தய பயிர்க் கழிவுகளை எரித்து, வயல் சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும்.

» மாவுப்பூச்சிகளின் மறு விருந்தோம்பிகளான பார்த்தீனியம், ஊமத்தை, செனபோடியம் போன்ற களைகளை அழிக்க வேண்டும். வெண்டை, தக்காளி, கத்தரி போன்றவற்றை அருகருகே சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

» பாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றி எரித்துவிட வேண்டும். மாவுப்பூச்சிகளின் எதிரிகளான கிரிப்டோடேமஸ் மோன்ட்ரோயுஜேரி, கிரிப்டோடேமஸ், செக்மாகுலேட்டா ஆகிய லேடி பேர்டு வண்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.

» நிலத்தைச் சுற்றிலும் உயரமாக வளரும் சோளப்பயிரை நெருக்கமாகப் பயிரிட்டு, காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகள் நிலத்துக்குள் வராமல் தடுக்க வேண்டும்.

» மக்காச்சோளம், தட்டைப்பயறு போன்றவற்றை, வாய்க்கால் வரப்புகளில் பயிரிட்டு, கிரைசோபா, பொறிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகளைப் பெருக்கி, மாவுப் பூச்சிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும்.

» பரிந்துரை அளவை விட, தழைச்சத்து உரங்களை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். வேப்ப எண்ணெய் சார்ந்த மருந்துகள் அல்லது பியூப்ரோபைசின் என்னும் மருந்தை பருத்தியின் வளர்ச்சிப் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

»மாவுப்பூச்சிகள் தாக்கிய செடிகளை, நம் உடலில் படாமல் பிடுங்கி, நெகிழிப் பையில் வைத்து வெளியே கொண்டு சென்று எரிக்க வேண்டும்.

» பத்து சதவீதச் செடிகளில் இப்பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு தையோடிகார்ப் 75 டபிள்யு.பி. மருந்து 750 கிராம் அல்லது புரோபோனோபாஸ் 50 ஈ.சி. மருந்து 1.25 கிலோ அல்லது

» அசிப்பேட் 75 எஸ்.பி. மருந்து 2 கிலோ அல்லது டைமீத்தோயேட் ஒரு லிட்டர் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

» தாக்குதல் தீவிரமாகும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. மீத்தைல் பாரத்தியான்  அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. குளோர்பைரிபாஸ் வீதம் கலந்து, பயிர் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

» பயிரின் பாகங்கள் மற்றும் மாவுப்பூச்சிகள் மீது, மருந்துக் கரைசல் நன்கு பரவிப் படியும் வகையில், சான்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால், தனுவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றை, ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்குக் கால் மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.

» அறுவடைக்குப் பிறகு, பருத்திச் செடிகளை நிலத்திலிருந்து அகற்றிச் சேமிக்கும் இடத்தைச் சுற்றி மாலத்தியானைத் தூவி, மாவுப் பூச்சிகள் பரவாமல் தடுக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் போது பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும்.

» மருந்துச் சீட்டிலுள்ள மருந்தின் அளவு, பயன்படுத்தும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தய இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க, பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் வரை மருந்துக் கரைசல் தேவைப்படும்.


பருத்தியில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு!

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையப் புடலை இரகங்கள்!

  • உயர் விளைச்சலைத் தரும் வம்பன் 11 உளுந்து!

  • வெண்கொடிவேலி மூலிகையில் பூச்சி மேலாண்மை!

  • ஆடிப்பட்டத் துவரை சாகுபடி!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • பாக்கு சாகுபடி!

  • ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு!

  • மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!